வெள்ளி, மார்ச் 11, 2016

என் பார்வையில் சில தொலைக்காட்சி விளம்பரங்கள்...



         1990-களின் மத்தியில், என் எழுத்துகுரு திரு. பாலகுமாரன் ஒரு பட்டாசு விளம்பரத்தைப் பற்றி அவருக்கே உரித்தான பாணியில் அருமையாய் விவரித்து சொல்லி இருப்பார். அது மேகலா என்ற நாவல்-இதழில் வெளிவந்ததாய் நினைவு. ஒரு வார்த்தை கூட பேசாமல், வெறும் ஒலி-சமிக்ஞைகளைக் கொண்டு, ஒரு சிறுவன் அந்த விளம்பரத்தில் நடித்திருப்பான். அவரின் விமர்சனத்தைப் படித்த பின், அந்த விளம்பரம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த எவர்க்கும், எழுத்துசித்தரின் இந்த விமர்சனத்தைப் படித்திருக்க நேர்ந்திருந்தால் - இந்த அனுபவம் புரியும். அதுபோல், இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களில் நான் அபத்தமாய் மற்றும் ஆச்சர்யமாய் பார்க்கும் சில விளம்பரங்களை - உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம்.


தொலைக்காட்சி விளம்பரத்தில் நான் பார்க்கும் அபத்தங்கள்:
  • முதலில், மிக அபத்தமாய் பார்க்கும் ஒரு விளம்பரம்: ஒரு பெண், அவள் தாயுடனான அலைபேசி உரையாடலில்  "ராஜு சின்ன கிராமத்துல இருந்து வந்துருக்கான்; என் டேஸ்ட்..." என்று ஏளனமாய் பேசிவிட்டு; அவன் வீட்டில் இருக்கும் வசதிகளைப் பார்த்துவிட்டு "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?... ம்ம்?" என்று வினவுகிறாள். இதைப் பார்த்தவுடன் என்னுள் எழுந்த கேள்வி - "இதை விட ஒரு பெண்ணை அசிங்கப் படுத்த முடியுமா?" என்பதே!  
  • மகள் திருமண நிகழ்வு தொடர்ச்சியில், ஒரு தந்தை "பாட்டுப் பாடி, ஆடிக்கொண்டே" ஒரு மசாலா பற்றிய விளம்பரத்தை செய்கிறார். பெரிய கோடீஸ்வரரே ஆயினும் தன் பெண்ணின் திருமண நிகழ்வின் போது இப்படிப்பட்ட மனநிலையோடு இருக்கமுடியாது என்பதே என் நிலைப்பாடு. இது அபத்தம் அல்லவா? ஏன், இவர்களால் இயல்பாய் யோசிக்கவே முடிவதில்லை?
  • "இவங்க ஏன் கவலை இல்லாம இருக்காங்க தெரியுமா?" என்ற கேள்வியுடன் மழையில் நனையும் ஒரு குடும்பத்தைக் காண்பித்து "காப்பீட்டு விளம்பரம்" ஒன்று வருகிறது. என்னுள் எழுந்தது "அடேய்... அடேய்... சிகிச்சைக்கான பணத்தை காப்பீட்டு நிறுவனம் கொடுத்துவிடக்கூடும்! ஆனால், அந்த உடல்நலக் கேட்டை எவரடா அனுபவிப்பது?" எனபதே.
  • "இங்க பெட்ரோல் எங்க கிடைக்கும்" என்று கேட்கும் ஒருவரிடம், கோமாளித்தனமாய் "ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையம் இருக்கும் இடத்தை சொல்லி; அங்கே சென்று ஒரு குறிப்பிட்ட இருசக்கர வாகனத்தை வாங்குங்கள்! இனிமே இந்த கேள்வியை அடிக்கடி கேட்கவேண்டிய அவசியமே எழாது!" என்று ஒருவர் சொல்கிறார். உணமையைச் சொல்லுங்கள்!  இப்படி ஒரு சூழல் உங்களுக்கு ஏற்பட்டு, ஒருவர் இந்த பதிலைச் சொன்னால் "உங்கள் மனதில் நல்ல எதிர்வினையா தோன்றும்?"
  • ஒரு குடும்பத்தலைவி "நிலைப்படுத்தி (stabilizer)" அழகாய் இருக்கிறது என்பதற்காய்; அதை சுவற்றின் மத்தியில் வைக்க சொல்லிவிட்டு; குளிர்சாதனப் பெட்டியை சுவற்றின் கீழே/ஓரமாய் வைக்க சொல்வதாய் ஒரு விளம்பரம். இது எவ்வளவு பெரிய அபத்தம்? {"தங்க செருப்பு என்பதற்காக தலையிலா வச்சுக்க முடியும்?" என்ற சொல்லாடல் நினைவுக்கு வருகிறது}

தொலைக்காட்சி விளம்பரத்தில் நான் பார்க்கும் அதிசயங்கள்

   மேலுள்ள அபத்தங்களைப் பார்க்கும் அதே வேளையில், கீழ்க்கண்ட நான் அதிசயிக்கும் விளம்பரங்களையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
  • ஒரு "உடலூர்ச்சட்டை (T-shirt)" விளம்பரம்: பல நிறங்களில்/வடிவங்களில் உடலூர்ச் சட்டைகளைக் காண்பித்தாலும், அந்த விளம்பரத்தில் நடித்தவரின் முகத்தை காண்பிப்பதே இல்லை! இது தம்-தயாரிப்பின் மீதான தன்னம்பிக்கையை நிரூபிக்கும் விடயமாய் பார்க்கிறேன். இது, மிக நிச்சயமாய் பெருமளவில் பாராட்டி அதிசயிக்க வேண்டிய விளம்பரம். 
  • (ஒருவரின் சமையலைக் குறை கூறுவது போல் இருப்பது; மாற்றுக் கருத்துக்கு உரியது எனினும், அந்த மறுப்பையும் தாண்டி) “என்ன பிரியாணி கூரையில இருக்கு?” என்று கேலி செய்து பேசிவிட்டு, “இது என்ன குக்கரா? இல்லைதோனி அடிச்ச சிகஸராபோன்ற வசனங்களுடன் வரும் ஒரு குக்கர் விளம்பரம். அந்த குக்கரில் நம்பகத்தன்மை இருக்கோ/இல்லையோ - அந்த கற்பனை ஓர் அதிசயம்.
  • "உண்மைய சொல்லனும்னா, —— உள்ள இருக்கற எமோஷன்ஸ வெளில கொண்டு வந்துடுது" என்ற வசனத்துடன் வரும் ஒரு நகைக்கடை விளம்பரம். இதே அடிப்படையில், பல்வேறு வகையில் அந்த நகைக்கடை விளம்பரம் காட்சிப்படுத்தப் பட்டிருப்பினும், என்னளவில், இந்த வசனத்தோடு வரும் விளம்பரமே உயர்வாய் படுகிறது.
  • இருசக்கர வாகனம் ஒன்றின் விளம்பரத்தில் "கிரிக்கெட்"வீரர் தோணி, தமிழ்மொழி சிரமும் இல்லாமல்; வேட்டியை மடித்துக்கட்டி ஒரு சிறு-நடனமும் ஆடி நடித்திருப்பார். என்னவோ, அதில் ஓர் அழகியல் இருப்பதாய் தோன்றும்.

     விளம்பரத்தைக் கூடவா, இப்படி பார்க்கவேண்டும்? என்ற கேள்வி எழலாம். "நிச்சயம் பார்க்கவேண்டும்!" என்பதே என் பதில். இம்மாதிரியான விளம்பரங்களை நம்பி, பணத்தை இழக்கும் சாமான்யர்கள் பலர் இருக்கின்றனர்; அவர்களைச் சுரண்டவே, இம்மாதிரியான விளம்பரங்களின் முக்கிய நோக்கம் என்பதை(யும்) உணரவேண்டும். விளம்பரங்களில் மிகைப்படுத்தல்கள்  இருக்கலாம். ஆனால், அந்த மிகைப்படுத்தல்கள் ஒரு வரம்பிற்குள்/சுய-வரைமுறையோடு இருக்கவேண்டும் என்பதே என் பார்வை. "எதைச் சொன்னால் என்ன?; வியாபார யுக்திதான் முக்கியம்!" என்பது ஆபத்தான விடயம். வெறும் வியாபாரத்தை மட்டும் கவனம் கொள்ளாது...


"இயல்போடு/உண்மையோடு இருக்கும் அடிப்படையிலும்" கவனம் கொள்ளவேண்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக