CSK என உச்சரிக்கும் போது தமிழ் பேசும் இந்தியர்களுக்கு வரும் அந்த உணர்வுபூர்வமான பரவசம் எனக்கு ஏற்படுவதில்லை. ஐ.பி.எல். துவங்கியதில் இருந்தே அதே நிலைப்பாடு தான் இருந்து வருகிறது. அந்த அணியில் ஆடும் அத்தனை பேருமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதே என்னுடைய நிலைப்பாட்டுக்கு காரணம். மேலுள்ள கருத்து படத்தில் சொல்லி இருப்பது போல், ஓரிரு ஆட்டக்கரர்களைத் தவிர, மற்றவர்களை "The pride of Chennai"-யாய் பார்க்க முடியவில்லை; அதானால் தான், கருத்துப்படம் கூட வீரர் எவரும் இல்லாமல் பொதுவாய் இருக்குமாறு செய்தேன். இது மொழி சார்ந்த வேறுபாடு இல்லை; என்னையே நான் தமிழ்-பேசும் இந்தியன் என்றுதான் "தமிழ் வளர" என்ற விருத்தப்பாவில் கூறியது போல் வரையறுப்பேன். தமிழ் மேல் எனக்கு பெரும் காதல் இருந்தும்; அந்த உணர்வு என்றுமே வெறி-உணர்ச்சியாய் மாறியதில்லை. எனக்கும் "தமிழ் தெரியுமாடா!" என்ற கர்வமும், இறுமாப்பும் எப்போதும் உண்டு.
ஆனால், அது என் மனதோடு சம்பந்தப்பட்ட விசயம். மற்ற மொழி பேசுவோர் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் எப்போதும் இருந்ததில்லை. நான் இங்கே சொல்ல முனைவது மொழி சார்ந்து அல்ல! சென்னை அணி என்று சொன்னால் - அதில் சென்னை மற்றும் தமிழகத்தைச் சார்ந்தோர் மட்டும் இடம்பெறவேண்டும்; இல்லையேல், அந்த அணியின் உரிமையாளர் பெயரில் "---- சிமெண்ட் கிங்க்ஸ்" என்று வைத்துக் கொள்ளட்டும். அந்த அணியைத் தமிழோடோ/தமிழகத்தோடோ தொடர்புப் படுத்தவேண்டாம். ஆனால், சென்னை என்று வைத்துக்கொண்டு அதில் ஓரிரு ஆட்டக்கார்கள் தவிர மற்ற எவரும் தமிழகத்தோடு தொடர்பு இல்லாதவர்கள்; என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டவர்கள் ஆடுவதைப் பற்றி எந்த குற்றச்சாட்டும் இல்லை; ஏனெனில், வெளிநாட்டவர்க்கு என்று ஒரு ஒதுக்கீடு உள்ளது; அதில் அவர்கள் மட்டும் தான் ஆடமுடியும். எனவே, அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.
அணியில் ஆடும் மற்ற 7 பேர்களைப் பற்றியும்; அந்த குழுவில் இடம்பெறும் மற்ற நபர்கள் குறித்துதான் என் வாதம். ஏன் தமிழகத்தில் ஆட்டக்காரர்களே இல்லையா?! கண்டிப்பாக அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆடினால், வெற்றி பெறுவது இமாலய இலக்காய் இருக்கும் என்பதில்; எனக்கு(ம்) எந்த ஐயமும் இல்லை. ஆனால், அவர்களைத் தொடர்ந்து ஆடவைத்தால் கண்டிப்பாக அவர்கள் வெற்றி பெரும் விதத்தில் வளர்வர். அப்படிப் பார்த்தால், ஏதாவது ஒரு அணி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெறவேண்டும் அல்லவா? ஆனால், நடைமுறை வேறு. CSK-வின் அணித்தலைவர், இந்திய அணியின் தலைவரும் கூட என்பதால் மட்டும் அந்த அணியை நான் ஆதரிக்க முடியுமா? அப்படி பார்த்தால், மற்ற அணியில் விளையாடுவோரும் இந்திய அணி வீரர்களே! அவர்களை நான் எப்படி எதிர்த்து புறம்-தள்ள முடியும்? இந்திய அணி ஒரு சாதாரண நாட்டு அணியோடு விளையாடும்போது கூட; பெருத்த எதிர்பார்ப்போடு/ஆரவாரத்தோடு ...
பார்ப்பவன் நான். ஆனால், CSK வை குறைந்த அளவு ஆரவாரத்தோடும் என்னால் ஆதரித்து பார்க்க முடிவதில்லை. மற்ற ஐ.பி.எல். அணிகள் எதையும் கூட என்னால் ஆதரிக்க முடியாது; நான் தனித்து நின்று பொதுமையில், எல்லா அணிகளையும் இரசிக்கவே விரும்புகிறேன். சிறிதளவு ஆர்வம் வேண்டுமானால் சச்சின் விளையாடிய வரை அந்த அணியின் பால் இருந்தது; அவரின் திறமைக்காக மட்டுமல்ல! அவர் சார்ந்த மொழி/மாநிலத்தின் பால் அவருக்கு இருந்த பற்றுக்காக! அவர் நினைத்திருந்தால், எந்த அணியிலும் விளையாடி இருக்க முடியும். ஆனால், மும்பை தவிர மற்ற அணிக்கு விளையாட நினைத்தது கூட இல்லை. அதுபோலத்தான் CSK-விலும் தமிழகத்தைச் சேர்ந்தோர் மட்டுமே விளையாட வேண்டும் என்ற என் வாதமும். அப்படி நடந்தால், தமிழகத்தில் உள்ள பல இளம் வீரர்களை நாம் அடையாளம் காண முடியும். திறமை இருந்தும் இதுபோன்ற தளங்களில் தம்மை வெளிக்காட்ட முடியாத பல வீரர்களை; இப்படிப்பட்ட வாய்ப்புகள் நமக்கு...
அடையாளம் காட்டும்! அவர்களை இனம்கண்டு மென்மேலும் மெருகேற்றி இந்திய அணியில் இடம்பெறச் செய்ய முடியும். அப்படி ஒரு வெளிப்பாடான நிலை வந்துவிட்டால் சமீபத்தில் ஒரு தமிழ் திரைப்படத்தில் சுட்டிக்காட்டிய வண்ணம்; ஒரே-இனத்தைச் சார்ந்தவர்களை மட்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யும் முறைகேடும் ஒழிக்கப்படும். உடனே, CSK அணியிலும் அப்படியே இனம் சார்ந்து தேர்வு செய்யப்பட்டால் என்ன செய்வது? என்ற வாதம் வரலாம். அப்படி எளிதில் செய்ய முடியாது; இந்திய அளவில் வேண்டுமானால் அப்படி இனம் சார்ந்து நடப்பது நம்மில் பலருக்கு தெரியாது போகலாம். ஆனால், ஒரு மாநில அளவில் அப்படி எளிதில் செய்ய முடியாது; அப்படி நடந்தால்; நம் மாநிலத்தில் இருக்கும் ஜாதிய-கட்சிகளை நாடலாம். அவர்கள் - குறைந்த பட்சம் அவர்களின் ஆதாயம் கருதியாவது - அதை எதிர்த்து போராடுவர். ஆனால், நடைமுறையில் அப்படி செய்வது சாத்தியம் இல்லை! ஏனெனில், சக தமிழக வீர்கள்...
அது பற்றி வெளியே எளிதில் பேசி அடையாளம் காட்டிடுவர்! இங்கே எனக்கு மற்றுமோர் ஆற்றாமை உண்டு. "தாங்கள் மட்டும்தான் தமிழர்கள்; தங்களுக்கு மட்டும் தான் தமிழைக் காக்கும் திறன் உள்ளது" என்ற அளவில் ஈன-அரசியல் செய்யும் சில அரசியல் கட்சிகள் ஏன் இன்னும் CSK அணியில் முழுக்க/முழுக்க தமிழ் பேசும் இந்திய வீரர்கள் இல்லை, என்று போராடவில்லை?! ஒருவேளை, இதில் அதிக அரசியல் ஆதாயம் இல்லையோ! அல்லது, இதை எதிர்த்தால் கிரிக்கெட்-இரசிகர்கள் கொந்தளிப்பார்கள் என்றும் பின்வாங்கி விட்டனரா? எவர் தட்டிக் கேட்காவிட்டால் என்ன? என்னால், எவரையும் தட்டிக் கேட்க முடியாது! ஆனால், என் எண்ண ஓட்டத்தை வெகு சிலரிடமாவது கொண்டு சேர்க்க முடியும். அப்படி பலரையும் சேர்ந்திட்டின் - தமிழகத்தில் உள்ள பல இளம் வீரர்களுக்கு தங்களின் திறமையை மெருகேற்ற சரியான வாய்ப்புகள் கிடைத்து; தேசிய அணி அளவில் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்திட, வாய்ப்பு கிடைக்கும். பார்ப்போம்...
எப்போது, CSK தமிழக வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க போகிறதென்று!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக