"என் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!"
மேலுள்ள சொற்றொடர் என் வலைப்பூவின் "துணைத் தலைப்பாய்" இருப்பது. இயல்பிலேயே எனக்கு விமர்சனத்தைச் சரியாய் எடுத்துக் கொள்ளும் திறன் உண்டு; விமர்சிப்போரிடம் "விவாதம் செய்யும்" பழக்கம் உண்டு. பல விமர்சனங்களை விவாதமில்லாமல், எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. விவாதங்கள் நம் புரிதலை அதிகமாக்கும் என்பது என் அனுபவம்/நம்பிக்கை. அதேநேரம், என்னுடைய விவாதங்கள் விமர்சிப்போரைக் காயப்படுத்தக் கூடாது என்ற கவனமும் மிக அதிகம்; சில நேரங்களில் "சூழல் காரணமாய்" அதை தவறி விடுவதுண்டு. ஆனால், அதை அடுத்த வினாடியே - உணர்ந்துவிடுவதும் என் இயல்பு; உணர்ந்தவுடனேயே, எந்த தயக்கமும் இன்றி மன்னிப்பு கேட்பேன். இந்த அடிப்படையில், என் எழுத்து/இலக்கியப் பணி வளர்ச்சியில் - "விமர்சன உரம்" இடடவர்களை வெளியுலகுக்கு உரைக்கவே இத்தலையங்கம்.
- என்னப்பன்: விமர்சனமென்று என்னப்பன் ஏதும் பெரிதாய் செய்யவில்லை எனினும்; இன்னமும் ஒரு "தமிழ் ஆசிரியராய்" இருந்து எனக்குக் கற்பிப்பவை அதிகம். இன்று கூட, என் சமீபத்திய கவிதையொன்றில் அதிக எண்ணிக்கையில் "அசை" உபயோகித்ததைக் குறிப்பிட்டு, அவரிடம் இலக்கணம் கற்றேன். இனி, அந்த தவறு நேராது. முன்பே "என் தமிழுக்கு வித்திட்டவர்..." என்ற தலையங்கத்தில் சான்றிட்டது போல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்; அவரிடம் என் படைப்புகளைக் காண்பித்து, நிறைய கற்பேன். அவரின் கற்பித்தல் - என் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தமுறை வேறு காரணத்திற்காய் எனினும்; மீண்டும் ஒருமுறை கும்பிடறேன்பா!. நன்றி என்னப்பனே!
- நண்பன் "முனைவர். திரு. சுரேஷ் பாபு": அடுத்து, நான் அடிக்கடி குறிப்பிடும் என் நண்பன். ஒரு எழுத்தாளனாய்/இலக்கியவாதியாய் - நான் வளரவேண்டும்; என்ற உண்மையான முனைப்பு/அன்பு/அக்கறை செலுத்துபவன். என் படைப்புகளைத் தொடர்ந்து "உண்மையாய் விமர்சித்து" வருபவன். என் படைப்புகளை மகிழ்ந்து சிலாகிக்கும் அதே வேளையில்; என் தவறுகளை எந்த தயக்கமும் இல்லாமல் "வீரியத்தோடு" சுட்டிக்காட்டுபவன். அவனைப் போல் ஒரு விமர்சகன் கிடைத்திருப்பது - என் கொடுப்பினை. அவனின் விமர்சனத்தை சரியான விதத்தில், புரிந்து கொள்ளும் மனநிலை எனக்கிருப்பது - என் கிருபை. மிக்க காட்டமாய் விமர்சிப்பான்! மிகக் காட்டமாய் விவாதிப்போம்! - எந்நேரத்திலும், படைப்பை விமர்சிக்கும் கண்ணியம் தாண்டி - தனிப்பட்ட வகையில் ஒருவரையொருவர் விமர்சித்ததே இல்லை! "என் எழுத்து பிடிக்கவில்லை என்றால்; விலகி செல்லடா!" என்று ஒருபோதும் நான் சொல்லியதில்லை. இந்த தலையங்கத்தின் முதல் வடிவத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட - "கடமை" என்ற சொல்லை மையப்படுத்தி கடுமையாய் விமர்சித்தோம். அவன் ஒப்புக்கொள்ளும் வகையில் - அவனுக்கு விளக்கம் கொடுப்பினும்; அவனின் பார்வையில், இருக்கும் நியாயம்(உம்) புரிந்தது. அதை மாற்றிவிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். இதுதான், ஒரு விமர்சகரை எதிர்கொள்ளும் விதம் - அவனின் விமர்சனத்தை நான் மதிக்கவில்லை எனில், அவன் விமர்சனம் தடைப்பட்டு இருக்கும். அவன் விமர்சனம் தடைபட்டு இருந்தால், என் வளர்ச்சி குறைபட்டிருக்கும். ஆனால், ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து; ஒருவரையொருவர் பரஸ்பரம் மதித்து - அவனின் விமர்சனமும்/எங்கள் விவாதங்களும்/என் வளர்ச்சியும் - ஒருசேர வளர்ந்து கொண்டிருக்கிறது. நன்றியடா மாப்ளே!
- நண்பன் "திரு. கதிர்வேல்": என் பள்ளித்தோழன்! தமிழ் பயின்றவன்! தமிழ் நேசன்! - நான் அடிக்கடி சொல்வது போல், என் படைப்பு நன்றாக இருக்கிறது என்ற விமர்சனம் எனக்கு சந்தோசம் கொடுக்கும் எனினும்; இவன் போல் குறைகளைச் சரியாய் சுட்டிக்காட்டும் விமர்சனத்தைத் தான் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஆம், பாராட்டை சொல்ல மறந்தாலும் - ஒருக்காலமும் "விமர்சனத்தை" மறக்காமல் செய்பவன். முக்கியமாய், திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் என் பணியை மையப்படுத்திய "குறளும் வாழ்வியலும்" என்ற எங்கள் வாட்ஸ்ஆப் குழுவில் - நிறையக் குறைகளைச் சுட்டிக்காட்டி; என் கருத்தை செம்மைப் படுத்தியவன். அவன்மகள் செல்வி. பவஸ்ரீ கூட என் குறை களைந்திட உதவி இருக்கிறாள்; அவளிடம் கூட மன்னிப்பு கேட்டு, அவளுக்கு நன்றி சொல்லி இருக்கிறேன். "அவளிடம் கூட" என்றது விமர்சகர் எவராய் இருப்பினும்; விமர்சனத்தை மதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவே. மற்றபடி, என்மகளிடம் கூட நான் மன்னிப்பு கேட்பதுண்டு; பவஸ்ரீயும் என்மகளே! அவளிடம் மன்னிப்பு கேட்க எனக்கு எந்த தயங்கும் இல்லை. இப்படி விமர்சனத்தை ஏற்பது தான் - ஒருவரின் வளர்ச்சிக்கு உரமிடும் என்று நான் திடமாய் நம்புகிறேன். குறைகளைச் சரியாய் சுட்டுவதனாலேயே எங்கள் நட்பு வட்டத்தில் "நக்கீரன் என்று அன்புடன்" அழைக்கப்படுபவன். நன்றியடா நக்கீரா!
- கோவல் நண்பர்கள்: என் கிராமத்தின் அருகிருக்கும் திருக்கோவலூர் என்ற நகரில் உள்ள நண்பர்கள்; இதற்காகவும் "கோவல் நண்பர்கள்" என்ற பெயரில் ஒரு வாட்ஸ்-ஆப் குழுவுண்டு. திருக்குறள் தவிர்த்த, என் மற்ற படைப்புகளில் பலதும் இங்கே விவாதிக்கப்படும்.
- முதலில், பாரத்: என்னை வெகு உயர்வாய் பாராட்டுபவன். "பன்முக அறிவு" கொண்ட அன்பன்; குறிப்பாய், அவனின் ஆன்மீக மற்றும் வரலாற்று அறிவு - மிகுந்த பாராட்டுக்குரியது. அவன் முன்வைக்கும் அன்பு விமர்சனங்களும் - என் வளர்ச்சிக்கு காரணம்! அதேபோல், மறுப்புகளையும் மறைக்காமல் சுட்டிக் காட்டுபவன்.
- இரண்டாவது, ஜனா: மிக நேர்மையாய்/காட்டமாய் விமர்சிக்கும் விமர்சனன். "கபாலி ஸ்டைலில் ஒரு காலை வணக்கம்" என்றோர் காணொளியை உருவாக்கி யூ-டியூபில் பகிர்ந்தேன்! அதைப் பார்த்ததும், அவன் வைத்த விமர்சனம் - அப்பப்பா! அவன்(உம்) ஒரு கலைஞன் என்பதால் - மிகக் கடுமையாய் இருந்தது! அதே காட்டத்துடன் நிறைய விவாதித்தோம்; "வழக்கமான விடுமுறை நாள் தூக்கத்தை" இழந்து, அன்று மாலையே வேறோர் வடிவத்தில் காணொளி ஆக்கினேன். அதிலும் 5 விழுக்காடு அளவில் குறை கண்டிடினும் - வெகுவாய் பாராட்டினான். அப்படி குறைகளையும் முனைப்பு தான் நான்; அது தான் என் வளர்ச்சிக்கு ஆதாரம் - அதற்கு சரியான உரமிடுவோர் தான் இவனும், இங்கே குறிப்பிட்டிருக்கும் இவன் போன்றோரும்.
- மூன்றாவது, பாலாஜி: விமர்சனம் என்ற பெயரில் இல்லாமல்; விமர்சனமே செய்யாமல் - என் வளர்ச்சிக்கு உரமிடுபவன். ஆம்! விமர்சனத்தில் இரண்டு வகை உண்டு: ஒன்று - நேர்மறை; மற்றொன்று - எதிர்மறை. இந்த தலையங்கத்தில் குறிப்பிடப் பட்டிருப்போர் அனைவரும் - இரண்டாவது வகையில் "அதிக உரம்" இட்டவர்கள். பாலாஜி - இரண்டும் இல்லாமல், கேள்வியால் என் சிந்தனையை வளர்த்து; என் வளர்ச்சியில் பங்கு கொள்பவன். ஆம் - அவன் கேள்வியின் நாயகன்! அவன் கேள்விகளுக்கு பதில் அளிக்க - நான் செய்யும் சிந்தனையில், என் படைப்புகள் தரமுயர்வதுடன்; அதிலிருந்து புதிய படைப்புகளும் உருவாகும்.
- மற்ற நண்பர்கள்: காதர், ஜோதி போன்று இன்னும் பல நண்பர்கள் - தங்கள் அன்பான நேர்மறை விமர்சனங்கள் மூலமாக அவ்வப்போது என் வளர்ச்சியில் உரமிடுவார்கள். இதில், காதர் ஒரு தமிழ் நேசனும் கூட - வார்த்தை நாயகன்! அருவிபோல் வார்த்தைகளை வாரிக்கொட்டும் "வார்த்தைக்கடல்" அவன். நன்றிங்கடா நட்புகளே!
- முகமறியா வாசகர்கள்: பரஸ்பரம் முகமறியா நிறைய அன்பர்கள் - வாசகர்களாய் அமையப் பெற்றது என் பாக்கியம். அவர்களில் சிலர் இடும் பின்னூட்டங்கள் எனக்கு ஊக்கியாகவும்; "குறைகளைப்பான்" களாகவும் அமைந்தன. நம் படைப்புகளைத் தொடர்ந்திட, சில வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதே - ஒரு படைப்பாளனுக்கு வீரியமுள்ள உரம்தான். நன்றி வாசகர்களே!
உங்கள் "விமர்சன உரங்கள்" - என்னை விருச்சமாய் வளர்த்திடட்டும்!!!
முக்கிய(மானவர்) குறிப்பு: "வேலை மற்றும் வீடு" இரண்டையும் கவனிக்க நேரமே இல்லை என்பதால் - மேற்குறிப்பிட்டவர்கள் போல் "விமர்சன உரத்தால்" பெரிதாய் பங்கு கொள்ளவில்லை எனினும் - நான் கேட்கும்போது மட்டும் விமர்சித்த ஒருவருண்டு! அவர் மட்டும் "ஒரேயொரு விமர்சனத்தை செய்திருந்தால்" - என் எழுத்துப்பணி வளர்வது மட்டுமல்ல; தொடர்வதும் சாத்தியமில்லை! ஆம், பெரும்பான்மையான ஆண்களின் இம்மாதிரியான முயற்சிக்கு பெரிதும் முட்டுக்கட்டையாய் இருப்பது - "என்னங்க? எதுக்கு இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு?!" - எனும் ஒரு மனைவியின் கேள்வியே. என்னவள் - இதுவரை அப்படி கேட்டதேயில்லை! இனியும் கேட்கமாட்டாள். ஏனெனில் - அவள் தமிழ் உணர்ந்தவள் மட்டுமல்ல; பாரம்பரிய தமிழ் குடும்பத்தில் இருந்தும் வந்தவள்!. எனவே, கேட்டபோது வைத்த விமர்சனங்களையும் தாண்டி - அவள் வைக்காத மேற்குறிப்பிட்ட ஒரு விமர்சனம் - என் வளர்ச்சியில்/தொடர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நன்றியடி என்னவளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக