சனி, செப்டம்பர் 30, 2017

அதிகாரம் 079: நட்பு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு

0781.  செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
           வினைக்கரிய யாவுள காப்பு

           விழியப்பன் விளக்கம்: நட்பை விட, செய்வதற்கு அரிய விடயங்கள் எவையுள்ளன? நட்புக்கு 
           இணையான, தீய வினைகளுக்கு அரிய பாதுகாப்பு முறைகள் எவையுள்ளன?
(அது போல்...)
           பகுத்தறிவை விட, பயில்வதற்கு சிறந்த பாடங்கள் எவையுள்ளன? பகுத்தறிவுக்கு நிகரான, 
           அறியாமை இருளுக்கு சிறந்த ஒளி மூலங்கள் எவையுள்ளன?
      
0782.  நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
           பின்நீர பேதையார் நட்பு

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் உடையோரின் நட்பு, வளர்பிறை நிலவு போல் 
           தொடர்ந்து வளரும்! மூடநம்பிக்கை உடையோரின் நட்பு, தேய்பிறை நிலவு போல் 
           தொடர்ந்து தேயும்!
(அது போல்...)
           பொதுநலம் காப்போரின் மனசாட்சி, இளமைக் காலம் போல் சுறுசுறுப்பாய் இருக்கும்! 
           சுயநலம் காப்போரின் மனசாட்சி, முதுமைக் காலம் போல் சோம்பலாய் இருக்கும்!
           
0783.  நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
           பண்புடை யாளர் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு முறை படிக்கும் போதும், நூல்கள் மகிழ்வு அளிக்கும்! 
           அதுபோல், பண்புடைய நண்பர்களின் தொடர்பு; ஒவ்வொரு முறை பழகும் போதும், மகிழ்வு 
           அளிக்கும்!
(அது போல்...)
           ஒவ்வொரு முறை கேட்கும் போதும், சொற்பொழிவு புரிதல் அளிக்கும்! அதுபோல், 
           அருளுடைய குருவின் வழிகாட்டல்; ஒவ்வொரு முறை வாய்க்கும் போதும், புரிதல் 
           வளர்க்கும்!

0784.  நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
           மேற்சென்று இடித்தற் பொருட்டு

           விழியப்பன் விளக்கம்: நட்பெனும் உன்னத உறவு, கூடி மகிழ்வதற்கு மட்டுமன்று! நட்பில் 
           இருப்போரின் அறமீறல் அதிகமாகும் போது, தயக்கமின்றி தாமதிக்காமல் இடித்து 
           உரைப்பதற்கும் ஆகும்!
(அது போல்...)
           பணமெனும் காகிதப் பொருள், நாம் இன்பமடைய மட்டுமன்று! உடன்பிறந்த உறவுகளின் 
           துன்பம் பெருகும் போது, காழ்ப்பின்றி ஆதாயமில்லாமல் கொடுத்து உதவுவதற்கும் ஆகும்!

0785.  புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
           நட்பாங் கிழமை தரும்

           விழியப்பன் விளக்கம்: நட்புறவு வளர்க்க, ஒன்றாக இருந்து நெருங்கிப் பழகுதல் 
           அவசியமில்லை! ஒருமித்த சிந்தனையே, நட்பின் வலிமையை நிலைநாட்டும்!
(அது போல்...)
           மக்களாட்சி நடத்த, எதிராய் இருந்து பகை வளர்த்தல் அவசியமில்லை! ஒன்றுபட்ட 
           செயல்பாடே, மக்களின் ஆட்சியைப் பாதுகாக்கும்!

0786.  முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து
           அகம்நக நட்பது நட்பு

           விழியப்பன் விளக்கம்: முகத்தில் மட்டும், மகிழ்ச்சியுடன் நட்பாடுதல் நட்பன்று! உள்ளத்தின்   
           உள்ளேயும், மகிழ்ச்சியுடன் நட்பாடுவதே நட்பாகும்!
(அது போல்...)
           பேச்சில் மட்டும், பொதுநலனுடன் இருப்போர் தலைவரல்ல! செயலில் கூட, 
           பொதுநலனுடன் இருப்போரே தலைவராவர்!

0787.  அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
           அல்லல் உழப்பதாம் நட்பு

           விழியப்பன் விளக்கம்: அழிவிற்கான காரணிகளை நீக்கி, அறச் செயல்களைப் பழக்கி; 
           அழிவு நேரும்போது, துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்!
(அது போல்...)
           தோல்விக்கான காரணிகளைக் களைந்து, வெற்றி விதைகளை விதைத்து; தோல்வி 
           நேரும்போது, தோள் கொடுத்துத் தாங்குவோரே பெற்றோராவர்!

0788.  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
           இடுக்கண் களைவதாம் நட்பு

           விழியப்பன் விளக்கம்: ஒருவரின் ஆடை உடலிலிருந்து நழுவும்போது, கை தன்னிச்சையாய் 
           செயல்படும்! அதுபோல், துன்பம் நேரும்போது; உடனடியாய் களைய முற்படுவைதே 
           நட்பாகும்!
(அது போல்...)
           ஒருவரின் கண் ஆபத்தை அணுகும்போது, இமை அனிச்சையாய் செயல்படும்! அதுபோல், 
           ஊக்கம் குறையும்போது; தாமதமின்றி உற்சாகம் அளிப்போரே பெற்றோராவர்!

0789.  நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
           ஒல்லும்வாய் ஊன்று நிலை

           விழியப்பன் விளக்கம்: நட்பின் அரியணை எதுவெனில், எந்நிலையிலும் மாற்றமின்றி; 
           இயன்ற வழியில் எல்லாம், தடுமாறும் நண்பர்களைத் தாங்கும் நிலைப்பாடே ஆகும்!
(அது போல்...)
           ஆட்சியாளரின் கிரீடம் எதுவெனில், எவ்வகையிலும் ஊழலின்றி; முடிந்த வழியில் எல்லாம், 
           அடித்தட்டு மக்களை வழிநடத்தும் மேன்மையே ஆகும்!

0790.  இனையர் இவர்நமக்கு இன்னம்யாம் என்று
           புனையினும் புல்லென்னும் நட்பு

           விழியப்பன் விளக்கம்: "இவர் எமக்கு இத்தகையவர்! யாம் இவருக்கு இத்தகையவர்!" - என 
           மிகையாகப் புனைந்து பேசினாலும், நட்பின் தரம் கெடும்!
(அது போல்...)
           "தலைவர் எமக்கு உயிராவார்! யாம் தலைவருக்கு உயிராவோம்!" - என பொய்யாக 
           பிரச்சாரம் செய்தாலும், பொதுவாழ்வின் இயல்பு அழியும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக