சனி, ஜூலை 09, 2016

தனிமையில் இனிமை காண முடியுமா?


          சென்ற சூலை 1-ஆம் தேதி முதல் இன்று வரை எனக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை. சில காரணங்களால், முக்கியமான ஒரு நிகழ்வையும் தவிர்த்து விட்டு - ஊருக்கு செல்லாமல் இங்கே இருக்கும் - மிக அழுத்தமான ஒரு முடிவை எடுத்தேன். என் வாட்ஸ்-ஆப் குழுவில், இதைக் குறிப்பிட்டபோது, சில நட்புகள் "தனிமையில் இனிமை காண முடியுமா?" என்று கேட்டனர். என்னளவில், இப்படி தொடர் விடுமுறைகளைத் தனியாய் கழிப்பது - புதிய விடயம் அல்ல; அது சிரமும் அல்ல. முன்பே, இப்படிப்பட்ட என் அனுபவத்தை வார-இறுதியில் வீட்டிலேயே அடைந்திருப்பது!!! என்ற மனதங்கத்தில் பதிந்திருக்கிறேன். வார இறுதி என்று மட்டுமல்ல; 2013-இல் கிடைத்த ஒரு வார "ஈகைப் பெருநாள்" விடுமுறையைக் கூட - நான் இப்படி தனியே வீட்டிலே இருந்தே கழித்தேன். இதில், எனக்கு பெரிய சிரமம் ஏதும் இல்லை; நிச்சயம், ஊருக்கு சென்றிருந்தால் - என்மகளுடனும், என் உறவு/சுற்றத்துடனும்...

     மகிழ்ச்சியாய் கழித்திருப்பேன். என்மகளுடன் இருக்கமுடியாத குறையை விட, பெரிய மனக்குறை ஏதுமில்லை. இந்த விடுமுறையை - நிலுவையில் இருந்த சில பதிவுகளுடன், வேறு சில பதிவுகளையும் - எழுதக் கிடைத்த வாய்ப்பாய் எடுத்துக் கொண்டேன். பலரும் சொல்வது போல் - பல இடங்களுக்கும் பயணிப்பதில் - எனக்கு பெருத்த விருப்பம் இல்லை. சராசரி மனிதனுக்கு தேவையான பயணங்களை, நான் நிறைய மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், பலரும் செய்வது போல் - கட்டிடங்கள் மற்றும் பலவற்றை - வெவ்வேறு இடங்களுக்கு சென்று காண்பதில் எனக்கு பெரிய விருப்பம் இல்லை. தேடல் சார்ந்த தொடர் சிந்தனையையும், சிந்தனையைச் சார்ந்த புரிதல்களை என்னுள்ளே விவாதிப்பதையும்; அவற்றை அனுபவிப்பதையும் - என் இயல்பாய் உணர்கிறேன். அதற்கு, இந்த தனிமை மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது. இவற்றைத் தவிர, என் குடும்பத்தாருடன் உரையாடுவேன்; கிடைக்கும் வாய்ப்பில் - சில உறவு/நட்புகளுடன்...

      பேசுவேன். பல விடயங்களில், நண்பர்களுடன் விவாதிப்பேன்; விவாதம் சார்ந்த தொடர் சிந்தனையில் மூழ்குவேன். அதன் புரிதலில், சில பதிவுகளாய் பிறக்கும்; அப்படி என் சிந்தனைகளை - மற்றவர்களுக்கு கடத்தும் பணியை விரும்பி செய்கிறேன். இந்த தனிமையும்/நேரமும் "மத நல்லிணக்கம்" என்ற என் கவிதையை, முதன்முதலாய் காணொளியாய் பகிரும் ஒரு முயற்சியை செய்யும் வாய்ப்பைக் கொடுத்தது. அதற்கு, என் தமக்கை மகன் "எழுத்தில் துணைத்தலைப்பிடும் (Sub Title)" பணியைச் செய்து கொண்டிருக்கிறான். சமுதாயப் பார்வை கொண்ட அந்த பணியை, என் நட்புகளிடம் ஆழ்ந்து விவாதிக்கும் வாய்ப்பை - இந்த தனிமையும்/விடுமுறையும் கொடுத்தது. என் நண்பன் கதிர், அவனுடைய உன்னத நேரத்தை செலவிட்டு - அதைப் பலவகையில் செம்மைப்படுத்த/அதை ஆழமாய் விவாதிக்க உதவினான். நண்பன் ஜோதியும், அவன் கருத்துக்களை பகிர்ந்தான். இவற்றுக்கெல்லாம் உச்சமாய்...

          என் பிறவிப்பயனான திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் பணியில் - 20 குறள்களுக்கான விளக்கவுரையை ஒரே-மூச்சில் எழுதும் வாய்ப்பு கிட்டியது; சாதாரண நாட்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை. அந்த மனத்திருப்தி - என்மகளைச் சந்திக்கும் பயணம் தவிர்த்து; வேறெந்த பயணத்திலும் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. இந்த 9 நாட்களில் - 3 முறை தான் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறேன்; அதுவும் கூட, உணவுக்கான அடிப்படை பொருட்கள் மற்றும் வேறு சில பொருட்கள் வாங்க. அதில், ஒரு மட்டும்தான் - அதிகபட்சமாய், 2 மணி நேரம் கால அவகாசம்" கொண்டது. மற்ற எல்லா நேரங்களிலும், வீட்டின் உள்ளேதான் இருந்தேன்; இன்னும் 15 மணி நேரம் தான் - அதைக் கடந்த பின், நாளை என் வழக்கமான பணியைத் துவக்கி இருப்பேன். முன்பு போல், மது அருந்தும் பழக்கமும் இல்லாததால் - சிந்தனை நேரம் மேலும் அதிகமாகி இருக்கிறது; என் சிந்தனை, முன்பைக்காட்டிலும் வலுப்பெற்று இருப்பதையும் உணர்கிறேன்.

            அது சார்ந்த ஒரு பதிவைக் கூட எழுதி இருக்கிறேன். எதுவுமே செய்யாமல் இருந்தால் தான் - அந்த தனிமை வெறுமையாய் இருக்கும். நமக்கு பிடித்த செயல்களை செய்ய நம் தனிமையை பயன்படுத்தினால் - நிச்சயம், அந்த வெறுமை இருக்காது; மாறாய், தனிமையில் இனிமை காணமுடியும். சிந்தனையும்; சிந்தனை சார்ந்த தேடலும் - அவற்றால் கிடைக்கும் புரிதலும் தான் - வாழ்வியலின் அடிப்படை. மேலே குறிப்பிட்டது போல், என்மகளைக் காண செல்லமுடியாத அந்த மனக்குறைத் தவிர்த்து - என்னுடைய இந்த தனிமை "மிக இனிமையாய்" இருந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ? எனக்கு இப்படி செலவிடும் தனிமை மிகப் பிடித்தமான/இனிமையான ஒன்று. இனிமை என்பதே - நாம் விரும்புவதை அனுபவிப்பது தானே? அந்த இனிமை, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடும் தானே? அப்படி பல்வேறு வகையான காரணிகளில், தனிமையும்; தனிமையால் விளையும் என் சிந்தனையும்/அதன் விளைவுகளும் - எனக்கு இனிமையாய் இருக்கிறது. எனவே...

வெகுநிச்சயமாய் - நான் தனிமையில் இனிமையைக் கண்டேன்!!!        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக