வியாழன், செப்டம்பர் 17, 2015

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் (குறள் எண்: 0046)



        "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்" என்ற  குறள் எண்: 0046-இற்கான விளக்கவுரையை எழுதுவது பெருத்த சிரமமாய் இருந்தது. "படிப்பதற்கு மட்டுமல்ல! பொருளும் கூட எளிதானது!!" என்று நம்மை ஒரு பொய்-நம்பிக்கைக்கு உள்ளாக்கும் பல குறள்களில் இதுவும் ஒன்று. இந்த குறளுக்கு "ஒழுக்கமா குடும்பம் நடத்துறத விட; வெளியில போயி என்னத்த காணமுடியும்?" என்று மிகச்சுருக்கமாய் பொருள் சொல்லிவிட முடியும். ஆனால், அப்படி சொல்லிவிட்டால் அது "திரு"க்குறளாக இருக்கமுடியாது! அது சமுதாயத்தில் கேட்கும் "தெரு"க்குரலாக ஆகிவிடும். சரி, இருக்கும் விளக்கவுரைகளில் எவரும் சுருக்கமாய் எழுதி இருக்கிறார்களா?! என்று தேடினால், இல்லை என்ற உண்மையே பதிலாகக் கிடைத்தது. குறளிலுள்ள வார்த்தை எதையும் விடுபடாது கவனம் கொண்டு - சுருங்கவும் இல்லாமல்/தேவைக்கு மிகாமலும் விளக்கவுரை எழுதவேண்டும் என்பதே என் சுய-நிபந்தனை. ஆனால், இந்த குறளில் நம் பெருந்தகை...

       "அறத்தாற்றின்" என்ற வார்த்தையை சொல்கிறார்; அதை நீக்கினால், குறளின் மகிமையே கெடும். எனவே, அதையும் உட்கொண்டு விளக்கவுரை எழுதவேண்டும். மேலும் "போஒய்ப் பெறுவ எவன்" என்று கேட்டு முடித்திருக்கிறார். அப்போது, கண்டிப்பாக, எதை விட வெளியில் பெற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுவது விளக்கவுரையின் கடமையாகிறது. பலரும் "வேறு நெறியில் சென்று பெறுவது என்ன?" என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். எதை? என்று குறிப்பிட விரும்பினேன்; எதை சொல்வது? என்ற குழப்பமும்! ஏற்பட்டது. குடும்பத்தில் கிடைக்காத ஒன்றென்று எதுவும் இருக்கமுடியுமா? என்று நம் பெருந்தகை கேட்ட கேள்வியே, எதிர்கேள்வியாய் வந்தது. இறுதியாய் "பேறு" என்ற வார்த்தை நினைவிற்கு வந்தது. ஆம்! குழந்தைப்பேறு முதல் செல்வப்பேறு வரை எல்லாவற்றையும் கொடுப்பது குடும்பம் தானே?! எனவே, பேறு என்பதே சரியென்று தோன்றியது. எனவே, என் விளக்கவுரையை, பின்வருவருமாறு எழுதினேன்:

அறநெறியில் பயணிக்கும் இல்லற வாழ்வில் கிடைக்கும் பேறுகளை-விட, 
சிறந்ததாய்; வேறு நெறியில் பயணிப்பதில் கிடைப்பதேது?
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக