திங்கள், நவம்பர் 30, 2015

அதிகாரம் 012: நடுவு நிலைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 012 - நடுவு நிலைமை

0111.  தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
           பாற்பட்டு ஒழுகப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: வேண்டியவர்/வேண்டாதவர் என்ற பேதமின்றி இருக்க முடிந்தால்; 
           அந்த நடுநிலைமை எனும் ஒப்பற்ற தகுதி, நன்மைப் பயக்கும்.
(அது போல்...)
           தன்கட்சி/எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி மக்களாட்சி அளித்தால்; அந்த சார்பின்மை
           அறிந்த இணையற்ற அரசாட்சி, மக்களைக் காக்கும்.

0112.  செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
           எச்சத்திற் கேமாப்பு உடைத்து

           விழியப்பன் விளக்கம்: நடுநிலைமை கொண்டவரின் சுவடுச்-செல்வம் அழிவில்லாதது; 
           அவரைப் பின்தொடர்வோர்க்கும், வலிமையளிக்கும் தன்மையுடையது.
(அது போல்...)
           பொதுவுடைமை காப்பவரின் ஆட்சிக்காலம் முடிவில்லாதது; அவரின் தொண்டர்களுக்கும்,
           ஆளுமை அளிக்கக்கூடியது.

0113.  நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
           அன்றே யொழிய விடல்

           விழியப்பன் விளக்கம்: நன்மையையே தந்திடினும், நடுநிலைமையைத் தவறுவதால் 
           கிடைக்கும் செல்வத்தை, அன்றே அழித்திடல் வேண்டும்.
(அது போல்...)
           மகிழ்ச்சியையே அளித்திடினும், அறத்தை இழப்பதால் கிடைக்கும் உறவை; அக்கணமே 
           அறுத்தெறிதல் வேண்டும்.

0114.  தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
           எச்சத்தாற் காணப்ப படும்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் நடுநிலைமை உடையவரா? இல்லாதவரா?? என்பது, அவர் 
           விட்டுச்செல்லும் தாக்கத்தால் அறியப்படும்.
(அது போல்...)
           ஓராட்சி மக்கள்-நலனைப் பேணியதா? இல்லையா?? என்பது, அவ்வாட்சியைத்
           தொடர்ந்து நடத்துவோரால் அறியப்படும்.
          
0115.  கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 
           கோடாமை சான்றோர்க் கணி

           விழியப்பன் விளக்கம்: அழிவும்/ஆக்கமும் இல்லாத, வாழ்க்கை ஏதுமில்லை என்பதால்;
           உள்ளத்தால்  நடுநிலைமையை தவறாதிருத்தலே, சான்றோர்க்கு அணிகலனாகும்.
(அது போல்...)
           தோல்வியும்/வெற்றியும் இல்லாத, விவாதம் எதுவுமில்லை என்பதால்; விவாதத்தில்
           சாடுதலைத் தவிர்த்தலே, வாதிடுவோர்க்கு சிறப்பாகும்.

0116.  கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
           நடுவொரீஇ அல்ல செயின்

           விழியப்பன் விளக்கம்: தன்னுள்ளம் நடுநிலைமையைத் தவிர்த்து, தகாதவற்றைச் செய்தால்; 
           "அழியப்போகிறோம்" என்று நாம் உணரவேண்டும்.
(அது போல்...)
           தம்மாட்சி மக்கள்-நலனை மறந்து, ஊழல்களைப் பெருக்கினால்; "வீழப்போகிறோம்" 
           என்று அக்கட்சியினர் உணரவேண்டும்.

0117.  கெடுவாக வையாது உலகம் நடுவாக 
           நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

           விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையோடு வாழ்ந்தும், வறுமையில் வாடுபவரை; ஒருபோதும் 
           - இவ்வுலகம் கெடுதலாய் எண்ணி, தூற்றாது.
(அது போல்...)
           அறநெறியோடு அரசாண்டும், சிக்கலில் இருப்போரை; எந்நிலையிலும் - மக்கள் தீயவராய்  
           எண்ணி, பேசமாட்டார்கள்.

0118.  சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 
           கோடாமை சான்றோர்க் கணி

           விழியப்பன் விளக்கம்: இரண்டுபுறமும் சமம்செய்து, அளவை நிர்ணயிக்கும் துலாக்கோல் 
           போல்; ஒருபக்கம் சாராமல் இருத்தல், சான்றோர்க்கு அழகு.
(அது போல்...)
           ஆண்/பெண் பாகுபாடின்றி, குழந்தைகளை நடத்தும் தாயைப் போல்; பாலின 
           வேறுபாடின்றி இருத்தல், சமுதாயத்துக்கு சிறப்பு.

0119.  சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா 
           உட்கோட்டம் இன்மை பெறின்

           விழியப்பன் விளக்கம்:  ஒருபுறம் சாராமல், உள்ளத்தில் அறத்தை மீறாமல் 
           இருக்கமுடிந்தால் - சொல்லிலும் அறமீறல் இருக்காது; அதுவே, நடுநிலைமையாம்.
(அது போல்...)
           ஒருபாலினம் சாராமல், மகன்/மகள் பிரிவினை இல்லாமல் இருக்கப்பெற்றால் -
           வளர்ப்பிலும் பிரிவினை இருக்காது; அவர்களே சிறந்த-பெற்றோராவர்.

0120.  வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
           பிறவும் தமபோல் செயின்

           விழியப்பன் விளக்கம்:  நடுநிலையோடு - பிறர் பொருளையும், தம் பொருளாய் கருதுவதே; 
           வியாபாரம் செய்வோருக்கு, சிறந்த வியாபார யுக்தியாகும். 
(அது போல்...)
           பேரன்போடு - பிற குழந்தைகளையும், நம் குழந்தைகளாய் பேணுவதே; குழந்தை 
           வளர்ப்போர்க்கு, தேவையான வளர்ப்பு நெறியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக