வியாழன், ஜூலை 07, 2016

அதிகாரம் 034: நிலையாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 034 - நிலையாமை

0331.  நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
           புல்லறி வாண்மை கடை

           நிலையில்லாதவற்றை நிலையானவை என்று, மாயையாய் நம்பும்; அனுபவம் இல்லாத,
           தவறான-அறிவு இழிவானதாகும்.
(அது போல்...)
           உண்மையில்லாததை உண்மையானது என்று, மூர்க்கமாய் நம்பும்; புரிதல் இல்லாத,
           நிறைவற்ற-உறவு அழிவானதாகும்.

0332.  கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
           போக்கும் அதுவிளிந் தற்று

           பெருமளவில் சேர்ந்திடும் செல்வம், அரங்கில் நிறைந்திடும் மக்கள் போல்; எந்நேரத்திலும் 
           விலகிவிடும் என்ற நிலையாமையை உணரவேண்டும்.
(அது போல்...)
           மனதளவில் இருந்திடும் செயல்கள், ஊதற்பையில் அடைத்திடும் காற்று போல்; 
           எந்நிலையிலும் விடுபட்டிடும் என்ற புரிதலை அறியவேண்டும்.
           
0333.  அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் 
           அற்குப ஆங்கே செயல்

           நிலையற்ற தன்மை கொண்டது செல்வம்; எனவே, செல்வத்தைப் பெற்றால் - அது 
           நிலைக்கும் வண்ணம், அறச்செயல்களைச் செய்யவேண்டும்.
(அது போல்...)
           அலைபாயும் இயல்பு உடையது சிந்தனை; எனவே, சிந்தனைகள் தோன்றினால் - அவை 
           அலையாய் ஓயாமல், எழுத்துவடிவில் உருமாறவேண்டும்.

0334.  நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
           வாளது உணர்வார்ப் பெறின்

           வாழ்க்கையை ஆழ்ந்து உணர்ந்தோர்க்கு; நாள் என்ற அளவுகோல் - உயிரை உடம்பிலிருந்து 
           அறுக்கும் வாள் - என்பது தெரியும்.
(அது போல்...)
           தேடலைத் தேடி அலைந்தோர்க்கு; அறியாமை கொண்ட நம்பிக்கை; புரிதலைப் 
           பகுத்தறிவிலிருந்து கழிக்கும் கணிப்பான் - என்பது விளங்கும்.

0335.  நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை 
           மேற்சென்று செய்யப் படும்

           நாவையடக்கி - "விக்கல் போல்", நிலையில்லாத உயிர்; உடம்பிலிருந்து மேலே
           எழும்முன்னே - காலம் தாழ்த்தாது, நற்செயல்களை செய்யவேண்டும்.
(அது போல்...)
           நம்மையடக்கி - "குரங்கு போல்", ஓய்வில்லாத மனது; தேடலிலிருந்து தாவி விலகும்முன் -
           பருவம் கடத்தாமல், புரிதல்களை அடையவேண்டும்.

0336.  நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
           பெருமை உடைத்துஇவ் வுலகு

           "நேற்று உயிருடன் இருந்தவர், இன்று உயிரோடு இல்லை!" - என்று நிலையாமையை
           அனுதினமும் உணர்த்தும், உயர்வினைக் கொண்டது இவ்வுலகம்.
(அது போல்...)
           "முன்பு பகையுடன் இருந்தோர், இப்போது பகையுடன் இல்லை!" - என்று வாழ்வியலை
            தொடர்ந்து கற்பிக்கும், உறவுகளை உடையது வாழ்க்கை.

0337.  ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 
           கோடியும் அல்ல பல

           எந்நிலையிலும் வாழ்வியலின் நிலையாமையை பகுத்தறியாதோரே; கோடியை கடந்த
           எண்ணிக்கையில், கற்பனை செய்வர்.
(அது போல்...)
           எவ்வகையிலும் சமூகத்தின் வலிமையை உணராதவர்களே; எல்லையைக் கடந்த வகையில்,
           அரசை குறைகூறுவர்.

0338.  குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே 
           உடம்பொடு உயிரிடை நட்பு

           முட்டைக் கூட்டைப் பிரிந்து, பறக்கும் பறவையைப் போன்ற; நிலையற்ற தன்மை உடையதே, 
           உடம்புடன் உயிருக்குண்டான உறவு.
(அது போல்...)
           சுமந்த ஏவுகணையைப் பிரிந்து, உலவும் விண்கலத்தைப் போன்ற; தற்காலிக ஆயுள் 
           கொண்டதே, செயலுடன் உணர்ச்சிக்குண்டான பிணைப்பு.

0339.  உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி 
           விழிப்பது போலும் பிறப்பு

           நிலையற்ற வாழ்வில் - ஒவ்வொரு உறக்கமும், இறப்பைப் போன்றதாகும்; தூங்கியபின் 
           நிகழும் ஒவ்வொரு விழிப்பும், பிறப்பைப் போன்றது.
(அது போல்...)
           நிரந்தரமற்ற உணர்வில் - ஒவ்வொரு பிரிவும், கார்மேகம் போன்றதாகும்; மழைக்குப்பின் 
           தொடரும் ஒவ்வொரு தெளிவும், இணைதல் போன்றது.

0340.  புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
           துச்சில் இருந்த உயிர்க்கு

           ஏதோவொரு உடம்பின் உறுப்பில், தற்காலிகமாய் குடியிருக்கும் உயிருக்கு; நிரந்தரமாய்
           குடியிருக்கும் இடம் கிடைக்கல்லையோ?
(அது போல்...)
           ஏதேனும் ஆசையின் தூண்டலில், ஓயாமல் அலையும் மனதுக்கு; புத்தியுடன் இணைந்து
           செயல்படுதல் கைகூடவில்லையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக