சனி, நவம்பர் 09, 2019

என்னப்பனின் எண்பது (80)...


எண்பது” என்பது
எம்பலருக்கும் எட்டாதது!
எண்பதை” என்புஅதை
எச்சிதைவும் இன்றியே
எட்டியிருக்கும் என்னப்பனே!

ஒன்பது - நவம்பரின்று
"எண்பது" முடிந்தது
என்பது, எம்யார்க்கும்
எண்ணிலங்கா பெருமையே!
எண்ணிக்கை தொடரட்டும்!

எமைப்பெற்ற எம்மப்பனே
எஞ்சியிருக்கும் எந்நாளும்
எக்கவலையும் இன்றியே
எழுச்சியுடன் வாழ்வீர்!
எழுபிறப்பிலும் எம்மப்பனாவீர்!

ஞாயிறு, ஜூலை 28, 2019

இஃக்லூ (2019)

  • சிறப்பான படங்களின் பட்டியலில், இப்படம் இணைந்திருக்கிறது. துணைப் பாத்திரங்களில் வரும் ஒரிருவரைத் தவிர, மற்ற எவரையும் இதுவரை பார்த்ததில்லை! ஆனாலும், படம் மனதில் ஆழ பதிந்திருக்கிறது. கதையும்/திரைக்கதையும் "மட்டும்தான்" நிரந்தர நாயக/நாயகிகள் என்பதை - இப்படம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.
  • “இந்திய திரைப்பட வரலாற்றிலேயே, முதல் முறையாக...” போன்ற எந்த பிரம்மாண்டமும் இல்லை. இதுவரை “சொல்லாத கதை! சொல்லப்படாத திரைக்கதை!” என்ற எந்த அம்சமும் இல்லை. ஆனாலும், படம் மனதை முழுதாய் ஆட்கொள்கிறது. முக்கியமான எல்லா உறவுகளையும் இணைத்து சொல்லப்பட்டு இருக்கும் கதை. திரைக்கதை - ச்சும்மா பின்னி பெடல் எடுத்திருக்காங்க - என கலோக்கியலாய் சொல்வதே சிறந்தது.
  • உறவுகளையும் காட்சிகளையும் - மிக மிக இயல்பாய்/யதார்த்தமாய் - படைத்திருப்பது; திரையுலகம் மற்றும் பிற துறையில் இருக்கும் பலருக்கும் ஒரு படைப்பிலக்கணம்.
  • மெய்சிலிர்க்கும் சண்டை, கண்ணைக் கவரும் வெளிநாட்டுப் படப்பிடிப்பு, உலகத்தரம் வாய்ந்த கிராஃபிக்ஸ் - என எந்த பிரமாண்ட முயற்சியும் இல்லை! ஏன்... “காமெடி டிராக்” எனும் பெயரில் - இப்போதைய நகைச்சுவை மற்றும் கதாநாயகர்கள் செய்யும் காமெடிக் கொடுமை கூட இல்லை. ஆனாலும், அருமையான நகைச்சுவை காட்சிகள் இருக்கின்றன.
  • ஹீரோ என்றாலே - கதையின் பாத்திரப்படைப்பு எப்படி இருந்தாலும் - ஸ்டைலாய் ஆடை அணியவேண்டும் என்ற போலி-இலக்கணம் இல்லை. வெகு இயல்பாக, சட்டையை கால்சட்டைக்குள் திணித்து காட்சியளிக்கும் அழகிய/அடக்கமான கதையின் நாயகன்!
  • ஹீரோயின் என்றாலே - கதையின் பாத்திரப்படைப்பு எப்படி இருந்தாலும் - கவர்ச்சியாக உடல் அங்கங்களைக் காண்பித்தே ஆகவேண்டும் என்ற போலி-இலக்கணமும் இல்லை. வெகு இயல்பான உடையில், நம் உறவுக்குள் இருக்கும் ஏதேனும் ஒரு பெண்ணை நினைவூட்டும் கதையின் நாயகி!
  • "நாயகன்/நாயகி இருவருள் எவரின் பாத்திரப்படைப்பு சிறந்தது?" என ஒரு பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு - இருவருக்கும் சமமான/சவாலான பாத்திரப் படைப்புகள்! இருவரின் நடிப்பும் அற்புதம் - தேர்ந்த நடிப்பு.
  • நாயகன்/நாயகி மட்டுமல்லாமல், படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அருமை. ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரப்படைப்பை - இயல்பாய்/இனிமையாய் செய்திருப்பது படத்தின் மற்றொரு பலம்.
  • ஒரு பிரச்சனையை, இவ்வளவு ஆழமாய்; அடுக்கடுக்காய் தொடர்ந்து சொல்லி அதன் வீரியத்தை, எந்த செயற்கைத்தனமும் இல்லாமல்; நம்முள் இயல்பாய் கடத்துவது என்பது மிகப்பெரிய சவால்! என்னளவில், அவ்வாறு என்னை ஆட்கொண்டது என் மானசீக குரு எழுத்து சித்தர் பாலகுமாரன் மட்டுமே! அப்படியோர் திரைக்கதை. க்ளைமாக்ஸ் கூட - எவ்வித தேவையற்ற நீட்சியும்/சினிமாத்தனமும் இல்லாமல் - வெகு இயல்பாய் அமைந்து இருக்கிறது. 
  • இஃக்லூ - இதன் பொருள் என்ன? படம் முடிந்தவுடன், கூகுளில் தேடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே, படத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். உங்களுக்கு கூட அதன் பொருள் குறித்த ஆவல் எழக்கூடும். நமக்கு எந்த சிரமத்தையும் தராமல், அது மிகச் சுருக்கமாய்; ஆனால் மிக ஆழமாய் சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பார்த்ததும் - நிச்சயமாய் நீங்களும் “அடடா! என்னவொரு அற்புதமான படத்தலைப்பு?!” என உணர்வீர். படைப்பாளிகளே! உங்கள் கற்றலை "ஹீரோ அல்லது ஹீரோயின் கதாப்பாத்திரப் பெயரை வைப்பதைத் தவிர்த்து" படத்திற்கு தலைப்பை எப்படி இடுவது என்பதில் துவங்குவீராக!
  • கலர்ச்சட்டை முதல், பல அடையாளங்களுடன் “பெரிய ஹீரோக்கள்/பெரிய பட்ஜெட்" படங்களை முதல் காட்சியே பார்த்துவிட்டு விமர்சிக்கும் பிரபலமான விமர்சகர்கள் யாரும் இப்படத்தை விமர்சித்ததாய் தெரியவில்லை! அவர்கள் இப்படத்தை விமர்சித்தால், இது பலரையும் சென்றடையும். என்னளவில், விமர்சனக் கடமையென்பது ஒன்றுதான்: பிடிக்காத படத்தைப் பற்றி விமர்சனம் செய்து, எல்லோரின் நேரத்தையும் வீணடிக்கக் கூடாது; அதுபோல், என்னை ஆட்கொண்ட ஒரு படத்தை விமர்சிக்கத் தவறவே கூடாது!
  • என்னை அறிந்த சிலரையாவது, இந்த விமர்சனம் சேரவேண்டும்! அவர்கள் மூலம், பலரையும் அடைந்தால் மேலும் சிறப்பு. உங்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பின் மூலமாவது - இப்படத்தை ஒருமுறை(யாவது) பாருங்கள்; வாழ்க்கையின் பல நிகழ்வுகளை பிரதிபலித்து நினைவூட்டும்.
இப்படம் - ஏதோவொரு விதத்தில்; நம் வாழ்க்கையை ஒத்திருக்கும்!!!

ஞாயிறு, மார்ச் 31, 2019

வாட்ஸ்ஆப் வாழ்க்கை...



“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென சொல்வோர்க்கு தெரியுமா,
வெளிநாட்டு வாழ்க்கையின் சிரமங்கள்?

இந்தியாவில் மட்டுமல்ல! இங்கேயும்
பணம் மரத்தில் காய்ப்பதில்லை!
பணத்திற்காக இரத்தமே காய்கிறது!

தோசையோ சோறோ, குடும்பத்துடன்
உண்பதே இன்பம்! பீட்ஸாவும்
பாஸ்த்தாவும் தனிமையில் கொடுமையே!

கேட்கமுடியா  சொல்லும்; மகிழ்வில்லா
வேலையும்; கேவலம் இப்பணத்திற்காக
அல்லவா, மனமுவந்து ஏற்கிறோம்?

இதையெல்லாம் தாண்டியேன் இங்கே
இருக்கிறோம் என்கிறீரா? இதுவோர்,
புலிவால் பிடித்த கதையே!

பிடித்த காரணத்தை விடவும்,
விடுக்கும் காரணம் முக்கியமானது!
விடுக்கும் வழிதெரியாது விழிக்கிறோம்!

பணமா வாழ்க்கை? இல்லையே!
பணத்துடன் குடும்பமும் இருப்பதுதானே
வாழ்க்கை? புலிவாலை விடமுடியாமல்;

வாட்ஸ்ஆப்பில் வாழ்கிறோம் இப்பாவிகள்!
குழந்தையுடன் கொஞ்சலும் பேச்சும்;
பொண்டாட்டியுடன் ஊடலும் சாடலும்;

பெற்றோரின் பாசமும் நேசமும்;
பிறந்தாரின் அன்பும் ஆதரவும்;
சுற்றத்தாரின் உறவும் நட்பும்;

எல்லாம் வாட்ஸ்ஆப் வாழ்க்கையே!
வாட்ஸ்ஆப் இல்லாத தருணமெல்லாம்;
வாழ்வை இழந்த தருணங்களே!

“அவனுக்கென்ன? வெளிநாட்டு வாழ்க்கை!”
அப்படியென அடுத்தமுறை சொல்லும்முன்,
இப்பதிவை நினைத்திடுங்கள் மனங்களே!

“அவனுக்கேன் இப்பரிதாப வாழ்க்கை?”
அப்படியென ஒருவர் பேசினாலும்,
அப்படி வாழ்வோர்க்கு அருமருந்தாகும்!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு