திங்கள், ஆகஸ்ட் 10, 2015

தனக்குவமை இல்லாதான் (குறள் எண்: 0007)



          "தனக்குவமை இல்லாதான் என்ற 0007 குறளுக்கு" நேரடி விளக்கத்தைக் கொடுத்துவிட்டு வழக்கம்போல் "அதுபோல்..." என்ற என்னுடைய நிகர்-விளக்கமாய் "தன்-துறையில் ஒப்பற்று விளங்குபரைப் பின்தொடர்வோரைத் தவிர; மற்றெவரின் தோல்வியையும் தடுத்தல் கடினம்" என்று விளக்கி இருந்தேன். அதை எழுதும்போதே என்னுள் ஒரு நெருடல் இருந்தது; இருப்பினும் குறளின் நேரடி விளக்கத்திற்கு ஏற்றார்ப்போல் இருந்ததால் அப்படியே  வெளியிட்டுவிட்டேன். "குறளும் கோவை நட்பும்" குழுவிலிருந்து மீண்டும் கதிர்வேல் "அந்த நிகர்-விளக்கம் அவ்வளவு தெளிவாக இல்லை; ஏற்புடையதாயும் இல்லை! சரியான பொருள் அமையாதது போல் இருக்கிறது!!" என்று சொல்லிவிட்டு,  என் கருத்தை கேட்டிருந்தான். நான், எனக்கும் அப்படியொரு குழப்பம் இருந்தது; பார்த்துவிட்டு சரி செய்கிறேன் என்றிருந்தேன். எனக்கு, முதலில் இருந்த குழப்பம் "... தோல்வியையும் தடுத்தல் கடினம்" எனும் சொற்றொடர்தான். 

          ஏனெனில், அதில் மற்ற எல்லோரும் தோற்பர் என்ற எதிர்மறை பொருள் இருந்தது. அவன் கருத்தை கேட்டதும்  இன்னுமோர் கேள்வி பிறந்தது! "இறைவனுக்கு ஒப்பேதும் இல்லை" என்ற பெருந்தகையின் குறளுக்கு "நிகராய் ஒருவர்" இருப்பதான என் நிகர்-விளக்கம் கண்டிப்பாய் தவறென்பது புரிந்தது. பின் "தன்-துறையில் ஒப்பற்று விளங்குபவரைப் பின்தொடர்பவர்கள் செய்யும் செயல்களில்; தோல்விகள் அடைவதற்கான காரணங்கள் மிகக்குறைவு" என்று மாற்றினேன். எனக்கு இந்த மாற்றம் மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. அதையும் கதிர்வேலிடம் சொன்னேன்; இன்னும் திருப்தி இல்லை என்றிருக்கிறான். என்னளவில், எனக்கிருந்த குழப்பம் இதுவே என்பதால், மாற்றிய விளக்கம் சரியென  படுகிறது. பார்ப்போம்... கதிர்வேல் மேற்கொண்டு ஏற்புடையதாய் ஏதேனும் சொன்னால், தேவையான மாற்றம் செய்யப்படும். இம்மாதிரியான விமரசனத்தைத்தான் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். அவனிடம் சொன்னது போல்...

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" குறளுக்கு உதாரணம் அவன் செயல்!!!

பின்குறிப்பு: கதிர்வேல் பின்னர் கொடுத்த விளக்கத்தில், இந்த அதிகாரம் "கடவுள் வாழ்த்து" என்பதே இருப்பதால் - மற்றவர்களை வைத்து நிகர்-விளக்கம் கொடுப்பது சரியாய் இல்லை. நான் நம் பொதுமறையின் பொதுவுடமையை சொல்லி; கடவுள்-மறுப்பாளர்களுக்கும் பெருந்தகையின் குறள் பயனுள்ளதாய் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்படி விளக்கினேன் என்று சொன்னேன். மேலும், திரு. கருணாநிதி அவர்கள் தம் விளக்கவுரையில்; நேரடியான அர்த்தத்தில் கூட கடவுள் என்ற சொல்லை வெகு-அரிதாகவே பயன்படுத்தி இருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக