ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

அதிகாரம் 021: தீவினையச்சம் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 021 - தீவினையச்சம்

0201.  தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
           தீவினை என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: சிற்றின்பம் அளிக்கும் தீவினைகளைச் செய்ய - தீவினைகளைப் 
           பழகியோர் அஞ்ச மாட்டார்கள்; ஆனால், உயர் பண்புகளைக் கொண்டோர் அஞ்சுவர்.
(அது போல்...)
           பேராசை தரும் ஊழல்களைப் புரிந்திட - ஊழல்களில் மூழ்கியோர் வெட்கப்பட
           மாட்டார்கள்; ஆனால், பொது நலத்தை நேசிப்போர் வெட்கப்படுவர்.

0202.  தீயவை தீய பயத்தலால் தீயவை 
           தீயினும் அஞ்சப் படும்

           விழியப்பன் விளக்கம்: தீய வினைகள், கெடுதல்களை விளைவிப்பதால்; தீய வினைகளை, 
           தீயை விட கொடியதாய் எண்ணி அஞ்சவேண்டும்.
(அது போல்...)
           தவறான உறவுகள், ஒழுங்கீனங்களை அதிகரிப்பதால்; தவறான உறவுகளை, விஷத்தை 
           விட ஆபத்தாய் எண்ணி தவிர்க்கவேண்டும்.

0203.  அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
           செறுவார்க்கும் செய்யா விடல்

           விழியப்பன் விளக்கம்: அனைத்து விதமான அறிவுகளிலும் முதன்மையானது,; நமக்கு தீமை 
           செய்தோர்க்கும், தீவினை செய்யாத பகுத்தறிவாகும்.
(அது போல்...)
           எல்லா வகையான பண்புகளிலும் சிறப்பானது; நமக்கு அவமரியாதை இழைத்தோர்க்கும், 
           அவமரியாதை இழைக்காத மனிதநேயமாகும்.

0204.  மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
           அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

           விழியப்பன் விளக்கம்: மறதியாகவும், பிறருக்கு தீவினை விளைவிக்க எண்ணக்கூடாது; 
           அப்படி எண்ணுவோர்க்கு, அறத்தன்மையே தீவினை விளைவிக்க எண்ணும்.
(அது போல்...)
           பிழையாகவும், நம்பியவர்க்கு துரோகம் செய்ய முயலக்கூடாது; அப்படி முயல்வோர்க்கு, 
           விதியே துரோகம் செய்ய முயலும்.
          
0205.  இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
           இலனாகும் மற்றும் பெயர்த்து

           விழியப்பன் விளக்கம்: இல்லை என்பதற்காய், தீயவினைகளைச் செய்யக்கூடாது; அப்படி 
           செய்தால், இருக்கும் நிலையிலிருந்தும் - இல்லாமை மேலும் பெருகும்.
(அது போல்...)
           இன்பமில்லை என்றென, உறவுகளை முறிக்கக்கூடாது; அப்படி முறித்தால், மற்ற 
           உறவுகளிலும் - மகிழ்ச்சி குறையத் துவங்கும்.

0206.  தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
           தன்னை அடல்வேண்டா தான்

           விழியப்பன் விளக்கம்: துன்பம் விளைவிக்கும் தீவினைகள், தம்மை நெருங்க விரும்பாதோர்;        
           மற்றவருக்கு தீயவை செய்யாத, உறுதியுடன் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           சந்தேகம் விதைக்கும் நிகழ்வுகள், தமக்கு நேர்வதை ஏற்காதோர்; பிறர்மேல் சந்தேகம் 
           கொள்ளாத, வைராக்கியமுடன் இருக்கவேண்டும்.

0207.  எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
           வீயாது பின்சென்று அடும்

           விழியப்பன் விளக்கம்: எவ்விதமான பகையைக் கொண்டோரும், அதிலிருந்து மீள்வர்; 
           ஆனால், தீவினைகளால் உருவான பகை, மறையாது பின்தொடர்ந்து அழிக்கும்.
(அது போல்...)
           எவ்வகை தீப்பழக்கம் கொண்டோரும், அதை விட்டொழிப்பர்; ஆனால், போதையால் 
           தொடர்ந்த தீப்பழக்கம், பின்விளைவாய் உருவாகி உயிரழிக்கும்.

0208.  தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
           வீயாது அடிஉறைந் தற்று

           விழியப்பன் விளக்கம்: தீவினைகளைச் செய்தோர் அழிவது, அவர்களின் நிழல்; எப்போதும் 
           விலகாமல், காலடியில் இணைந்திருப்பது போன்று நிலையானதாகும்.
(அது போல்...)
           தீவிரவாதத்தை ஆதரிப்போர் வீழ்வது, அவர்களின் மனசாட்சி; எந்நிலையிலும் தவறாமல், 
           மனதை உறுத்துவது போன்று நிரந்தரமானதாகும்.

0209.  தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
           துன்னற்க தீவினைப் பால்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர், தன் சுயத்தைக் காதலிப்பவர் ஆயின்; எத்தனை சிறியதே 
           எனினும், தீயச் செயல்களை செய்யாமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           ஒருவர், தன் தொழிலை நேசிபவர் ஆயின்; எந்த அளவானதே எனினும், விதி மீறல்களை 
           செய்யாமல் இருக்கவேண்டும்.

0210.  அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
           தீவினை செய்யான் எனின்

           விழியப்பன் விளக்கம்: அறநெறி தவறிய பாதையில் பயணித்து, தீவினைகள்  
           செய்யாதவராயின்; அவர், கேடு இல்லாதவர் என்பதை அறியவேண்டும்.
(அது போல்...)
           சிந்தனை இழந்த நிலையில் வாழ்ந்து, போதைப்பொருட்கள் பழகாதவராயின்; அவர், 
           சோம்பல் அற்றவர் என்பதை உணரவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக