செவ்வாய், ஜனவரி 19, 2016

அதிகாரம் 017: அழுக்காறாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 017 - அழுக்காறாமை

0161.  ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
           அழுக்காறு இலாத இயல்பு

           விழியப்பன் விளக்கம்: தன் நெஞ்சத்தில் வஞ்சம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாத 
           தன்மையையே; ஒருவர் ஒழுக்கத்தின் நெறியாக உணரவேண்டும்.
(அது போல்...)
           தன் செயல்களில் ஊழல் போன்ற அறமற்ற காரணிகள் இல்லாத சுயத்தையே; ஒருவர் 
           தலைமையின் முதன்மையாய் பழகவேண்டும்.

0162.  விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
           அழுக்காற்றின் அன்மை பெறின்

           விழியப்பன் விளக்கம்: பிறர் உடைமைகளில் பொறாமைப்படும், தீய எண்ணத்திலிருந்து 
           விலகியிருக்கும் தன்மையிருப்பின்; அதற்கிணையான பேறு ஏமில்லை.
(அது போல்...)
           பிறர் நம்பிக்கையை அவமதிக்கும், நெறியற்ற செயலிலிருந்து விடுபடும் முனைப்பிருப்பின்; 
           அதையொத்த ம(னி/த)ம் ஏதுமில்லை.

0163.  அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
           பேணாது அழுக்கறுப் பான்

           விழியப்பன் விளக்கம்: அறத்தன்மையால் விளையும் பேறுகளை வேண்டாமென்பவர்; 
           பிறரின் பேறுகளைக் கண்டு மகிழாது, பொறாமை கொள்வர்.
(அது போல்...)
           மனிதத்தால் உருவாகும் நன்மைகளை உணராதவர்; பிறரின் நன்மைகளை வியந்து 
           பாராட்டாமல், புரளி பேசுவர்.

0164.  அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
           ஏதம் படுபாக்கு அறிந்து

           விழியப்பன் விளக்கம்: தீய-எண்ணங்கள் விளைவிக்கும், துன்பங்களை நன்குணர்ந்தோர்;  
           பொறாமையின் வெளிப்பாடாய், அறமற்ற செயல்களை செய்யாமாட்டார்கள்.
(அது போல்...)
           தியானம் உயிர்ப்பிக்கும், அமைதியை ஆழ-அனுபவித்தோர்; உணர்ச்சி மிகுதியால், 
           தரம்குறைந்த வார்த்தைகளை பேசமாட்டார்கள்.
          
0165.  அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
           வழுக்காயும் கேடீன் பது

           விழியப்பன் விளக்கம்: பொறாமை உடையோர்க்கு, அதுவொன்றே போதுமானது; பகைவர் 
           செய்யத் தவறிய தீமையையும், அப்பொறாமையே செய்துவிடும்.
(அது போல்...)
           புரளி பேசுவோர்க்கு, அதுவொன்றே போதுமானது; மற்றவர் சிதைக்க மறந்த 
           அமைதியையும், அப்புரளியே குலைத்துவிடும்.

0166.  கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
           உண்பதூஉம் இன்றிக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: பிறருக்கு கொடுக்கப்படுவதைப் பார்த்து, பொறாமைப்படுபவர்
           மட்டுமல்ல; அவரைச் சார்ந்தோரும், உடையும்/உணவும் இன்றி தவிப்பர்.
(அது போல்...)
           பிறரின் நிறையைப் புரளியாய், விமர்சிப்பவர் மட்டுமல்ல; அப்புரளியில் பங்கேற்போரும்,
           நித்திரையும்/நிம்மதியும் இன்றி உழல்வர்.

0167.  அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
           தவ்வையைக் காட்டி விடும்

           விழியப்பன் விளக்கம்: பிறர்மேல் பொறாமை கொள்வோரை வெறுத்து; தன் தமக்கை 
           மூதேவியை சேர்த்துவிட்டு, திருமகள் விலகிவிடுவாள்.
(அது போல்...)
           பிறர் நம்பிக்கையை விமர்சிப்போரை புறக்கணித்து; மனிதகுலத்தின் ஆதியான மிருக-
           தன்மையை விட்டுவிட்டு, மனிதம் விலகிவிடும்.

0168.  அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
           தீயுழி உய்த்து விடும்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை எனப்படும் இணையற்ற தீயொழுக்கம்; எல்லாச் 
           செல்வங்களையும் அழித்து, ஒருவரை நரகத்தில் சேர்க்கும்.
(அது போல்...)
           நேர-விரயம் எனப்படும் முறையற்ற தீப்பழக்கம்; எல்லாத் திறமைகளையும் மறைத்து, 
           ஒருவரை வாழ்வியலில் தாழ்த்தும்.

0169.  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
           கேடும் நினைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை குணம் கொண்டோரின் உயர்வு மற்றும் 
           பொறாமையின்றி உண்மையாய் இருப்போரின் தாழ்வு - இரண்டும் ஆய்வுக்கு உட்படும்.
(அது போல்...)
           ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் வெற்றி மற்றும் ஊழலற்ற நேர்மையான 
           அரசியல்வாதிகளின் தோல்வி - இரண்டும் பரிசீலனைக்கு உள்ளாகும்.

0170.  அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
           பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

           விழியப்பன் விளக்கம்: பொறாமை கொண்டோர், வளம் பெருகி உயர்ந்ததும் இல்லை; 
           பொறாமை இல்லாதோர், வளம் குன்றி தாழ்ந்ததும் இல்லை.
(அது போல்...)
           சோம்பல் இருப்போர், வலிமை மிகுந்து சாதித்ததும் இல்லை; சோம்பல் இல்லாதோர், 
           வலிமை இழந்து தோற்றதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக