புதன், செப்டம்பர் 14, 2016

வெங்காயச் சட்னியால் ஓர் பதிவு...


       "புலால் மறுத்தல்" அதிகாரத்திற்கான என் விளக்கவுரையை எழுதும்போது, அதற்கு தகுதி உடையவனாய் ஆக்கிக்கொள்ள; புலால் உண்பதை மறுத்துவிட்டதையம் ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். அதுமுதல், அப்பதிவில் வெளியிட்டிருந்த படத்தில் இருப்பது போல், பெரும்பாலும் என் உணவு "அவித்த காய்கறிகள்" தான். எவரேனும் விருந்தினர் வந்தால், மற்ற உணவுகளைச் சமைப்பது வழக்கம். நேற்று ஒரு விருந்தினர் வருவதாய் இருந்தது; எனவே வெங்காயச்-சட்னி அரைத்து; இட்லி சமைப்பதாய் ஒரு திட்டமிருந்தது. ஆனால், சூழல் காரணமாய் அந்த திட்டம் கைவிடப்பட்டது. சரி, வாங்கிவைத்த பொருட்களை என்ன செய்வது? சமைத்து தானே ஆகவேண்டும்? வெங்காயச் சட்னி அரைக்கும் முறைப் பற்றி எனக்கு ஓர் அறிவு இருப்பினும்; நான் இதுவரை செய்ததில்லை. சமைத்து பழக்கமில்லாத உணவைச் சமைக்க கூட, எனக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. அதற்கு காரணம்...

        "சமையல் எனும் கலை..." தலையங்கத்தில் குறிப்பிட்டது போல்; "என் சமையல் குருவான" என் தமக்கை.  எனக்கு மட்டுமல்ல; பலருக்கும் - அவரே சமையல் குரு. அவரிடம் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை உறுதிசெய்து கொண்டு நேற்றிரவு, வெங்காயச் சட்னியை அரைத்தேன். மேலிருக்கும் புகைப்படங்கள் அந்த நிகழ்வைத்தான் விளக்கமாய் காண்பிக்கின்றன. வெங்காயச்-சட்னிக்கு ஆலோசனை தேவையா? என்ற கேள்வி எழலாம். என் தமக்கையும், என்னம்மையும் செய்யும் வெங்காயச் சட்னிகள் - இருவகை அருமையான சுவை கொண்டவை. எல்லோரையும் போல், எனக்கும் பழக்கப்பட்ட சமையல் முறை மேல் ஓர் பிரியம். அதேபோல், இருக்க வேண்டுமென்று என் தமக்கையின் ஆலோசனைப்படி செய்தேன். சட்னியின் நிறத்தைப் பார்த்தவுடன் - சுவை அதேபோல் இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்தது; அந்த நம்பிக்கைப் பொய்க்கவில்லை. வெங்காயச் சட்னியோ/வெஜிடபிள் பிரியாணியோ...

நமக்கு பழக்கப்பட்ட சுவையும்; அதை நம்முள் விதைப்பவரும் - என்றுமே சிறப்புதான்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக