சனி, செப்டம்பர் 15, 2018

அதிகாரம் 114: நாணுத்துறவு உரைத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்

1131.  காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
           மடலல்லது இல்லை வலி

           விழியப்பன் விளக்கம்: காதல் பெருகியதால், காமம் மிகுந்து வருந்துவோர்க்கு; பனை 
           மட்டையில் செய்த குதிரையில் ஏறுவதை (மடல் ஏறுதல்) தவிர, அதிக பாதுகாப்பான 
           வலிமை வேறில்லை!
(அது போல்...)
           ஊழல் பெருகியதால், வாழ்வு இழந்து தவிப்போர்க்கு; மக்கள் ஆட்சியில் நிகழும் அரசியல் 
           மாற்றம் தவிர, சிறந்த வாழ்வியல் காரணி வேறில்லை!
      
1132.  நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
           நாணினை நீக்கி நிறுத்து

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் விளையும் காம வலியை, தாங்கமுடியாத உடம்பும் 
           உயிரும்; நாணத்தை விலக்கி வைத்துவிட்டு, காமமுற்றார் போல பனைமட்டைக் 
           குதிரையில் ஏறும்!
(அது போல்...)
           பொருள்தேடலில் நிகழும் வெளிநாட்டு வாழ்வை, தொடரமுடியாத எண்ணமும் செயலும்; 
           இயல்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பித்துப்பிடித்தார் போல கற்பனை உலகில் உலவும்!
           
1133.  நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
           காமுற்றார் ஏறும் மடல்

           விழியப்பன் விளக்கம்: முன்பு, நாணமுடன் சிறந்த ஆண்மையும் உடையேன்! இன்று, 
           காதலரைப் பிரிந்த காமமுற்றார் ஏறும்; பனைமட்டைக் குதிரையைக் கொண்டிருக்கிறேன்!
(அது போல்...)
           அன்று, அரசியலுடன் சிறந்த மக்களாட்சியும் அளித்தனர்! இன்று, மனிதம் மறந்த 
           தீவிரவாதிகள் போல்; காவல்படைத் துப்பாக்கியால் சுடுகின்றனர்!  

1134.  காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
           நல்லாண்மை என்னும் புணை

           விழியப்பன் விளக்கம்: காமம் எனும் கடுமையான காட்டாறு; நாணம் மற்றும் சிறந்த 
           ஆண்மை எனும் இரண்டு படகுகளையும், அதன் போக்கில் செலுத்தும் வல்லமை உடையது!
(அது போல்...)
           கள்ளக்காதல் எனும் தீவிரமான புயல்காற்று; குடும்பம் மற்றும் ஈன்ற பிள்ளைகள் எனும் 
           இரண்டு ஆலமரங்களையும், அதன் திசையில் பிடுங்கியெறியும் தன்மை கொண்டது!

1135.  தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
           மாலை உழக்கும் துயர்

           விழியப்பன் விளக்கம்: என்னில் பாதியாய் தொடர்ந்த, குறுவளையல்கள் அணிந்த 
           என்னவளே; பனைமட்டைக் குதிரை ஏறும் நிலையுடன், மாலையில் அனுபவிக்கும் 
           துயரையும் அளித்தாள்!
(அது போல்...)
           எம்மின் பிரதிநிதிகளாக வந்த, சிறுபதவிகள் வகித்த அரசியலாரே; பணவீக்க விகிதம் 
           உயரும் நிலையுடன், கொடுங்கோலில் வாழும் சூழலையும் அளித்தனர்!

1136.  மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
           படல்ஒல்லா பேதைக்கென் கண்

           விழியப்பன் விளக்கம்: என்னவளைப் பிரிந்திருக்கும், என் கண்கள் உறக்கம் இன்றி 
           தவிப்பதால்; பனைமட்டைக் குதிரை ஏறுவதை, உறுதியாய் நள்ளிரவிலும் நினைக்கிறேன்!
(அது போல்...)
           குடும்பத்தைப் பிரிந்திருக்கும், என் சிந்தனைகள் இயல்பை மீறி இருப்பதால்; விமானத்தில் 
           அமர்ந்து பயணிப்பதை, உண்மையெனக் கனவிலும் தொடர்கிறேன்!

1137.  கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
           பெண்ணின் பெருந்தக்க தில்

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமம், கடலளவு துன்பமளிப்பினும்; 
           பனைமட்டைக் குதிரை ஏறிடாத, பெண்ணின் பேருறுதிக்கு நிகரானது ஏதுமில்லை!
(அது போல்...)
           வெளிநாட்டில் வாழும் தனிமை, மலையளவு ஆட்டுவிப்பினும்; அறமற்றப் பாதையில் 
           செல்லாத, ஆணின் மனக்கற்புக்கு இணையானது ஒன்றுமில்லை!

1138.  நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
           மறையிறந்து மன்று படும்

           விழியப்பன் விளக்கம்: "மன நிறைவு இல்லாதவர்/மிகவும் இரக்கத்துக்கு உரியவர்" 
           என்றெல்லாம் உணராமல்; மறைந்து இருப்பதைத் தவறி, எல்லோர் முன்பும் காமம் 
           வெளிப்படும்!
(அது போல்...)
           "வாழ்கை முழுமை இல்லாதவர்/சமுதாய ஒடுக்கத்திற்கு உள்ளானவர்" என்றெல்லாம் 
           ஆராயாமல்; அவர்களை ஆதரிப்பதை விடுத்து, எல்லோர் வாழ்விலும் ஊழல் துன்புறுத்தும்!

1139.  அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
           மறுகின் மறுகும் மருண்டு

           விழியப்பன் விளக்கம்: பொதுவெளியில் பேசப்படாததால், தன்னை எவரும் அறிவதில்லை     
           என எண்ணிதான்; எல்லோரும் அறியும்படி, காமம் - தெருவில் மயக்கத்துடன் சுற்றுகிறதோ?
(அது போல்...)
           மக்களிடம் ஆதரவில்லாததால், தன்னை எவரும் மதிப்பதில்லை என எண்ணிதான்; 
           எல்லோரும் வருந்தும்படி, ஊழல் - உலகில் அதிகாரத்துடன் வாழ்கிறதோ?

1140.  யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
           யாம்பட்ட தாம்படா ஆறு

           விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமத்தை, உணரும் அறிவற்றோர்;       
           நானடைந்த துன்பத்தை தாமடைய வழியில்லை என்பது போல், இகழ்ந்து சிரிப்பர்!
(அது போல்...)
           துணையிறப்பில் விளையும் தனிமையை, புரியும் இயல்பற்றோர்; அவரின் நிலையை 
           தாமடைய வாய்ப்பில்லை என்பது போல், ஆதாயம் தேடுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக