சனி, ஏப்ரல் 16, 2016

தெறி (2016)



      பெரும்பாலான விமர்சனங்கள் "தெறி" படத்திற்கு, ஏனோ "துப்பாக்கி" திரைப்படத்தைப் போன்ற ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன. ஒருவேளை அவர்களுக்கு "புலி" திரைப்படத்தின் பாதிப்பு இன்னமும் விலகவில்லையோ?! என்ற ஐயம் எழுகிறது. என்னளவில், இது "கத்தி" திரைப்படத்தின் தரத்தில் கூட இல்லை என்ற பார்வையே இருக்கிறது. அதற்கு மிக-முக்கிய காரணம், படத்தின் கதையில் நல்ல வாய்ப்புகள் இருந்தும் - திரைக்கதையில் அது வீணடிக்கப்பட்டு இருக்கிறது என்றே தோன்றுகிறது.


+ அம்சங்கள்:
  • முதலில், படத்தின் "நிஜ நாயகியாக" வலம்வரும் அந்தக் குட்டிப்பெண் (நடிகை மீனாவின் மகள் என்று அறிந்தேன்). நல்ல உடல்/வாய் மொழியால் அசத்தி இருக்கிறாள். குறைந்த இடைவெளியில், பல பிரபல நாயகர்கள் படத்தில் இம்மாதிரியான "குழந்தை பாத்திரப்படைப்பு" தொடர்ந்து வந்திருப்பினும் - இந்தப் பெண்ணும் மற்ற படங்களைப் போல், படத்தின் அச்சாணியாய் வலம்வருகிறாள். அவளின் பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கிறது. அவளுக்கு என் வாழ்த்துகள்.
  • பலரும் சொல்லி இருப்பது போல், விஜய்யின் நடிப்பில் சில முன்னேற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. துப்பாக்கி திரைப்படம் வெளிவரவில்லை எனில், நானும் அவர் நடிப்பைப் புகழ்ந்திருப்பேன். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு - இதில் அவர் நடிப்பு மெருகேறி இருப்பதாய் சொன்னால் - அது, அவரை இழிவு படுத்தும் "வஞ்சிப் புகழ்ச்சியாய்" அமையக்கூடும்.  
  • ராதிகா-சமந்தா இடையே வரும் அந்த ஒருசில நிமிட காட்சிகள். உண்மையில், நடைமுறை வாழ்க்கையில் இப்படியோர் உறவு வாய்க்காதா?! என்று ஒவ்வொரு பெண்ணும் ஏங்கும் வகையில் இருப்பது பாராட்டுக்குரியது.
  • சமந்தாவின் தந்தையிடம் விஜய் பேசும் வசனங்கள். (விஜய்யின் வழக்கமான உடல்மொழி என்னைப் பெரிதும் எரிச்சலடையச் செய்தாலும்) அருமையான கூறிய வசனங்கள். "துப்பாக்கி"பட விஜய் போல், அடக்கி நடித்திருந்தால் - இம்மாதிரியான காட்சிகள் மிகப்பலமானதாய் உணரப்பட்டு இருக்கும். 

- அம்சங்கள்:
  • அடுத்த காட்சியிலேயே, ஒரு பெண்ணை அரசு-வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வருவதற்கு "காமராஜை இணைத்து" ஒரு வசனம் பேசி இருப்பது பெருத்த அபத்தம். அதிலும், விஜயின் எரிச்சலூட்டும் அந்த "வாய் மொழியால்" அந்த வசனத்தை உச்சரித்து இருப்பது அபத்தத்தின் உச்சம். இதைவிட, ராதிகா "தான் வருகிறேன்!" என்று சொல்லும்போதே அடுத்த காட்சிகளை ஒரு சாமான்ய இரசிகன் கூட எதிர்பார்ப்பவையே! அந்த நிலையில், இப்படிப்பட்ட வசனங்கள் தேவையா? சிந்திப்பீர் படைப்பாளிகளே...
  • ஒரு சாதாரண வில்லன், நாயகனைப் பழி வாங்குவதற்காய் அவனின் குடும்பத்தை - அதிலும், ஒரு குழந்தையை அப்படிக் கொடுமைப்படுத்தும் விதத்தில் காண்பித்து இருப்பதை ஏற்க முடியவில்லை. ஒருவேளை, சாதாரண சண்டைக்கு கூட - குடும்பத்தில் இருக்கும் பெரியோர்கள், குழந்தைகளிடம் தம் கோபத்தை வெளிப்படுத்துவது தான் இப்படிப்பட்ட காட்சிகளுக்கு அடிப்படை ஆகிறதோ?
  • இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு நாயகனுக்கு "வீரம் வருவதற்காய்" - ஒரு பெண்ணை (குறிப்பாய் தங்கை எனும் பாத்திரத்தில் அல்லது தங்கையாய் ஏற்றுக்கொள்ளப்படும் பாத்திரப் படைப்பில்) திரைப்படங்களில் கற்பழிக்கப் போகிறார்கள்? 1991-இல் நான் எழுதிய புதுக்கவிதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது! அசிங்கமாய் இருக்கிறது திரைப்பட படைப்பாளிகளே! இப்படி கறைபடிந்த வகையில், திரைக்கதை அமைக்கும் உங்களின் மனம் என்றுதான் மாறிடும்? அதென்ன... ஒரு ஆணின் வீரத்தை உணர்த்த "ஒரு பெண்ணை அவமானப்பட" வைக்கும் நிகழ்வு? அதிலும், விஜய் போன்ற பிரபலங்களின் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் வருவது மிகவும் தவறு.
  • இப்படிப்பட்ட காட்சிகள் தவறு என நான் கூறுவதற்கு காரணம், அந்த காட்சி தவிர - நாயகனுக்கு - வில்லனாய் வருபவரிடம் எந்த தொடர்பும் இல்லை. அந்த காட்சி தான், நாயகன் வேறோர் ஊருக்கும் சென்று/மறைந்து வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம் எனும் நிலையில் - அந்த காரணிகளை எப்படியெல்லாம் வலுவூட்டி இருக்கலாம்?! அடப் போங்கய்யா!... என்று வேதனைதான் கொள்ள முடிகிறது. 
  • எண்ணபின்னூட்டமாய் (Flash Back) நாயகனின் முற்பகுதி வாழ்க்கையை நினைவு கூறும்போது, அவரைத் திருமண வாழ்க்கையை நேரடியாய் ஆரம்பித்து இருக்கவேண்டும். அப்படி இருந்திருப்பின், நாயகிக்கு படத்திற்கு வலிவூட்டும் வகையில் திரைக்கதை அமைத்து இருக்கலாம். மாறாய், பலபடங்களையும் போல் - தேவையற்று "நிழல் கதாநாயகி"யாய் வருகிறார். ஆடலுக்கும்/பாடலுக்கும் தானா ஒரு பெண் பயன்படவேண்டும்? "ராஜா-ராணி" போல் ஒரு நாயகியை மரியாதையாய் காண்பிக்க முடியாதா? "தாரைத் தப்பட்டை" போல் ஒரு நாயகியின் - நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாய காட்சி அமைப்புகள் வைக்கவே முடியாதா? அடப் போங்கய்யா...!
  • ஒரு பிரபல நடிகை "ஆசிரியையாய்" வரும்போது அவரை "கவர்ச்சியான உடையில்/வகையில் தான் காட்டவேண்டுமா?" - ஒரு கண்ணியமான ஆசிரியையாய் காண்பிக்கவே முடியாதா? இந்த இலக்கணத்தை எவர் வகுப்பது? படத்தில், இன்னுமோர் பெண்ணைத் துகிலுரித்து "கவர்ச்சியாய்" காண்பிப்பது தான் நோக்கம் எனின் "வேறோர் பாத்திரப் படைப்பாய்" சொல்லி இருக்கலாம். அருவருப்பாய் இருக்கிறது படைப்பாளிகளே! கொஞ்சம் செவி மடுங்கள்.

       இன்னும் நிறைய எழுதிக்கொண்டே செல்லலாம்! அது ஏனோ, நான் விஜய்க்கு எதிரானவன் என்ற உணர்வைக் கொடுத்துவிடக் கூடும். ஆனால், உண்மை அதுவல்ல. இத்தனை பிரபலமான அவர் மேலும் நல்ல-படங்களில்/நல்ல-பாத்திரப்படைப்பில் நடிக்கவேண்டும் என்ற ஆவல் தான் காரணம். "இன்னுமோர் ரஜினிகாந்தாய்" ஆக விரும்புவதில் தவறில்லை! எல்லா துறையில் இருப்பவருக்கும் - அதில் உச்சம் தொட்டவர் போல் வளரவே ஆசை இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் எனும் அந்த நடிகர் வேறொருவராய் ஆகவேண்டும் என்று திரைத்துறைக்கு வரவில்லை! திரைக்குடும்பத்தின் ஆதரவில், திரைத்துறைக்கு வராத அவரே; அவராய் நடித்தபோது, ஏன் விஜய் போன்ற நடிகர்களால் முடியவில்லை?! ரஜினிகாந்தின் சுயம்தான் அவரின் முழுப்பலம். சுயம் இல்லாத எதுவும் நிலைத்தல் சாத்தியமில்லை. அந்த ஆசை உள்ள எல்லா நடிகர்களுக்குமே இது பொருந்தும். இதை உணர்ந்தால், விஜய்யை நல்ல நடிகராய் பார்க்கலாம்.

நான் எல்லாப் படங்களுக்கும் என் பார்வையை எழுவதில்லை! 
விஜய் படங்களுக்கு எழுதுகிறேன் என்றால்...
அவர் மேல் இன்னும் தொடரும் நம்பிக்கை மட்டுமே காரணம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக