திங்கள், செப்டம்பர் 21, 2015

அதிகாரம் 005: இல்வாழ்க்கை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 005 - இல்வாழ்க்கை

0041.  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
           நல்லாற்றின் நின்ற துணை
  
           விழியப்பன் விளக்கம்: குடும்பத்தின் அடிப்படையான - பெற்றோர்/உடன்பிறந்தோர்/
           மனைவி-மக்கள் - இம்மூவர்க்கும் அறவழியில் துணைநிற்பவனே; சிறந்த
           குடும்பத்தன் ஆவான்.
(அது போல்...)
           அரசியலின் அடிப்படியான - மனிதம்/மாட்சிமை/மக்களாட்சி - இம்மூன்றையும்
           நேர்மையுடன்  தொடர்பவனே; சரித்திர தலைவன் ஆவான்.

0042.  துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் 
           இல்வாழ்வான் என்பான் துணை

           விழியப்பன் விளக்கம்: துறவிகள்/பசித்திருப்போர்/ஆதரவற்றோர் - இவர்களுக்கு 
           இல்லற-வாழ்க்கை வாழ்பவன் துணையாவான்.
(அது போல்...)

           விவசாயம்/விலைவாசி/பாதுகாப்பு - இவற்றிற்கு அரசு-இயந்திரத்தை நிர்வகிப்போர் 
           பொறுப்பாவர்.

0043.  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
           ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

           விழியப்பன் விளக்கம்: இறந்து-தெற்கில் இருப்போர்/கடவுள்/விருந்தினர்/சுற்றம்/
           தானெனும்-சுயம் - இவர்கள் ஐவரிடத்தும், அறநெறியை தவறாமல் பேணுதல் 
           சிறப்பாகும்.
(அது போல்...)
           மரம்/செடி-கொடி/சுற்றுச்சூழல்/சிற்றுயிர்/பேருயிர் - இவையைந்தின் வளமும்; 
           அடிப்படையை மறக்காமல் காத்தல் மனிதமாகும்.

0044.  பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
           வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


           விழியப்பன் விளக்கம்: தீவினைக்கு அஞ்சி, அறமுணர்ந்து சேர்த்ததைப் பகிர்ந்துண்ணும்
           தன்மையிருப்பின்; நம்வாழ்வு, என்றைக்கும் முடிந்து போவதில்லை.
(அது போல்...)
           மனசாட்சிக்குப் பணிந்துப், பொதுநலத்துடன் அதிகாரத்தைப் பகிரும் இயல்பிருப்பின்;
           ஓர்அரசாட்சி எந்த தேர்தலிலும் தோற்காது.
          
0045.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
           பண்பும் பயனும் அது

           விழியப்பன் விளக்கம்: அன்பும்/அறநெறியும் இருக்குமேயானால்; அந்த இல்வாழ்க்கையின், 
           சிறந்த பண்பும்/பயனும் அவைவேயாகும்.
(அது போல்...)
           மனிதமும்/தன்னொழுக்கமும் கொண்டிருப்பின்; ஒரு தலைவனின், சிறந்த ஆற்றலும்/
           பொதுநலமும் அவையேயாகும்.

0046.  அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
           போஒய்ப் பெறுவ எவன்


           விழியப்பன் விளக்கம்: அறநெறியில் பயணிக்கும் இல்லற வாழ்வில் கிடைக்கும் 
           பேறுகளை-விட, சிறந்ததாய்; வேறு நெறியில் பயணிப்பதில் கிடைப்பதேது?
(அது போல்...)
           நேர்மையான வழியில் பணிசெய்வதால் கிடைக்கும் மனநிறைவை-விட, நிறைவானதாய்;
           மாற்று வழியில் பணிசெய்து அடையமுடியுமா?

0047.  இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
           முயல்வாருள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: அறநெறியோடு இயல்பான இல்வாழ்க்கையை வாழ்பவன் 
           என்பவன்; அங்ஙனம் வாழ முயற்சிப்போருக்கு முதன்மையாவான்.
(அது போல்...)
           பொதுநலனோடு முறையான மக்களாட்சியை நடத்தும் தலைவரே; அதுபோல்
           ஆட்சியமைக்க முனைவோருக்கு உதாரணமாவார்.

0048.  ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
           நோற்பாரின் நோன்மை உடைத்து

           விழியப்பன் விளக்கம்: தானும் அறநெறி தவறாது; குடும்பத்தாரும் அறநெறி தவறிடாது 
           காத்திடுவோரின் இல்வாழ்க்கை; துறவிகளின் மனவலிமையை விட உயர்ந்ததாகும்.
(அது போல்...)
           தானும் ஊழல் செய்யாது; கட்சியினரும் ஊழல் செய்யாது காத்திடும் தலைவன்; 
           உயிர்காக்கும் மருத்துவரை விட மேன்மையானவன்.

0049.  அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
           பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

           விழியப்பன் விளக்கம்: அறமென்று வரையறுப்பதே, இல்வாழ்க்கை ஆகும்! அதுவும், எவரும் 
           குறைகாண முடியாதிருப்பின் - சாலச்சிறந்தது.
(அது போல்...)
           பொதுச்சேவை என்பதே, தலைமைப்பண்பு ஆகும்! அதுவும், எதிர்கட்சியும் விமர்சிக்க 
           இயலாதிருப்பின் - சரித்திரமாகும்.

0050.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
           தெய்வத்துள் வைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: மண்ணுலகில், இயல்புடைய இல்வாழ்க்கையை வாழ்பவன்;  
           விண்ணுலகில் இருக்கும் தெய்வத்துக்கு இணையாக கருதப்படுவான்.
(அது போல்...)
           ஓர்ஊரில், முறையான சமூக-உறவை நிலைநாட்டுவோர்; தேச-எல்லையைக் 
           காத்திடும் இரானுவத்தினருக்கு ஒப்பாக மதிக்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக