சனி, ஜூலை 23, 2016

கபாலி (2016)...


    கபாலி திரைப்படத்தைப் பற்றி "எதிர்மறையான விமர்சனங்கள்" நிறைய இருக்கின்றன. என்னளவில் - ரஜினி படம் என்ற அடிப்படையில் - இப்படி எதிர்க்கும் அளவிற்கு ஏதுமில்லை! இம்மாதிரியான விமர்சனங்கள் - ஒவ்வொருவரின் தேவையற்ற/தனிப்பட்ட எதிர்பார்ப்பின் விளைவு என்பதாகவே நான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் இயக்குனர் திரு. ரஞ்சித் அவர்கள் - இது, வழக்கமான ரஜினியின் திரைப்படம் அல்ல! - என்பதை வெளிப்படையாய் சொல்லி இருக்கிறார் (இதுவரை பார்க்காதோர், இனியாவது - அவரின் பேட்டியைப் பாருங்கள்). இந்த படம் "பாஷாவும்/நாயகனும்" கலந்த கலவை என்று கூட சொல்லி இருந்தார். இதற்குமேல், இந்த படத்தில் "என்ன எதிர்பார்க்கக் கூடாது?!" என்பதை எவர்/எப்படி தெளிவாய் சொல்ல முடியும்? அதையும் மீறி, இப்படிப்படட எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன என்றால் - இது நிச்சயம், இயக்குனரின் தவறல்ல! இது ரஜினி என்ற மாயையில் நாமும் சிக்கி...

    ரஜினியையும் சிக்கவைத்து இருக்கும் - நம் ஒவ்வொருவரின் தவறே! என்னளவில், இதில் திரைப்படத்தைப் பற்றியோ; இயக்குனரைப் பற்றியோ; ரஜினியைப் பற்றியோ - எதிர்மறையாய் சொல்ல ஏதுமில்லை. இதற்கு, முழுக்க/முழுக்க - ரஜினியைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணமே - காரணம், என்பது என் புரிதல். இந்த அடிப்படையிலேயே, கபாலி பற்றிய என் பார்வையை எழுதி இருக்கிறேன். நான் கமலின் அபிமானி என்பது என்னை அறிந்தோருக்கு, தெளிவாய் தெரியும். அதையும் கடந்து, ரஜினி எனும் நடிகரை/மனிதரை எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினியை - அணு/அணுவாய் இரசித்துப் பார்ப்பவன் நான்; ரஜினி ஒரு சகாப்தம். ரஜினிக்கு முன்னும், ரஜினி  போல் யாருமில்லை! ரஜினிக்கு பின்னும், ரஜினி போல் யாரும் வரப்போவதில்லை! - ரஜினி ரஜினிதான். என்னைப் பொறுத்த அளவில், ரஜினியின் திரைப்பட வரலாற்றில் - இந்தப்படம் போற்றி கொண்டாடப்பட வேண்டும்.

  • படத்தில் இருக்கும் "ஒரேயொரு" எதிர்மறையான விடயம் என்றால் - அது, படத்தின் மையக்கரு! ஆனால், அதைப்பற்றி இப்போது பேசி எந்தப் பயனும் இல்லை. இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது தேவையற்றது என்ற அடிப்படையிலேயே - அதையும் கூட, எதிர்மறையாய் பார்க்கிறேன். இருப்பினும், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கதை என்பதால், அந்த எதிர்மறையும் - நேர்மறை ஆகிறது.
சரி, என் பார்வை இப்போது:

ரஜினி என்பவர் யார்?  ரஜினியை எப்படி அணுகவேண்டும்?
  • ரஜினி எனும் "ஸ்டையில் நடிகரை"த் தாண்டி - ரஜினி எனும் அற்புத நடிகரை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால், அதைத் தொடர்ந்து நாம் மறுத்துவிட்டு - ரஜினி எனும் நடிகரை "உச்ச நடிகர்" எனும் அந்தஸ்த்தில் வைத்து பழகிப்/பார்த்துவிட்டோம். அதனால் தான், ரஜினி எனும் நடிகர் "இணையற்ற சூப்பர் ஸ்டாராய்" இதுவரை இருக்கிறார்; இனியும் இருப்பார்! எப்போதும் அவர் ஒருவரே "சூப்பர் ஸ்டார்!".
  • இடையிடையே "6-இலிருந்து 60 வரை/புவனா ஒரு கேள்விக்குறி/தர்மதுரை" போன்ற எண்ணற்ற நடிப்பை/கதையை மையப்படுத்திய படங்களையும் கொடுத்திருக்கிறார். நாம் அதையும், மறுக்காமல் தொடர்ந்து இரசித்து வந்திருக்கிறோம்.
  • எனவே, ரஜினி என்ற நடிகரை இதுவரை நாம் சரியாய் அணுகியே வந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன். ஆனால், இப்போது - நாம் வேறொரு விதத்தில் ரஜினியை அணுகவேண்டியது அவசியம் ஆகிறது. நமக்கு மட்டுமல்ல! ரஜினிக்கும் இது அத்தியாவசியமானது.

ரஜினியிடம் நம்முடைய தவறான அணுகுமுறை
  • மேற்குறிப்பிட்ட வண்ணம், சில படங்களில் நாம் ரஜினியை அணுகியிருப்பினும் - ரஜினி எனும் அந்த "ஸ்டார் அந்தஸ்த்தை" அடைந்த பின்; ரஜினியை நாம் பெரிய அளவில் மாற்று முயற்சியை செய்ய அனுமதிக்கவில்லை! அதனாலேயே, நாம் இன்னும் பல அற்புதமான ரஜினி படங்களை பார்க்கும் அனுபவத்தை இழந்திருக்கிறோம். இதற்கு - முழுக்க/முழுக்க நம் தவறான அணுகுமுறையே காரணம்.
  • இந்த அணுகுமுறைக்கு - மிகசரியான உதாரணம் சொல்லவேண்டும் எனில் - சச்சின் டெண்டுல்கர்! ஒருகாலத்தில், சச்சின் என்பவர் "ஒன் மேன் ஆர்மி!" - ரசித்தோம்/கொண்டாடினோம். தவறில்லை! ஆனால், 10/15 ஆண்டுகள் கடந்த பின்னும் - அதையே நாம் எதிர்பார்த்தோம். சச்சின் என்றாலே "சென்ச்சுரி" அடிக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாய் ஆகிவிட்டது. மேலும், அவர் "அவர் ஸ்டையிலில், அதிரடியாக" அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும். அதனால் தான், பிற்பாதியில் "40/60/70" என்று அவர் ரன்கள் எடுத்த அற்புதமான ஆட்டங்களைக் கொண்டாடத் தவறிவிட்டோம். ஆடும் காலத்திற்கேற்ப, அருமையாய் தன் ஆட்டத்தை மாற்றி/மேம்படுத்திய அற்புதமான ஆட்டக்காரர் அவர். இல்லையெனில், வீரேந்தர் சேவாக்குக்கு என்ன நேர்ந்ததோ! - அதுவே, சச்சினுக்கு நேர்ந்திருக்கும். உண்மையில், சேவாக் மாத்திரம் - சச்சினைப் போல், தன் ஆட்டத்தை மாற்றி/மேம்படுத்தி இருந்தால் - சச்சினை விட "அதிக உயரம்" தொட்டிருப்பார். 
  • இதேவிதமான எதிர்பார்ப்பு தான் - 93 வயதிலும் ஒரு முதியவர், ஒரு அரசியல் கட்சியைத் தன் கட்டுப்பாட்டிலேயே  வைத்திருக்க உந்தப்பட்டு இருப்பதற்கான அடிப்படையும். அந்த முதியவர், 60 வயதைக் கடந்துவுடனே - கட்சியில் தன் நிலைப்பாட்டை மாற்றி இருக்கவேண்டும். இனிமேல், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றினாலும் - அது எந்த அளவுக்கு வெற்றி தரும் என்பது நிச்சயமில்லை. ஏனெனில், காலம் மிகவும் கடந்துவிட்டது.
  • ரஜினியும் 60 வயதைக் கடந்துவிட்டார்; இனியும், ரஜினி முந்தைய படங்கள் போல் நடித்துக் கொண்டிருந்தால் - நாமே ரஜினியை "நாம் வைத்திருக்கும் இந்த நிலையில் இருந்து - அதலபாதாளத்தில் தள்ளிவிடுவோம்!". எனவே, ரஜினி சரியான நேரத்தில் எடுத்திருக்கும் - இந்த சரியான முடிவை - நாம் பெரிதும் கொண்டாடவேண்டும். இல்லையேல், சச்சினைக் கொண்டாட மறந்தது போல் - ரஜினியையும் கொண்டாட தவறிவிடுவோம். இந்தி திரைப்பட உலகம் தற்போது "அமிதாப்பைக் கொண்டாடுவது" போல், நாமும் கொண்டாடவேண்டும். எனவே, நம்முடைய அணுகுமுறையை மாற்றவேண்டிய தருணம் இது.

நாம் இதுவரை இழந்ததை; ரஜினி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்
  • இதுவரை, நாம் ரஜினியை - இப்படி  மாற அனுமதிக்காததே தவறு! அதை, இப்போது - ரஜினி துணிந்து செய்திருக்கிறார்; அதைச் சரியாய் ஆமோதித்து/அனுமதித்து நாம் "ரஜினியை இரசிக்கும் நம் இரசனையை" மாற்றிக் கொள்ளவேண்டும். சிவாஜி என்ற மாபெரும் நடிகரை, (சில படங்கள் தவிர்த்து) அவரின் இறுதிக்காலத்தில் கொண்டாடத் தவறிவிட்டோம். அந்தத் தவறு, ரஜினி விடயத்தில் நடக்கக்கூடாது; அதற்கு, நிச்சயம் நாம் காரணமாய் இருக்கக்கூடாது.
  • கமல் போன்ற நடிகருக்கு - இம்மாதிரியான சூழல் நேராது! எந்த வட்டத்திலும் சிக்காத நடிகர் அவர். ஆரம்பத்தில் இருந்தே, அவர் அந்த முடிவில் தெளிவாய் இருந்து - அவரை நோக்கி, நம்மை நகர்த்திய நடிகர் அவர்.
  • ஆனால், ரஜினி நமக்காகவே - அவரின் சுயத்தை/விருப்பத்தை விட்டுவிட்டு - இந்த வட்டத்தில் விருப்பமுடன் சிக்கிக் கொண்டவர். சுருக்கமாய் சொல்லவேண்டும் எனில், கபாலி படத்தில் வரும் "ஒன்னோட கருணை, அதனோட சாவை விட கொடுமையானது!" என்ற வசனம் - அவருக்காக"வும்" எழுதபட்டதாய் உணர்கிறேன். ஆம், பறவையைக் கூண்டில் அடைத்து வைப்பதை - பறவை மேல் நமக்கிருக்கும் அன்பு என்பதாய்; தவறாய் புரிந்து கொள்கிறோம்.
  • இல்லை... அது பறவையின் சுதந்திரத்தைப் பறிப்பது! இதுவரை, ரஜினியைக் கூண்டில் அடைத்தது போதும். வெளியே போனால் "வாழ்வா? சாவா?" என்ற போராட்டம் வருமே? என்ற படத்தில் வரும் வசனம், நமக்கும் கேள்வியாய் வரும்; அதற்கும் படத்திலேயே பதில் வசனம் வருகிறது - "வெளியே திறந்துவிடு; வாழ்வா? சாவா? என்பதை பறவை முடிவு பண்ணட்டும்!" என்று. எனவே, ரஜினி என்ற பறவையையும் "கூண்டில் இருந்து வெளியே விடவேண்டிய தருணம் இது!".
  • இதை அந்த காட்சியின் மூலம் - படத்தின் கதைக்கு மட்டும் அல்லாமல்; நமக்கும் சொல்லி இருப்பதாய் நான் பார்க்கிறேன். எனவே, ரஜினி துணிந்து அந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று நம்புவோம். 
  • "ரஜினிக்கு துணையாக" அவரின் மகளாக வரும் ஒரு பெண் இருப்பதா?! என்ற கேள்வி எழுந்தால் - அது நம் தவறு. ஒரு தலைவனின் மகளும் - போராட்டத்தில் பங்குகொள்வாள்! என்ற கதைப்படியான உண்மையும் அதில் இருக்கிறது. மேலும், ரஜினி எனும் அந்த ஸ்டார் - தன் இயல்பிலிருந்து வெளியே வரவேண்டிய தருணம் இது! என்ற யதார்த்தமும் அதில் இருக்கிறது. இதில் எந்த காரணத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமில்லை! ஆனால், ரஜினிக்கு இந்த சுதந்திரத்தை நாமே "மகிழ்ச்சியாய்" அளிக்கவேண்டும்.
  • "நிறைய ஆக்க்ஷன் சீன்கள் இல்லையே?!" - என்ற ஆதங்கம் புரிகிறது. ஆனால், அதைத் தாண்டி வரவேண்டும். ஆக்க்ஷன் சீன்கள் மட்டும் முக்கியமில்லை! என்ற உண்மை நிலைக்கு நாமும் வரவேண்டும். மேலும், இந்தப் படத்தின் கதைக்கு "அதிகப்படியான" ஆக்க்ஷன்கள் தேவையில்லை. இது, ஒரு இனத்தின் பிரச்சனையைப் பேசும் படம். அதில், ரஜினி எனும் ஸ்டாரே ஆனாலும் "ஒன் மென் ஷோ தேவையில்லை!". 
  • இவ்வளவு ஏன்? இப்போதெல்லாம் - ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே - ஆக்க்ஷன்கள் குறைவு. என்னதான், ரஜினி என்றாலும் - ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டால், ரஜினியின் வீச்சு குறைவு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அப்படி குறைந்ததால் தான், ஜேம்ஸ் பாண்ட் - இந்த காலக்கட்டத்திற்கும் பொறுத்தமாய் - அந்த ஈர்ப்புடன் இருக்கிறார். ஏன் "அகில உலக சூப்பர் ஸ்டார்" ஜாக்கி ஜான் கூட, தன் ஆக்க்ஷன்களை வெகுவாய் குறைத்துவிட்டார்.
  • இது இயல்பாய் - ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நிகழும் மாறுபாடு! இதற்கு - ரஜினி/ஜாக்கி ச்சான்/ஜேம்ஸ் பாண்ட் - என்று எந்த விதிவிலக்கும் இல்லை. இந்த மாற்றம் இல்லாத எதுவும் - நிரந்தரமாய் இருக்கிறது. அதற்கு இருவேறுபட்ட உதாரணங்கள் தான் - மேற்குறிப்பிட்ட சச்சினும்/சேவாக்கும். ஒரு நல்ல ஆன்மீகவாதியாக ரஜினி, இதை எப்போதோ உணர்ந்திருக்கக் கூடும். ஆனால், அவரை அப்படி செய்யமுடியாமல் போனதற்கு - நாம் தான் காரணம். நமக்காய் - நிறைய செய்துவிட்ட அந்த ஸ்டாருக்கு - இந்த மாற்றத்தின் போது, துணை நிற்கவேண்டியது; அவரைக் கொண்டாட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

படத்தில் ரஜினி-ஸ்டையிலே இல்லையா? நிறைய இருக்கின்றன!!!
  • ரஜினி என்ற "அந்த மேஜிக்கே" இல்லாதது போல்; பல எதிர்மறை விமர்சனங்கள் எழுகின்றன! இது - நம் பார்வையில் மிகப்பெரிய கோளாறு இருப்பதை உணர்த்துகிறது. முதல் காட்சியில், சிறையில் இருந்து வெளியேறும் போது "கோட்டை ஸ்டையிலாய் போடுவது, பின்னால் இருந்து காட்சியாய் காண்பிக்கப்படும்!". அங்கே ஆரம்பிக்கிறது! - ரஜினி ஸ்டையில்; படம் முழுக்க ரஜினி ஸ்டையிலும் இருக்கிறது.
  • படத்தில் அவர் பேசும் முதல் வார்த்தை - மகிழ்ச்சி. அந்த வார்த்தையில் இருக்கிறது/துவங்குகிறது - நாம் எதிர்பார்க்கும் அதே "ரஜினி ஸ்டையில்". பின் என்ன, நாம் எதிர்பார்த்து ஏமாந்தோம்? இன்னொரு "பாஷா"வா? இன்னொரு பாஷா கொடுக்க, ரஜினி ஏன்? பாஷா என்பதும் - ரஜினி கொடுத்த அடையாளமே! அதேபோல் தான் - கபாலி என்கிற இந்த அடையாளமும். தனக்கு "ஃபேவரைட்டான"; தனக்கே உரிய முத்திரையான "ஒரு ஷாட்டை" இனிமேல் ஆடவே மாட்டேன் என்று சச்சின் எடுத்த உறுதியைப் போன்றது தான் இதுவும்.
  • "ஒவ்வொரு பறவையும் ஒரு விதையை சுமந்து செல்கிறது! ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடு இருக்கிறது!!" என்ற வசனத்தை ரஜினி தவிர வேறு யாரால் பேசமுடியும்? "காந்தி சட்டையை கழட்டியத்துக்கும்; அம்பேத்கார் கோட்டு போட்டதுக்கும் பின்னாடி காரணம் இருக்கு; அது மிகப்பெரிய அரசியல்!" - இப்படியொரு வசனம் பேச "ரஜினி என்ற ஸ்டார் தவிர வேறு யாரால் முடியும்?" என்னவொரு ஆழமான வசனம் அது. அதுதான், இந்த படத்தின் மைய்யக்கரு! அந்த செய்தி, பலரையும் சென்று சேரவேண்டும்; அதை ரஜினி சொன்னால் தான் "சரியாய் சென்று சேரும்!" என்பதே இப்படத்தின் அடிப்படை. இதை விட, பெரிய அங்கீகாரத்தை, எவரால் ரஜினிக்கு கொடுக்கமுடியும்? அதனால் தான், இது ரஜினி படம்.
  • முதல் பாட்டு முடியும் போது, ஒரு சின்ன "ரஜினி டேன்ஸ்" வரும். அங்கே இல்லையா? ரஜினி டச்? "மலேஷியாவுல... சரக்குன்னா பொம்பளை மேட்டர்!"னு சொல்லி சிரிக்கிறதுல; ரஜினி மேஜிக் இல்லையா?
  • படம் முழுக்க மகிழ்ச்சி என்ற வார்த்தையை; வெவ்வேறு உணர்வால் வெளிப்படுத்தும் விதத்தில் ரஜினி டச் இல்லையா? ரஜினிக்கே உரித்தான "சென்ட்டிமென்ட்" சீன்கள் இல்லையா? மனைவியைத் தேடி, புதுச்சேரி செல்லும் வரை - நிறைய இருக்கின்றனவே? அதைக் கூட "நீளம் அதிகம்!" என்று சிலர் சொல்கின்றனர். என்னளவில், இந்த கதைப்படி; தன் குடும்பத்தைக் கூட மறந்துவிட்டு - ஒரு இனத்தைக் காக்க போராடிய ஒரு தலைவனுக்கு; தன் குடும்பம் அழிந்தேவிட்டது! என்று நம்பும் ஒரு மனிதனுக்கு - தன் தவறை உணர்ந்து; தான் செய்ய மறந்ததை நினைத்துப் பார்க்க - அத்தனை நீண்ட காட்சி தேவை. அதுதான், அப்படிப்பட்ட ஒரு மனிதனின் நிலைப்பாடு; அதுதான், ஆழ்ந்த புரிதலைக் கொடுக்கும்; அதை அப்படியே நமக்கு கடத்தும் முயற்சிதான் அந்த காட்சிகள்! அதில், அந்த கதாப்பாத்திரம் மட்டுமல்ல; அந்த இயக்குனரும் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறார். தன்மகள் உயிரோடு இருப்பது தெரிந்தது முதல், தன் மனைவி உயிரோடு இருப்பது தெரிந்து - அவரின் நடிப்பு அபாரம். மேற்குறிப்பிட்ட சில படங்களில் - நாம் அனுபவித்த, ரஜினி எனும் மாறுபட்ட நடிகரின் முடித்திரை.
  • தினேஷின் நடிப்பு அற்புதமானது! நகைச்சுவையாய் இருக்கும் அதே வேளையில், அவரின் உழைப்பு நிறையத் தெரிகிறது. தினேஷிற்கு என் பாராட்டுக்கள். அதுபோல், கிஷோர் துவங்கி பலரின் பங்களிப்பு அதிகம். அவற்றைத் தனிப்பதிவாய் எழுத எண்ணம்.

ரஜினி "உடனடியாய்" நிறுத்தவேண்டும்!
  • "தமிழ்/தமிழன்" என்ற அரசியலை ரஜினி உடனடியாய் நிறுத்தவேண்டும்! இல்லை, இது தமிழர்கள் பற்றிய கதை! அதனால் தான்; "தமிழன்னா, எப்போதும் அடிமையாய் தான் இருக்கவேண்டுமா?! தமிழன் கோட்டு-சூட்டு போட்டு ஆளக்கூடாதா?!" மற்றும் "நான் ஆளப்பிறந்தவன் டா!" - போன்ற வசனங்கள் - என்று ரஜினியோ/வேறெவரோ தவறாய் வாதிடக்கூடாது! 1996-இல் இருந்து, (அதே வீரியத்தில் இல்லையெனினும்...)இன்றுவரை ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்! என்ற எதிர்பார்ப்பு இருப்பதை; அறியாவதவர் எவரும் இருக்கமுடியாது.
  • "இம்மாதிரியான வசனங்கள் - படத்திற்கு மட்டுமே பொருத்தமானது! அது வாழ்வியலுக்கு ஏற்றதல்ல!!" - என்ற புரிதல் இல்லாத/அதை உணரமுடியாத மக்கள் இன்னமும் இருக்கின்றனர். துரதிஷ்ட்டவசமானது எனினும், இன்னமும் அப்படி இருப்பர் பலர் என்பதே கசப்பான உண்மை. எப்படி, ரஜினியின் இம்மாதிரியான படத்தில் நடிக்கும் நிலைப்பாட்டை சரியென்றேனோ?! - அதே அடிப்படையில் - இம்மாதிரியான வசனங்கள் மிகப்பெரிய மோசடி.
  • "இவை போன்ற வசனங்கள் கூடாது!" என்று நிச்சயமாய் ரஜினியால் மறுக்கமுடியும்; ஏன், கட்டளையாய் கூட இடமுடியும்! அதை மீறும் தைரியம் இங்கே எந்த திரைப்பட நிர்வாகிக்கும் இல்லை! 
  • ரஜினியால் தான் அவர்கள்! அவர்களால் ரஜினி இல்லை!!
  • மேலும், இந்தத் திரைப்படத்தின் மையக்கரு - தமிழரில் ஒரு குறிப்பிட்ட இனத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு, ஒட்டுமொத்த தமிழர்களையே பொதுமைப் படுத்தும் படியான - மேற்குறிப்பிட்டது போன்ற வசனங்கள் தேவையே இல்லை! 
  • மாறாய், கதைக்கு ஏற்புடையதே எனினும் - ரஜினியிடம் இன்மும் இருக்கும் அந்த "அறியாமையான எதிர்பார்ப்பால்" - ரஜினி இவற்றை அறவே தவிர்க்கவேண்டும்.
  • அரசியலுக்கு வருவதும்/பொதுவாழ்வை ஏற்பதும் - அவற்றை மறுப்பதும்; ரஜினியின் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட/அவரை வற்புறுத்த - எவருக்கும் உரிமையில்லை! ஆனால், அப்படியோர் எதிர்பார்ப்பை - திரைப்படம் மூலம் விதைப்பது - சமுதாயக் குற்றம்! அதையும், ரஜினி தொடர்ந்து செய்துவருவது! - வேதனைக்குரியது. இதை, எவரேனும் அவரிடம் சென்று சேர்ப்பார்களா?! 
  • வியாபாரம் செய்ய/பணம் சம்பாதிக்க ஆயிரமாயிரம் வழிகள் உண்டு - அதில், இம்மாதிரியான போலியான/சமுதாயத்தை சிதைக்கும் விஷத்தன்மைகள் இருக்கக் கூடாது.
  • "இம்மாதிரியான காரணிகளால் தான் "என் உரிமைக்காக நீ என்னடா போராடுவது! நானே போராடிப் பெற்றுக்கொள்கிறேன்!!" - என்று ஒருவர் உணர்ச்சிபொங்க பேசி, அரசியல் செய்ய உந்தப்படுகிறார்" - என்பதை ரஜினி உணரவேண்டிய தருணம் இது. 
  • இதை ரஜினி உடனடியாய் நிறுத்தாவிட்டால்... தமிழ்/தமிழனை வைத்து - ரஜினி தந்தது திரைப்படங்கள் மூலம் "மறைமுக அரசியல்" செய்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையாகி விடும். ரஜினி என்றும் உன்னத ஆத்மாவுக்கு இந்தக் களங்கம் தேவையற்றது.

       சரி, கபாலி படத்தைப் - படம் பார்க்கலாமா? வேண்டாமா?? என்றால் - முன்பே சொல்லி இருப்பதுபோல்; இது நாம் அனைவரும் கொண்டாடப் படவேண்டிய படம்! நேற்று படம்  பார்த்தபோது, இந்த பதிவிற்கான குறிப்பெடுத்தலையும்/அதற்கான தொடர் சிந்தனைகளையும் - இணையாய் செய்தால் - படத்தைச் சரியாய் அனுபவித்துக் கொண்டாட முடியவில்லை. எனவே, இன்னுமோர் முறை, மீண்டும் திரையரங்கம் சென்று பார்ப்பேன்! அதன் பின்னர், சிலமுறை பதிவிறக்கம் செய்தும் பார்ப்பேன்; இது என் "வழக்கமான" நிலைப்பாடு. இந்தப் படத்தை, ஒவ்வொருவரும் நிச்சயம் ஒருமுறையேனும் பார்க்கவேண்டும்! - என்பது என் பார்வை.

நான் இரண்டாம் முறை பார்ப்பதற்கு, திடடமிடவேண்டும் என்பதால்;
உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்...

மகிழ்ச்சி!!!

2 கருத்துகள்: