புதன், செப்டம்பர் 05, 2018

அதிகாரம் 113: காதற்சிறப்பு உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 113 - காதற்சிறப்பு உரைத்தல்

1121.  பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
           வாலெயிறு ஊறிய நீர்

           விழியப்பன் விளக்கம்: பணிவானச் சொற்களைப் பேசும், என்னவளின் தூய்மையானப் 
           பற்களுக்கு இடையே ஊறும் உமிழ்நீர்; பாலுடன் தேனும் கலந்ததற்கு இணையாகும்!
(அது போல்...)
           கடினமானப் பணிகளைச் செய்யும், என்னப்பனின் அகன்ற மார்புகளுக்கு இடையே வழியும் 
           வியர்வை; அன்புடன் அருளும் சேர்ந்ததற்கு ஒப்பாகும்!
      
1122.  உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
           மடந்தையொடு எம்மிடை நட்பு

           விழியப்பன் விளக்கம்: உடம்புக்கும்/உயிர்க்கும் இடையேயான உறவு எத்தகையதோ; 
           அதற்கு இணையானதே, எனக்கும்/என்னவளுக்கும் இடையில் இருக்கும் நட்புறவும்!
(அது போல்...)
           நாட்டுக்கும்/மொழிக்கும் இடையேயான உறவு எத்தகையதோ; அதற்கு இணையானதே, 
           எனக்கும்/என்னப்பனுக்கும் இடையில் இருக்கும் அன்புறவும்!
           
1123.  கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
           திருநுதற்கு இல்லை இடம்

           விழியப்பன் விளக்கம்: கருவிழியில் உள்ள கண்மணியே! நான் விரும்பும் அழகு 
           நெற்றியுடைய என்னவளுக்கு, விழியில் பாதுகாப்பான இடமில்லை என்பதால்; நீ 
           வெளியேறுவாயாக!
(அது போல்...)
           என்னகத்தில் இருக்கும் சோம்பலே! நான் சிந்திக்கும் சமூகம் சார்ந்த புரிதல்களை, 
           பதிவுகளாய் பகிர்ந்திட முடியவில்ல என்பதால்; நீ அழிந்தொழிவாயாக!  

1124.  வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
           அதற்கன்னள் நீங்கும் இடத்து

           விழியப்பன் விளக்கம்: தேர்ந்த வாழ்வியல் அணிகலனாகிய என்னவள்; என்னுடன் 
           சேரும்போது, உயிருடன் வாழ்வதற்கு நிகராவாள்! என்னை விட்டு நீங்கும்போது, 
           இறப்பதற்கு நிகராவாள்!
(அது போல்...)
           சிறந்த அரசியல் காரணியான இனவுணர்வு; நல்லாரிடம் சேரும்போது, மக்களாட்சியை 
           வளர்க்கும் உரமாகிறது! நல்லாரை விட்டு நீங்கும்போது, அதையழிக்கும் நஞ்சாகிறது!

1125.  உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
           ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

           விழியப்பன் விளக்கம்: கருணையொளி/போர்க்குணம் இரண்டும் வெளிப்படும் 
           விழிகளுயுடைய என்னவளை; மறந்தால் தானே, நான் மீண்டும் நினைப்பன்? அப்படி 
           மறப்பதை, நானறியேன்!
(அது போல்...)
           ஞானப்பசி/தேடல்குணம் இரண்டையும் வளர்க்கும் திறமுடைய என்குருவை; விலகினால் 
           தானே, நான் மீண்டும் நெருங்க? அப்படி விலகுவதை, நானறியேன்!

1126.  கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
           நுண்ணியர்எம் காத லவர்

           விழியப்பன் விளக்கம்: என்னில் கலந்திட்ட காதலர், என் கண்ணை விட்டு நீங்கார்; நான் 
           கண்ணை இமைத்தாலும், மனம் வருந்தார்! அவர் அத்தகைய தன்மையானவர்!
(அது போல்...)
           என்னை விதைத்திட்ட பெற்றோர், என் வாழ்வை விட்டு நீங்கார்; நான் அவர்களை 
           மறந்தாலும், சாபம் விடார்! அவர் அவ்வளவு அன்பானவர்!

1127.  கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
           எழுதேம் கரப்பாக்கு அறிந்து

           விழியப்பன் விளக்கம்: காதலர் அவர், என் கண்ணில் இருக்கிறார்! ஆதலால், கண்ணிற்கு 
           அழகு ஒப்பனை செய்தால்; கண்ணிலிருந்து மறைவார் என்பதறிந்து, அதைச் செய்யேன்!
(அது போல்...)
           குரு அவர், என் மனதில் இருக்கிறார்! ஆதலால், மனதைச் சிதைக்கும் செயல்களைச் 
           செய்தால்; மனதிலிருந்து மறைவார் எனவுணர்ந்து, அவற்றைச் செய்யேன்!

1128.  நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
           அஞ்சுதும் வேபாக் கறிந்து

           விழியப்பன் விளக்கம்: என் காதலர், நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார்! ஆதலால், சூடான 
           உணவுகளை உண்டால்; அவர் வெப்பமடைவார் எனவறிந்து, அவற்றை உண்ண 
           அஞ்சுகிறேன்!
(அது போல்...)
           என் குரு, என்பதிவுகளில் வெளிப்படுகிறார்! ஆதலால், பொய்யான விடயங்களை 
           எழுதினால்; அவர் கவலைப்படுவார் எனவுணர்ந்து, அவற்றை எழுத மறுக்கிறேன்!

1129.  இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
           ஏதிலர் என்னும்இவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: கண்ணிலுள்ள காதலர், இமைத்தால் மறைவார் என அறிவேன்! 
           எனினும், இமைக்க மறுத்தால்; அன்பற்றவர் என ஊரார் தூற்றுவர் என்பதால்; அவ்வப்போது 
           இமைக்கிறேன்!
(அது போல்...)
           நட்பிலுள்ள நண்பர்கள், விமர்சித்தால் விலகுவர் என அறிவேன்! எனினும், விமர்சிக்க 
           மறுத்தால்; பொறுப்பற்றவர் என மனசாட்சி தண்டிக்கும் என்பதால்; அவ்வப்போது 
           விமர்சிக்கிறேன்!

1130.  உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
           ஏதிலர் என்னும்இவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: என்னவர், என் மனதில் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்! ஆனால், 
           உடலால் மட்டும் பிரிந்திருப்பதைப் பார்க்கும் இவ்வூரார்; என்னை "அன்பற்றவர்" என 
           இகழ்வர்!
(அது போல்...)
           என்பெற்றோர், என் சுயத்தில் எஞ்ஞான்றும் கலந்திருக்கின்றனர்! ஆனால், குடிசையால் 
           மட்டும் பிரிந்திருப்பதை அறியும் என்னூரார்; என்னை “சுயநலவாதி” என சாடுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக