ஞாயிறு, ஜூலை 17, 2016

அதிகாரம் 035: துறவு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 03 - துறவறவியல்;  அதிகாரம்: 035 - துறவு

0341.  யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
           அதனின் அதனின் இலன்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் எவ்வொன்றின் மேலும், எல்லாப்பற்றையும் துறப்பதால் 
           விளையும் துன்பம்; அப்பொருட்கள் இல்லாத துன்பத்தைவிட குறைவேயாகும்.
(அது போல்...)
           ஒருவர் எந்த-உறவின் மீதும், நெருக்கத்தைக் குறைப்பதால் விளையும் அழுகை; அவ்வுறவுகள்
           பிரிந்துதரும் அழுகையைவிட நன்றாகும்.

0342.  வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
           ஈண்டுஇயற் பால பல

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் துன்பமின்றி இருக்க - ஒன்றின் மீதான பற்றை, அது 
           இருக்கும்போதே துறக்கவேண்டும்; அப்படித் துறந்தபின், பற்பல இன்பங்கள் கூடும்.
(அது போல்...)
           ஓர்அரசு தோல்வியின்றி தொடர - ஊழலின் ஆணி வேரை, ஆட்சி உள்ளபோதே
           களையவேண்டும்; அப்படிக் களைந்தபின், பெரிய வெற்றிகள் சேர்ந்திடும்.
           
0343.  அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
           வேண்டிய வெல்லாம் ஒருங்கு

           விழியப்பன் விளக்கம்: ஆசைக்கு காரணமான ஐம்புலன்களை அடக்க விரும்பினால்; 
           அவற்றிற்கு ஆதியான பொருட்களின் மீதான, பற்றுகளைத் துறக்கவேண்டும்.
(அது போல்...)
           அழிவுக்கு ஆதாரமான ஐம்பூதங்களை அடக்க எண்ணினால்; அவைகளைக் காக்கும் 
           இயற்கையைச் சிதைக்கும், காரணிகளைத் தவிர்க்கவேண்டும்.

0344.  இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை 
           மயலாகும் மற்றும் பெயர்த்து

           விழியப்பன் விளக்கம்: பற்றுகளைத் துறப்பதே, தவத்தின் இயல்பாகும்; பற்றுகள் இருப்பின்,
           பிறவற்றின் மீதான மயக்கத்தை மீண்டும் அளிக்கும்.
(அது போல்...)
           அகங்காரத்தை அழிப்பதே, அன்பின் அடிப்படையாகும்; அகங்காரம் இருப்பின், உறவுகளின்
           மீதான ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும்.

0345.  மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் 
           உற்றார்க்கு உடம்பும் மிகை

           விழியப்பன் விளக்கம்: பிறப்பெனும் துன்பத்தை அறுக்க எண்ணுவோர்க்கு; உடம்பே 
           அதீதமாகும்! பின்னெதற்கு, உடம்போடு தொடர்புடைய பற்றுகள் எல்லாம்?
(அது போல்...)
           தானெனும் அகந்தையை அழிக்க விரும்புவோர்க்கு; சுய-சிந்தனையே போதுமானது!
           பிறகெப்படி, சிந்தனையை வியாபாரமாக்கும் நிறுவனங்கள் வளர்கின்றன?

0346.  யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
           உயர்ந்த உலகம் புகும்

           விழியப்பன் விளக்கம்: என்னுடைய உயிர், என்னுடைய பொருள் என்னும் பிடிப்புகளை 
           அறுப்போர்; தேவர்களின் உலகத்தைவிட, சிறப்பான உலகத்தை அடைவர்.
(அது போல்...)
           என்னுடைய அரசு, என்னுடைய கஜானா என்னும் கர்வமற்ற ஆட்சியாளர்; ஞானிகளின் 
           நிலையைவிட, உன்னத நிலையைப் பெறுவர்.

0347.  பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
           பற்றி விடாஅ தவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பற்றுகளை, விடமுடியாமல் பற்றிக்கொண்டு உழல்வோரை; 
           துன்பங்களும், விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்.
(அது போல்...)
           பல்வேறு தீவினைகளை, விலக்கமுடியாமல் பழக்கிக்கொண்டு வாழ்வோரை; 
           தீக்குணங்களும், விலகாமல் சூழ்ந்துகொண்டிருக்கும்.

0348.  தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
           வலைப்பட்டார் மற்றை யவர்

           விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் துறந்தவரே உயர்ந்தோவர்ர் ஆவர்; ஆசைவலையில் 
           மயங்கி சிக்கியோர், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்போராவர்.
(அது போல்...)
           அனைவரையும் பாதுகாப்பவரே நல்லாட்சியாளர் ஆவர்; குடும்பநலனில் நிலைத்தவறிச்
           சிதறியோர், அவர்களுக்கு தாழ்ந்த நிலையில் உள்ளவராவார்.

0349.  பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று 
           நிலையாமை காணப் படும்

           விழியப்பன் விளக்கம்: பற்றுகளைத் துறந்தோரே, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர்; 
           மற்றவர்கள், நிலையற்ற வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருப்பர்.
(அது போல்...)
           சாதிவெறி இல்லாதோரே, மிருகத் தன்மையிலிருந்து விலகிடுவர்; மற்றவர்கள், பரிணாம 
           வளர்ச்சியின்றி மிருகத்தன்மையோடு இருப்பர்.

0350.  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
           பற்றுக பற்று விடற்கு

           விழியப்பன் விளக்கம்: பிறவற்றின் மீதான பற்றை விட்டொழிக்க; பற்றுகள் இல்லாதவரின் 
           மீதான பற்றை, இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும்.
(அது போல்...)
           பலவற்றின் மேலான வன்முறையை அழித்திட; அஹிம்சையைப் பழகியவரின் உன்னத 
           அனுபவத்தை, உணர்ந்து பின்பற்றவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக