புதன், அக்டோபர் 21, 2015

அதிகாரம் 008: அன்புடைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 1 - அறம்; இயல்: 02 - இல்லறவியல்;  அதிகாரம்: 008 - அன்புடைமை

0071.  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
           புன்கணீர் பூசல் தரும்

           விழியப்பன் விளக்கம்: அன்பை அடைக்கும் தாழ்ப்பாள் உண்டோ? நம் அன்புக்குரியவரின் 
           துன்பம் கண்டு; அது, கண்ணீராய் - ஆரவாரப் பெருக்கெடுக்கும்.
(அது போல்...)
           மனசாட்சியை அழிக்கும் ஆயுதம் உண்டோ? நம் எதிரியின் வீழ்ச்சியே ஆயினும்; அது, 
           சிந்தனையாய் - நம்மை சலனப்படுத்தும்.

0072.  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
           என்பும் உரியர் பிறர்க்கு

           விழியப்பன் விளக்கம்: அன்பில்லாதோர், அனைத்தும் தமக்கே சொந்தமெனக் கருதுவர்;  
           அன்புடையோர் - தம் உடலும், பிறர்க்கு சொந்தமென நினைப்பர்.
(அது போல்...)
           அமைதியற்றோர், பிறரின் மகிழ்ச்சியைக் கெடுக்க எண்ணுவர்; அமைதியானோர், தன் 
           மகிழ்ச்சியை, எல்லோர்க்கும் கடத்திட முயல்வர்.

0073.  அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
           என்போடு இயைந்த தொடர்பு.

           விழியப்பன் விளக்கம்: அன்போடு இரண்டற கலந்த வாழ்க்கையின் பயன்; உன்னதமான 
           உயிர்க்கும், உடலுக்கும் இடையிலானத் தொடர்பைப் போன்றது.
(அது போல்...)
           உண்மையோடு இணைந்த செயல்களின் பலம்; உன்னதமான தொப்பூழ்-கொடிக்கும், 
           கருவுக்கும் இடையிலான இணைப்பைப் போன்றது.

0074.  அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
           நண்பென்னும் நாடாச் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: அன்பு, ஒருவரை அன்புடையவராய் இருக்கச்செய்யும்; மேலும், 
           எளிதில் அடையமுடியாத - நட்பெனும் சிறப்பையும் கொடுக்கும்.
(அது போல்...)
           உண்மை, ஒருவரை அறத்தைத் தழுவச்செய்யும்; மேலும், என்றும் அழிந்திடாத -  
           "மகாத்மா"வெனும் உன்னதத்தையும் அளிக்கும்.
          
0075.  அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
           இன்புற்றார் எய்தும் சிறப்பு

           விழியப்பன் விளக்கம்: இவ்வுலகில், இன்பமாய் வாழ்பவர்களின் சிறப்பானது; அவர்களின் 
           அன்புள்ளம் நிறைந்த வாழ்க்கையால் விளைந்த பயனாகும்.
(அது போல்...)
           சமூகத்தில், மதிப்புடன் வாழ்பவர்களின் புகழானது; அவர்களின் அறநெறித் தவறாத 
           பயணத்துக்குக் கிடைத்த வெகுமதியாகும்.

0076.  அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 
           மறத்திற்கும் அஃதே துணை

           விழியப்பன் விளக்கம்: அறம்சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே, அன்பு துணையிருக்கும் 
           என்போர்; வீரச்செயல்களுக்கும், அதுவே துணையாகும் என்பதை அறியாதவராவர்.
(அது போல்...)
           பொருளாதாரத் தேவைகளுக்கு மட்டுமே, தந்தை உதவுவார் என்போர்; குழந்தை-
           வளர்ப்பிலும், "தந்தையானவன் தாயுமானவன்" என்பதை உணராதவராவர்.

0077.  என்பி லதனை வெயில்போலக் காயுமே 
           அன்பி லதனை அறம்

           விழியப்பன் விளக்கம்: எலும்பில்லாத உயிர்களை, சூரியனின் வெப்பம் சுட்டெரிப்பது 
           போல்; அன்பில்லாத பிறவிகளை, அறம் உழற்றும்.
(அது போல்...)
           பொன்னான நேரத்தை, செயல்வடிவற்ற பேச்சுகள் வீனடிப்பது போல்; முறையற்ற அரசு, 
           மக்களை வருத்தும்.

0078.  அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
           வற்றல் மரந்தளிர்த் தற்று

           விழியப்பன் விளக்கம்: உளத்தில் அன்பில்லாதவரின் வாழ்கை; ஈரமற்ற வன்மையான 
           நிலத்தில், உலர்ந்துபோன மரம் துளிர்ப்பதைப் போன்றது.
(அது போல்...)
           உருவாக்கியவரே பின்பற்றாத கொள்கைகள்; இறந்து காய்ந்த மீனுக்கு, நீரூற்றி 
           உயிர்ப்பிக்க நினைப்பது போன்றதாகும்.

0079.  புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
           அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: உடம்பினுள் இருக்கவேண்டிய அன்பெனும் அக-உறுப்பு 
           இல்லாதவர்களுக்கு; வெளியில் இருக்கும் புற-உறுப்புகள், என்ன பயனை விளைவிக்கும்?
(அது போல்...)
           குடும்பத்தில் இருக்கவேண்டிய ஒழுக்கமெனும் அறநெறி இல்லாதவர்களுக்கு; வெளியே 
           செய்யும் சாதனைகள், என்ன புகழைக் கொடுக்கும்?

0080.  அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
           என்புதோல் போர்த்த உடம்பு

           விழியப்பன் விளக்கம்: அன்பின் வழியில் பயனிப்போரே, உயிருள்ளவர்; அன்பில்லாதவர், 
           எலும்பைத் தோலால் போர்த்திய - உயிரற்ற உடம்பாவர்.
(அது போல்...)
           அறநெறியுடன் பக்தியைப் போதிப்பவரே, மதகுருவாவர்; அறநெறியற்றவர், புனிதமான 
           உடையில் ஒளிந்திருக்கும் - உணர்வற்ற தீவிரவாதிகளாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக