வெள்ளி, செப்டம்பர் 16, 2016

காவேரி பிரச்சனையில் என் பார்வை...


           "வழக்கம்போல்" - காவேரி பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. "வழக்கம்போல்" என்ற சொல்லை அடிக்கோடிட காரணம், இது தொடர்ந்து நடந்து வருகிறது என்பதால் மட்டுமல்ல; மேலும், இது நமக்கு இயல்பான/வழக்கமான ஒன்றாய் மாறி வருகிறது என்பதை"யும்" உணர்த்தவே. நமக்கு என்றால் - பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இருவருக்குமே! உண்மையிலேயே இது தீர்வு காண முடியாத பிரச்சனையா?! என்ற ஐயம் எழுகிறது. ஒருவேளை, பலரும் சொல்வது போல்; இம்மாதிரியான பிரச்சனைகளை - இருமாநில & மத்திய அரசுகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும் "தீர்க்க விரும்பவில்லையா?!" என்ற சந்தேகம் வலுக்கிறது. ஒருவேளை, இவ்விரு மாநிலங்களும்; மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியால் "நேரடியாக" ஆளப்படும்போதுதான் - இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு வருமா? வெறும் பேச்சில் மட்டும்; இந்தியர்கள் அனைவரும் "சகோதர/சகோதரிகள்" என்று மார் தட்டிக் கொண்டால் போதுமா? உண்மையில் அப்படியோர்...

       ஒற்றுமை இருப்பின் - இம்மாதிரியான சூழலில் தானே தலையெடுக்க வேண்டும்? மாறாய், ஒருவரை ஒருவர்; "இப்படி அநாகரீகமாய்" தாக்கிக் கொள்வது எப்படி சகோதரத்துவம் ஆகும்? இப்படி ஒருவரை, மற்றொருவர் தாக்கும் அதிகாரத்தை எவர் கொடுக்கிறார்கள்? இதில், எந்த மாநிலத்தைச் சார்ந்தவரையும் - தனித்து குற்றம்சாட்ட ஏதுமில்லை! இரு மாநிலங்களைச் சார்ந்தவர்களும் செயகிறார்கள் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதில் - எவர் எந்த விழுக்காட்டில் செய்திருக்கிறார்கள் என்ற அளவீடு அபத்தமானது. தவறில் ஏது - சிறியது? பெரியது?; தவறென்றால் தவறு! அவ்வளவுதான். இதில், இரு மாநில அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் குறித்து எனக்கு எந்த விவாதமும் இல்லை. அது அவர்களின் இயலாமையைத் தெளிவாய் உணர்த்தினாலும்; அதுதான் அவர்களின் இயல்பாகவும் ஆகிவிட்டது. அதைத் தவிர்த்து; அவர்களால் உருப்படியாய் ஏதும் செய்யமுடியாது. அவர்களின் தொழில்...

       அரசியல்! அதை அவர்கள் சரியாய் செய்கிறார்கள். எனவே, அவர்களைப் பற்றி விவாதிக்க பெரிதாய் ஏதுமில்லை. ஆனால் - சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. "உணர்ச்சி கலந்த" செயல் என்பது போன்ற எந்த காரணியாலும், இந்த இழிசெயல்களை நியாயப்படுத்தக் கூடாது. இரு தரப்பிலும், சில குழுக்கள் தான் இந்த செயல்களைச் செயகிறார்கள் என்பது தெரிந்தாலும் - இதைக் கூடவா, இரு மாநிலங்களைச் சார்ந்த அரசுகளால் தடுக்கமுடியாது? ஏதோ, இது இப்போதுதான் - முதன்முதலில் - திடீரென நடக்கிறது என்பதல்ல! இது தொடர்ந்து நடந்து வரும் ஒன்றுதான்; இனிமேலாவது, இம்மாதிரியான செயல்கள் நடக்கக்கூடாது எனில்...
  • இம்மாதிரி சாமானியர்களை தாக்கும் - எவரையும் எளிதில் விடக்கூடாது! தண்டனைகள் மிகக் கடுமையாய் ஆக்கப்பட வேண்டும் - இருமாநில அரசுகளும்; இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் எல்லா மாநில அரசுகளும்; அதற்குரிய சட்டங்களை உடனடியாய் வரையறுக்க வேண்டும்.
  • இவை தடுக்கப்படவில்லை எனில் - சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு; இதில் "மறைமுக" உடன்பாடு இருக்கிறது என்று பொருள்படும். அப்படியெனில், இரு மாநிலங்களிலும் உள்ள மற்ற மாநிலத்தவரை உடனடியாய் வெளியேற்றி விடலாம். இனிமேல், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் தங்கள் மாநிலத்திற்குள்  நுழையக்கூடாது என்று சட்டம் தீட்டட்டும்.
  • அவரவர், அவரவர் மாநிலத்தில் இருந்துவிட்டால் - இம்மாதிரியான சூழலில், சாமான்யர்கள் தாக்கப்பட்ட மாட்டார்கள். இன்றையக் காலக்கட்டத்தில் - வல்லரசு ஆகவேண்டும் என்ற கனவில் இருக்கும் ஒரு நாட்டில் - இம்மாதிரியான காட்டுமிராண்டித் தனமான செயல்கள் நடைபெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது!
        என்னுடைய நோக்கம், இரு மாநிலங்களும் பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதல்ல! மாறாய், எப்போதும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதே. அப்படி இருக்கமுடியாதெனில், எப்போதும் சேர்ந்து"ம்" இருக்கவேண்டாம். இங்கே இருக்கும் பிரச்சனை என்ன? ஒரு மாநிலம், இன்னோர் மாநிலத்திற்கு தண்ணீர் கொடுக்கவேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவர், உடன்பிற(ந்த/வா) இன்னொருவரிடம் கோரும் உதவி போன்றது தான் இது. நாம் எல்லோரும் "சகோதர/சகோதரி" எனில் - கேட்பதும்/கொடுப்பதும் தார்மீகம் ஆகிறது. வேண்டும் என்போர் கேட்கிறார்; இருப்போர் கொடுக்கலாம் (அல்லது) மறுக்கலாம்! மறுக்கும்போது, உரிமையோடு - வற்புறுத்தி கேட்பதும் நிகழலாம். அதையும், முறையான விதத்தில் மறுக்க வேண்டும். இது சுமூகமாய் நடக்காத போது, குடும்பத் தலைவர் என்ற நிலையில் இருக்கும் "உச்ச நீதிமன்றம்" இந்த நிகழ்வுக்குள் வருகிறது. இவ்வளவு கொடுங்கள் என்று பரிந்துரை செயகிறது. மொத்தத்தில்...

        இது, ஒரு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வு போன்றது. கேட்பதும்/கொடுப்பதும்/மறுப்பதும் - சம்பந்தப்பட்டவர் உரிமையாகிறது. இவை எல்லாமும் பேச்சாய்/விவாதமாய் தான் இருக்கவேண்டும். அதை விடுத்து - சிறு குழுக்களால் - ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது எப்படி நியாயமாகும்? அதிலும், சாமான்யர்கள் தாக்கப்படுவது எப்படி நியாயமாகும்? சம்பந்தப்பட்ட அரசுகள், இந்த முறையாவது - இதற்கு நிரந்தரமான தீர்வை வகுக்கவேண்டும்! ஒவ்வொரு முறையும் நடப்பது போல் - சரி, இப்போது நிலைமை சுமூகமாக ஆகிவிட்டது; மீண்டும் அடுத்த முறை நிகழும் வரை - நம் அரசியலை நடத்திக் கொண்டிருக்கலாம் என்று தொடர்ந்து செயல்பட்டால் அதில் எந்த நியாயமும் இல்லை. படித்தவர்கள்/இளைஞர்கள் அரசியலுக்குள் நுழையவேண்டும்; காலம் காலமாய் அரசியல் செய்வோரை அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டும். இவர்களால், இனியும் - ஏதேனும் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது; நம் இயலாமையை காட்டுகிறது.

நம் எதிர்ப்பை - இதுபோன்ற வகையிலாவது காண்பிக்க "ஆரம்பிப்போம்"!!!

2 கருத்துகள்: