ஞாயிறு, செப்டம்பர் 10, 2017

அதிகாரம் 077: படைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி

0761.  உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
           வெறுக்கையுள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: விழுப்புண்களுக்கு அஞ்சாமல் வெல்லும் திறமுடைய, முழுமையான 
           போர்ப் படையே; அரசாள்பவரிடம் இருக்கும், செல்வங்களில் எல்லாம் முதன்மையானது 
           ஆகும்!
(அது போல்...)
           விமர்சனங்களுக்குப் பின்னடையாமல் வாழும் இயல்புடைய, வலிமையான குடும்ப 
           அமைப்பே; சமுதாயத்தில் இருக்கும், அம்சங்கள் அனைத்திலும் சிறப்பானது ஆகும்!
      
0762.  உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
           தொல்படைக்கு அல்லால் அரிது

           விழியப்பன் விளக்கம்: போர்க்களத்தில், வலிமை குறையும்போதோ/அழிவு நேரும்போதோ; 
           போர் அனுபவம் உடைய படையைத் தவிர, பிற படைகளால் மரணத்திற்கு அஞ்சாமல் 
           இருக்க முடியாது! 
(அது போல்...)
           குடும்பத்தில், குழப்பம் விளையும்போதோ/பிரிவு நேரும்போதோ; வாழ்வியல் அனுபவம் 
           உடைய அங்கத்தினர் தவிர, பிற உறுப்பினர்களால் இன்னலுக்கு அஞ்சாமல் இருக்க 
           முடியாது!
           
0763.  ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
           நாகம் உயிர்ப்பக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: அலைகடலாய் திரண்டு ஆர்ப்பரித்தாலும், எலி போன்ற பகைவர்கள்; 
           என்ன அழிவை செய்வர்? நாகப்பாம்பு போன்ற சிறுபடையின், கோபப் பெருமூச்சில் 
           அழிந்துவிடுவர்!
(அது போல்...)
           சூறாவளியாய் சுழன்று வீசினாலும், பஞ்சு போன்ற தீப்பழக்கங்கள்; என்ன விளைவை 
           உண்டாக்கும்? நெருப்பு போன்ற பெற்ரோரின், அன்புச் சுடரில் பொசுங்கிவிடும்!

0764.  அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
           வன்க ணதுவே படை

           விழியப்பன் விளக்கம்: எப்போரிலும் அழிவைச் சந்திக்காமல், பகைவர்களின் சதிக்கு 
           பலியாகாமல்; பல போர்களை வென்று, திண்ணமான வீரத்தைப் பெறுவதே படையாகும்!
(அது போல்...)
           எவ்வுறவிலும் பிரிவைத் தூண்டாமல், தீயவர்களின் புரளிக்கு இரையாகாமல்; பல 
           உறவினர்களைப் பேணி, உன்னதமான அன்பைப் பரிமாறுவதே குடும்பமாகும்!

0765.  கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
           ஆற்றல் அதுவே படை

           விழியப்பன் விளக்கம்: எமனே, கோபமாய் போர் தொடுத்தாலும்; புறமுதுகை காட்டாமல், 
           ஒன்றுகூடி எதிர்த்து நிற்கும் வலிமை உடையதே படையாகும்.
(அது போல்...)
           சுனாமியே, பேரழிவாய் எதிரே வந்தாலும்; தம்முயிரை மதிக்காமல், ஒருசேர 
           பிள்ளைகளைக் காக்கும் சிந்தனை உடையவரே பெற்றோராவர்.

0766.  மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
           எனநான்கே ஏமம் படைக்கு

           விழியப்பன் விளக்கம்: அழியாத வீரம்/குறையாத சுயமரியாதை/அறவழியில் பயணிக்கும்            
           மாட்சிமை/அரசாள்பவரின் நம்பிக்கை - இந்நான்கு காரணிகளே, படைக்குப் பாதுகாப்பு 
           அரண்களாகும்.
(அது போல்...)
           மாறாத அன்பு/தவறாத சுயவொழுக்கம்/உறவினர்களை அரவணைக்கும் கண்ணியம்/
           மூத்தவர்களின் வழிகாட்டல் - இந்நான்கு காரணிகளே, கூட்டுக்குடும்பத்திற்கு வலுவான 
           அடிதளங்களாகும்.

0767.  தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
           போர்தாங்கும் தன்மை அறிந்து

           விழியப்பன் விளக்கம்: தம்மை நெருங்கிய படைகளைத் தகர்க்கும், போர்முறைகளை 
           அறிந்து; முதலில் வரும் படையைத் தகர்த்து, போர்க்களத்தில் முன்னேறிச் செல்வதே 
           படையாகும்.
(அது போல்...)
           மனதை ஈர்க்கும் தீமைகளைத் தடுக்கும், செயல்முறைகளைக் கற்று; முதலில் ஈர்க்கும் 
           தீமையைத் தடுத்து, வாழ்க்கையில் உயர்ந்து செல்வதே ஒழுக்கமாகும்.

0768.  அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
           படைத்தகையால் பாடு பெறும்

           விழியப்பன் விளக்கம்: போரிடத் தேவையான வீரமும் தற்காப்பும் இல்லாத போதும்; 
           ஒன்றிணைந்த அணியாய் திரளும் குணத்தால், ஓர் படை மாட்சிமை பெறும்!
(அது போல்...)
           இல்லறத்திற்குத் தேவையான அன்பும் புரிதலும் இல்லாத போதும்; கூட்டுக் குடும்பமாய் 
           வாழும் ஒழுக்கத்தால், ஓர் குடும்பம் அற்புதமாக மாறும்!

0769.  சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
           இல்லாயின் வெல்லும் படை

           விழியப்பன் விளக்கம்: வீரர்களின் எண்ணிக்கையில் குறைவு/அரசாள்பவரிடம் மாறாத 
           வெறுப்பு/வாழ்வை அழிக்கும் வறுமை - இவையாயும் இல்லையாயின், அப்படை நிச்சயமாய் 
           வெற்றியடையும்!
(அது போல்...)
           உறவுகளின் அன்பில் குறை/முதியவர்களைப் பேணாமல் இருத்தல்/ஒழுக்கம் இல்லாத 
           வாழ்க்கை - இவையாவும் இல்லையாயின், அக்குடும்பம் உறுதியாய் கூடியிருக்கும்!

0770.  நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
           தலைமக்கள் இல்வழி இல்

           விழியப்பன் விளக்கம்: பல போர்களில் நிலைத்த, பல திறமையானப் படைவீரர்கள் 
           இருப்பினும்; தகுதியான படைத் தலைவர்கள் இல்லையெனில், அப்படை நீடித்து நிலைக்க 
           வழியில்லை!
(அது போல்...)
           பல போராட்டங்களில் வென்ற, பல உறுதியான இளைஞர்கள் இருப்பினும்; நேர்மையான 
           ஒருங்கு இணைப்பாளர்கள் இல்லையெனில், அக்குழு நிரந்தர தீர்வாக மாறுவதில்லை!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக