வெள்ளி, ஜனவரி 29, 2016

அதிகாரம் 018: வெஃகாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 018 - வெஃகாமை

0171.  நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
           குற்றமும் ஆங்கே தரும்

           விழியப்பன் விளக்கம்: நடுநிலைமையின்றி, பிறர் அறவழியில் சேர்த்ததை அபகரித்தால்; நம் 
           குடும்பம் அழிவதோடு, குடும்பத்தில் குற்றச்செயல்களையும் விளைவிக்கும்.
(அது போல்...)
           அரசியல்-நெறியின்றி, மக்களின் கலாச்சாரத்தில் கலந்ததை சீர்குலைத்தால்; அக்கட்சி
           அழிவதோடு, அக்கட்சியில் தீவினைகளையும் அதிகரிக்கும்.

0172.  படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
           நடுவன்மை நாணு பவர்
  
           விழியப்பன் விளக்கம்: நடுநிலையற்ற செயல்களை, அவமானமாய் கருதுபவர்; பயன் 
           தருவதே ஆயினும், மற்றவர் பொருளை அபகரிக்கும் பாவச்செயல்களைச் செய்யார்.
(அது போல்...)
           மனிதமற்ற மனிதர்களை, தீமையாய் எண்ணுவோர்; உயர்பதவி அளிப்பதே ஆயினும், 
           சாமானியர்களின் வாழ்வியலைக் கெடுக்கும் தீவிரவாதங்களைத் தவிர்ப்பர்.

0173.  சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
           மற்றின்பம் வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: பேரின்பத்தின் மகிமையை உணர்ந்து, அதனை வேண்டுவோர்; 
           சிற்றின்பத்தை விரும்பி, அறம் அல்லாதவற்றை செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
           விவசாயத்தின் மதிப்பை அறிந்து, அதனை நேசிப்போர்; பணத்தை விரும்பி, விவசாய 
           நிலங்களை விற்கமாட்டார்கள்.

0174.  இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
           புன்மையில் காட்சி யவர்

           விழியப்பன் விளக்கம்: புலன்களை வென்று, குற்றங்களைக் களைந்த தேடலுடையவர்; 
           தன்னிடம் இல்லையென்று, மற்றவரின் பொருள்மேல் மோகம் கொள்ளமாட்டார்.
(அது போல்...)
           ஆசைகளை அடக்கி, ஊழல்களை ஒழித்த கடமையவர்; தன்னுரிமை உயர்ந்ததென்று, 
           மற்றவரின் உரிமைமேல் ஆதிக்கம் செலுத்தமாட்டார்.
          
0175.  அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
           வெஃகி வெறிய செயின்

           விழியப்பன் விளக்கம்: நன்கு தெளிந்த, விரிந்த பகுத்தறிவு இருந்தும்; ஒருவர் அறிவற்ற 
           வகையில் நடந்து, மற்றவரின் பொருளை அபகரிப்பாராயின்  - அதனால்  என்ன பயன்?
(அது போல்...)
           உலகமே அங்கீகரித்த, சிறந்த திறமை இருப்பினும்; ஒருவர் மனிதமற்ற வகையில் பேசி, 
           பிறரின் சுயத்தை சிதைப்பாராயின் - அதனால்  என்ன தனித்துவம்?

0176.  அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
           பொல்லாத சூழக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: அருளை விரும்பி, அறநெறியில் பயணிப்பவரே ஆயினும்; பிறரின் 
           உடைமைகளை அபகரிக்க எண்ணினால், கெட்டழிவர்.
(அது போல்...)
           மேன்மையை அடைய, வாய்மையைக் கடைபிடிப்பவரே ஆயினும்; பிறரின் பொய்களை 
           ஆதரிக்க முனைந்தால், தடம்புரள்வர்.

0177.  வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
           மாண்டற் கரிதாம் பயன்

           விழியப்பன் விளக்கம்: பிறர்க்குரிய செல்வத்தை அபகரிப்பதால், விளையும் வினைப்பயன்; 
           நன்மையானதாய்  இருப்பது அரிது என்பதால், அதை மறுத்திடவேண்டும்.
(அது போல்...)
           விலங்குகளுக்குரிய காட்டை அழிப்பதால், உருவாகும் எதிர்விளைவு; பாதுகாப்பானதாய் 
           இருப்பது கடினம் என்பதால், அதை கைவிடவேண்டும்.

0178.  அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
           வேண்டும் பிறன்கைப் பொருள்

           விழியப்பன் விளக்கம்:  பிறருடைய செல்வத்தை, அபகரிக்க முயலாத நல்லெண்ணமே; 
           நம்முடைய செல்வம், குறையாமல் இருப்பதற்கான காரணி ஆகும்.
(அது போல்...)
           பிறரின் தேடலை, வணிகமாக்க எண்ணாத நல்லொழுக்கமே; நம்முடைய தேடல், 
           தடம்புரளாமல் பயணிப்பதற்கு தேவையானது ஆகும்.

0179.  அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
           திறன்அறிந் தாங்கே திரு

           விழியப்பன் விளக்கம்: அறத்தை உணர்ந்து, பிறர் பொருளை அபகரிக்காத 
           பகுத்தறிந்தவரிடம்;  அவரின் தகுதியை கண்டறிந்து, திருமகள் எனும் செல்வம் சேரும்.
(அது போல்...)
           வாழ்வியலைப் புரிந்து, பிறரின் மதத்தை அவமதிக்காத  சான்றோரிடம்; அவரின் 
           நற்குணத்தை பாராட்டி, மனிதம் எனும் மேன்மை சேரும்.

0180.  இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
           வேண்டாமை என்னுஞ் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: விளைவுகளை எண்ணாமல், பிறர் பொருளை அபகரிக்க நினைப்பது 
           அழிவைத் தரும்; அதை வேண்டாத திண்ணமான எண்ணம், வெற்றியைத் தரும்.
(அது போல்...)
           விளைவுகளை உணராமல், விவசாய நிலங்களை அழிக்க முனைவது பஞ்சத்தை 
           உருவாக்கும்; அதை தடுக்கும் உறுதியான செயல், வாழ்வியலை உயர்த்தும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக