சனி, ஜூன் 23, 2018

குறள் எண்: 1056 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1056}

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்

விழியப்பன் விளக்கம்: யாசகம் தரும் தகுதியை மறைக்கும், தீக்குணம் இல்லாதவரைக் கண்டால்; யாசகம் கேட்கும் நிலையில் உள்ளோரின், தீமைகள் அனைத்தும் ஒருசேர அழியும்!
(அது போல்...)
பொதுநலம் காக்கும் திறனை மறுக்கும், சுயநலம் அற்றோரைக் கண்டால்; போராடிப் பெறும் நிலையில் இருப்போரின், தேவைகள் யாவும் ஒருசேர தீரும்!

வெள்ளி, ஜூன் 22, 2018

குறள் எண்: 1055 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1055}

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது

விழியப்பன் விளக்கம்: யாசகம் தரும் தன்மையை மறைக்காத சான்றோர், உலகில் இருப்பதால் தான்; யாசிப்போர், ஒருவரின் முன் நின்று யாசகம் மேற்கொள்வதும் நிகழ்கிறது!
(அது போல்...)
மக்களைக் காக்கும் கடமையைத் தவறாத கட்சிகள், அரசியலில் உள்ளதால் தான்; பொதுமக்கள், ஒருவரை முன் நிறுத்தி தேர்தலை நடத்துவதும் நடக்கிறது!

வியாழன், ஜூன் 21, 2018

குறள் எண்: 1054 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1054}

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

விழியப்பன் விளக்கம்: யாசகம் தரும் தகுதியை மறைக்கும் செயலை, கனவிலும் அறியாத ஒருவரிடம்; யாசகம் கேட்பது கூட, பிறருக்கு கொடுப்பது போன்றதே ஆகும்!
(அது போல்...)
நீதியைக் காக்கும் அதிகாரத்தை மறுக்கும் செயலை, பதவிக்காகவும் செய்யாத ஆட்சியரிடம்; கோரிக்கை வைப்பது கூட, நீதியை வென்றது போன்றதே ஆகும்!

புதன், ஜூன் 20, 2018

குறள் எண்: 1053 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1053}

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து

விழியப்பன் விளக்கம்: யாசகமெனும் கடமையை உணர்ந்து, யாசகம் தரும் தகுதியை மறைக்காத உள்ளமுடைய ஒருவரின் முன் நின்று; யாசகம் கேட்பதும், ஒருவித அழகை உடையதாகும்!
(அது போல்...)
அரசியலெனும் பொதுநலனைக் காத்து, அரசியல் செய்யும் முயற்சியை கைவிடாத திடமுடைய ஒருவரை முன் மொழிந்து; அரசியலுக்கு அழைப்பதும், ஒருவித சமுதாயக் கடமையாகும்!

செவ்வாய், ஜூன் 19, 2018

நாமும் நம்முடைய முன்னுரிமைகளும்...

குறள் எண்: 1052 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1052}

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

விழியப்பன் விளக்கம்: யாசகமாய் கேட்கப் படுபவை, கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் துன்பம் அளிக்காமல் இருக்குமாயின்; யாசகம் கேட்பது கூட, ஒருவருக்கு இன்பமே ஆகும்!
(அது போல்...)
உரிமையாய் கோரப் படுபவை, கோருவோருக்கும் அளிப்போருக்கும் விரிசலை உருவாக்காமல் இருக்குமாயின்; உரிமையைக் கோருவது கூட, ஒருவருக்கு வெற்றியே ஆகும்!

திங்கள், ஜூன் 18, 2018

குறள் எண்: 1051 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 106 - இரவு; குறள் எண்: 1051}

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று

விழியப்பன் விளக்கம்: யாசகம் கேட்கத் தகுதியானவரைக் கண்டால், யாசகம் கேட்க வேண்டும்! யாசகம் தரும் தகுதியை மறைத்தால், அது அவர் பழியாகும்! யாசகம் கேட்போரின் பழியல்ல!
(அது போல்...)
அரசியல் செய்யும் திறனுடையவரை அறிந்தால், அரசியலுக்கு அழைக்க வேண்டும்! அரசியல் செய்யும் திறனை மறுத்தால், அது அவர் பிழையாகும்! அரசியலுக்கு அழைப்போரின் பிழையல்ல!

ஞாயிறு, ஜூன் 17, 2018

குறள் எண்: 1050 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 105 - நல்குரவு; குறள் எண்: 1050}

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று

விழியப்பன் விளக்கம்: வாழ்க்கையின் அடிப்படை இல்லாதோர், முற்றும் துறவாமல் வாழ்வது; வேறொருவரின் உப்பிற்கும் கஞ்சிக்கும், எமனாக இருப்பது போன்றதாகும்!
(அது போல்...)
போராட்டத்தின் பின்னணி அறியாதோர், முற்றும் அறியாமல் கருத்திடுவது; பிறரின் வாழ்விலும் உரிமையிலும், நஞ்சைக் கலப்பது போலாகும்!

சனி, ஜூன் 16, 2018

குறள் எண்: 1049 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 11 - குடியியல்; அதிகாரம்: 105 - நல்குரவு; குறள் எண்: 1049}

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

விழியப்பன் விளக்கம்: தேர்ந்த பயிற்சியால், நெருப்பில் உறங்குவது கூட சாத்தியமாகும்! ஆனால் எவ்வித வலிமையாலும், வறுமையில் உறங்குவது சாத்தியமற்றது ஆகும்!
(அது போல்...)
ஆழ்ந்த பகுத்தறிவால், விதியை வெல்வது கூட இயலும்! ஆனால் எவ்வித சதியாலும், வாழ்வை வெல்வது இயலாதது ஆகும்!