வியாழன், ஆகஸ்ட் 27, 2015

சாலுங் கரி (குறள் எண்: 0025)...



       "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு" என்ற குறள் எண் 0025-இற்கான விளக்கவுரையைப் படித்திருப்பீர்கள். அதில் "சாலுங் கரி" என்றொரு சொற்றொடர் - இறுதியில் வரும். அதைப் படித்ததும்; அதன் பொருளைத் தேடும்போது ஒரு அருமையான விளக்கம் எனக்கு கிடைத்தது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. இச்சொற்றொடரில் "சாலும்" என்பதற்கு "அமையும்" என்று பொருள்; ஆகும்/கொள்ளும் என்றும் பொருள் படும். தகைசால் என்றொரு வார்த்தை நமக்கு தெரியும். நான் என்னப்பனுக்கு கடிதம் எழுதும்பொதெல்லாம் "தகைசால் தந்தைக்கு" என்றுதான் ஆரம்பிப்பேன்.  இங்கு, தகை என்றால் பண்பு; எனவே தகைசால் என்பது "சிறந்த பண்பு கொண்ட" என்ற பொருளில் வருகிறது. ஆம்! பல பதிவுகளில் வெளிப்படுத்தி இருக்கும் வண்ணம்; என்னப்பன் அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். அந்த பொருளில்தான் "பெருந்தகை" என்று அய்யன் வள்ளுவனை அழைக்கிறோம். அதற்கு...

             பெரும்-பண்பு கொண்டவர்; மாண்புமிகு பண்புடையார் - என்றெல்லாம் பொருள் படும். "கரி" என்பதற்கு என்ன பொருள் என்று தேடும்போது "சான்று" என்று இருந்தது. என்னப்பனிடம் விளக்கம் கேட்கலாமா?! என்றெண்ணி; பின் நானே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது, ஒன்று புலபட்டது; நம் எல்லோருக்கும் அடுப்புக்"கரி" என்றால் என்னவென்று தெரியும். அது நினைவுக்கு வந்தது; ஏன் அது கரி என்றானது என்று யோசித்தேன்! முதலில், அது என்ன? என்ற கேள்வி எழுந்தது; ஒரு விறகு எறிந்த பின் எஞ்சுவது என்று பதில் வந்தது. பின், ஏன் "சான்று" எனவும் சொல்லப்பட்டது? என்று யோசிக்க பின்வருவது விளங்கியது: அதாவது, முன்பிருந்த விறகு இப்போதில்லை! ஆனால், இருந்த விறகு எரிந்து முடிந்துவிட்டது என்பதற்கு சான்றாக இருப்பதால் - அது "கரி" எனப்பட்டது என்ற விளக்கம் கிடைத்தது. எனவே கரி = சான்று! அட... அட... அட...! நம் பெருந்தகை; என்னை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறார்?!

என் பணியே ஆராய்ச்சி என்பதால்; இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக