திங்கள், ஜூன் 27, 2016

அதிகாரம் 033: கொல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 033 -  கொல்லாமை

0321.  அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் 
           பிறவினை எல்லாந் தரும்

           ஓருயிரைக் கொல்லாததே நல்வினையாகும்; கொல்லுதல், நல்லவைத் தவிர்த்த தீவினைகள் 
           எல்லாவற்றையும் விளைவிக்கும்.
(அது போல்...)
           ஓருறவை முறிக்காததே மனிதமாகும்; முறித்தல், மனிதத்தை நீக்கிய உணர்வுகள் 
           அனைத்தையும் கொடுக்கும்.

0322.  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
           தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

           இருப்பதைப் பகிர்ந்தளித்து, சுற்றத்தாரை வாழ்விக்கும் தன்மை; அறம்சார்ந்த 
           எழுத்தாளர்கள் கையாண்ட, அறங்களில் முதன்மையாகும்.
(அது போல்...)
           தம்தேவையை நிராகரித்து, குடும்பத்தை உயர்விக்கும் பெற்றோர்; துறவுபூண்ட ஞானிகள் 
           பெற்ற, குருவைவிட உயர்ந்தவராவர்.
           
0323.  ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் 
           பின்சாரப் பொய்யாமை நன்று

           ஓருயிரைக் கொல்லாதது, இணையற்ற தனித்த நல்லறமாகும்; பொய் சொல்லாதது, 
           அதையடுத்து தொடரும் நல்லறமாகும்.
(அது போல்...)
           இனவெறி இல்லாதது, ஒப்பற்ற மனித அடிப்படையாகும்; மொழிவெறி இல்லாதது,  அதன்பின் 
           தொடரும் அடிப்படையாகும்.

0324.  நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
           கொல்லாமை சூழும் நெறி

           நல்ல நெறி என்பது என்னவென்றால் - எந்த உயிரையும் கொல்லக்கூடாது, என்பதை
           மையப்படுத்திய நெறியே ஆகும்.
(அது போல்...)
           தரமான விமர்சனம் என்பதன் அடிப்படை - எந்நிலையிலும் படைப்பாளியை விமர்சிக்காத,
           அறத்தை ஒட்டிய விமர்சனமே ஆகும்.

0325.  நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் 
           கொல்லாமை சூழ்வான் தலை

           இல்லற வாழ்வுக்கஞ்சி, துறவறம் பூண்டோரைவிட; கொலையெனும் பாவத்துக்கஞ்சி,
           கொல்வதைத் தவிர்த்தோர் உயர்ந்தவராவர்.
(அது போல்...)
           சட்டத்தின் தண்டனைக்கஞ்சி, செயலைத் தவிர்த்தோரைவிட; மனசாட்சியின்
           தண்டனைக்கஞ்சி, எண்ணத்தைத் துறந்தோர் சிறந்தவராவர்.

0326.  கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் 
           செல்லாது உயிருண்ணுங் கூற்று

           ஓருயிரைக் கொல்லாத அறத்தைக், கடைபிடித்து வாழ்வோரின் வாழ்வில்; உயிரைப் பறிக்கும் 
           மரணமும் குறுக்கிடாது.
(அது போல்...)
           போட்டியாளரை ஏமாற்றாத திடத்தைக், கொண்ட திறமையாளரின் வெற்றியில்; 
           நம்பிக்கையைச் சிதைக்கும் தோல்வியும் ஊடுருவாது.

0327.  தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது 
           இன்னுயிர் நீக்கும் வினை

           நம்முயிரை இழக்கும் நிலையிலும், அதைக் காப்பதற்காக; வேறொரு உன்னத-உயிரைப் 
           பறிக்கும் தீவினையை, நாம் செய்யக்கூடாது.
(அது போல்...)
           நம்-பதவி பறிபோகும் சூழலிலும், அதைத் தக்கவைக்க; பிறருக்கு உரிமையான-பதவியைப் 
           பறிக்கும் இழிசெயலை, நாம் செய்தலாகாது.

0328.  நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் 
           கொன்றாகும் ஆக்கங் கடை

           ஓருயிரைக் கொல்வதால், நன்மையாய் கிடைப்பது - பெரிய வெகுமதியே எனினும்; 
           பகுத்தறிந்தோர்க்கு, அந்த வெகுமதி இழிவானதே ஆகும். 
(அது போல்...)
           ஊடகத்தில் கிசுகிசுக்க, பலனாய் கிடைப்பது - உயர் பதவியே ஆயினும்; தர்மம்-
           உணர்ந்தோர்க்கு, அந்த பதவி கீழ்த்தரமானதே ஆகும்.

0329.  கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் 
           புன்மை தெரிவா ரகத்து

           கொலையைத் தொழிலாகக் கொண்ட, மனிதம் அற்றவர்கள்; அத்தொழிலின் விளைவை
           உணர்ந்தோர்க்கு, இழிதொழில் செய்வோரே ஆவர்.
(அது போல்...)
           பொய்யை வழக்கமாய் கொண்ட, மனக்குறை உடையவர்கள்; பொய்யின் தீமையை
           அறிந்தோர்க்கு, குணக்குறை கொண்டோரே ஆவர்.

0330.  உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
           செல்லாத்தீ வாழ்க்கை யவர்

           நிகழ்காலத்தில் வறுமையுடன், முற்றிய நோயும் கொண்டு வாழ்பவர்கள்; கடந்தகாலத்தில், 
           உடம்பிலிருந்து உயிரைப் பிரித்தவர் ஆவர்.
(அது போல்...)
           முதுமையில் இயலாமையுடன், அதீத மறதியும் கொண்டு அல்லாடுவோர்; இளமையில்,
           உறவுகளின் மனதைச் சிதைத்தவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக