வியாழன், அக்டோபர் 15, 2015

நண்பென்னும் நாடாச் சிறப்பு (குறள் எண்: 0074)



     குறள் எண் 0074-இற்கான என் விளக்கத்தைப் படித்திருப்பீர்கள். அன்புடைமை எனும் அதிகாரத்தில் உள்ள ஆழ்ந்த கருத்துகளை; அதைச் சரியாய் புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்களை முன்பே எழுதி இருக்கிறேன். அந்த வகையில், இந்த குறளில் "நண்பென்னும் நாடாச் சிறப்பு" என்கிறார் நம் பெருந்தகை. என்ன இது... நட்பெனும் சிறப்பை எவரும் நாட/தேட மாட்டார்கள் என்றாகிறதே?! பெருந்தகை ஏன் அப்படி கூறவேண்டும்? நட்பைப் பற்றி (பின்வரும் அதிகாரங்களில்)அவர் சொல்லாத சிறப்பம்சங்களா? என பல்வேறு கேள்விக்கணைகள் என்னுள் எழுந்தன. இல்லை, பெருந்தகை அந்தப் பொருளில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை! நட்பென்பது மிக ஆழமானது; அதை பாதுகாப்பது பெரும் சிரமமானது என்ற பொருளில் தான் சொல்லி இருக்கவேண்டும், என்று திடமாய் நம்பினேன். இருபினும், மற்றவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, கீழ்வருவன கிடைத்தன:
  • நட்பு என்று சொல்லப்படும் தேடாத சிறப்பு
  • நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பு
  • நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பு
  • நட்பு என்று சொல்லப்படும் எய்துதற்கரிய சிறப்பு
  • நட்பு எனும் பெருஞ்சிறப்பு
  • அனைவரையும் நட்பாக்கும் சிறப்பு
           என்பனவை நான் கண்ட விளக்கவுரைகள். இவற்றைப் படித்த பின்னரும், இல்லை; இதுவல்ல பொருள்! என்ற நம்பிக்கை மேலும் தொடர்ந்ததோடு; நான் நினைத்த பொருளே சரியென்று திடமாய் நம்பினேன். நான் கொண்ட பொருள் இதுதான்: மேலோட்டமாய் பார்க்கும்போது, நட்பு என்பது சாதாரண விசயமாய் தெரியலாம்; அதிலும், இந்த சமூக வலைத்தளங்கள் வந்த பின் நட்பு எனும் சொல்லின் பொருளே நீர்த்து போவதாய் நான் உணர்ந்ததுண்டு. ஆனால், உயர்ந்த-நட்பெனும் உறவை,  தொடர்ந்து சிறிதும் மனக்கசப்பின்றி, நீண்ட நாட்கள் தொடர்வது என்பது அத்தனை சாத்தியம் இல்லை. எனவே, அப்படிப்பட்ட சிரமமான ஒரு உறவை நாடிச்செல்ல எவரும் எளிதில் விரும்புவதில்லை. மேலோட்டமாய் நட்பென்று கொள்வது வேறு! ஆனால், உண்மையான/ஆழமான நட்பாய்; நம் ஆத்மாவோடு கலந்திட்ட ஒன்றாய் நினைத்து ஏற்பதை; அதை நாடிசெல்வதை எவரும் விரும்பமாட்டார்கள். இதுதான், நான் உணர்ந்த பொருள்.

        நட்பு பற்றிய, என் பெருத்த சிந்தனைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன்! அந்த வகையில், என் மிக-நெருங்கிய நட்பைப் பற்றி அடிக்கடி இங்கே குறிப்பிடுவதுண்டு. எங்கள் நட்பின் பலத்தை - எங்கள் சுற்றமும் நன்கறியும்! அது ஒரு கொடுப்பினை; ஆம், சிறந்த நட்பென்பது ஒரு கொடுப்பினை - அது தேடி அடையமுடியாதது; அது நம்மை, தானே நாடி வந்து சேர்வது/அமைவது! எங்கள் நட்பை "நட்பின் வலிமை..." என்றோர் புதுக்கவிதையாய் எழுதியிருக்கிறேன்! {குறிப்பு: வழக்கமாய், ஒரு பதிவுக்கு சார்புடைய என் பிற பதிவுகளை,  இணைப்புகளாய் கொடுப்பேன். இணையத்தில், இது பொதுவானது எனினும் - மேலுள்ள சில வரிகளுக்கு இடையில் இருக்கும் பதிவுகளைப் படிக்கும்படி வற்புறுத்துகிறேன். நட்பு பற்றிய புரிதலை அது விசாலமாக்கும் என்று  நம்புகிறேன். நன்றி!} நட்பு பற்றிய என் சிந்தனைகளுடன், இந்த சொற்றொடரின் "சிந்தனைத் தூண்டலும்" இணைந்ததால், என்னுடைய விளக்கவுரையில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறேன்:

... தேடி-அடையமுடியா; உயரிய-நட்பெனும் சிறப்பையும் கொடுக்கும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக