திங்கள், பிப்ரவரி 08, 2016

அதிகாரம் 019: புறங்கூறாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 019 - புறங்கூறாமை

0181.  அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
           புறங்கூறான் என்றல் இனிது

           விழியப்பன் விளக்கம்: அறத்தை எடுத்துரைக்காமல், அறமல்லவற்றை செய்பவரே ஆயினும்; 
           மற்றவரைப் புறம் பேசமாட்டார் எனும் நேர்மை, அவருக்கு நன்மையளிக்கும்.
(அது போல்...)
           உறவுகளை மதிக்காமல், சரியில்லாதவற்றை செய்பவரே ஆயினும்; பெற்றோரை கைவிட 
           மாட்டார் எனும் சிறப்பு, அவரை உயர்ந்தவராக்கும்.

0182.  அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
           புறனழீஇப் பொய்த்து நகை

           விழியப்பன் விளக்கம்: ஒருவரைப் பழித்து புறம் பேசிவிட்டு, நேரில் பொய்யாக நகைத்துப் 
           பேசுவது; அறநெறிகளை அழித்து, பாவச்செயல்களை செய்தலை விட தீமையானது.
(அது போல்...)
           மக்களைப் பற்றிய அக்கறையை விலக்கிவிட்டு, பிரச்சாரத்தில் பொய்யாக வாக்குறுதி 
           கொடுப்பது; உயிர்களைக் கொன்று, பாவங்களைச் சேர்ப்பதை விட ஆபத்தானது.

0183.  புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
           அறங்கூற்றும் ஆக்கத் தரும்

           விழியப்பன் விளக்கம்: புறம் பேசிவிட்டு, பொய்யாய் வாழ்வதை விட; இறந்துபோதல்;
           அறநூல்கள் எடுத்துரைக்கும் உயர்வைக் கொடுக்கும்.
(அது போல்...)
           அன்பை அழித்துவிட்டு, வஞ்சனையாய் உறவாடுவதை விட; விலகிவிடுதல்; சான்றோர்கள்
           பரிந்துரைக்கும் நிறைவைக் கொடுக்கும்.

0184.  கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
           முன்னின்று பின்நோக்காச் சொல்

           விழியப்பன் விளக்கம்: பிறரின் முன் நின்று, கருணையில்லாமல் கூட பேசலாம்; ஆனால், 
           புறம் நின்று; பின் விளைவை ஆராயாமல் - புறம் பேசுவதல் கூடாது!
(அது போல்...)
           உறவில் இருந்து கொண்டு, பொறுமையில்லாமல் கூட நடத்தலாம்; ஆனால், பிரிந்து 
           சென்று; பிரிவின் தன்மையை உணராமல் - குறை கூறுதல் தவறு!
          
0185.  அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
           புன்மையாற் காணப் படும்

           விழியப்பன் விளக்கம்: பிறரைப் புரளிபேசும் இழிசெயலைக் கொண்டே; ஒருவர், 
           அறவழியில் பயணிக்கும் நெஞ்சுறுதி கொண்டவர் அல்லர் - என்பது உணரப்படும்.
(அது போல்...)
           பிறகட்சியைப் பொய்யாய் விமர்சிப்பதை வைத்தே; ஒருகட்சி, நேர்மையுடன் செயல்படும் 
           கொள்கை உடையது அல்ல - என்பது அறியப்படும்.

0186.  பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
           திறன்தெரிந்து கூறப் படும்

           விழியப்பன் விளக்கம்: பிற சகமனிதரின் குறைகளைப், புரளியாய் பேசும் மனிதர்களின் 
           குறைகளும்; அவற்றின் வகையறிந்துப், பிற சகமனிதர்களால் புரளியாய் பேசப்படும்.
(அது போல்...)
           பிற கட்சியின் தவறுகளைப், விமர்சனமாய் பேசும் கட்சியின் தவறுகளும்; அவற்றின் 
           தாக்கமறிந்து, மற்ற கட்சிகளால் விமர்சனமாய் பேசப்படும்.

0187.  பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
           நட்பாடல் தேற்றா தவர்

           விழியப்பன் விளக்கம்: மகிழ்வுடன் பேசி, உறவுகளை நண்பர்களாக்கத் தெரியாதோர்; புறம் 
           பேசி, இருக்கும் உறவுகளை பிரித்துவிடுவர்.
(அது போல்...)
           பொதுநலமுடன் சிந்தித்து, கட்சிகளை ஒருங்கிணைக்க இயலாதோர்; சுயம் அழித்து, 
           இருக்கும் கூட்டணியைச் சிதைத்துவிடுவர்.

0188.  துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 
           என்னைகொல் ஏதிலார் மாட்டு

           விழியப்பன் விளக்கம்: தம் சுற்றத்தின் குற்றத்தையே, புறம் பேசும் இயல்புடையவர்கள்; 
           அந்நியர்களின் செயல்பாடுளில், என்னதான் விமர்சிக்கமாட்டார்கள்?
(அது போல்...)
           தம் கட்சியின் குறையையே, பழித்துப் பேசும் கட்சிக்காரர்கள்; புதுகட்சிகளின் 
           குறைகளை, எப்படித்தான் பழிக்கமாட்டார்கள்?

0189.  அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
           புன்சொல் உரைப்பான் பொறை

           விழியப்பன் விளக்கம்: "பிறரைக் கொடுஞ் சொற்களால், புறம் பேசுவோரைச் சுமப்பதும் 
           அறத்தன்மையே!" என்றெண்ணி தான், இப்புவித்தாய் சுமக்கிறதோ?
(அது போல்...)
           "பிறகட்சிகளைத் பண்பற்ற முறையில், விமர்சித்துப் பேசுவோரை மன்னிப்பதும் 
           இயலாமையே!" என்றுணர்ந்து தான், பொதுமக்கள் கடக்கிறார்களோ?

0190.  ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
           தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பிறரின் குற்றங்களைப் புரளி-பேசுவதைப் போல், தம் 
           குற்றங்களையும் ஆராய்ந்தால்;  நிலைத்து வாழும் உலக உயிர்களுக்குத்     
           தீமையேதுமுண்டோ?
(அது போல்...)
           பிற-கட்சியின் ஊழல்களை விமர்சிப்பதைப் போல், தமது ஊழல்களையும் உணர்ந்தால்; 
           துன்புற்று வாழும் பொது மக்களுக்கு இன்னலேதுமுண்டோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக