வெள்ளி, மார்ச் 25, 2016

தோன்றின் புகழொடு தோன்றுக (குறள் எண் 0236)



      "தோன்றின் புகழொடு தோன்றுக" என்ற குறள் எண் 0236-இன் பொருளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலருக்கும் "பிறந்தால், புகழோடு பிறக்கவேண்டும்! இல்லையேல், பிறக்காமல் இருப்பது சிறந்தது!" என்ற அடிப்படையிலேயே பொருள் புரிந்திருக்கும் (அல்லது) சொல்லப்பட்டு இருக்கும். எனக்கும், அதுபோன்ற ஒரு புரிதல் தான் இதுநாள் வரை இருந்தது. இந்த குறளுக்கான என் விளக்கவுரையை எழுத முனையும்போது தான் "அந்த பொருள்படும் படி, நம் பெருந்தகை கூறியிருக்க வாய்ப்பில்லை!" என்று உணர்ந்தேன். ஏனெனில், பிறப்பு ஒரு "வெற்றிடம் போல்/வெள்ளைத்தாள் போல்" தான் இருக்க முடியும். அதில், நல்லவை (புகழ் சேர்ப்பவை) நிரப்பப்படுவதும் (அல்லது) எழுதப்படுவதும் பின்னர் தான் நடக்கும். ஆனால், பிறக்கும் போதே நிரப்பப்படு/எழுதப்பட்டு இருப்பது சாத்தியமில்லை! எனவே, அதனால் "பிறக்காமல் இருப்பது நலம்!" என்று பெருந்தகை சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று உறுதி கொண்டேன்.

        அப்படியெனில், இதை எப்படி பொருள்படுத்தலாம் என்று யோசிக்கலானேன். மற்றவர் எப்படி பொருள்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் படிக்கலானேன். பின்வரும் சான்றுகள் கிடைத்தன.
  • மணக்குடவர்: பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று. இது புகழ்பட வாழவேண்டு மென்றது.
  • மு. வரதராசன்: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
  • மு. கருணாநிதி: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது.
  • சாலமன் பாப்பையா: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.
      இதில், மணக்குடவர் "பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று." என்று மேற்குறிப்பிட்ட பொதுப்படையில் விளக்கி இருப்பினும்;  தொடர்ந்த சொற்றொடரில் - "இது புகழ்பட வாழவேண்டு மென்றது" என்று அருமையாய் முடித்திருப்பார். மணக்குடவர் தவிர்த்து, மற்ற எல்லோரும் "வேறு வகையில்" எழுதி இருப்பினும், பிறப்போடு தொடர்பு படுத்தாதது குறையாய் தெரிந்தது. நான் வழக்கமாய் எழுதுவது போல் "நிகர் விளக்கம்" என்ற பெயரில், எப்படி வேண்டுமானாலும், பொருட்படுத்தலாம்! ஆனால், வள்ளுவப் பெருந்தகை சொல்லி இருப்பதற்கு மாறாய், அவரின் குறளை பொருட்படுத்துதல் முறையல்ல! என்று தோன்றியது. மேற்குறிப்பிட்ட விளக்கவுரையாளர்கள் எல்லாம் "மிக்க அனுபவமும்/ஞானமும்" உள்ளவர்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது, நான் மிகச்சிறியன். எனவே, இது அவர்களைக் குறை காணும் நோக்கம் துளியும் இல்லை! பெருந்தகையின் எண்ணம் சரியாய் பரிமாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையே.


மனிதராய் உலவிட, மனிதமென்னும் புகழோடு உலவவேண்டும்; இயலாதோர் - மனிதராய் உலவுவிடுவதை விட - உலவாமல் இருத்தல் நலம். 

          என்று முதலில் என் விளக்கவுரையை எழுதினேன். ஒரு வாரம் கடந்து, மீண்டும் படித்தபோது, மேற்குறிப்பிட்டது போல், நானும் பெருந்தகை சொன்னதற்கு மாறாய் எழுதியிருப்பது விளங்கியது. கடந்த சில தினங்களாய் ஆழ யோசித்து, மேலும் பொருத்தமான ஒன்றை எழுதினேன். அது, திருப்தி எனினும், ஓர் குழப்பம் இருந்தது. இந்த பதிவுக்கான "கருத்துப்படம்" தேடிக்கொண்டிருக்கும் போது, நம் வாழ்நாளில், நாம் நேரடியாய் பார்த்த மாமனிதர் ஒருவர் சொன்னவொன்று கிடைத்தது. சொன்னது போல், வாழ்ந்தும் காட்டிய மாமனிதர் அவர். அது தான் இந்த பதிவின் கருத்துபடமாய் மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆம், பிறக்கும் போதே புகழுடன் பிறப்பது, புகழ் பெற்றவர்களின் பிள்ளைகளாய் பிறப்பதால் வேண்டுமானால் சாத்தியமாகும். எனவே, அந்தப் பொருளில் தான் பெருந்தகை சொல்லியிருக்கவேண்டும் என்பது மிக உறுதியாயிற்று. நான் திருத்தி எழுதிய விளக்கவுரை மிகச்சரியானது என்பதும் புரிந்தது. அந்த விளக்கவுரை பின்வருவது:

மனிதராய் பிறந்துவிட்டால், பிறப்பை புகழுடையதாய் ஆக்கவேண்டும். 
ஆக்க இயலாதோரின் பிறப்பு, பிறவாமைக்கு ஒப்பாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக