புதன், நவம்பர் 29, 2017

அதிகாரம் 085: புல்லறிவாண்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை

0841.  அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
           இன்மையா வையா துலகு

           விழியப்பன் விளக்கம்: நல்ல நட்பை உணரும் அறிவு இல்லாமையே, இல்லாமை 
           அனைத்திலும் கொடிய இல்லாமையாகும்! வேறேதும் இல்லாததை, இவ்வுலகம் 
           இல்லாமையாக எண்ணாது!
(அது போல்...)
           நல்ல ஆட்சியை அளிக்கும் வைராக்கியத்தை நாடாமையே, நாடாமை அனைத்திலும் 
           அழிவான நாடாமையாகும்! வேறெதையும் நாடாததை, இச்சமூகம் நாடாமையாக தூற்றாது!
      
0842.  அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
           இல்லை பெறுவான் தவம்

           விழியப்பன் விளக்கம்: நட்பியல் ஞானம் இல்லாதவர், மனம் உவந்து கொடுப்பது; அதைப் 
           பெறுபவர் செய்த தவத்தால் விளைவதே அன்றி, வேறெதுவும் இல்லை!
(அது போல்...)
           அரசியல் அறம் இல்லாதவர், கையூட்டு வாங்காமல் செய்வது; அப்பயனை அடைபவர் 
           நடத்திய போராட்டத்தின் வெற்றியே அன்றி, வேறொன்றும் இல்லை.
           
0843.  அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
           செறுவார்க்கும் செய்தல் அரிது

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறிவில்லாத ஒருவர், தாமே தம்மை வருத்திக் 
           கொள்ளும் வருத்தங்கள்; அவர்களின் பகைவர்களும், செய்வதற்கு அரிதானவை ஆகும்!
(அது போல்...)
           அரசியலில் திறமில்லாத ஒருவர், தாமே தம்மை அடிமையாக்கிக் கொள்ளும் 
           அடிமைத்தனம்; அவர்களின் எதிர்க்கட்சியும், பணிப்பதற்கு விரும்பாதது ஆகும்!

0844.  வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
           உடையம்யாம் என்னும் செருக்கு

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறிவின்மை எனப்படுவது என்னவெனில்; "யாம் 
           அறிவுடையோர் ஆவோம்!" எனத் தாமே அறிவித்துக் கொள்ளும் ஆணவம் ஆகும்!
(அது போல்...)
           அரசியலில் திறமின்மை என்பது யாதெனில்; “யாம் நிரந்தரமாய் ஆள்வோம்!” எனத் 
           தொண்டர்களை அறிவிக்க வைக்கும் செருக்கு ஆகும்!

0845.  கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
           வல்லதூஉம் ஐயம் தரும்

           விழியப்பன் விளக்கம்: கற்றறியாத விடயங்களிலும், பொய்யறிவுப் போர்வையோடு 
           ஒழுகுதல்; தாம் குழப்பமின்றி கற்று, வல்லமையடைந்த விடயங்களின் மேலும் ஐயத்தை 
           உருவாக்கும்!
(அது போல்...)
           செய்யாத திட்டங்களையும், பொய்பிரச்சார அரசியலோடு அணுகுதல்; அவர்கள் ஊழலின்றி 
           செய்து, வெற்றியடைந்த திட்டங்களின் மீதும் அவநம்பிக்கையை அளிக்கும்!

0846.  அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
           குற்றம் மறையா வழி

           விழியப்பன் விளக்கம்: தம் மனதிலுள்ள குறைகளை நீக்கி, அவற்றை அழிக்க 
           முனையாதோர்; தம் உடம்பிலுள்ள பகுதிகளை மறைக்க, ஆடை உடுத்துவது பொய்யறிவு 
           ஆகும்!
(அது போல்...)
           தமது கட்சியின் ஊழல்களை அறிந்து, அவற்றைக் களைய முடியாதோர்; தமது 
           எதிர்க்கட்சியின் ஊழல்களை விமர்சித்து, பிரச்சாரம் செய்வது பொய்யரசியல் ஆகும்! 

0847.  அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
           பெருமிறை தானே தனக்கு

           விழியப்பன் விளக்கம்: கிடைக்கற்கரிய உபதேசங்களைப் பெற்றும், அவற்றைப் பின்பற்றத் 
           தவறும் அறிவு இல்லாதோர்; தமக்குத் தாமே, பெருந் துன்பங்களைச் செய்துக்கொள்வர்.
(அது போல்...)
           காண்பதற்கரிய தலைவர்களைக் கண்டும், அவர்களைத் தொடரத் தவறும் அரசியல் 
           அறமற்றோர்; தமக்குத் தாமே, அதீத தோல்விகளை வகுத்துக்கொள்வர்.

0848.  ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
           போஒம் அளவுமோர் நோய்

           விழியப்பன் விளக்கம்: பிறர் சொல்லவும் செய்யாது, தாமாகவும் தெளியாத ஒருவருக்கு; 
           அந்த பொய்யறிவு என்பது, அவர்களின் உயிர் பிரியும் வரையிருக்கும் நோயாகும்!
(அது போல்...)
           மக்கள் பணியையும் செய்யாது, பதவியையும் துறக்காதக் கட்சிக்கு; அந்த சிக்கல் என்பது, 
           அவர்களின் ஆட்சி முடியும் வரையிருக்கும் குறையாகும்!

0849.  காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
           கண்டானாம் தான்கண்ட வாறு

           விழியப்பன் விளக்கம்: பகுத்தறிதலை அறியாதோர், தான் அறிந்த வண்ணமே அறிவர் 
           என்பதால்; பகுத்து அறியாதோரை அறியவைக்க முயல்வோரும், அறியாதோர் என்றே 
           உணரப்படுவர்!
(அது போல்...)
           நட்பறிதலைப் பழகாதோர், தாம் பழகிய வண்ணமே பழகுவர் என்பதால்; நட்பைப் 
           பழகாதோரைப் பழகவைக்க முயல்வோரும், பழகாதோர் எனவே கருதப்படுவர்!

0850.  உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
           அலகையா வைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: உலகிலுள்ள அனைவரும் உண்டென்னும் விடயங்களை, 
           இல்லையென மறுப்போர்; இவ்வுலகில், பேய்களுக்கு இணையாக வைக்கப்படுவர்!
(அது போல்...)
           நாட்டிலுள்ள அனைவரும் தொடர்ந்திடும் பழக்கங்களை, மூடமென எதிர்ப்போர்; 
           சமுதாயத்தில், தீவிரவாதிகளுக்கு நிகராக மதிக்கப்படுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக