"கொன்றன்ன இன்னா செயினும்" என்ற குறள் எண் 0109-இற்கான என்னுடைய விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் எப்போதும் போல், என்னுடைய நிகர்-விளக்கத்தை...
தக்க-சான்றுடன் ஓர்முறை கடவுள் தோன்றினால்; ஆத்திகர்களைக் காயப்படுத்தும்
எல்லா வாதங்களும், இருந்த தடமறியாது அழியும்
என்று எழுதியிருந்தேன். அதை எழுதியபோதே, அது பலருக்கும் தவறுதலான பொருளைத் தரக்கூடும் என்று நம்பினேன். இருப்பினும், அதையும் தாண்டி, என்னுடைய பார்வை புரியக்கூடும் என்றுமோர் நம்பிக்கையும் இருந்தது. அதைப் படித்துவிட்டு, நான் முன்பே குறிப்பிட்டிருக்கும் என் "குறளும் கோவால்-நட்பும்" என்ற வாட்ஸ்-ஆப் குழுவில் நண்பர்கள் "பலத்த" எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். மிக-நீண்ட விவாதத்திற்கு பின்னரும் என் பார்வை "கடவுள் மறுப்பு சார்ந்தது அல்ல! அப்படி தோன்றினால், மறுப்பவர்கள் கூட, கடவுளை ஒப்புக்கொள்வார்கள்!!" என்பதை...
அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை! என் பாலும்; என் எழுத்தின் பாலும் அதீத அன்பும்/அக்கறையும் கொண்ட நட்புகள். எனவே, அவர்களின் வேண்டுகோளை மறுக்க விரும்பவில்லை; ஆனால், அதை மாற்றி விடுகிறேன் என்று உறுதி தந்ததோடு; என்னுடைய பார்வை புரியாதது கொடுத்த "வலியுடனும்/வேதனையுடனும்" தான் அதை செய்கிறேன் என்பதையும் குறிப்பிட்டேன். ஒரு நட்பு "தோன்றினால்" என்பது எதிர்மறைப் பொருளைத் தருகிறது! அதனால் தான், அது தவறாகப் படுகிறது - என்பதை நேரடியாக சொல்லி இருந்தது எனக்கு பிடித்திருந்தது. அதுதான் சிக்கல் இங்கே; கடவுள் நம்பிக்கை என்று வந்துவிட்டால் "எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!" என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான், எனக்கும் கடவுள் நம்பிக்கை இருப்பினும்" - பல நேரங்களில் - அவர்களில் இருந்து வேறுபட்டு இருப்பதாய் ஒரு பிம்பம் இருக்கிறது. அதனால் தான் "இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு..." மற்றும்...
"இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?..." என்ற தலையங்கங்கள் எழுத முடிந்தது. என் கடவுள் நம்பிக்கையை - என்னுடைய புரிதல் மற்றும் எனக்கு தெரிந்த உண்மையின் - அடிப்படையில் வரையறுக்கவே விரும்புகிறேன். இதையெல்லாம் விளக்கமாய் சொல்லி, அவர்களிடம் வாதிடவில்லை! இதைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதை நம் "பெருந்தகையின் பொதுமறை" சார்ந்த இந்த பிரிவில் எழுத விரும்பவில்லை. அதை பொதுத்தளத்தில் ஒரு தலையங்கமாய் பின்னர் எழுதுகிறேன். எனவே, என் நிகர்-விளக்கத்தை...
ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால்; மிகத்தீவிரமான கடவுள் மறுப்புக்
கொள்கைகளும், இருந்த தடமறியாது அழியும்
என்று மாற்றவிருப்பதை மட்டும் சுட்டிக்காட்டி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஒரு நட்பு "கடவுள் மறுப்பு, உன் நோக்கமல்ல என்பது எனக்குப் புரிகிறது. இருப்பினும், இவ்விளக்கமே
(மாற்றாய் சொன்னது) மிகச் சரியானதும், பொருத்தமானதும்" என்று ஆமோதித்தது. அதே நட்பு தொடர்ந்து "காரணம், தக்க சான்றுகளுடன் ஒருபோதும் கடவுள் எக்காலத்திலும் காட்சியளிக்கப் போவதில்லை. ஆனால், எந்த மனிதனுக்குள்ளும் அடுத்த உயிர்க்கு நன்மை செய்யும் வாய்ப்பு இல்லாமல் போகப்போவதில்லை (அதில் தான், கடவுள் இருக்கிறார் என்ற பொருளில் ஒரு வாதம் இருந்ததால், இதைக் குறிப்பிட்டது அந்த நட்பு). கடவுள் காட்சியளிக்க வேண்டும் என்கிற ஆசையோ அல்லது எதிர்பார்ப்போ இரண்டுமே அறியாமையின் வெளிப்பாடாய் அமைந்துவிடும். கடவுள் என்ப(வர்/து) கண்ணால் கண்டு உறுதி செய்யும் விடயமல்ல. உன் (திருத்திய) விளக்கத்தில் கூறியதுபோல், உணர்தல் சம்மந்தப்பட்ட விடயம். இப்போதிருக்கும் கடவுளரெலாம் குறியீடு மட்டுமே. இருப்பினும் அவற்றுக்கு சக்தியூட்ட முடியுமென்பதுதான் ஆன்மீகத் தொழில்நுட்பம். இந்த கருத்தைப் படித்துவிட்டு அந்த நட்பை வெகுவாய்
பாராட்டினேன். மிகக் குறிப்பாய் மூன்றே-மூன்று வார்த்தை கொண்ட அந்த "ஆன்மீகத் தொழில்நுட்பம்" என்ற சொற்றொடர் பலவற்றை உணர்த்தியது. மேற்குறிப்பிட்டது போல், அவற்றை நம் பெருந்தகையின் தளத்தில் எழுத விரும்பவில்லை! இதுவரை எதற்கும் என்னுடைய நிகர்-விளக்கத்தை கடவுளை மையப்படுத்தி எழுதியதில்லை. "உறவு/உண்மை/நேர்மை/அறம்/உறவுகள்/(பல இடங்களில்)தாய் மற்றும் பெற்றோர்/அரசியல்/ஆட்சி-மாண்மை - இவற்றை மைய்யப் படுத்தியே எழுதியிருக்கிறேன். ஆனால் "கொன்றன்ன இன்னா செயினும்" என்ற சொற்றொடர் "தக்க-சான்றுடன் ஓர்முறை கடவுள் தோன்றினால்" என்று எழுத வைத்தது. கடவுள் மறுப்பாளர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை தேவையில்லாமல் "அதீதமாய் விமர்சிப்பதை" பதிந்திருக்கிறேன். கடவுள் தோன்றினால் அவர்களின் "அதீத/தேவையற்ற விமர்சனம்" அறவே அழியும் என்ற பொருளில் தான் அப்படி எழுதினேன். இருப்பினும், என் நல-விரும்பிகள் மறுத்துவிட்டதால்...
"ஒரேயொரு நிகழ்வில் கடவுளை உணர்ந்தால்" என்று மாற்றிவிட்டேன்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக