திங்கள், செப்டம்பர் 14, 2015

உறவினரா? உடன்பிறந்தோரா?? (குறள் எண்: 0041)



       குறள் எண் 0041-இற்கான என் விளக்கவுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.  அதில், நம் பெருந்தகை குறிப்பிடும் அந்த "இயல்புடைய மூவர் எவர்?" என என்னுள் எழுந்த குழப்பங்களையும்; அதை நான் தெளிந்துகொண்ட விதத்தையும்(கூட) ஒரு பதிவாய் எழுதியிருந்தேன். அந்த பதிவில், என் நட்பொன்று "உறவினரில் உடன் பிறப்புகளும் அடக்கம்! உடன் பிறப்புகள் அல்லாதோர் நிலை? மேலும் நட்பு, மற்றும் சுற்றத்தாரை ஏன் நிராகரிக்க வேண்டும்?" என்று கேட்டிருந்தது. அதேபோல், இன்னுமோர் நட்பொன்றும் "உறவினர்" சார்ந்த அதே கேள்வியை எழுப்பியிருந்தது.  இந்த சந்தேகமும்/கேள்வியும் உங்களில் பலருக்கும் இருக்கக்கூடும் என்பதால், அவர்களுக்கு கொடுத்த விளக்கத்தையும்; என்னுள் இருக்கும் மற்ற புரிதல்களையும் இப்படியொரு பதிவாய் எழுத நினைத்தேன். முதலில், நான் "உறவினர்"களை நிராகரிக்கவில்லை என்பதைத் தெளிவுபட கூற  விழைகிறேன். உறவினர் பற்றி, நானும் நிறைய ஆலோசித்த பின்னரே...

        என் விளக்கவுரையை அப்படி எழுதியிருந்தேன். உறவினர் என்பது பொது சொல்; அதனால் தான், உடன்பிறந்தோர் என்று தனித்து/தீர்க்கமாய் குறிப்பிட எண்ணினேன். ஏனெனில், நம் பெருந்தகை குறிப்பிடுவது "இயல்புடைய மூவர்" என்பதே. இயல்புடைய என்றால் என்ன? தன்மையுடைய என்று பொருள்; அதாவது சுயம். மேலும், உற்று நோக்கினால் அதற்கு "அடிப்படை" என்ற பொருள் வருவதை(யும்) உணரலாம். எனவே, ஒரு குடும்பத்தின் அடிப்படை எவர் என்றே நம் பெருந்தகை வரையறுத்து சொல்கிறார். ஒரு குடும்பத்திற்கு எவரெவர் அடிப்படையாய் இருக்கமுடியும்? முதலில் நம்மை ஈன்று/வளர்த்த தாயும் தந்தையும்! பின் நம்முடனே வளர்ந்து; நம் வளர்ச்சியிலும் பங்கு கொண்ட உடன்பிறந்தவர்கள். அதன் பின், நமக்கென ஒரு குடும்பத்தை உருவாக வழிவகுக்கும் "வாழ்க்கைத்-துணையும்/மக்களும்". இங்கே, பெருந்தகை ஆண்பாலைப் பற்றி சொல்வதால் "மனைவி-மக்கள்"!. அதனால் தான், என் விளக்கவுரையை...

   ஒரு "குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணை நிற்பவனே; குடும்பத்தன் ஆவான்" என்று எழுதினேன். உடன்பிறப்பிற்கு மாறாய், உறவைப்பற்றி கேள்வி எழுப்புவதால், நட்பும் துனைக்கேள்வியாய் வருகிறது. பரந்து பட்ட உறவும்/நம் சுற்றமும்/உலகளாவிய நட்பும் - வேறு இணைப்பில் வருபவை. நம் பெருந்தகை உறவு மட்டுமல்ல; நட்புக்கும் தனி அதிகாரங்கள் வகுத்திருக்கிறார். அவர் ஒவ்வொன்றாய்/படிப்படியாகத்தான் வரையறுக்கிறார்.  அதனால்தான், 133 அதிகாரங்கள் தேவைப்பட்டன. எனவே, நம் பெருந்தகை, எங்கே/எதைக் குறிப்பிடுகிறார் என்பதை ஆழ்ந்து கவனித்தல் மிக-முக்கியம். ஒரு குடும்பம்; முதலில், இம்மூன்றின் அடிப்படையில் தான் துவங்கவேண்டும். அக்குடும்பம் நன்முறையில் தழைத்து, வளர்ந்த பின் தான் உறவு, சுற்றம், நட்பு முதலான மற்றவை தனி இணைப்புகளாய் இணைய வேண்டும். மேலும், உறவுகள்...

           என்பதே, பல குடும்பங்கள் சேர்ந்ததுதான். எனவே, ஒரு குடும்பம் என்று வரையறுக்கும்போது; அங்கே, உறவுகள் என்ற பொதுமை சேர்தல் முறையானதல்ல. இங்கே, நான் இன்னொன்றையும் கவனிக்கிறேன்! ஏன் "இல்வாழ்வான்" என்ற ஆண்பால்? ஏன் "இல்வாழ்வார்" என்று பொதுவிலோ; அல்லது "இல்வாழ்வாள்" என்று பெண்பாலையோ குறிப்பிடவில்லை?! என்பதே அக்கவனம். ஏனெனில், ஆண்தான் எப்போதும் "இப்படி பொதுமை" என்று பேசி குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கிட வல்லவன். இயல்பிலேயே, பெண்கள் "தன் பிள்ளை/தன் கணவன்/தன் பெற்றோர்" என்பதைத் தெளிவாக வரையறுக்கக் கூடியவர்கள். பெண்களுக்கு, அவர்கள் மட்டும்தான் குடும்பம்; அவர்களே பெண்களின் உலகமும்! இது மேலோட்டமாகப் பார்த்தால், சுயநலம் என்பதாக தெரியும். ஆழப்பார்த்தால், அது எத்தனை உண்மை என்பது விளங்கும். ஆனால், அதை சரியாகப் புரிந்து கொள்ளுதல் அத்தனை எளிதல்ல. இக்காலப் பெண்கள், உடன்பிறப்பைக் கூட...

      விலக்கி வைக்கின்றனர் என்பது வேறு விடயம்! அது சிறுபான்மைக் கூட்டம். அடிப்படை குடும்பம் எதுவென ஆணுக்கு புரிவதில்லை. திருமணமான புதிதில் பல கணவன்-மனைவிக்குள்ளும் பல பிரச்சனைகள் ஏற்பட இந்த மாறுபட்ட சிந்தனையே காரணம். பெண், உறவுகளைப் பிரிக்க நினைக்கிறாள்! என்ற பொதுப்படையான குற்றச்சாட்டு இருப்பதும்; இப்புரிதல் இல்லாததால்தான். இந்த விதத்தில், சரியான புரிதல் ஆண்களுக்கு வரவேண்டும் என்பதோடு; பெண்களும், கணவனின் குடும்பமும் முக்கியம் என்பதை உணரவேண்டும்!; என்பதையும் பதிவு செய்வது, என் கடமையாகிறது. அதேபோல், தன் குடும்பம் என்று வரும்போது உறவு/நட்பு போன்ற பொதுமையை சேர்த்து, பார்த்து குழம்பக் கூடாது என்பதை "ஆண்களுக்கு"; அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறேன். அதனால்தான்,  நம் பெருந்தகை "இல்வாழ்வான்" என்று குறிப்பிட்டிருப்பதாய் நான் நம்புகிறேன். எனவே, என்னளவில் இயல்புடைய மூவர் என்ற பட்டியலில் சேர்வது...


உடன்பிறந்தோரே! உடன்பிறந்தோரே!! உடன்பிறந்தோரே!!!

பின்குறிப்பு: {யோவ் வள்ளுவரே! - "இல்வாழ்வான்? & இயல்புடைய மூவர்??' (குறள் எண்: 0041)}என்ற பதிவில் சொன்னதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இல்வாழ்க்கை என்பது சாதாரணமான விடயம் இல்லை என்பதைத்தான்; இல்வாழ்க்கையின் முதல் குறளான, குறள் எண் 0041 நமக்கு உணர்த்துகிறது.

2 கருத்துகள்:

  1. திருமணமான புதிதில் பல கணவன்-மனைவிக்குள்ளும் பல பிரச்சனைகள் ஏற்பட இந்த மாறுபட்ட சிந்தனையே காரணம். பெண், உறவுகளைப் பிரிக்க நினைக்கிறாள்! என்ற பொதுப்படையான குற்றச்சாட்டு இருப்பதும்; இப்புரிதல் இல்லாததால்தான். இந்த விதத்தில், சரியான புரிதல் ஆண்களுக்கு வரவேண்டும் என்பதோடு; பெண்களும், கணவனின் குடும்பமும் முக்கியம் என்பதை உணரவேண்டும்!; என்பதையும் பதிவு செய்வது, என் கடமையாகிறது. அதேபோல், தன் குடும்பம் என்று வரும்போது உறவு/நட்பு போன்ற பொதுமையை சேர்த்து, பார்த்து குழம்பக் கூடாது என்பதை "ஆண்களுக்கு"; அடிக்கோடிட்டு வலியுறுத்த விரும்புகிறேன். ®®®®®®®®

    பதிலளிநீக்கு