வெள்ளி, அக்டோபர் 20, 2017

அதிகாரம் 081: பழைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 081 - பழைமை

0801.  பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
           கிழமையைக் கீழ்த்திடா நட்பு

           விழியப்பன் விளக்கம்: நட்பில் பழைமையைப் போற்றுவது என்னவெனில்; பழைமையால் 
           விளைந்த உரிமையில் செய்யும் தவறுகளை, தரக்குறைவாய் விமர்சிக்காததே ஆகும்!
(அது போல்...)
           உறவில் உரிமையை நிலைநாட்டுவது யாதெனில்; உரிமையால் கிடைத்த சுதந்திரத்தில் 
           செய்யும் அத்துமீறல்களை, பிரச்சனையாய் கருதாததே ஆகும்!
      
0802.  நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
           உப்பாதல் சான்றோர் கடன்

           விழியப்பன் விளக்கம்: பழமையான நட்பின் இயல்பென்பது, உரிமையைப் பகிர்வதாகும்! 
           மற்றும் அதற்கு துணையாய் இருப்பது, பழைமையை உணர்ந்த சான்றோரின் கடமையாகும்!
(அது போல்...)
           நேர்மையான ஆட்சியின் சிறப்பென்பது, மனிதத்தை வளர்ப்பதாகும்! மற்றும் அதற்கு 
           விதையாய் இருப்பது, நேர்மையை உணர்ந்த வாக்காளர்களின் பணியாகும்!
           
0803.  பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
           செய்தாங்கு அமையாக் கடை

           விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், உடன்பாடற்ற விடயங்களை செய்யும் 
           போது; அவற்றோடு உடன்படவில்லை எனில், பழமையான நட்பு என்ன பயன் அளிக்கும்?
(அது போல்...)
           நெடுநாள் உழைத்த அனுபவத்தில், பழக்கமற்ற தொழில்களைப் பரிந்துரைக்கும் போது; 
           அவற்றைப் பழகவில்லை எனில், பாரம்பரியமான நிறுவனம் எப்படி விரிவு அடையும்?

0804.  விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
           கேளாது நட்டார் செயின்

           விழியப்பன் விளக்கம்: நெடுநாள் பழகிய உரிமையில், தம்மைக் கேட்காமல் நண்பர்கள் 
           செய்த விருப்பமற்ற செயல்களை; பழைமையின் பெருமையை உணர்ந்தோர், பொறுத்துக் 
           காப்பர்!
(அது போல்...)
           நெடுங்காலம் பணிபுரிந்த உரிமையில், தம்மை ஆலோசிக்காமல் மேலாளர்கள் எடுக்கும் 
           சரியற்ற முடிவுகளை; பொருளாதாரத் தேவையை அறிந்தோர், விரும்பி ஏற்பர்!

0805.  பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
           நோதக்க நட்டார் செயின்

           விழியப்பன் விளக்கம்: நண்பர்கள் வருந்தும் செயல்களைச் செய்தால், அறியாமை ஒன்றே 
           காரணமாகுமா? மாறாய், பழமையால் விளைந்த பேருரிமையே காரணமென உணர்வீர்!
(அது போல்...)
           அரசியலார் கொடுங்கோல் ஆட்சியைச் செய்தால், அதிகாரம் ஒன்றே காரணியா? மாறாய், 
           பழையகட்சி என்பதற்காக ஓட்டளித்ததே காரணியென உணர்வோம்!

0806.  எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
           தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

           விழியப்பன் விளக்கம்: நட்பின் வரையறையைப் பின்பற்றுவோர்; நெடுங்காலமாக நட்பில் 
           இருந்தவர் தொல்லை தருவதாய் மாறினாலும், அவர்களின் தொடர்பை எஞ்ஞான்றும் 
           கைவிடார்!
                                                                (அது போல்...)
           உறவின் உன்னதத்தை மதிப்போர்; நீண்டகாலம் நல்லாட்சி அளித்தவர் மண்ணுலகை 
           விட்டு நீங்கினாலும், அவர்களின் நினைவை எப்போதும் மறக்கமாட்டார்!

0807.  அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
           வழிவந்த கேண்மை யவர்

           விழியப்பன் விளக்கம்: அன்பின் அடிப்படையில், பழமையான நட்பைப் பேணுவோர்; 
           எவரேனும் அழிவின் அடிப்படையில் செயல்களைச் செய்தாலும், அன்பை அறுக்கமாட்டார்!
(அது போல்...)
           உரிமையின் அடிப்படையில், பிறந்த ஊரை நேசிப்போர்; எவரேனும் மொழியின் 
           அடிப்படையில் பிரிவினைகளைச் செய்தாலும், உரிமையை இழக்கமாட்டார்!

0808.  கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
           நாளிழுக்கம் நட்டார் செயின்

           விழியப்பன் விளக்கம்: நண்பர்களின் குறைகளைப் பிறர் சுட்டுவதைப் பொருட்படுத்தாத, 
           பழைமை உணர்ந்த ல்லவர்க்கு; நண்பர்கள் தவறு செய்யும் நாளும், பயனுள்ள நாளே!
(அது போல்...)
           பிள்ளைகளின் பிழைகளைப் பிறர் விமர்சிப்பதை மிகைப்படுத்தாத, வாழ்வு அறிந்த 
           பெற்றோர்க்கு; பிள்ளைகள் பிழை செய்யும் நாளும், நிறைவுள்ள நாளே!

0809.  கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
           விடாஅர் விழையும் உலகு

           விழியப்பன் விளக்கம்: பழைமையை இழக்காமல், நெடுங்காலம் தொடரும் நண்பர்களின் 
           நட்பைக் கைவிடாதவர்களை; இவ்வுலகம் போற்றும்!
(அது போல்...)
           வம்சத்தை முறிக்காமல், தலைமுறைகள் தொடரும் பெண்களின் பெண்மையை 
           மறக்காதவர்களை; இச்சமூகம் வணங்கும்!

0810.  விழையார் விழையப் படுப பழையார்கண்
           பண்பின் தலைப்பிரியா தார்

           விழியப்பன் விளக்கம்:ழைய நண்பர்களிடம், பழைமை எனும் நட்புக் காரணியை 
           மாற்றாதோர்; அவரின் நட்பை விரும்பாதப் பகைவரால் கூட விரும்பப்படுவர்!
(அது போல்...)
           வம்ச உறவுகளிடம், தலைமுறை எனும் உறவுச் சங்கிலியை அறுக்காதோர்; அவரின் 
           குடும்பத்தை நேசிக்காத உறவுகளால் கூட உறவாடப்படுவர்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக