வியாழன், ஆகஸ்ட் 31, 2017

அதிகாரம் 076: பொருள் செயல்வகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 08 - கூழியல்; அதிகாரம்: 076 - பொருள் செயல்வகை

0751.  பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
           பொருளல்லது இல்லை பொருள்

           விழியப்பன் விளக்கம்: பொருளற்ற வாழ்க்கையை வாழ்பவரையும், பொருட்படுத்தச் 

           செய்வது; செல்வமெனும் பொருளைத் தவிர்த்து, வேறெந்தப் பொருளும் இல்லை.
(அது போல்...)
           செயலற்ற இயல்பை உடையவரையும், செயல்பட வைப்பது; சிந்தனையெனும் செயலைத்
           தவிர்த்து, வேறெந்த செயலும் இல்லை.
      
0752.  இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
           எல்லாரும் செய்வர் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: 
தகுதிகள் பலவிருந்தும், செல்வம் இல்லாதவரை எல்லோரும் 
           இகழ்வர்! தகுதி இல்லாத போதிலும், செல்வம் உள்ளவரை எல்லோரும் போற்றிடுவர்!
(அது போல்...)
           பட்டங்கள் பலவிருப்பினும், ஞானம் இல்லாதவரை அனைவரும் தூற்றுவர்; பட்டம் இல்லாத 
           போதிலும், ஞானம் உள்ளவரை அனைவரும் பாராட்டுவர்.
           
0753.  பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
           எண்ணிய தேயத்துச் சென்று

           விழியப்பன் விளக்கம்: 
செல்வமென்னும் பொய்க்காத விளக்கின் ஒளி; எண்ணிய எல்லா 
           இடங்களையும் சேர்ந்து, இருளென்னும் துன்பங்களைத் தகர்க்கும்!
(அது போல்...)
           அறமென்னும் பழுதடையாத நங்கூரத்தின் வேகம்; திட்டமிட்ட எல்லா பகுதிகளையும் 
           சேர்ந்து, சோம்பலெனும் தடைகளை வெல்லும்!

0754.  அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
           தீதின்றி வந்த பொருள்

           விழியப்பன் விளக்கம்: 
பின் விளைவுகளை உணர்ந்து, தீமை ஏதுமின்றி கிடைத்த செல்வம்; 
           அறச்செயல்களை மட்டுமல்லாமல், மகிழ்ச்சியையும் பெருக்கும்!
(அது போல்...)
           தொடர் நிகழ்வுகளை அறிந்து, ஒழுங்கீனம் ஏதுமின்றி செய்த செயல்; நற்சிந்தனைகளை 
           மட்டுமின்றி; நேர்மையையும் அதிகரிக்கும்!

0755.  அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
           புல்லார் புரள விடல்

           விழியப்பன் விளக்கம்: 
மக்களுடைய அருள் மற்றும் அன்பும் கலந்து, குவிந்திடாத செல்வ 
           சேமிப்பை; அரசாள்வோர், விட்டொழிக்க வேண்டும்!
(அது போல்...)
           பெற்றோருடைய அனுமதி மற்றும் ஆதரவு சேர்ந்து, கற்பிக்கப்படாத பழக்க வழக்கங்களை; 
           பிள்ளைகள், அறுத்தெறிய வேண்டும்!

0756.  உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
           தெறுபொருளும் வேந்தன் பொருள்

           விழியப்பன் விளக்கம்: உரிமை கோராத பொதுச் சொத்து/வரி போன்ற வருவாய்/
           பகைவர்களை அழித்தோ அல்லது அடக்கியோ கிடைப்பவை - இவையாவும், பொது 
           மக்களுக்குப் பயனளிக்க வேண்டிய; அரசரின் உடைமைகள் ஆகும்.
(அது போல்...)
           பெற்றோர் சம்பாதிக்காத முன்னோர் சொத்து/வட்டி போன்ற வருமானம்/நற்பேறு மூலமோ 
           அல்லது இலவசமாகவோ கிடைப்பவை - இவையாவும், உதவியற்ற மக்களுக்குப் பகிரப்பட 
           வேண்டிய; பொது உடைமைகள் ஆகும்.

0757.  அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
           செல்வச் செவிலியால் உண்டு

           விழியப்பன் விளக்கம்: அன்பிலிருந்து பிறக்கும், அருள் எனும் குழந்தை; பொருள் எனும், 
            செல்வமிக்க செவிலித் தாயால் வளர்க்கப்படும்!
(அது போல்...)
            வாக்காளரிலிருந்து பிறக்கும், வாக்கு எனும் விதை; செங்கோல் எனும், சக்திவாய்ந்த 
            நேர்மையான ஆட்சியரால் உயிர்ப்பிக்கப்படும்!

0758.  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
           உண்டாகச் செய்வான் வினை

           விழியப்பன் விளக்கம்: 
கடன் ஏதுமின்றி, நம் கையிலிருக்கும் இருப்பைக் கொண்டு 
           வாழ்வியல் செய்வது; குன்றின் மீதேறி, யானைகளின் சண்டையைப் பார்ப்பது போல் 
           பாதுகாப்பானதாகும்!
(அது போல்...)
           குறை ஏதுமின்றி, நம் சுற்றத்திலிருக்கும் உறவை இணைத்து இல்லறம் நடத்துவது; 
           தந்தையின் தோளேறி, திருவிழாக் கண்காட்சிகளை இரசிப்பது போல் பத்திரமானதாகும்!

0759.  செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
           எஃகுஅதனின் கூரியது இல்

           விழியப்பன் விளக்கம்: முடிந்த அளவுக்கு, நேர்மையாய் செல்வத்தைச் சேருங்கள்! 

           பகைவர்களின் அகங்காரத்தை அழிக்கவல்ல போர்க்கருவியைப் பெற, செல்வத்தை விட 
           சிறந்தது ஏதுமில்லை!
(அது போல்...)
           இயன்ற அளவில், ஒழுக்கமாய் இல்லறத்தைப் பேணுங்கள்! காமத்தின் தீவிர்த்தைத் 
           தணிக்கவல்ல காதலை உணர, இல்லறத்தை விட உயர்ந்தது ஒன்றுமில்லை!

0760.  ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
           ஏனை இரண்டும் ஒருங்கு

           விழியப்பன் விளக்கம்: "பொருள்" எனும் வளத்தை, நல்வழியில் மிகுதியாய் சேர்ப்போர்; 
           “அறம் மற்றும் இன்பம்” எனும் மற்றிரண்டு வளங்களை, எளிதில் ஒருசேர அடைவர்!
(அது போல்...)
          "கண்ணியம்" எனும் அறத்தை, தவறாமல் உறுதியாய் பழகுவோர்; “கடமை மற்றும் 
          கட்டுப்பாடு” எனும் மற்றிரண்டு அறங்களைவிரைவில் இணைந்து பெறுவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக