வெள்ளி, ஜூன் 17, 2016

அதிகாரம் 032: இன்னா செய்யாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 032 - இன்னா செய்யாமை

0311.  சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
           செய்யாமை மாசற்றார் கோள்

           விழியப்பன் விளக்கம்: சிறப்பளிக்கும் செல்வமே கிடைப்பதாயினும்; மற்றவர்க்கு கெடுதல் 
           செய்ய மறுப்பதே, மனதில் குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
           மதிப்பளிக்கும் பதவியே கொடுப்பினும்; பிறரின் பதவியைப் பறிக்க புறங்கூறாததே, 
           சுயத்தை நம்புவோரின் அடிப்படையாகும்.

0312.  கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
           செய்யாமை மாசற்றார் கோள்

           விழியப்பன் விளக்கம்: காழ்ப்புணர்வுடன் தமக்கு கெடுதலைச் செய்தோர்க்கும்; 
           பழியுணர்வுடன் கெடுதலைச் செய்யாத நிலைப்பாடே, குற்றமற்றவரின் குறிக்கோளாகும்.
(அது போல்...)
           கல்நெஞ்சுடன் தன்னை அனாதையாக்கிய பிள்ளைக்கும்; பித்துமனதுடன் அன்பைப் 
           பொழியும் தன்மையே, தாய்மையின் சிறப்பாகும்.
           
0313.  செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் 
           உய்யா விழுமந் தரும்

           விழியப்பன் விளக்கம்: நாம் கெடுதல் செய்யாத போது,  நமக்கொருவர் கெடுதல் செய்யினும்; 
           அதற்கு பழிவாங்க செய்யும் கெடுதல், நமக்கு மீளமுடியாத துன்பத்தையே விளைவிக்கும்.
(அது போல்...)
           நாம் சட்டவிரோதமாய் செயல்படாத போது, நம்மீது குற்றச்சாட்டு எழுந்தாலும்; அதைச் 
           சரிசெய்ய சட்டவிரோதமாய் செயல்பட்டால், நமக்கு தீராத மனவுளைச்சலையே தரும்.

0314.  இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
           நன்னயஞ் செய்து விடல்

           விழியப்பன் விளக்கம்: நமக்கு தீமைச் செய்தவரைத், தண்டிப்பதற்கு சிறந்த வழி; அவர் மனம் 
           வருந்தும் வண்ணம், அவருக்கு நல்லதைச் செய்வதாகும்.
(அது போல்...)
           மனிதம் இல்லாமால் வாழ்வோரைத், திருத்துவதற்கு உகந்த வழி; அவரின் துன்பத்தைப் 
           போக்கும் வண்ணம், அவருக்கு துணை நிற்பதாகும்.

0315.  அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
           தந்நோய்போல் போற்றாக் கடை

           விழியப்பன் விளக்கம்: பிறரின் துன்பத்தை, நம் துன்பம்போல் பாவிக்காவிட்டால்; பகுத்தாயும் 
           அறிவினால், என்ன பயன் விளையமுடியும்?
(அது போல்...)
           மக்களின் இயலாமையை, தம் இயலாமையாய் உணராவிட்டால்; பார்போற்றும் 
           மக்களாட்சியில், என்ன சிறப்பு இருக்கமுடியும்?

0316.  இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
           வேண்டும் பிறன்கண் செயல்

           விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிப்பவை என, நாம் உணர்ந்தவற்றைப்; பிறருக்கு 
           செய்யாத திண்ணம் வேண்டும்.
(அது போல்...)
           தவறான பழக்கங்கள் என, நாம் பகுத்தாய்ந்தவற்றைப்; பிறருக்குப் பழக்கிவிடாத உறுதி 
           வேண்டும்.

0317.  எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் 
           மாணாசெய் யாமை தலை

           விழியப்பன் விளக்கம்: எவ்வளவு சிறிதெனினும், எவர் ஒருவருக்கும்; எந்தவொரு சமயத்திலும், 
           மனதாலும் தீமை செய்யாதது உயர்ந்தது.
(அது போல்...)
           எந்தவொரு உரிமையெனினும், எந்தவொரு உறவையும்; எவரின் முன்பும், கேலியாகவும் 
           அவமரியாதை செய்யாதது நன்று.

0318.  தன்னுயிர்ககு இன்னாமை தானறிவான் என்கொலோ 
           மன்னுயிர்க்கு இன்னா செயல்

           விழியப்பன் விளக்கம்: தனக்கு துன்பமானவை எவையென உணர்ந்தோர்; பிற உயிர்களுக்கு, 
           அதே தீமைகளைச் செய்வது, என்ன காரணத்தினாலோ?
(அது போல்...)
           தன்-சுயம் இழப்பதன் வலியை உணர்ந்தோர்; பிறரின் சுயத்தை, அதுபோல் இழக்கச் 
           செய்தல், எந்த அடிப்படையிலோ?

0319.  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 
           பிற்பகல் தாமே வரும்

           விழியப்பன் விளக்கம்: முற்பகலில் - பிறர்க்குத் தீமையைச் செய்தால்; பிற்பகலில் - நமக்குத்
           தீமை, தானாகவே வந்தடையும்.
(அது போல்...)
           இளமையில் - முதியோரைப் போற்றிட மறுத்தால்; முதுமையில் - நம்மைப் போற்றுவதும்,
           தானாக மறுக்கப்படும்.

0320.  நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
           நோயின்மை வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: பிறர்க்கு துன்பம் செய்பவரையே, துன்பமெல்லாம் சென்றடையும்; 
           எனவே, துன்பம் வேண்டாதவர் - பிறர்க்கு துன்பம் செய்யமாட்டார்.
(அது போல்...)
           பிறரைப் புரளிப் பேசுபவரையே, புரளிகள் வந்தடையும்; எனவே, புரளியை விரும்பாதோர் - 
           பிறரைப் புரளிப் பேசமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக