புதன், ஜூலை 27, 2016

அதிகாரம் 036: மெய்யுணர்தல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 036 - மெய்யுணர்தல்

0351.  பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
           மருளானாம் மாணாப் பிறப்பு

           விழியப்பன் விளக்கம்: மெய்யற்றவற்றை மெய்யென்று நம்பும் அறியாமைமாட்சியமையற்ற 
           துன்பம் சூழ்ந்தபிறவிப்பயனுக்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
           அறமற்றவற்றை அறமென்று வாதிடும் மூர்க்கம்; மனிதமற்ற அரக்கம் நிறைந்த, 
           செயல்பாட்டிற்கு வித்திடும்.

0352.  இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
           மாசறு காட்சி யவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: மயக்கம் நீக்கிய, குற்றமில்லாத பகுத்தறிவை உடையவர்க்கு; 
           அறியாமை எனும் இருள் மறைந்து, இன்பம் விளையும்.
(அது போல்...)
           இரசாயனம் அகற்றிய, அழிவில்லாத விவசாயம் செய்வோர்க்கு; வீட்டுமனை என்ற
           பேராசை விலகி, வாழ்வியல் எளிதாகும்.
           
0353.  ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
           வானம் நணிய துடைத்து

           விழியப்பன் விளக்கம்: ஐயங்களைக் களைந்து, தெளிவுடன் மெய்யைப் 
           பகுத்தறிந்தோர்க்கு; புவியுலகை விட, விண்ணுலகம் மிக அருகாமையில் இருக்கும்.
(அது போல்...)
           தடைகளைக் கடந்து, மகிழ்வுடன் பணியை மேற்கொள்வோர்க்கு; சம்பளத்தை விட, 
           வெகுமானம் மிக மகிழ்ச்சியானதாய் இருக்கும்.

0354.  ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
           மெய்யுணர்வு இல்லா தவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: எல்லாவற்றையும் பகுத்தறிந்து, மெய்யுணரும் திறம் 
           இல்லாதோர்க்கு; ஐவகை உணர்வுகளை அடக்கியாளும் திறனிருந்தும் பயனில்லை.
(அது போல்...)
           குடும்பத்தினரை அரவணைத்து, அன்புக்கு அடிபணியும் வீரமற்றோர்க்கு; பஞ்ச
           பூதங்களைக் கட்டுப்படுத்தும் வலிமையிருந்தும் வாழ்வில்லை.

0355.  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
           மெய்ப்பொருள் காண்பது அறிவு

           விழியப்பன் விளக்கம்: எந்த பொருளெனினும், எவ்வகை மயக்கத்தைக் 
           கொடுப்பதெனினும்; அப்பொருளின் உண்மையான தன்மையை உணர்வதே, பகுத்து 
           அறிவதாகும்.
(அது போல்...)
           எந்த தொழிலெனினும், எவ்வளவு வருமானத்தை அளிப்பதாயினும்; அத்தொழிலின் தார்மீக 
           அம்சங்களை ஆராய்வதே, தொழில் தர்மமாகும்.

0356.  கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
           மற்றீண்டு வாரா நெறி

           விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் கற்றறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்தோர்; 
           மீண்டும் மண்ணுலகில் பிறக்காத, உயரிய நிலையை அடைவர்.
(அது போல்...)
           சிக்கல்களை ஆராய்ந்தறிந்து, உறவுகளைப் பேணுவோர்; மீண்டும் சிக்கல்களைச் 
           சந்திக்காத,  உன்னத வாழ்வைப் பெறுவர்.

0357.  ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
           பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

           விழியப்பன் விளக்கம்: உள்ளத்தில் பகுத்தறிந்து, மெய்ப் பொருளை உறுதியாய் 
           உணர்ந்தால்; நமக்கு இன்னுமோர் பிறவித்துன்பம் உண்டென்ற, நம்பிக்கைத் 
           தேவையில்லை.
(அது போல்...)
           மனிதத்தில் ஒருங்கிணைந்து, மனித தத்துவத்தை முழுவதுமாய் அறிந்தால்; நமக்கு 
           மற்றுமோர் பரிணாமவளர்ச்சி தேவையென்ற, எண்ணம் அவசியமில்லை.

0358.  பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
           செம்பொருள் காண்பது அறிவு

           விழியப்பன் விளக்கம்: பிறவியெனும் அறியாமையை அழித்திட; புகழ் என்னும் மெய்ப்  
           பொருளை உணர்தலே, அறிவுடைமை ஆகும்.
(அது போல்...)
           பகையெனும் மனநோயை நீக்கிட; மன்னிப்பு என்னும் நல் மருத்துவரை நாடுவதே,
           அருமருந்து ஆகும்.

0359.  சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
           சார்தரா சார்தரு நோய்

           விழியப்பன் விளக்கம்: பொய்யின் தொடர்புகளை உணர்ந்து, அத்தொடர்பை அறுத்து 
           வாழ்ந்திடின்; அதையும் கடந்து துன்பத்தை அளிக்கும் தொடர்பை, வேறொரு தொடர்பு 
           உருவாக்காது.
(அது போல்...)
           தீயறத்தின் காரணிகளைக் கண்டறிந்து, அக்காரணியை அகற்றப் பழகிடின்; அதையும் 
           தாண்டி தீயறத்தை உயிர்ப்பிக்கும் காரணியை, மற்றோர் காரணித் தூண்டாது.

0360.  காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
           நாமம் கெடக்கெடும் நோய்

           விழியப்பன் விளக்கம்: விருப்பு/வெறுப்பு/தெளிவின்மை - இம்மூன்று காரணிகளின் 
           உண்மையான விளைவுகளை உணர்ந்து, அவற்றை அழித்துவிட்டால்; நம் துன்பங்களும் 
           அழிந்துவிடும்.
(அது போல்...)
           மொழி/இனம்/மதம் - இம்மூன்று வெறிகளின் அபாயமான தீவிரவாதங்களை உணர்ந்து, 
           அவற்றை நீக்கிவிட்டால்; அனைத்து மிருகத்தன்மையும் நீங்கிவிடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக