செவ்வாய், செப்டம்பர் 25, 2018

அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 3 - காமம்இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்

1141.  அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
           பலரறியார் பாக்கியத் தால்

           விழியப்பன் விளக்கம்: எம் காதலைப் பொய்யாய் புனைந்து பேசுவதால், காதலின் ஆருயிர் 
           நீடித்து நிலைப்பதை; அப்படிப் பேசுவோர் அறியாதது, நான் செய்த நற்பேற்றால் தான்!
(அது போல்...)
           எம் தலைவரை எதிரியாய் நினைத்து விமர்சிப்பதால், இயக்கத்தின் மய்யம் மேலும் 
           திடமாவதை; அப்படி விமர்சிப்போர் உணராதது, அரசியல் மாற்றம் நிகழ்வதற்கு தான்!
      
1142.  மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
           அலரெமக்கு ஈந்ததிவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: அழகிய தாமரை மலரொத்த கண்களை உடைய, என்னவளின் 
           சிறப்பை அறியாமல்; இவ்வூரார் பொய்யாய் புனைந்து பேசி, எமக்குள் காதல் மலர்ந்திட 
           உதவினர்!
(அது போல்...)
           உயர்ந்த இமய மலையொத்த பொதுமை அறிந்த, எந்தலைவனின் திறத்தை உணராது; 
           ஊழலர்கள் பொய்யான விமர்சனங்கள் செய்து, பொதுமக்களிடம் அவரை சேர்க்க 
           உதவினர்!
           
1143.  உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
           பெறாஅது பெற்றன்ன நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: ஊரார் அறிந்த பொய்யாய் புனைந்து பேசுதல், எம் காதலுக்கு 
           நேராதோ? பெறமுடியாத ஒன்றைப் பெற்றதற்கு இணையான மகிழ்வை, அளிக்கக் 
           கூடியதாயிற்றே அது?!
(அது போல்...)
           ஊழலர்கள் செய்யும் போட்டி அரசியல் விமர்சனம், எம் கட்சிக்கு வாராதோ? பல்வேறு 
           மேடைகள் மூலம் அடையமுடியாத ஆதரவை, அளிக்க வல்லதாயிற்றே அது?!  

1144.  கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
           தவ்வென்னும் தன்மை இழந்து

           விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனைந்து பேசுவதால், காமம் சார்ந்த காதல் 
           வளர்கிறது! அப்படி பேசுதல் இல்லையென்றால், அடிப்படையை இழந்து காதல் 
           சிதைந்திருக்கும்! 
(அது போல்...)
           உறவினர் உரிமையாய் ஊடல் கொள்வதால், உறவு சார்ந்த குடும்பம் வளர்கிறது! அத்தகைய 
           ஊடல் இல்லையெனில், அன்பை இழந்து குடும்பம் அழிந்திருக்கும்!

1145.  களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
           வெளிப்படுந் தோறும் இனிது

           விழியப்பன் விளக்கம்: கள்ளுண்ணும் போதெல்லாம், கள்ளுண்பது சுவையளிப்பது போல்; 
           பொய்யாய் புனைந்து பேசும் போதெல்லாம், காமம் சேர் காதலும் இனிமையளிக்கும்!
(அது போல்...)
           அன்புறும் போதெல்லாம், அன்படைவது தெளிவளிப்பது போல்; மிகையாய் புகழ்ந்து பேசும் 
           போதெல்லாம்; உறவு சேர் குடும்பமும் மகிழ்வளிக்கும்!

1146.  கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
           திங்களைப் பாம்புகொண் டற்று

           விழியப்பன் விளக்கம்: நான் என் காதலரைக் கண்டது என்னவோ ஒருநாளே! ஆயினும், 
           பொய்யாய் புனைந்து பேசுவது என்னவோ; நிலவைப் பாம்பு விழுங்கியதற்கு இணையாக 
           இருக்கிறதே?!
(அது போல்...)
           தான் தன் தலைவனைக் கண்டது என்னவோ தொலைவிருந்தே! ஆயினும், மிகையாய் 
           அதிகாரம் செய்வது என்னவோ; யானையை எலி கொன்றதற்கு இணையாக இருக்கிறதே?!

1147.  ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
           நீராக நீளும்இந் நோய்

           விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனையும் பேச்சு உரமாகவும், தாயின் அன்பில் 
           விளையும் கடுஞ்சொல் நீராகவும் அமைந்து; காதலுடன் சேர்ந்த காம நோய், செழித்து 
           வளரும்!
(அது போல்...)
           மக்கள் கோபமாய் இடித்து உரைப்பது உடலாகவும், தலைவனின் அறத்தில் விளையும் 
           வழிகாட்டல் உயிராகவும் அமைந்து; நேர்மையுடன் சேர்ந்த மக்கள் ஆட்சி, உயிர்த்து 
           பிறக்கும்!

1148.  நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
           காமம் நுதுப்பேம் எனல்

           விழியப்பன் விளக்கம்: காமம் சேர் காதலை, பொய்யாய் புனைந்து பேசி அழிப்போம் என 
           இவ்வூரார் சொல்வது; எரியும் நெருப்பை, நெய்யை ஊற்றி அழிப்போம் என்பது 
           போலிருக்கிறது!
(அது போல்...)
           மக்கள் சார் ஆட்சியை, ஒற்றை வரியை விதித்துக் காப்போம் என இவ்வரசுகள் சொல்வது; 
           அதீத தாகத்தை, நஞ்சைக் கொண்டு தணிப்போம் என்பது போலிருக்கிறது!

1149.  அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
           பலர்நாண நீத்தக் கடை

           விழியப்பன் விளக்கம்: "பொய்யாய் புனைந்து பேசுவதற்கு, வெட்கி விலகுவதா? அஞ்சாமை 
           பழகு!" என பழக்கிய காதாலர்; எனைப் பிரிந்த நிலையில், பலருக்கும் வெட்கப்பட 
           வைத்துவிட்டார்!
(அது போல்...)
           “வஞ்சகமாய் வீழ்த்த நினைப்போர்க்கு, அஞ்சி தோற்பதா? வைராக்கியம் பழகு” என 
           போதித்த குருவானவர்; உடலைப் பிரிந்த நிலையில், பலவற்றுக்கும் அச்சப்பட 
           வைத்துவிட்டார்!

1150.  தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
           கெளவை எடுக்கும்இவ் வூர்

           விழியப்பன் விளக்கம்: தாம் எதை வேண்டினாலும், அவர்தம் காதலர் அளிப்பர்! அதுபோல், 
           நாம் வேண்டும் பொய்யான புனைவுப் பேச்சை; இவ்வூர் மக்கள் அலராய் பேசுவர்!
(அது போல்...)
           பிள்ளைகள் எதை விரும்பினாலும், அவர்தம் பெற்றோர் அளிப்பர்! அதுபோல், நாம் விரும்பும் 
           மாயையான மக்கள் ஆட்சியை; இந்நாட்டு அரசியலார் வாக்குறுதியாய் அளிப்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக