புதன், அக்டோபர் 07, 2015

ஆன்மீகத்தில் உள்ள குறைபாடுகளில் முதன்மையானது...




       இன்று காலை என் வாட்ஸ்-ஆப் குழுவொன்றில் ஒரு நட்பு "அறிவியல், நம் தேடுதலுக்கு வழியாய் இருக்க வேண்டும், படைப்பை சீரழிப்பதாய் அல்ல. Science should have been a quest to know, not to exploit creation. - Sadhguru" என்றொரு செய்தியைப் பகிர்ந்தது. இதுபோன்று, அறிவியலைத் தவறாய் சித்தரிக்கும் எந்தவொரு கருத்தையும் நான் எதிர்த்து விவாதிப்பதுண்டு! சமீபத்தில் கூட, அப்படியோர் செய்தியின் அடிப்படையில் தான் "இறை-நம்பிக்கையில் ஓர் பகுத்தறிவு..." என்றொரு தலையங்கத்தை எழுதினேன். அதற்கு "Tell me one good example, where science has exploited creation!!! Science ONLY explores creation! - விழியப்பன்"  என்று கருத்திட்டேன். மேலும் "ஒரு சின்ன உதாரணமாய் - "காட்டை அழித்து" பல்லடுக்கு-வீடுகளைக் கட்டுவதை, அறிவியல் செய்யவில்லை! "அறிவிலார்(தான்)" செய்கிறார்கள்! In my opinion, Science & Scientists, take extreme care in preserving nature!" என்றும் கருத்திட்டேன்.  

           \\\\"அறிவியல், நம் தேடுதலுக்கு வழியாய் இருக்க வேண்டும், படைப்பை சீரழிப்பதாய் அல்ல" வார்த்தைகளை மோலோட்டமாய் புரிந்துகொள்வதால் வரும் குழப்பமிது. அறிவியலை இங்கு யாரும் குறை சொல்லவில்லை நண்பர்களே! அதனைத் தவறாய்ப் பயன்படுத்துபவரையே சுட்டிக்காட்டுகிறார்//// என்று அந்த நட்பு விளக்கம் கொடுத்தது. அதைப் படித்ததும் எனக்கு தாங்கொண்ணா ஆற்றாமை வந்தது. ஏனெனில், ஆன்மீகத்தில் உள்ள குறைபாடுகளில் - இம்மாதிரி பேசுவது முதன்மையாது! என்பது என் புரிதல். நான் \\\\அப்படின்னா, அறிவியல் என்ற சொல்லே அங்கு வரக்கூடாது! ஆன்மீகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை இது! சொல்ல வருவதை நேரடியாய்/சரியாய் சொல்வதேயில்லை! பின் எவரேனும், எதிர்கேள்வி கேட்டால், நீ சரியாய் புரிந்து கொள்ளவில்லை! அதுவல்ல ஆன்மீகம்!! அதன் உட்பொருள் பார்க்கவேண்டும்; அது/இது/உதுன்னு... பின் பிரசங்கம் ஆரம்பிக்கும்!  கேட்போர் உண்மையை(மெய்) மறந்து; 

      அதில் இலயித்து... சுயம்(அறிவு) இழப்பர்!//// என்று விளக்கம் கொடுத்தேன். இதுபோல், பலவற்றை பார்த்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பது வேறு; அதில் உள்ள அதீத/அபத்த - நம்பிக்கைகள் என்பது வேறு. அப்படிப் பகுத்தறியும் முனைப்பு இல்லாததால் தான் "கடவுள் நம்பிக்கை என்பது கேலிக்கு உள்ளாகி; அதன் நம்பகத்தன்மை சோதிக்கப்படுகிறது!". மேலுள்ளதை "அறிவியல் இயற்கையின் படைப்புகளைப் புரிந்து, வாழ்வியலை சீரமைக்க முற்பட்டாலும்; சில-மனிதர்கள் சீரழிக்கவே பயன்படுத்துகிறார்கள்!" என்று நேரடியாகவே சொல்லலாம் அல்லவா?! ஏன் அப்படி சொல்வதில்லை? உண்மையில், அந்த சொற்றொடரின் நோக்கம் அறிவியலைக் குறை கூறுவதே! அறிவியல் ஆன்மீகத்துக்கு எதிரானது என்றிருக்கும் ஒரு தவறான புரிதலும் கரானமாய் இருக்கக்கூடும். அறிவியல் எல்லாவற்றையும் அறிந்துவிட்டால்; ஆன்மீகம் பொய்த்துவிடுமோ?! என்ற பயம் கூட காரணமாய் இருக்கலாம். அறிவியில்-படித்த மனிதர்களில் சிலர்... 

          வேண்டுமானால், ஆன்மீகத்துக்கு எதிராக இருக்கலாமே தவிர; அறிவியல், ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல! அது மனித இனத்திற்கு கூட எதிரானாது அல்ல; உண்மையில், மனித வாழ்வை மேம்படுத்துவது தான் அறிவியலின் தலையாய நோக்கம். சில அறிவிலிகள் அறிவியலைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சிக்கல், எல்லாவற்றிலும் இருக்கத்தான் செய்கிறது. எல்லா நன்மைகளிலும், தீயவைகளை உள்ளடக்கி/தீயதை-நோக்கி இட்டுச் செல்லும் வாய்ப்புடன் இருப்பதே இயற்கை. அதற்காக, நன்மைகளையே நாம் கண்டறிதல் கூடாது என்பது, எப்படி நியாயமாகும்?! அப்படிப்பட்ட கூற்று தான்  மேலுள்ளது; அதை தவறென்று சுட்டிக்காட்டி, ஒருவர் கேள்வி கேட்கும்போது, அதை சரியாய் எதிர்கொண்டு பதில் அளிக்கவேண்டும். அதை விடுத்து "இல்லை! அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை!" என்ற வாதம் வருகிறது. ஆழ்ந்து கவனித்தால், ஆன்மீகத்தில் இது மிகப் பெரிய அளவில் பலவற்றிலும் இருப்பது...

      புலப்படும். "தப்பு செஞ்சா, சாமி கண்ணைக் குத்திடும்!" என்று சொல்லி வளர்ப்பார்கள். அப்படியானால், எல்லோரின் கண்களும் குத்தப்பட்டு இருக்க வேண்டுமே??!! என்று எதிர் கேள்வி கேளுங்கள்... "அரசன் அன்று கொள்வான்! தெய்வம் நின்று கொல்லும்!!" என்று பதில் வரும். சரியென்று, சில ஆண்டுகள் கழித்து "என்றுதான் கொல்லும் என்று?!" கேளுங்கள்; உடனே, "இவர்தான் உங்கப்பான்னு, உங்கம்மா சொன்னா நம்பற இல்ல? அதுபோல, இதையும் நம்பணும்!னு" சொல்லும். "அட! எதை எதுக்கூடய்யா முடிச்சு போடறன்னு" நமக்குள் புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியது தான். இதை மிக எளிதாய் "தவறு செய்தால்; இறந்து மேலுலகம் சென்றதும், உனக்கு தண்டனை கிடைக்கும்!" என்பது போல் சொல்லிப்பாருங்கள். இறந்தவர், மீண்டு வந்து நடந்ததைச் சொன்ன சான்று இல்லாததால் - "ஓரளவாவது" அதில் நம்பிக்கை ஏற்படும்.  ஆனால், ஆன்மிகம் அப்படி செய்வதில்லை! கடவுளின் பெயரில் எதைச் சொன்னாலும்... 

         நம்பவேண்டும்! என்ற ஒரு பிடிவாதக் குணம் - இதற்கு முக்கிய காரணமாய் அமைகிறது. அதுபோல் "குரு என்பவர் என்ன சொன்னாலும், அதை நம்பவேண்டும்!" என்ற போக்கும் நிலவுகிறது. அதுதான், மேற்குறிப்பிட்ட வண்ணம் சொற்றொடர்கள் உருவாகக் காரணம்! சில "குரு"க்கள், தங்களை கடவுளுக்கு நிகராகக் கருதுவதால் வருகின்ற குழப்பங்கள் இவயெல்லாம்! எனபது என் பார்வை. கடவுளோ/கடவுளைப் போதிக்கும் குருவோ - அவர்களைப் பற்றிய எந்த செய்தியாய் இருப்பினும் "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்..." என்ற நம் பொதுமறையின் வாக்கு நினைவில் வரவேண்டும். அதற்குத்தான் நமக்கு "ஆறாம் அறிவு" கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான், எனக்கு(ம்) கடவுள் நம்பிக்கை இருப்பினும் "இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?..." என்றும் என்னால் எழுதமுடிந்தது! அதே நேரம், என் அறிவியல் என்னதான் எனக்கு விளக்கினாலும்; கடவுள் நம்பிக்கையையும் என்னால் ஏற்கமுடிகிறது. மீண்டும் சொல்கிறேன்...


இறை-நம்பிக்கை சார்ந்த விசயங்களிலும்; நிச்சயமாய்... பகுத்தறிவு வேண்டும்!!!

பின்குறிப்பு: இத்தலையங்கத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது, அந்த வாட்ஸ்-ஆப் குழுவில் ஒரு காணொளியைப் பகிர்ந்தேன். அது "3-டி பிரின்ட்டர்" எனும் தொழில்-நுட்பம் மூலம் ஒரு பொருளை நாங்கள் எங்கள் ஆய்வகத்தில் அச்சிட்டுக்கொண்டு இருப்பதைப் பற்றிய காணொளி! அதை அனுப்பிவிட்டு... அறிவியலின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில், அதில் தலையான முதன்மையானவற்றில், இதுவும் ஒன்று! சமீபத்திய ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று; இதை வைத்து, எதையும் உருவாக்கலாம்! இது ஒரு மகத்தான "எல்லாவற்றையும் ஆக்க வல்ல" கண்டுபிடிப்பு. இது அறிவியலின் மகத்தான சாதனை! இதை(யும்) தவறாக பயன்படுத்தினால் - அது அப்படிச் செய்யும், அறிவிலிகளின் சீரழிவுச்செயல்! அதற்கு எப்படி, அறிவியல் பொறுப்பாகும்? என்று வினவி இருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக