புதன், ஆகஸ்ட் 12, 2015

அதிகாரம் 001: கடவுள் வாழ்த்து (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 01 - பாயிரவியல்;  அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து

0001.  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
           பகவன் முதற்றே உலகு                          

           மொழியைப் புரிந்துகொள்ள எழுத்துகளை அறிதலும்; உலகைப் புரிந்துகொள்ள கடவுளை
           அறிதலும் - முதன்மையாம்.
(அது போல்...)
           உணர்வைப் புரிந்துகொள்ள, மனிதத்தை அறிதலும்; உறவைப் புரிந்துகொள்ள பெற்றோரை
           அறிதலும் - முதன்மையாம்.

0002.  கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
           நற்றாள் தொழாஅர் எனின்

           பகுத்தறிவின் மூலமானவனின் (கடவுளின்) நற்பாதங்களை தொழாத; ஒருவர் கற்றதனால்
           விளையும் பயன் என்ன?
(அது போல்...)
           பிறப்பின் மூலமானவர்களின் (பெற்றோர்) பொற்பாதங்களைத் தொழாத; ஒருவர் பிறந்ததால்
           அடையும் பயன் என்ன??

0003.  மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
           நிலமிசை நீடுவாழ் வார் 

           மலரின்-மீதே நடந்தவனின் (கடவுளின்) மாட்சிமையான பாதங்களை அடைந்தோர்;
           இப்புவியில் "சாகா வரம்" பெற்று நீடித்து வாழ்வர்.
(அது போல்...)
           உண்மையின்-மீதே பயணித்தவரின் உன்னதமான வழிகாட்டுதலைப் பெற்றோர்; செயல்களில்
           "தோல்வியில்லா வரம்" பெற்று வெற்றிவாகை சூடுவர்.

0004.  வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
           யாண்டும் இடும்பை இல 

           வேண்டுமென்பதும் வேண்டாமென்பதும், இல்லாதவனின் (கடவுளின்) பாதம் சேர்ந்தவர்க்கு;
           எதுவுமே துன்பம் இல்லை.
(அது போல்...)
           சரியென்பதும் சரியில்லையென்பதும், சமமென அணுகும் குருவைக் கொண்டிருப்போர்க்கு;
           எதுவும் குழப்பம் விளைவிக்காது.

0005.  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
           பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

           இறைவனின் பகுத்தறிவைப், பெருமையுடன் புகழ்ந்து பரப்புவோரை; "எது அறம்? எது
           அறமல்ல?" போன்ற இருவினை குழப்ப-இருள் சூழாது.
(அது போல்...)
           சான்றோரின் மெய்யறிவை, உண்மையுடன் பணிந்து தொடர்வோரை; "மின்னுவது
           பொன்னா? இல்லையா??" போன்ற சந்தேக-இருள் சூழாது.

0006.  பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
           நெறிநின்றார் நீடுவாழ் வார்  

           ஐம்புலன்களையும் பன்படுத்தியவனின் (இறைவனின்), பொய்தீர்த்த ஒழுக்கவழி பயணிப்போர்;
           நிலைத்து வாழ்வர்.
(அது போல்...)
           ஐநிலங்களையும் உணர்ந்தவரின் (மண்-ஆய்வாளர்), அறிவார்த்த ஆலோசனையைப்
           பின்பற்றினால்; விவசாயம் நிலைத்திடும்.

0007.  தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
           மனக்கவலை மாற்றல் அரிது

           தனக்கு ஒப்பெதுவும் இல்லாதவனின் (இறைவனின்) பாதம் பணிந்தவர்கள் தவிர்த்து;
           மற்றோரின் மனக்கவலையை மாற்றுதல் கடினம்.
(அது போல்...)
           தன்-துறையில் ஒப்பற்று விளங்குபவரின் (சாதனையாளரின்) திறமையை உள்வாங்கியோர்
           தவிர்த்து; மற்றவரின் பணித்திறன் "உச்சம்-தொடல்" எளிதல்ல.

0008.  அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
           பிறவாழி நீந்தல் அரிது

           கடலளவு அறநெறிக் கொண்டவனைப் (இறைவனைப்) பின்பற்றுவோர் தவிர்த்து; மற்றவர்
           இன்னபிற நெறிக்கடல்களை நீந்திக்கடத்தல் கடினம்.
                                                               (அது போல்...)
           "ஒருவனுக்கு ஒரு-மாது" என்பதைத் தவம்போல் கடைபிடிப்போரைப் பின்தொடர்வோர்க்கு;
           மது/சூது என்ற இரண்டையும் கடந்து செல்வது சிரமமன்று.

0009.  கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
           தாளை வணங்காத் தலை
         
           எட்டு-சீர்மிகு குணங்களைக் கொண்டவனின் (இறைவனின்) பாதத்தை வணங்காதவன்
           தலை; சரியாய் உபயோகிக்கப்படாத புலன்களைப் போன்றது.
(அது போல்...)
           எட்டு-திசையில் வெற்றிகளைக் குவித்தவரின் (மன்னர்கள்) வரலாற்றை அறியாதோரின்
           பிறப்பு; முழுமையாய் முடிக்கப்படாத ஓவியங்களைப் போன்றது.

0010.  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
           இறைவன் அடி சேராதார்

           இறைவனின் பாதம் பணிந்தவரே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து, அடுத்த நிலை
           சேர்வர்; மற்றவர் பிறவியிலேயே நீந்திக்கொண்டிருப்பர்.
(அது போல்...)
           சரியான பாதையைப் பின்பற்றுவோரின் புகழ் மட்டுமே எல்லைகள் கடந்து பல நாடுகளிலும்
           எதிரொலிக்கும்; மற்றவரின் புகழ் சிறு-தெருவோடு உழன்றுகொண்டிருக்கும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக