வியாழன், செப்டம்பர் 15, 2016

அதிகாரம் 041: கல்லாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை

0401.  அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
           நூலின்றிக் கோட்டி கொளல்

           விழியப்பன் விளக்கம்: 
அறிவை நிரப்பும் நூல்களைக் கற்காமல், கற்றோர் அவையில் 
           பேசுதல்; முறையான சூதாடும் அரங்கம் இல்லாமல், சூதாடுதல் போன்றதாகும்.
(அது போல்...)
           குடும்பம் நடத்தும் தகுதியைக் கொண்டிராமல், இல்லற வாழ்வில் நுழைதல்; உண்மையான 
           ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம்-ஓட்டுதல் போன்றதாகும்.
        
0402.  கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
           இல்லாதாள் பெண்காமுற் றற்று

           விழியப்பன் விளக்கம்: கல்வியறிவை வளர்க்காதவர், சொற்பொழிவாற்ற விரும்புவது; 
           இரண்டு முலையும் வளர்ச்சியடையாத பெண், காமத்திற்கு ஆசைப்படுவது போன்றதாகும்.
(அது போல்...)
           திறமையைக் கொண்டிராதவர், உலகப்போட்டியில் பங்கேற்பது; இராணுவப் பயிற்சிப் 
           பெற்றிடாத ஒருவர், எல்லைப்போருக்கு தயாராவது போன்றதாகும்.
           
0403.  கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
           சொல்லா திருக்கப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: கற்றோர் அவையில், பேசாதிருக்கும் திண்மையைப் பெற்றிடின்; 
           கற்காத மனிதர்களும், அதிக நன்மை அளிப்பர்.
(அது போல்...)
           போர்க் களத்தில், புறமுதுகிடாத மனவலிமைப் பெற்றிருப்பின்; வலிமையற்ற வீரர்களும், 
           பெரு வெற்றிக்கு பங்களிப்பர்.

0404.  கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
           கொள்ளார் அறிவுடை யார்

           விழியப்பன் விளக்கம்: "படிக்காத மேதை" எனப்படும், கற்காதவரின் அறிவு மிக நன்றாக  
           இருப்பினும்; அதைக் கல்விபயின்ற சான்றோர்கள் ஒப்புக்கொள்ள தயங்குவர்.
(அது போல்...)
           "இணைந்து வாழ்தல்" முறையில், திருமணமாகாதோரின் இல்வாழ்வு மிக நன்றாக 
           இருப்பினும்; அதைத் திருமணமான பெரியோர்கள் ஏற்க மறுப்பர்.

0405.  கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
           சொல்லாடச் சோர்வு படும்

           விழியப்பன் விளக்கம்: 
கற்காதவரின் தற்பெருமை எண்ணம், கற்றவர்களுடன் ஒன்றுகூடி 
           உரையாடும் போது; அவர்களின் பேச்சாலேயே, உறுதியாய் கெடும்.
(அது போல்...)
           அறமற்றவரின் போலியான தோற்றம், அறமுள்ளோருடன் சேர்ந்து பழகும் போது; 
           அவர்களின் செயலாலேயே, நிச்சயம் அழியும்.

0406.  உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
           களரனையர் கல்லா தவர்

           விழியப்பன் விளக்கம்: 
கற்காதவர் உயிரோடிருப்பது, அவர்கள் “உயிரோடு” இருக்கிறார்கள் 
           என்ற அளவீட்டைத் தவிர்த்து; பயன்படாத மண்ணைக் கொண்ட, வறண்ட நிலத்திற்கே 
           ஒப்பாவர்.
(அது போல்...)
           நேர்மையற்றோர் ஆட்சியிலிருப்பது, அவர்கள் “ஆட்சியில்” இருக்கிறார்கள் என்ற 
           ஆதாரத்தைத் தவிர; பயனற்று பூத்துக் காய்க்கும், எட்டி மரத்திற்கே இணையாவர்.

0407.  நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
           மண்மாண் புனைபாவை யற்று

           விழியப்பன் விளக்கம்: ஆழமாயும்/சிறப்பாயும் பகுத்தறியும் ஆற்றலற்ற, கற்காதவரின் 
           எழில்மிகு தோற்றம்;  களிமண்ணால் சிறப்பாய் செய்த, அழகிய பெண்சிலைக்கு 
           இணையாகும்.
(அது போல்...)
           வாய்மையுடனும்/அறமுடனும் வாழும் இயல்பற்ற, இல்லறத்தின் அழகிய மாடமாளிகை; 
           கற்பனையால் தத்ரூபமாக புனைந்த, இனிய கனவுக்கு ஒப்பாகும்.

0408.  நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
           கல்லார்கண் பட்ட திரு

           விழியப்பன் விளக்கம்: கற்றறிந்த நல்லவர்களுக்கு நேரும், வறுமையை விட; 
           கற்காதவர்களிடம் சேரும் செல்வம், அதீத துன்பமானதாகும்.
(அது போல்...)
           நேர்மையான அறமுணர்ந்தோர் அடையும், தோல்வியை விட; நேர்மையற்றோர் அடையும் 
           வெற்றி, அதிக கொடியதாகும்.

0409.  மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
           கற்றார் அனைத்திலர் பாடு
    
           விழியப்பன் விளக்கம்: வசதியானக் குடும்பத்தில் பிறந்தும், கற்காதவர் எனின்; வறியக் 
           குடும்பத்தில் பிறந்தும், கற்றவரின் பெருமைக்கு இணையற்றவர் ஆவர்.
(அது போல்...)
           ஆகச்சிறந்த நிறுவனத்தில் பணிபுரிந்தும், திறமையில்லாதவர் எனின்; சிறுதொழில் 
           நிறுவனத்தில் பணிபுரியும், திறமையானவரின் சிறப்புக்கு ஒப்பற்றவர் ஆவர்.

0410.  விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
           கற்றாரோடு ஏனை யவர்

           விழியப்பன் விளக்கம்:
பகுத்தறிவை விரிவாக்கும் நூல்களைக் கற்றவருடன், மற்றவர்களை 
           ஒப்பிடுதல்; விலங்குகளோடு, மனிதர்களை ஒப்பிடுவதற்கு இணையாகும்.
(அது போல்...)
           நலிந்தோரை வாழ்விக்கும் அரசாட்சியை அளிப்பவருடன், பிறரை ஒப்பிடுதல்; பொன்னுடன், 
           பித்தளையை ஒப்பிடுவதற்குச் சமமாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக