ஞாயிறு, நவம்பர் 19, 2017

அதிகாரம் 084: பேதைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை

0831.  பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
           ஊதியம் போக விடல்

           விழியப்பன் விளக்கம்: நட்பைச் சேர்ப்பதில், அறியாமை என்பது என்னவெனில்; தீமை 

           அளிப்போரை ஏற்றுக்கொண்டு, நன்மை அளிப்போரை விலகிச்செல்ல விடுவதாகும்.
(அது போல்...)
           ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில், குற்றம் என்பது யாதெனில்; இலவசம் அளிப்போருக்கு 
           வாக்களித்து, ஊழலொழிக்க முனைவோரை தோற்கடிக்கச் செய்வதாகும்.
      
0832.  பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
           கையல்ல தன்கட் செயல்

           விழியப்பன் விளக்கம்: அறியாமைகள் அனைத்திலும், அதீதமான அறியாமை என்பது; தம் 

           சுயத்திற்கு ஒவ்வாத, கூடா நட்பின் மேல் விருப்பம் கொள்வதாகும்!
(அது போல்...)
           துன்பங்கள் எல்லாவற்றிலும், கொடிய துன்பம் என்பது; மக்கள் ஆட்சிக்கு தகுதியற்ற, தீய 
           கட்சி ஒன்றைத் தேர்வு செய்வதாகும்!
           
0833.  நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
           பேணாமை பேதை தொழில்

           விழியப்பன் விளக்கம்: தீயவைக்கு நாணாதது/தேவையை நாடாதது/நல்லோரிடம் 

           அன்பில்லாதது/முறையான எவ்வொன்றையும் பேணாதது - இவையாவும் நட்பியலின் 
           அறியாமையாகும்!
(அது போல்...)
           இலவசத்துக்கு வெஃகாதது/ஊழலாளிகளை ஒதுக்காதது/நல்லோரை ஆதரிக்காதது/ 
           நியாயமான விதிகளைக் கடைப்பிடிக்காதது - இவையாவும் மக்களாட்சியின் 
           எதிர்வினைகளாகும்!

0834.  ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
           பேதையின் பேதையார் இல்

           விழியப்பன் விளக்கம்: நட்பியல் சார்ந்த நூல்களைக் கற்றுணர்ந்தும்/பிறருக்கு 

           எடுத்துரைத்தும்; தாம் பின்பற்றாத அறியாமை நிறைந்தோரை விட, அதீத அறியாமை 
           கொண்டோர் எவருமில்லை!
(அது போல்...)
           அரசியல் சார்ந்த அறங்களை அறிந்தும்/பிறருக்குக் கற்பித்தும்; தாம் பழகிடாத 
           கொடுங்கோன்மை நிறைந்தோரை விட, அதிக கொடுங்கோன்மை உடையோர் 
           எவருமில்லை!

0835.  ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
           தான்புக் கழுந்தும் அளறு

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டோர்; முதல் பிறவியிலேயே; ஏழு 

           பிறப்புகளுக்கும் நரகத்தில் தள்ளும் செயல்களை, செய்யும் ஆற்றலுடையோர் ஆவர்!
(அது போல்...)
           வேலையில் அறமின்மை உடையோர், வாரத்தின் முதல்நாளே; ஏழு நாட்களுக்கும் 
           விரக்தியில் ஆழ்த்தும் சோம்பலை, கொள்ளும் திறமுடையோர் ஆவர்!

0836.  பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
           பேதை வினைமேற் கொளின்

           விழியப்பன் விளக்கம்: கூடா நட்பை உணரமுடியாத அறியாமை கொடோர், ஒரு செயலைத் 

           துவங்கினால்; அச்செயல் மட்டுமா தடம் புரளும்? அவர்களும் சேர்ந்தே தடம் புறள்வர்!
(அது போல்...)
           தவறான தலைவரை அறியமுடியாத அனுபவமின்மை உடையோர், ஓர் கட்சியை 
           ஆதரித்தால்; அக்கட்சி மட்டுமா ஊழல் செய்யும்? அவர்களும் சேர்ந்தே ஊழல் செய்வர்!

0837.  ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
           பெருஞ்செல்வம் உற்றக் கடை

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமையுள்ள ஒருவரிடம், பெருமளவு செல்வம் 

           சேரும்போது; அவர்களுக்கு தொடர்பற்றோரும் பசியாற, அவர்களின் சுற்றத்தார் 
           பசித்திருப்பர்!
(அது போல்...)
           அரசியலில் பொய்மையுள்ள ஒருவரிடம், அதிகளவு ஆட்சியதிகாரம் சேரும்போது; 
           எதிர்க்கட்சியும் ஊழலால் பயனடைய, வாக்களித்த மக்கள் அல்லாடுவர்!

0838.  மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
           கையொன்று உடைமை பெறின்

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டவரிடம், அதிக மதிப்புடைய பொருள் 

           கிடைத்தால்; அவரின் நிலைமை, பித்தம் உடையவர் ஒருவர் மதுவருந்தியது போலிருக்கும்!
(அது போல்...)
           பிரிவினையில் பிரம்மை கொண்டவரிடம், அதீத சக்தியுடைய அதிகாரம் கிடைத்தால்; 
           அவரின் செயல்கள், கூர்மையான ஆயுதத்தில் நஞ்சை கலந்தது போலிருக்கும்!

0839.  பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
           பீழை தருவதொன் றில்

           விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லும்போது, துன்பமளிக்க எதுவொன்றும் இல்லை 

           என்பதால்; அறியாமை கொண்டோரிடம் கொள்ளும் நட்பு, மிகவும் இனிமை ஆனதாகும்!
(அது போல்...)
           வெறுத்து கைவிடும்போது, சோம்பலளிக்க எதுவும் இல்லை என்பதால்; போதைப் 
           பழக்கங்களில் கொள்ளும் நாட்டம், அதிக ஒவ்வாமை உடையதாகும்!

0840.  கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
           குழாஅத்துப் பேதை புகல்

           விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்தோர் நிறைந்த நட்புக் குழுவில், அறியாமை கொண்டோர் 
           இணைவது; தூய்மையான படுக்கையின் மேல், கழுவாத காலை வைப்பது போன்றதாகும்!
(அது போல்...)
           திறமையானோர் வழிநடத்திய அரசியல் கட்சியை, அடிமை வழிவந்தோர் நிர்வகிப்பது;  
           அழகான சிலையின் மேல், வெளுக்காத உடையை அணிவிப்பது போன்றதாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக