சனி, செப்டம்பர் 17, 2016

ஓ... அப்பாவிகளே!


         "தமிழ்/தமிழர்" என்ற "மொழி/இன" உணர்வுகளை வைத்து கீழ்த்தரமான அரசியல் நடத்தும் சுயநலவாதிகளால் - இன்னுமோர் அப்பாவி இளைஞர், தீக்குளித்து இறந்திருக்கிறார். தமிழ்-ஈழப் பிரச்சனையில் நடந்த ஒரு தீக்குளிப்பு இறப்பு போல்; இன்னுமோர் நிகழ்வு, இரு தினங்களுக்கு முன்னர் அரங்கேறி இருக்கிறது. இதில், மிகவும் வருந்தத் தக்க விடயம் என்னவென்றால் - "தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம்" என்ற பெயரில் கட்சி நடத்துபவர்களால்;  தமிழகத்திலேயே ஓர் உயிர் இழந்திருப்பதே! "தமிழ்-ஈழம்" மற்றும் "காவேரி நீர் பகிர்வு" பிரச்சனைகளில் - தமிழகத்தைக் கடந்து, வேறு இடங்களில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக; இவர்களின் "குரல் கொடுக்கும்" நாடகத்தில் - தமிழகத்திலேயே உயிர்கள் பலியாவதை என்னவென்று சொல்வது? மற்ற கட்சிகளாளும், தீக்குளித்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. ஆனால், அவை தமிழகத்தில் நிகழும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றன.

       இப்படியான அரசியல் செய்யும் கட்சிகளில், என் பார்வையில், மிகவும் ஆபத்தானவையாய் பின்வரும் இரண்டு கட்சிகளைப் பார்க்கிறேன்: 1. கட்சி ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆகின்றன; "தமிழ்/தமிழர்" சார்ந்து அரசியல் நடத்தும் கட்சி; அக்கட்சியின் தலைவர் - வேறொரு கட்சியில் இருந்து "தன்மானத்திற்காக (??!!)" பிரிந்து வந்தவர். தன் கட்சியின் பெயரைக் கூட - தாய்க் கட்சியின் பெயரில் இருந்து மாறுபட்டு வைக்கத் தெரியாதவர்; 2. கட்சி ஆரம்பித்து 2 / 3 ஆண்டுகள் தான் ஆகின்றன; இவர் பரவாயில்லை - கட்சியின் பெயரையாவது வித்தியாசமாய் வைக்கத் தெரிந்தவர். ஆனால், புரட்சி என்ற பெயரில் "சற்றும் தேவையற்ற/சம்பந்தமற்ற" உணர்ச்சியின் விளிம்பில் இருந்து பேசி - தேவையற்ற தீவிரவாத எண்ணங்களை விதைப்பவர். முன்னவரை விட - இவர் மிகவும் ஆபத்தனாவர். இவர்கள் இருவருக்கும் ஓர் ஒற்றுமை - இலங்கை தமிழினத்தின்; ஒப்பற்ற தலைவராய் இருந்த தலைவர் திரு. பிரபாகரனை விரும்புபவர்கள்.

         இவர்களுக்குப் பின்னிருக்கும் "சின்னஞ்சிறு கூட்டம்" - பெரும்பான்மயில், பிரபாகரன் எனும் அந்த மாவீரனின் அன்பர்களைக் கொண்டது. ஆனால், இக்கட்சித் தலைவர்கள், அந்த மாவீரனைப் பின்பற்றுகிறோம் - என்ற போர்வையில்; அவரை அசிங்கப்படுத்தும் செயலைச் செயகிரார்கள். உண்மையில், இவர்கள் தான் "இனத் துரோகிகள்" போல் தோன்றுகிறார்கள். "தமிழ்(தனி)-ஈழம்" கனவு, இனியும் வேண்டுமா??? - என்ற தலையங்கத்தில் சொல்லியது போல்; இவர்கள் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு (அகதிகள்) கூட உருப்படியாய் ஏதும் செய்யவில்லை! இலங்கைத் தமிழர்களுக்கும் ஏதும் செய்யவில்லை. உண்மையில், இவர்கள் தமிழகம் கடந்த பகுதிகளில் நடக்கும் கொடுமைகளில் இருந்து; அங்குள்ள தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனில் - அங்கு சென்று போராட வேண்டும். அதுதான் நியாயம்! சரி... இலங்கைப் பிரச்சனையில் கூட - இவர்களுக்கு கடவுச்சீட்டு கிடைக்காது போன்ற "நியாயமான (??!!)"...

           காரணங்கள் சொல்லப்படலாம். வெகு அருகில் இருக்கும் பெங்களூர் சென்று போராடுவதில் என்ன தடை இருக்கமுடியும்? பேருந்துகள் இயங்கவில்லை என்றாலும் கூட - இவர்களுக்கு - உலகத் தமிழர்கள் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கும் "வசதியான மகிழ்வுந்து" போதுமே?  எரிபொருளுக்குப் பணம் வேண்டுமெனில், நாம் கூட கொடுக்கலாம். பிரச்சனை நடக்கும் இடத்திற்கு செல்லாமல்; தமிழகத்தில் கூக்குரலிட்டு என்ன பயன்? சரி... அதையாவது - முறையாய் செய்கிறார்களா? உணர்ச்சிவயப்பட்டு இவர்கள் பேசும் "நாடகத்தனமான வசனங்களைக் கேட்டு" - அப்பாவிகள் தான் உயிரிழக்கிறார்கள். என்ன கொடுமை ஐயா இது? இம்மாதிரியான கொலைகள் மிகப்பெரிய "இனத் துரோகம்" இல்லையா? இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுத்த பின்னால், இவர்களின் அணுகுமுறையை மாற்றிக் கொ(ள்ள/ல்ல)ப் போகிறார்கள்? இவர்களைப் போன்றோர்களிடம், பின்வரும் கேள்விகளை எழுப்ப எண்ணுகிறேன்:
  • பிரச்சனைகள் நடக்கும் இடத்திற்கு சென்று போராடக் கூட வேண்டாம். அங்கு சென்று, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேசலாமே ஐயா? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
  • ஆளும் கட்சி செய்யவேண்டும் என்ற கருத்தில், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கலாம்/அப்படி செய்திருக்கலாம் - என்று இலவசமாய் அறிவுரை வழங்குவதை விடுத்து - நீங்கள் அங்கு சென்று "தமிழகம் சார்பாய்" பேசலாமே?
  • ஆட்சியையும்/அதிகாரமும் கொடுத்தால் தான் - இம்மாதிரியான செயல்களை செய்யமுடியும் என்பது இல்லையே?! உண்மையான உணர்வு போதுமே?
  • எதிர்க்கட்சித் தலைவர் - தமிழக முதல்வர், வெறுமனே கடிதமே எழுதிக் கொண்டிருக்கிறார் - என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அதை முழுதாய் ஏற்கிறேன்! தனது தந்தை (கழக தலைவர்) - இதை வலியுறுத்தினார்/அதை வலியுறுத்தினார் என்று சொல்கிறாரே?! - ஏன் இவர்(கள்) அந்த செயல்களைச் செய்யக்கூடாது? அந்த மாநில முதல்வரை இவர்(கள்) சென்று சந்திக்கலாமே?
  • சட்டசபையில், சபாநாயகர்கூட நடுநிலையாய் இல்லை என்று வாதாடி வெளியேறுகிறார்கள்! மறுக்கவில்லை; அப்படித்தான் நடக்கிறது. கர்நாடக மாநிலம் செல்ல - உங்களை யாரால் தடுக்கமுடியும் ஐயா? பிறகேன் செல்லமாட்டேன் என்கிறீர்?
  • நிலைமை இப்படியேத்தான் இருக்கப்போகிறது. அதைத்தான் நேற்றைய தலைமுறையில் குறிப்பிட்டிருந்தேன். இன்றைய எதிர்க்கட்சியினர் அடிக்கடி சொல்வதுபோல் "நாளை(யும்) ஆட்சி மாறும்! ஆனால், காட்சிகள் மாறாது!!" - ஒரே திரைப்படத்தை 2 மொழிகளில் எடுப்பது போல் - ஏற்று நடிக்கும் நடிகர்ளின் பாத்திரங்கள் தான் (ஆளும் கட்சி/எதிர்க்கட்சி) மாறும் - ஆனால் திரைக்கதை அப்படியேதான் இருக்கும்.
    எனக்கென்னவோ - இன்னும் அரசியல்வாதிகளைக் குறைகூறுவதில், எந்த நியாயமும் இருப்பதாய் தெரியவில்லை; குறைந்தது, இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை! இவர்கள் நாம் எதிர்பார்ப்பது போல், அதிநன்மையைக் கூட செய்யவேண்டியதில்லை. நேற்றைய தலையங்கத்தில் சொன்னது போல் - சாமான்ய மக்கள் பாதிக்காமல் காத்தாலே போதும். குறைந்தபட்சம்,  தன்னுடன் இருக்கும் "அப்பாவித் தொண்டர்களை" ஆவது நல்வழிப்படுத்திக் காக்கட்டும். அதற்கு, இவர்கள் "உணர்ச்சியைக் கிளப்பும்" வகையில் பேசாமல் இருத்தல் அவசியமாகிறது. இன்று கூட, 23 ஆண்டு கால கட்சி நடத்துபவர் "தேர்தல் நேரத்தில், ஒரு கட்சி மேல் குற்றம் சுமத்தியது போல்" - கர்நாடக அரசின் மேல் எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை வைக்கிறார். "தமிழகம் எத்தியோப்பியா போல் ஆகிவிடும்!"  என்று கூக்குரல் இடுகிறார்! - ஒருவேளை, அவர் போன்றோரை இன்னமும் அரசியலில் இருந்து அகற்றவில்லை எனில், அப்படி நடக்கும் என்று... 

        "மறைமுகமாய்" சொல்கிறாரோ?! அவர்கள் இப்படியே தொடர்ந்து, கீழ்த்தரமான அரசியல் நடத்தட்டும் - அது அவர்களின் தேர்வு. அவர்கள் பின்னிருக்கும் அப்பாவிகளே! ஒரு குடும்பத்தில் கூட - உணர்ச்சியும்/ஆதிக்க மனப்பான்மையும் - எந்த நன்மையையும் பயப்பதில்லை! அதைத்தான், பெருகிவரும் "விவாகரத்து வழக்குகள்" நிரூபிக்கின்றன. அப்படியிருக்க, ஒரு நாட்டின் அரசியலில் - உணர்ச்சியும்/ஆதிக்கமும்/புரட்சியும் - எப்படி நன்மையளிக்கும்? அப்படிப் பேசும், தலைவர்களுக்கு இறுதிவரைப் புரியாமலேயே இருக்கட்டும். அதனால், அவர்களின் வாழ்வாதாரமோ (அல்லது) குடும்பமோ எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை! எனவே, நீங்களாவது இவற்றை உணர்ந்து - அதன்பின், அவர்கள் பின் செல்லுங்கள்! ஆம்... அவர்கள் பின்னே செல்லாதீர்கள் என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை! ஆனால், கவனமோடு இருங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. உங்களை நம்பி இருக்கும்...

"பெற்றோர்/மனைவி-மக்கள்/உடன்பிறந்தோர்/நட்பு/சுற்றம்"
இவர்களில் எவரேனும் ஒருவரையாவது மனதில் நிறுத்தி;
இம்மாதிரி நிகழ்வுகளைத் தவிருங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக