வியாழன், ஆகஸ்ட் 20, 2015

பயணத்தில் கொடியது... விமானப்பயணம்!!!



      தலைப்பைப் பார்த்தவுடன் எதைப்பற்றி எழுதப்போகிறேன் என்பது தெரிந்திருக்கும். ஆம்! விமானப்பயணம் எத்தனை கொடியது என்பதை என் பார்வையில் விளக்கவே இத்தலையங்கம். பெரும்பாலானோர், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பல சுகங்களை அனுபவிப்பதாய் கருதுவர். உண்மையில், குடும்பத்தோடு இருப்பவர்கள் தவிர்த்து, என்போன்று தனிமையில் இருப்போர்க்கு "பணம், அதிகமாய் கிடைக்கிறது என்ற ஒன்றைத்தவிர" வேறொன்றும் பெரிதாய் இல்லை. அதைக்கூட சுகமென்று நான் கருதுவதில்லை! என்னுடைய தேவையும்; பொருளாதாரக் குறைபாடு காரணமாய், என்னுடைய நாளைய தலைமுறை வெளிநாடுகளுக்கு சென்று அவதிப்படக்கூடாது என்ற முனைப்பாடும் தான் - முக்கிய காரணிகள். இதைத் தவிர்த்து பார்த்தால், என்னைப்போல் இங்கே இருப்பவர்களில் பெரும்பான்மையோருக்கு வேறெந்த விசயமும்/சுகமும் இல்லை. என் பெற்றோர்களை உடனிருந்து கவனிக்க முடியாத கலக்கத்தில் துவங்கி; என்மகளை...

           தினந்தோறும் பள்ளிக்கு கொண்டுசென்று விடமுடியாத ஏக்கம் வரை, பட்டியல் மிக நீண்டது. அந்த பட்டியலுக்கும் அப்பார்ப்பட்டு இருக்கும் கொடிய அனுபவம்தான் விமானப்பயணம். பலருக்கும், விமானப்பயணம் என்றால் பேர் சொகுசானப் பயணம் என்ற கற்பனையே இருக்கும். அதில் அடிக்கடி பயணம் செய்வோர்க்குத் தெரியும், அது எவ்வளவு கொடிய பயணம் என்று! ஆம், விமானப் பயணம் போல் மிக-பாதுகாப்பான பயணமும் ஏதுமில்லை; அதைப்போன்று மிக-ஆபத்தான பயணமும் ஏதுமில்லை. இப்படித்தான் நான் பலரிடமும் விமானப் பயணத்தை வரையறுப்பேன். நேற்று கூட ஆய்வக-நட்புகளிடம் இதுசார்ந்து பேசியபோது அதையே குறிப்பிட்டேன்; அவர்களும் அதை வெகுவாய் ஆதரித்தனர். அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்ளும் பலரும் அதை ஆதரிப்பர்; அதுதான் உண்மையும் கூட. ஒன்று, சேரவேண்டிய இலக்கை முழுமையாக சென்றடைவோம்! இல்லையேல், எந்த தடமும் இல்லாமல் அழிக்கப்படுவோம். இதற்கு, சென்ற வாரம் நிகழ்ந்த...

        இந்தோனேசியா விமான விபத்து வரை பல ஆதாரங்கள் உள்ளன.  சமீபத்திய மலேசிய விமானம் போல், மர்மமான முறையில் மாயமான விமானங்களே பலவுண்டு! ஒவ்வொரு முறை விமானம் மேலேறும்போது இறைவனைத் தொழுவதற்கும், கீழே இறங்கிய பின் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நான் தவறியதே இல்லை. இறைவன் காப்பற்றுகிரா? என்ற குதர்க்கம் வேண்டாம்; நான் அப்படி நம்புகிறேன், அவ்வளவே. அதிலும், சமீப காலமாய் "எத்திஹாட்"விமான சேவையில் விமானம் கிளம்பும் முன் "இறைவனைத் தொழுவதை" ஒலிபரப்பு செய்கின்றனர்; எனக்கு அந்த மொழியில் எதுவும் தெரியாது எனினும், அந்த நேரத்தில் மனமுருக வேண்டுவேன் - அல்லாவையும் சேர்த்தே! உண்மையில், நான் அதிகம் வேண்டுவது - இங்கிருந்து கிளம்பி போகும் போது தான். அதற்கு முழுக்காரணம் என்மகளைப் பார்க்காமல் நான் இறந்துவிடக்கூடாது என்ற ஆசைதான். என்வரவை எதிர்நோக்கிக்  காத்திருக்கும் அவளை ஏமாற்றிவிடக்கூடாது...

    என்ற வைராக்கியம்; அவளுக்காக வாங்கியவற்றைக் கொடுத்து, அவள் சந்தோசத்தை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை. அதனால், இந்தியாவுக்கு செல்லும்போது என்னுடைய வேண்டுதல் மிகப்பலமாக இருக்கும். வரும்போது, அவளுடன் இருந்த சந்தோசத்-திமிரால் வேண்டுதல் பெரியதாய் இருக்காது. இருப்பினும், அவளுக்கு 20 அகவை ஆகும் வரையாவது உயிரோடு இருக்கவேண்டும் என்ற ஆசையுண்டு. என் அம்மா - எனக்கு திருமணம் ஆக தாமதமாகிக் கொண்டிருந்த போது - "உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துட்டா போதும்டா!" என்று சொல்வதைக் கேட்டு அவரைக் கேலி செய்திருக்கிறேன். பின்னர் "உனக்கு ஒரு புள்ளை பொறந்து; அதை தூக்கி கொஞ்சிட்டு அதற்கப்புறம் போனாப் பரவாயில்லை!" எனும்போது அதிகமாய் கேலி செய்வேன். இப்போது "அவ வயசுக்கு வந்து தண்ணி ஊத்தறத பார்க்கணும்டா!" என்பார். ஆனால், இப்போதெல்லாம் அவரைக் கேலி செய்வதே இல்லை! ஏனெனில், நானே அதைத்தானே...

          செய்து கொண்டிருக்கிறேன்?! நிச்சயமாக, 20 அகவை கழிந்த பின், அவளின் திருமணம் வரை இருக்கவேண்டும்! என்று எனக்கும் தோன்றும். வாழும் ஆசையையும் தாண்டி - ஒவ்வொரு பெற்றோரும் (குறிப்பாய் தாய்க்கு) - தம் பிள்ளைகளுக்கு தாமே உடனிருந்து எல்லாமும் செய்ய ஆசைப்படுவதே அதன் மூலம். இது தவிர்க்கமுடியாதது; சச்சின் ரன்-குவிப்பை செய்யும்போது முதலில் ஒரு இலக்கை அடைந்து பின்னர் அடுத்தது - பின் அதற்கடுத்தது என்று கடக்க வேண்டும் என்பாரே; அது போன்ற ஒரு நிலைப்பாடு! ஒவ்வொரு இலக்காய் அடைய தொடர்ந்து எதிர்பார்த்து ஆசைப்படுவோம். எதிர்பார்ப்பு மட்டுமே நம்மிடம் உள்ளது! முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை எல்லாம், ஒவ்வொரு விமானப்பயனமும் தகர்த்துவிடுமோ?! என்ற பரிதவிப்பு ஒவ்வொரு முறையும் இருக்கும். சாலையில் கூட விபத்து ஏற்படும்; நடந்து செல்வோர் கூட அடிபட்டு இறப்பதுண்டு என்று வாதிக்கலாம்!

       நானும், அப்படி வாதிப்பவன்தான்; ஆனால், அவற்றில் "பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள்" அதிகம். ஆனால், விமானப்பயணத்தில் "ஒன்று கரணம்! இல்லையேல் மரணம்!!"; அதைத்தான் மேலே "மிக-பாதுகாப்பானதும்/மிக-ஆபத்தானதும்!" என்றேன். பயணம் பாதுகாப்பாய் முடியும் வரை, பயணிப்பரின் குடும்ப உறுப்பினர்கள் (மிக முக்கியமாய், ஒருவரின் தாய்/இல்லறத்-துணை) அடையும் வேதனையை/ஓய்வின்மையை சொல்லில் விவரிக்க முடியாது. இவையனைத்தையும் உணர்ந்து தான் கொடிய-பயணம் என்கிறேன். மேலுள்ள கருத்துப்படத்தில் உள்ளது போல், விமானப் பயணம் நடைமுறைக்கு வந்தால், எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?! ம்ம்ம்.... எல்லாவற்றையும் மீறி விமானப் பயணத்தை மேற்கொண்டு தான் ஆகவேண்டும். வரும் நவம்பர் இறுதியில் அமெரிக்கா செல்லவேண்டும்; தொடர்ந்த 17-மணி நேரப் பயணம். பின் இன்னொரு சிறிய பயணம். இதுவரை 10 மணிக்கு மேல் தொடர்ந்து பயணித்தது இல்லை. அந்தப் பயணத்தை நினைத்து, இப்போதே...

என்மனம் பீதியடைகிறது! ஆனால், வாழ்க்கையை வாழ்ந்துதானே ஆகவேண்டும்??!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக