முதன்முதலில் "பாலா"வின் திரைப்படத்திற்கு என் பார்வையைப் பதியும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. "பரதேசி" வெளியான நேரத்தில் திரைப்படங்களைப் பற்றி என் வலைப்பதிவில் எந்த பதிவும் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்ததால் - எழுதமுடியவில்லை. பின்னர் தான், திரைப்படத்தைப் பற்றியும் என் தேடலின் அடிப்படையாகக் கொண்டு என் பார்வையைப் பதியமுடியும் என்ற நம்பிக்கை எழுந்தது. "தாரை தப்பட்டையை" பற்றிய என் பார்வை கீழே:
பாலாவின் பாத்திரப் படைப்பு:
- முதலில் "சூறாவளி" என்ற பெண்ணின் பாத்திரப் படைப்பு (வரலட்சுமி சரத்குமார்). தமிழ் திரையுலக வரலாற்றில்; இம்மாதிரியான, ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தைப் பார்ப்பது "மிக மிக" அபூர்வம். (எனக்கு தெரிந்த அளவில்) பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், பார்த்திபன் போன்ற இயக்குனர் வரிசையில் தொடர்ந்து ஒரு பெண்ணின் (கதையின் நாயகி) பாத்திரப் படைப்பை "மரியாதைக்குரியதாய்" படைப்பதில் பாலாவும் ஒருவர். அதிலும், இப்போதைய காலகட்டத்தில் பெண்ணை (கதையின் நாயகி) "சதைப்பிண்டமாய்" மட்டுமே காட்டும்/உபயோகிக்கும் திரைப்படங்களே - பெரும்பான்மையில்! இம்மாதிரியான பாத்திரப் படைப்புகளைக் காண்பது மிக அபூர்வம். இடையிடையே "ராஜா ராணி (2013)" போன்ற அபூர்வங்களும் (என் பார்வையைப் பதிந்த முதல் திரைப்படம்) நிகழ்வதுண்டு.
- கரகாட்டக்காரி என்ற கதாபாத்திரத்தை "ஆபாசமாய்" காட்டுவதையே பலரும் செய்திருப்பர். நிஜ-வாழ்க்கையில் கரகாட்டம் என்ற "போர்வையில்" ஆபாசங்கள் நடைபெறுவதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் "ஆடை குறைந்தே" இருப்பினும், பாலா, அதில் ஆபாசத்தை திணிக்கவில்லை. பாலாவிற்கு தன் கதையின் மேல் மிகுந்த நம்பிக்கை இருப்பது - காட்சி அமைப்பில் தெரிகிறது. அதே நேரம் "இரட்டை வர்த்த" வசனங்கள் கொண்ட நிஜத்தில் நடைபெறும் கரகாட்டத்தையும் "தோல் உரித்து" காட்ட தயங்கவோ/மறுக்கவோ இல்லை பாலா. ஆனால், அதையும் தனக்கே உரித்தான பாணியில் "சுருங்க சொல்லி - ஆனால் பசுமரத்தாணியாய்" பதிந்திருக்கிறார்.
- சூறாவளி: பெயருக்கு ஏற்ற கதாப்பாத்திரம். ஆடுபவளின் ஆடையை உரித்து பார்க்க விரும்பும் ஒரு கயவனைக் கண்டு உண்மையில் "சூறாவளி"யாய் மாறியிருக்கிறார். அதேசமயம், ஒரு பெண்ணிற்கே உரித்தான இயல்புடன் "மாமா! மாமா!" என்ற அன்பு-மொழியோடு "இயல்பான காதலை" வெளிப்படுத்தவும் தவறவில்லை. "தேவ--ளா" சாகறத விட, இது எவ்வளவோ தேவலாம்! என்று சொல்லும் வரை - சூறாவளி - பல வேகத்தில் சுழன்று இருக்கிறாள்.
- மாமா: பல ஆண்களும் தம்-இணை, தன்னை அழைக்க விரும்பிடும் மந்திரச்சொல்! நவீனம் என்ற மாயையில் - நாம் இழந்த "இயல்பான வாழ்வியலில்" இந்த மந்திரச் சொல்லும் ஒன்று. ஆம் "மாமா" என்பது பட்டிக்காடு என்பதாகி விட்டது; ஏன், பட்டிக்காட்டிலும், இப்போது கேட்பது அபூர்வமாய் தான் இருக்கிறது. அதேபோல், பல பெண்கள் அப்படி அழைக்க நினைத்தாலும் - அதை மறுக்கும் ஆண்கள் மறுபக்கம். மொத்தத்தில், இந்த மந்திரச்சொல் - அபூர்வமாகி விட்டது. "மாமா" என்றழைக்கும் போது "சூறாவளி - இனிய தென்றல் ஆகிறாள்".
- என் மாமாவுக்கு பசிக்குதுன்னா - நான் நிர்வாணமா கூட ஆடுவேன்! முதல்ல என் மாமாவுக்கு சாப்பாடு வாங்கி கொடு - இது வெறும் வசனம் அல்ல! ஒரு இயல்பான/உயிர்ப்பான காதலின் "உன்னத வெளிப்பாடு".
- நல்ல நண்பன் என்ற சொல்லுக்கும்/பாத்திரத்துக்கும் நான் ஒருவன் தான் "காப்பி ரைட்" என்பதாய் பல படங்களில் (போராளி தவிர) "நண்பனாய்" நம்மை கொன்ற சசிக்கு - வெகுநிச்சயமாய் "சந்நியாசி" அருமையான பாத்திரம். உடலையும் குறித்திருப்பதாய் தோன்றுகிறது; சசியின் திறமையை நிச்சயம் பல படிகள் உயர்த்தி காட்டி இருக்கிறார், பாலா. யோவ் சசி! அந்த "நண்பனை" விட்டு வெளியில வாய்யா! வந்து, திரைக்கு வெளியே எங்களுக்கு நண்பனாய் இரு; திரையில் உன் திறமைக்கேற்ற நடிகனாய் மட்டும் இருய்யா!
- "சாமிபுலவன்" என்ற கதாபாத்திரத்தில் G.M. குமார் வாழ்ந்திருக்கிறார். அருமையான பாத்திரப் படைப்பு; ஆனால் "நான் பெத்த மகனே! நான் ஜெயிச்சுட்டண்டா!" என்ற வசனத்தை அவர் பேசும் வரை அவரின் பாத்திரப்படைப்பின் அபாரத்தை ஓர் அங்கவஸ்த்திரம் போல், மறைத்து வைத்திருக்கிறார் பாலா! என்றே சொல்லவேண்டும். அவரின் பாத்திரப் படைப்பு ஒரு கலையின் மகத்துவத்தை உணர்த்துவது - என்பதை அந்த பாத்திரத்தை உற்று கவனித்து படத்துடன் பயணித்தால் ஒழிய புரிவது சிரமம்.
- "அமுதவாணன்" எனும் கலைஞன்... என்ற பதிவில், முன்பே "சிரிச்ச போச்சு"புகழ் அமுதவானனைப் பற்றி எழுதி இருக்கிறேன். அமுதவானனுக்கு இப்படியோர் வாய்ப்பு - அதுவும், பாலாவின் படத்தில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. அமுதவானனின் நடிப்புத்திறன் ழுமையாய் உபயோகப்படுத்தப்படவில்லை எனினும் - கிடைத்த வாய்ப்பில் அருமையாய் செய்திருக்கிறார். இருந்தும், அவரின் திறமையை உணர்ந்து, பாலா அவரை நன்கு பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
- பாலாவின் எல்லாப் படங்களிலும் வருவது போல், இதிலும் - நகைச்சுவை, அருமையான விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. அழுத்தமான கதையை எடுக்கும் அதே அளவு சமமான அளவில் நகைச்சுவையையும் எடுக்க முடியும் என்பதை "லொடுக்கு பாண்டி" முதல் பல கதாபாத்திரங்களில் காட்டி இருக்கிறார், பாலா. 2-பீஸ் உடையில் இருக்கும் துணிக்கடை பொம்மையுடன் "செல்ஃபி" எடுக்கும் காட்சி ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.
பாலா இன்னமும் இம்மாதிரியான கதைகளைத்தான் எடுக்கவேண்டுமா?
- படம் பார்த்துவிட்டு, என் நண்பருடன் அவர் வீட்டு வாசலில் இருந்த என் மகிழ்வுந்தை எடுத்துக்கொண்டு என்வீடு வரும் வரை கிடைத்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான இடைவெளியில் பலரும் கேட்பது போல் "பாலா இன்னமும் இதே மாதிரி இருண்ட கதைகளைத் தான் படமாக்கவேண்டுமா?!" என்றோர் கேள்வி.
- முதலில், வேண்டாம்! என்று பலரையும் போல் என்னுள் ஒரு பதில் வந்தது. வீடு வந்து இத்திரைப்படத்தின் மீதான என் பார்வையை முதல்-வரைவு செய்யும் வரை என்னுள் தொடர்ந்த யோசனைகள். இறுதியாய், என்னுள் எழுந்த கேள்வி "ஏன், எடுத்தால் என்ன?" என்பதே; சரி, ஏன் எடுக்கவேண்டும்? - நானே (எதிர்/துணை)கேள்வி கேட்டேன். மேலும், இரண்டு மணி நேரத்தில் எழுதியதை சரிபார்த்துவிட்டு - இதோ பதிந்துமிருக்கிறேன்.
- "அரசியல் என்பது சாக்கடை" என்பது போல், எல்லோரும் "ஆனந்தம்" ஒன்றே குறிக்கோள்! என்பதாய் - ஆனந்தம் என்ற ஒன்றை நோக்கியே பயணப்பட்டால் - இம்மாதிரியான உணர்வுகளை; இந்த சமூக-அவலங்களை எவர் அனுபவிப்பது? அதை எவர் (தட்டி கேட்காவிடாலும்)சுட்டியாவது காண்பிப்பது? என்ற எண்ணம் வந்தது. ஆம், எல்லோருமே ஒரேயொரு உணர்வை நோக்கி பயணப்பட்டால் - மற்ற உணர்வுகளை எவர் அனுபவிப்பது? எல்லா உணர்வுகளையும்/எல்லா சமூக அவலங்களையும் அனுபவிப்பது ஒவ்வொரு "தனி மனிதனின்" கடமையல்லவா? அரசியலை ஒதுக்கி வைப்பது போல்; ஆனந்தம் தவிர எல்லா உணர்வுகளையும் ஒதுக்கி வைப்பது முறையா? என்ற கேள்வி வந்தது.
- அப்போது தான்... இல்லை! ஆனந்தமான/நகைச்சுவையான "மசாலாப் படங்கள்" ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டே இருக்கட்டும். மற்றொரு புறம் "சிறிய அளவிலாவது" இம்மாதிரியான படங்கள் வெளியாகவேண்டும் என்று தோன்றியது. இம்மாதிரியான சமூகத்தின் அவலங்களைப் பார்ப்பதும்/உணர்வதும் நம் ஒவ்வொருவரின் உரிமையும் கூட - நாமும் சேர்ந்தது தானே சமூகம்?
- சரி... பாலாவின் படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாய் தோன்றவில்லையா?... இல்லை! நிச்சயமாக இல்லை. அப்படிப்பட்ட அழுத்தமான காட்சிகளை அமைப்பது பாலாவின் தனிச்சிறப்பு. பல சாதாரண படங்களைப் போல் "வன்முறையை - வன்முறைக் காட்சிகளால்" காண்பித்து நம்மை அருவருப்புக்கு உள்ளாக்குவதில்லை பாலா! வன்முறை நடந்ததை சாதாரண காட்சியால் காண்பித்து; அதற்கு முன்பே நடந்த வன்முறையை "கூரிய வசனங்கள் மூலம்" நம்மை கற்பனை செய்ய வைப்பது பாலாவின் சிறப்பு. ஆனால், அந்த கற்பனையில், நடந்த வன்முறையை நம்மை உணரவைப்பதில் தான் பாலாவின் உண்மையான வெற்றி இருக்கிறது. எனவே, ஒரு சாதாரண இரசிகன் அதை வன்முறையாய் உணரக்கூடும். ஆனால், ஒரு தேர்ந்த இரசிகனுக்கு அந்த அது கற்பனைத்திறனால் விளைவது என்பது பறியும்; அந்த கற்பனைத்திறனை மேலும் ஊக்குவிப்பதில் பாலாவும் ஒருவர் - என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.
- ஒரு படத்தை எடுக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளவேண்டுமா? என்ற கேள்வியும் பலரையும் போல் என்னுள்ளும் எழுந்தது. இந்த கேள்வியில் நியாயம் இருப்பதாய் தான் எனக்கும் தோன்றியது. பாலாவின் நேர்த்தியும்/நிறைவும் எல்லோருக்கும் தெரிந்ததே! ஆனால், இத்தனைப் படங்களைக் கொடுத்த பின்னரும் - சரியான திட்டமிடுதல் மூலம் பாலா குறுகிய காலத்தில் அதே தரத்துடன் படத்தைக் கொடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. இதற்கு பாலா செவி சாய்ப்பாரா?
- மேலோட்டமாய் பார்த்தால் - அதிக செலவு செய்து, பாலா படம் எடுப்பதில்லை என்பதாய் தோன்றும். மறுக்கவில்லை! ஆனால், இந்த அதிக காலம் எடுத்துக் கொள்வதால் - மற்ற நடிகர்களின் பட-எண்ணிக்கை குறைகிறது; அதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பாலாவின் படத்தில் செய்யப்படும் முதலீடும் முடங்கி கிடக்கிறது - அதனாலும், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த இழப்பை - பாலா தன் படத்திற்கு செய்யும் செலவாய்தான் நான் பார்க்கிறேன். இந்த அடிப்படையிலும், பாலா குறைந்த கால அவகாசத்தில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
- பாலாவின் எல்லா படங்களும் சமூக அவலங்களை; அந்த இருண்ட பக்கங்களை தோலுரிக்க ம(று/ற)ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். "அவன் இவன்" என்ற கமர்ஷியல் படத்தில் கூட அது தவறவில்லை. ஆனால், இந்த படத்தில் - மற்ற படங்களில் இருப்பது போல், முக்கிய கதையுடன் "மிக நேரடியான" தொடர்பு இல்லாமல் சமூக-அவலம் காட்சியாக்கப்பட்டு இருக்கிறது என்பது என் பார்வை. "தொடர்பு இருக்கின்றது" என்பதை மறுக்கவில்லை. ஆனால் "மிக நேரடியான" தொடர்பு இல்லை; அதனால், வழக்கமாய் பாலாவின் படத்தில் இருக்கும் அந்த "உணர்வு-பரிமாற்றம்" கொஞ்சம் நீர்த்து போயிருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.
- நான் கடவுள்/பரதேசி/பிதாமகன் - போன்ற படங்களில் இருப்பது போன்ற அந்த "மிக நேரடியான பிணைப்பு" இப்படத்தில் இல்லை என்பதையே இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். "அவன் இவன்" படத்தில் கூட - இதே குறை இருந்தது. ஆனால், அந்த படத்தின் முக்கிய நோக்கமும்; கதையின் கருவும் - கமர்ஷியல் சார்ந்தது என்பதால், அது அப்பட்டமாய் தெரியவில்லை. ஆனால், இந்தப் படத்தில் - அதை உணரமுடிந்தது. ஆனால், இதுவும் "பாலாவின் தரத்துடன்" ஒப்பிடுவதால் தெரியும் குறையே; அதிலும், ஒரு சிறிய குறையே!
இளையராஜா - 1000:
- இளையராஜாவின் இசையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இல்லை... நான் தான் அவரை விமர்சித்து விடமுடியுமா? 1000 என்பது ஓர் எண்ணிக்கை அவ்வளவே. ஆனால், படத்திற்கு மிகப்பெரிய பலம் இசை என்பதை மறுப்பதற்கு - ஏதுமில்லை! எவருமில்லை! திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் - அந்த மக்களை நாம் நேரடியாய் ஏதோவொரு கிராமத்தில் பார்ப்பதாய் ஒரு உணர்வு. திரைப்படம் என்ற உணர்வு ஒரு காட்சியில் கூட இருந்ததாய், நான் உணரவில்லை. இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின் மந்திரம் இதற்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் நீதி என்ன?:
- தமிழரின் ஒரு பாரம்பரிய கலையை சிறப்பிப்பதும்; அந்த கலையின் மகத்துவத்தையும்; அந்த கலையை செய்திடும் கலைஞர்களின் உண்மையான மன-நிலையும்/அவர்களின் உண்மையான கலாச்சாரமும் இருக்கட்டும். இவையாவும், கதை சொல்லும் நீதி எனபதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
- அந்த இறுதிக் காட்சியில் சந்நியாசி, தன் கையில் ஓர் உயிருடன் நடந்து போகும்போது "a film by baala" என்ற செய்தியோடு காட்சி நிலைத்து நிற்கும். அந்த காட்சி என்னுள் பல எண்ணங்களை/புரிதல்களை - படம் சொல்லும் "நீதி"யாய் உணர்த்தியது. நீங்களும், அப்படி ஏதேனும் உணர்கிறீர்கள?! என்பதை சொல்லுங்கள்.
{ ஒரு முறையாவது - இப்படத்தை திரையரங்கில் பார்க்க முயலுங்கள்! இல்லையேல்...
"நேரில் பார்ப்பது போன்று" நான் உணர்ந்ததை, நீங்கள் உணர்தல் சாத்தியமில்லை! }
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக