சனி, மார்ச் 19, 2016

அதிகாரம் 023: ஈகை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 023 - ஈகை

0221.  வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
           குறியெதிர்ப்பை நீர துடைத்து

           விழியப்பன் விளக்கம்: திரும்ப கொடுக்க முடியாதோர்க்கு, கொடுப்பதே உண்மையான 
           ஈகையாகும்; மற்றவையெல்லாம் எதிர்பார்ப்பு தன்மை உடையனவாகும்.
(அது போல்...)
           எதிர்த்து தாக்க முடியாதவர்க்கு, அளிப்பதே உண்மையான மன்னிப்பாகும்; பிறவெல்லாம் 
           பயம் நிறைந்த தன்மையானவை.

0222.  நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 
           இல்லெனினும் ஈதலே நன்று

           விழியப்பன் விளக்கம்: நல்நெறியே என்றாலும், பிறரிடமிருந்து பெறுவது தீமையானது; 
           விண்ணுலகத்திற்கு இட்டுச் செல்லாது எனினும், ஈதலே நன்றானது.
(அது போல்...)
           உலகையே வென்றாலும், பிறர்மேலான சர்வாதிகாரம் கோழைத்தனமானது; சிற்றூரை 
           வென்றிட இல்லை எனினும், அஹிம்சையே வீரமானது.

0223.  இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
           குலனுடையான் கண்ணே யுள

           விழியப்பன் விளக்கம்: இல்லையெனும் நிலையை வெளிப்படுத்தாமல், தேவையானோர்க்கு 
           கொடுக்கும் பண்பு; நல்லொழுக்கம் நிறைந்த குடும்பத்தாரிடம் இருக்கும்.
(அது போல்...)
           பாவமெனும் புறங்கூறுதலைச் செய்யாமல், உறவுகளை நேசிக்கும் திண்ணம்; சுயத்தைக் 
           காதலிக்கும் மனிதர்களிடம் இருக்கும்.

0224.  இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
           இன்முகங் காணும் அளவு

           விழியப்பன் விளக்கம்: கேட்கப்பட்டதைக் கொடுத்து, கேட்டவர் முகம் மலர்வதைக் 
           காணும்வரை; கொடுக்காமல் காத்திருக்கும் நேரத்தில், கேட்டவருக்காக இரக்கப்படுவது 
           நீடிக்கும்.
(அது போல்...)
           நடந்ததை விவாதித்து, நடந்ததற்காக மனசாட்சியின் தீர்ப்பைப் பெறும்வர;
           விவாதிக்காமல் இருக்கும் இடைவெளியில், நடந்ததற்காக வருந்துவது நீடிக்கும்.
          
0225.  ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
           மாற்றுவார் ஆற்றலின் பின்

           விழியப்பன் விளக்கம்: தவமிருப்போரின், பசியைப் பொறுக்கும் வலிமை; வறியவர்களின்   
           பசியை, உணவுதந்து மாற்றுவோரின் வலிமைக்கு பிற்பட்டதே.
(அது போல்...)
           நீதிபதிகளின், சட்டங்களை நிலைநாட்டும் தீர்ப்பு; சாமானியர்களின் பிரச்சனையை,
           வாய்மொழியால் தீர்ப்போரின் செயலுக்கு பிற்பட்டதே.

0226.  அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
           பெற்றான் பொருள்வைப் புழி

           விழியப்பன் விளக்கம்: வறியவர்களின், கொடியப் பசியைத் தீர்ப்பதே; ஒருவர், தான் 
           சம்பாதித்த செல்வங்களை சேமிக்கும் தேர்ந்த வழிமுறையாகும்.
(அது போல்...)
           நம்பியர்வர்களின், வருத்தும் சந்தேகத்தை ஒழிப்பதே; ஒருவர், தான் கற்ற அறநெறிகளைப் 
           பராமரிக்கும் சிறந்த ஒழுக்கமாகும்.

0227.  பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
           தீப்பிணி தீண்டல் அரிது

           விழியப்பன் விளக்கம்: உணவைப் பகிர்ந்து உண்ணும், அறநெறியைப் பழகியவரை; 
           பசியெனும் கொடுநோய், வருத்துவது சாத்தியமில்லை.
(அது போல்...)
           கற்றதைப் புரிந்து கற்பிக்கும், திறமையை உடையவரை; கர்வமெனும் மனநோய்,
           சிதைப்பது அரிதானது.

0228.  ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
           வைத்திழக்கும் வன்க ணவர்

           விழியப்பன் விளக்கம்: தம்முடையதென சேமித்து, செல்வத்தை இழக்கும் இரக்கமற்றோர்; 
           கொடுப்பதால் விளையும், பேரின்பத்தை அறியாரோ?
(அது போல்...)
           தன்மானமென வாழ்ந்து, வாழ்க்கையை இழக்கும் இனவெறியர்கள்; மனிதத்தால் 
           கிடைக்கும், உயர்வை உணராரோ?

0229.  இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
           தாமே தமியர் உணல்

           விழியப்பன் விளக்கம்: சேமிப்புக் கிடங்கில் நிரப்பியவற்றை, தாமே தனியாக உண்ணுதல்; 
           பிறரிடம் யாசிப்பதை விட, மிகவும் கொடுமையானது.
(அது போல்...)
           மனதின் ஆழத்தில் தேங்குபவற்றை, தனக்குள்ளே மறைத்து வைப்பது; பிறரின் பகையை 
           விட, மிகவும் ஆபத்தானது.

0230.  சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
           ஈதல் இயையாக் கடை

           விழியப்பன் விளக்கம்: இறப்பதை விட துன்பம் ஏதுமில்லை! ஆனால், இரப்பவர்க்கு 
           கொடுக்க முடியாத இயலாமையில் - இறத்தலும் மகிழ்ச்சியாகும்.
(அது போல்...)
           தற்கொலையை விட கோழைத்தனம் ஏதுமில்லை! ஆனால், சரணடைந்தோரை மன்னிக்க 
           முடியாத சூழலில் - தற்கொலையும்  வீரமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக