வெள்ளி, பிப்ரவரி 24, 2012

வீட்டின் விலையுயர்வை யார் நிர்ணயிக்கிறார்கள்?...       மிக சமீபத்தில் ஒரு வீடு அல்லது வீட்டு மனை வாங்கலாம் என்று தீவிரமாய் முயற்சி செய்து - என்னுடைய தெளிவான திட்டமிடாத செயலால் - அதை தள்ளிப்போடவேண்டிய சூழல் நேர்ந்து விட்டது.   எனக்கு ஏற்பட்ட தடைகளையும் அவற்றிற்கான காரணங்களையும், என்னுடைய பார்வையில் விளக்க முயற்சித்துள்ளேன். இயல்பிலேயே, எனக்கு பணத்தின் மீது ஈடுபாடு கிடையாது; அதற்கு ஏன் இத்தனை மதிப்பும், முதன்மையும் கொடுக்கவேண்டும் என்ற கோபம் எப்போதும் உண்டு. திருமணம் நடந்த பின்னும், என்னவளையும் என் மகளையும் மிக நன்றாக பார்த்துக்கொண்டாலும் - எங்களுக்காய் ஒரு வீடு வாங்கவேண்டும் அல்லது சிறிதாவது பணம் சேமிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது இல்லை. இது எனக்கு வலிமையாய் உணர்த்தப்பட்ட பின் தான், அப்படியொரு செயல் செய்ய வேண்டும் என்று எண்ணி துவங்கினேன்; வங்கியில் கடன் வாங்கி வாங்கிவிடலாம் என்று அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டேன்; ஆனால், அதற்கு முன் பணம் எப்படி செலுத்துவது? நிலை குலைந்து போனேன்! ஒரு சிறிய சுயநல உணர்வோடு நான் எனக்காய் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகை சேமித்து வைத்திருப்பினும், எத்தனை உதவியாய் இருந்திருக்கும். என்னுடைய தவறு புரிந்தது! சரி, அதை வேறெவரிடமாவது வாங்கி வங்கிக்கு முன்பணம் செலுத்தி வாங்குவது என்பது "மிகப்பெரிய முட்டாள்தனம்" என்று உணர்ந்ததும் தான் - மேற்கூறிய வண்ணம் அந்த செயலை தள்ளிப்போட வேண்டும் என்ற சூழல் வந்தது. 

         ஏற்கனவே பணத்தின் மீதிருந்த என் அவமதிப்பு, இந்த வீடு அல்லது வீட்டு மனை விலை அறிந்ததும் மேலும் அதிகரித்தது!!! யார் இந்த விலையேற்றத்தை நிர்ணயம் செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்தது. நாம் அனைவரும் நகரத்தில் - குறிப்பாய் - நகரின் மையத்தில் வசிக்கவேண்டும் என்று தான் விரும்புகிறோம். எல்லோருக்கும் நகரின் மையத்தில் வீடு அல்லது வீட்டு மனை வேண்டுமெனில், எப்படி சாத்தியமாகும்? அப்போது இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மிகப்பெரிய போட்டி இருப்பின், வேறு என்ன தான் வழி இருக்க முடியும்?? நகரில் வசிக்கிறேன் என்பதையே ஒரு "பாணி அறிக்கையாய்" (style statement) சொல்கிறோம். நகரத்தில் வசித்தால் தான், காய்கறி வாங்குவதில் தொடங்கி அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம் என்பது மிகமுக்கிய காரணம். இது பெருநகரத்திற்கு மட்டுமல்லாது சிருகரங்களுக்கும் பொருந்தும். இது பற்றி தீவிரமாய் யோசிக்கும் போது, எனக்கு ஒரு கேள்வி எழுந்தது! ஏன், நாம் மேலை நாடுகளில் இருப்பது போன்று மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளை (supermarket) புறநகர்ப் பகுதியில் அமைக்கக்கூடாது? இப்போது, பெருநகரங்களில் அங்காடி தெருக்களில் ஒரு சிறிய நான்கு சக்கர வாகனம் மட்டும் அல்ல - ஒரு இரண்டு சக்கர வாகனத்தை கூட  நிறுத்த முடிவதில்லை. இந்த பல்பொருள் அங்காடி தளங்களை புறநகர் பகுதிக்கு கொண்டுசென்றால், மிகப்பெரிய நிறுத்துத்-தளங்கள் அமைக்கலாம். அனைவருக்கும், நேர விரயம் கூட மீதமாகும்.

       சரி, முக்கியமான விளைவுக்கு வருவோம்; இவ்வாறு புறநகர்ப் பகுதிகளுக்கு இத்தளங்கள் தடம் பெயர்ந்தால், கண்டிப்பாய் நகரத்தின் மையம் அல்லது அருகில் என்ற எண்ணமே கண்டிப்பாய் (படிப்படியாய்) மறைந்துவிடும். மேலை நாடுகளில் ஒரு தொழில் நிறுவனமோ அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனமோ நகரத்தில் இருந்து தள்ளி இருப்பின், அதனை சுற்றி சகல வசதிகளுடன் ஒரு சிறுநகரத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் புறநகர் பகுதியில் இருக்கும் எத்தனை தொழில்நிறுவனம் அல்லது பலகலைக்கழகம் அதிக இட வசதிகளுடன் உள்ளது? அவைகளைச் சுற்றி தேவையான வசதிகள் அனைத்தும் ஏற்ப்படுத்தி கொடுத்தால் மக்கள் அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவார்கள்; ஏதும்   இல்லை என்பதால் தான் அவர்கள் அருகில் உள்ள நகரத்திற்கு செல்கிறார்கள். இதில், விதிவிலக்காய் சில நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த வசதி பெருகிவிடின், மக்கள் பரவலாய் வசிக்க ஆரம்பித்துவிடுவார். மேலும், அவர்கள் நிதானமாய் தத்தம் பணியிடங்களுக்கு செல்ல முடியும்! போக்குவரத்து நெரிசல் குறையும்; அவர்களுக்கு நேர விரயமும், பண விரையமும் குறையும். மிகக் குறைந்த விலையில் அங்கே வீடுகளையும் - வீட்டு மனைகளையும் வாங்குவார்கள். சரி, இதை யார் செய்வது? கண்டிப்பாய், பணபலமும் அதிகார பலமும் உள்ளவர்கள் தான் இந்த முயற்சியை துவங்கவேண்டும்! சரி, அவர்களே, இந்த இடம் சம்பந்தமான வியாபாரத்தில் மும்மரமாய் இருக்கும் போது - இந்த யோசனை தெரிந்தும் கூட எப்படி செய்ய முனைவார்கள்?

           இந்த வசதி வாய்ப்பை பரவலாய் விரிவாக்கின், இட மதிப்பு குறையும் என்று தெளிவாய் தெரிந்தும் கூட செய்ய வேண்டியவர்கள் செய்யா எத்தனிக்காத சூழல் இல்லை என்று உணர்ந்த போது - இதை நான் வேறொரு பரிமாணத்தில் யோசித்தேன். கண்டிப்பாய், வீடு அல்லது வீட்டு மனை வாங்குவது என்பது நல்ல விசயம் தான்; நமக்கென்று ஒரு சொத்தாகவோ அல்லது சேமிப்பாகவோ இருக்கும்! நம் நாட்டின் பொது சேமிப்பென்பது "பொன்-நகை" வாங்குவது! பொன் விலையேற்றத்தையும் மிஞ்சி ஏன் இந்த வீட்டின் விலையுயர்வு உள்ளது என்பதற்கு ஓர் காரணம் தெரிந்தது!! இங்கே உளவியல் சம்பந்தமான ஒரு விசயம் உள்ளதை தெளிவாய் உணர்ந்தேன்!!! நாம் வீடு அல்லது வீட்டுமனை வாங்கும்போதே நாளை "நல்ல இலாபம்" கிடைக்கும் என்ற கணக்கு போடுகிறோம்; வியாபாரிகளால் அந்த சிந்தனை வலிய தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது, நாம் ஒவ்வொருவரும் வியாபாரியாய் யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். இதில் தான், இந்த விலையேற்றத்திற்கான "ஆணி-வேர்" உள்ளது என்று தோன்றுகிறது. என்னிடம், பலர் இந்த யோசனையை சொன்னதுண்டு "எப்படியாவது வாங்கிப் போடு; இன்னும் சில ஆண்டுகளில் பெரிய இலாபம் கிடைக்கும்" என்று. எனக்கு அளவில்லாத கோபம் வரும்; இவ்வளவு சிரமப்பட்டு, வாங்குவதை விட கிட்டத்திட்ட மூன்று மடங்கு நான் வங்கிக்கு திரும்ப செலுத்தவேண்டியதையும் பொருட்படுத்தாது, ஒரு வீட்டை அல்லது இடத்தை வாங்குவதற்கு முன்னரே - நான் ஏன் அதை - விற்பது பற்றி யோசிக்கவேண்டும்?; எவ்வளவு அபத்தம் இது!!!

       இந்த எண்ணம் தான் இப்படியொரு விலையேற்றத்திற்கு மிகமுக்கிய காரணம். அதை வாங்கிவிட்டு, என் சம்பளத்தில் மிகப்பெரும்பான்மையான தொகையை நான் வங்கிக்கு கட்டவேண்டும்; அந்த தொகை போன பின் மீதமுள்ள சம்பள பணத்தில் நான் எவ்வாறு என்னவளுடனும், என் மகளுடனும் நிம்மதியாய் வசதியாய் வாழ முடியும்? இத்தனையும் சமாளித்து, நான் ஏன் ஓர் வியாபாரி போல் விலையேற்றத்தை பற்றி யோசிக்கவேண்டும்?? நான் தீர்மானதாய், இறுதியாய் நினைத்திருப்பது இது தான்; கண்டிப்பாய் எங்களுக்கென்று ஓர் வீடு அல்லது இடம் தேவை. அதை கண்டிப்பாய் என்னிடம் அடிப்படை தேவைக்கு (வங்கியின் முன்பணம் உட்பட) பணம் இருக்கும்போது தான் செய்வேன். நான் ஏன் வேறேவரிடம் கடனாவது வாங்கி அப்பொருளை வாங்க முயற்சிக்கவேண்டும்? ஒரு வீடு அல்லது இடத்தை வாங்கிவிட்டு, ஒரு பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் என்னுடைய நிகழ் கால வாழ்க்கையை - என்னுடைய சுயத்தை - இழந்து வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மிகச் சுருக்கமாய் கூறினால், வீடு வாங்குவது என்பது நமக்கென்று ஒரு "துணி" வாங்குவது போன்று சந்தோசமான நிகழ்வாய் இருக்கவேண்டும். துணி வாங்கியதால் பணப்பிரச்சனை எனில் ஒரு மாதத்தில் சமாளித்து விடலாம்; ஆனால், பெரும்பணம் கடன் வாங்கி - வீடோ அல்லது வீட்டு மனையோ வாங்குவதால் பணப்பிரச்சனை வந்தால் அது பல ஆண்டுகள் நீடித்திருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

வாழ்க்கை - இடத்தை வாங்குவதிலில்லை !
இன்றைய தினத்தை - வாழ்வதிலுள்ளது!!!


பின்குறிப்பு: என் வருவாய்க்கேற்ற தொகையில் வாங்கி, மீதமுள்ள வருமானத்தில் என்னுடைய நிகழ்கால வாழ்க்கையை எப்போதும் போல் (நிம்மதியாய்; என்னவளுக்கும் - என் மகளுக்கும் தேவையானதை எப்போதும் போல் நிறைவேற்றி) வாழ ஆசைப்படுகிறேன். 

கானல் காதல்...அவள் முகத்தில் நாணல்
இவன் முகத்தில் மின்னல்
அவளனுதினம் பார்வை வீசினள்
இவன் மனமுழுதும் பரவினள்

அவள் செய்கைகளை கூட்டினள்
இவனுள் காதல்தீயை மூட்டினள்
அவளப்படி சிலகாலம் தொடர்ந்தனள்
இவன்தீயில் எண்ணெய் ஊற்றினள்

அவள் சினுங்கல்களை குறைத்தனள்
இவனை சிறிதுசிறிதாய் வதைத்தனள்
அவள் தவிர்த்தாள்  காணல்
இவன் முகம்போனது கோணல்

அவளுக்கு பார்த்த வரனால்
இவனுக்கு நேர்ந்ததிந்த இன்னல்
அவள் மறைக்க எண்ணினள்
இவனுக்கு உரைத்தது உறவினள்

அவளுக்கிது தெரிந்ததும் பயந்தனள்
அவனைக்கண்டு வீட்டினுள் ஓடினள்
அவள் அடைத்தாள் ஜன்னல்
இவன் காதலானது கானல்!!!

நிலவில் மாற்றம்?...நிலவு...

குழந்தையில் உணவூட்டியது
காதலிக்கையில் குளிர்வூட்டியது
திருமணமாகையில் மகிழ்வூட்டியது
தந்தையாகையில் தாலாட்டியது
வேதனைடைகையில் தெளிவூட்டியது
கவிபடைக்கையில் கற்பனையூட்டியது

மாற்றம்...
நிலவிலா? நினைவிலா??

கடிகாரமும் கடன்பட்டவனும்...


 
ஓய்வில்லாமல்- எதற்கென
தெரியாமல் - நிற்காமல்
ஓடி ஓடி
ஓர் நாள்
வாழ்வையே முடிப்பர்
கடிகாரமும் கடன்பட்டவனும்!!!

அயர்ச்சி...காற்றால் மரம் அசைந்ததா
மரமசைவால் காற்று வந்ததா

அயராது யோசித்ததில் எனக்கு
அயர்ச்சியால் உறக்கம்(தான்) வந்தது!!!

கடனில் வாங்கிய வீடு...எத்தனை வசதிகள்
எத்தனை பெரிது
எனினும்! என்னை
எப்போதும் விழுங்கப்
பார்ப்பதாய் வந்து
பயமுறுத்தும் கடன்!
விரையமாவதோ பணம்!!
விம்மியழுவதோ மனம்!!!

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

கோதுமை தந்த குணம்...

{1958-59 ஆம் ஆண்டில், கண்ணதாசன் அவர்களின் "தென்றல்" இதழில்
ஈற்றடி - "கோதுமை தந்த குணம்"
என்ற தலைப்பில் நடந்த "ஈற்றடி வெண்பா" போட்டியில் முதல் பரிசைப் பெற்ற
"என்னப்பனின் முதல் கவிதை"}

நாடாளும் பண்டிதர்; "நான்சென்ஸ்" எனச்சொல்லி
தேடாத செல்வம் திராவிடத்தின் - மாட்சியாம்!
தீதில் பெரியாரைத் திட்டியது; வேறல்ல
கோதுமை தந்த குணம்

                                                                          {புலவர். இளமுருகு அண்ணாமலை}

உறவுகளை அழைப்பதில் ஒரு திருத்தம்...

                  சில உறவுகளை அழைப்பதில் திருத்தம் வேண்டும் என்று நான் தீர்மானமாய் விரும்புகிறேன்;  அந்த உறவுகளை அழைக்கும் விதத்திலேயே ஒரு பிடிமானம் இல்லாததாய் படுகிறது; அதை சரிவர அழைக்கும்போது அந்த உறவுகளின் பலம், மேலும்  பலப்படும் என திடமாய் எண்ணுகிறேன். இது, ஆங்கில மொழியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது;  நம் மொழியில் சில உறவுகளுக்கு அப்படி உண்டெனினும், முழுதுமாய் இல்லை. முதலில், மாமியார் - மாமனார்   என்பதை எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் "mother-in-law" - "father-in-law" என்று, தெளிவாய் குறிப்பிடுகிறார்கள்; இங்கு, இரண்டு உறவிலும் அம்மா, அப்பா என்ற வார்த்தைகள் வருகின்றன. இது ஏன், நம் தமிழ் மொழியில் அவ்வாறு அழைக்கப்படவில்லை? இது, மொழிக்கு மொழி மாறுபடும் என்ற விதண்டாவாதம் வேண்டாம்! நம் மொழியில் கூட, மரு-மகன், மரு-மகள் என்ற இரண்டு உறவுகளுக்கு அடிப்படை உறவான மகன், மகள் என்ற வார்த்தைகள் வருகின்றன; ஆங்கிலத்திலும் அவர்கள் "son-in-law", "daughter-in-law" என்று அவ்வாறே அழைக்கிறார்கள். எனவே, நம் மொழியில் அவ்வழக்கம் கூட உண்டு என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். எனக்கு தெரிந்த இந்திய மொழிகளில் கூட மாமியார்-மாமனார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ளது போல் இணையான வார்த்தைகள் இல்லை. வேறு இந்திய மொழிகளில் இதற்கு இணையான வார்த்தைகளைக் கொண்டு அழைக்கும் பழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன். 

             என் தந்தை "தமிழ்த் திருமணம்" செய்தவர்; ஏனோ என் தமையன், தமக்கை - களுக்கு அவ்வாறு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் மனைவி பாரம்பரியம் மிக்க தமிழ்க்குடும்பத்தில் இருந்து வந்தவள் ஆதலால், என் திருமணம் "சுயமரியாதைத் திருமணம்"-ஆய் நடக்க வழி வகுத்தது. இம்மாதிரித் திருமணங்களில் தமிழறிஞர்களும் பெரியோர்களும் தமிழில் வாழ்த்துவது வழக்கம்; அவ்வாறே நடந்தது. அப்போது நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கேட்டு, என் நன்றியை தெரிவித்துவிட்டு என்னுடைய இந்த ஆதங்கத்தை கூறி அங்கிருந்த பெரியோர்களை அதற்கு இணையான வார்த்தைகளை உபயோகிக்க பழக்குமாறு கூறினேன். திருமண மண்டபத்தில் இருந்த சப்தத்தில் எத்துனை பேர்களின் செவிகளை (என் குடும்பத்தார் உட்பட) இது சென்று சேர்ந்தது எனக்கு தெரியவில்லை. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து  மேடைக்கு வந்த "இளங்கலை" பட்டப்படிப்பில் உடன் படித்த நண்பன் திரு. இரமேசு என்பவன், என்னுடைய அந்த சிந்தனையை மெச்சினான்; அது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாய்  உணர்ந்தேன். நாம் ஏன், இந்த முயற்ச்சியை துவக்கக் கூடாது? மாமியாரை - "மருதாய்" அல்லது "மரு-அம்மா" என்றும், மாமனாரை - "மருதந்தை" அல்லது "மரு-அப்பா" என்றும்  ஏன் அழைத்து பழகக் கூடாது? மேலும், தம்பியின் மனைவி அல்லது அண்ணியைக் கூட "மருதங்கை/ மருதமக்கை" என்று அழைத்து பழகலாம். தங்கையின் கணவனை "மருதம்பி" என்றும், தமக்கையின் கணவனை "மருதமையன்" என்றும் அழைத்துப் பழகலாமே?

           மாமனார், அத்தையின் கணவன், சகோதரியின் கணவன் மூன்று பெயரையும் பொதுவாய் "மாமா" என்றழைக்கிறோம். மற்ற உறவுகளைப் போல், அந்த தனித்தன்மை (கூட) இல்லாதாய் படுகிறது. எனக்கு ஏனோ, அத்தையின் கணவனை மட்டும் "மாமா" என்றழைத்துவிட்டு, மற்றவர்களை மேற்கூறியவாறு ஒரு தனித்துவமான உறவு-முறைச் சொல் கொண்டு அழைக்கவேண்டும் என்று திடமாக தோன்றுகிறது. ஏனெனில், அத்தை என்ற வார்த்தைக்கு மாற்று என்னவென்று தெரியவில்லை; சிறிய-அம்மா, பெரிய-அம்மா என்பதை அம்மாவின் சகோதரிகளுக்காய் பயன்படுத்துகிறோம். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, தனித்துவமான சொல்லை வேறு ஒரு உறவுக்கு பயன் படுத்துகிறோம் என்பது தான் (குறிப்பாய் நம் அண்டை தேசமான "இலங்கையில்"). ஆம்! தாத்தா - பாட்டி (ஆயா) என்ற அந்த உறவுகளைப் பற்றி தான் இங்கே குறிப்பிடுகிறேன்; ஆங்கிலத்தில் கூட இப்படி தனித்துவமாய் அழைக்க வார்த்தைகள் உள்ளனவா எனக்கு தெரியவில்லை. "திருச்சி" மக்கள் இந்த தனித்துவமான சொற்களை பயன்படுத்துவது என்னை மிகவும் கவர்ந்தது; தமிழகத்தில் வேறு எந்த பகுதியில் இவ்வாறு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பல சமயங்களில், அவ்வாறு என் தாத்தா-பாட்டியை அழைக்கவேண்டும் என்று எண்ணியதுண்டு. பின், அவர்கள் - நான் வேறு யாரையோ அழைப்பதாய் எண்ணிவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவிட்டேன். இப்போது, அப்படி அழைத்து பார்க்க நால்வரில் எவரும் இம்மண்ணுலகில் இல்லை. ஆம்! நாம் அப்பம்மா (அப்பத்தா) - அப்பப்பா, அம்மப்பா - அம்மம்மா (அம்மத்தா) என்று "தனித்துவமாய்" அழைத்து பழக வேண்டும் என்று தோன்றுகிறது.

    இப்போதுள்ள தலைமுறைக்கு, இதை உடனடியாக சொல்லிக் கொடுக்க முயன்றால் அது குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என்பதால், இதை அடுத்த தலைமுறையில் இருந்தாவது பழக்க ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. யார் ஆரம்பிப்பது? நாம் தான் ஆரம்பிக்க வேண்டும்! நான், என் மகளிடம் இருந்தே இதை துவங்க எண்ணுகிறேன். அவளுக்கு புரியும் வயது வந்தவுடன், இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறேன். முக்கியமாய், அம்மம்மா - அப்பம்மா வில் இருந்து துவங்கவேண்டும் என்று எண்ணுகிறேன்; அது தான் மிகவும் குழப்பமான உறவுமுறையாய் படுகிறது. என் மகளுக்கு இரண்டு வயது கடந்தவுடனே இந்த சூழ்நிலை வந்தது. ஒரு முறை நான், என் தாய் மற்றும் தமக்கையுடன் அமர்ந்து, என் மகள் விளையாடுவதை இடையில் பேச்சும் கலந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென, என் மகள் தன் அத்தையிடம் "ஆயா எங்கே?" என்று கேட்டாள்; அவர், என் அம்மாவைக் காட்டி "இதோ!" என்றார். என் மகள், சிறிது யோசித்து விட்டு பின், மிக புத்திசாலித் தானமாய் "சின்ன ஆயா, எங்கே?" என்று கேட்டாள். அதாவது, என்னுடைய "மருதாயை (மாமியார்)" எங்கே என்று கேட்டாள் என்பது அப்போது புரிந்தது.  எங்கள் அனைவருக்கும், பெரும் ஆச்சர்யம்! அவளின் சாதுர்யத்தைக் கண்டு; ஏனெனில், நாங்கள் எவரும் என் மகளுக்கு "சின்ன ஆயா/ பெரிய ஆயா" என்று  சொல்லியதில்லை. ஒருவேளை, என் மகள் அவர்களின் வயது வித்தியாசத்தை முதன்மைபடுத்தி இப்படி கேட்டிருக்கக் கூடும! இது குழப்பத்தின் அடிப்படையில் வந்த யோசனை. ஆனால், மாமியார்-மாமனார் உறவில் கோரப்பட்ட திருத்தம்…

என் உணர்வின் அடிப்படையில் எழுந்தது!!!

பின்குறிப்பு: என் மகளின் சாதுர்யத்தைப் பற்றி இன்னுமொரு செய்தி. அவள், என்னவளை அழைக்கும் போது "அம்மா, அம்மன்னா! அம்மன்னா!!" என்று ஒரு அழகிய-இராகமாய் அழைப்பாள். இது எவரும் சொல்லிக்கொடுத்தது இல்லை; இது அவளே பழகிக் கொண்டது. எனக்கு பல முறை பொறாமை கூட வந்ததுண்டு; என்னவளை (மட்டும்) அப்படி அழைக்கிறாளே என்று. எனினும், நான் கடந்த "டிசெம்பர் 2011" - இல் விடுமுறையில் சென்ற போது தான் அந்த அதிசய ஆனந்தம் நிகழ்ந்தது. ஆம்! என் மகள், என்னையும் "அப்பா, அப்பச்சா! அப்பச்சா!!" என்று அதே இராகத்தோடு அழைக்க ஆரம்பித்தாள். ஒருவேளை, இன்னும் மூன்று வயது கூட ஆகாத என் மகளும், உறவுகளை ஒரு "தனித்துவமாய்" அழைக்க எண்ணி, இவ்வாறு அவளே முயன்று இருக்கிறாளோ? வளர்ந்த பின், அவள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.                               

மேகமும் மோகமும்...மேகமும் மோகமும்
முரனா? முனைவா??

மேகம்   - அதிசய அசைவு
மோகம் - இம்சையில் அதிசயம்

மேகம்   - மழையின் முன்னுரை
மோகம் - காதலின் கருவறை

மேகம்   - கருவானது கடலில்
மோகம் - கரைவது காதலில்

மேகம்   - கடலின் கவிதை
மோகம் - உறவின் விதை

மேகம்   - உரசினால் மின்னல்
மோகம் - உரசினால் பின்னல்


மேகம்   - வானத்தில்  திரை
மோகம் - அறையில் வானவில்

மேகம்   - நிறத்தில் சாம்பல்
மோகம் - மனத்தில் தேம்பல்

மேகம்   - விலகின் வெளிச்சம் 
மோகம் - விலகின் அச்சம்

மேகம்   - முடிவில் சுழற்சி
மோகம் - முடிவில் அயர்ச்சி

முரனோ முனைவோ
மேகமும் மோகமும்
மனதிற்கு மகிழ்ச்சி!!!

மழை...

மழையே!

நீ நீரின் அண்ணையா?
நீர் உனக்கு அண்ணையா??

விடை எதுவாயினும் - தீர்க்கமாய்
விவசாயிக்கு நீ(ர்)விருவரும் அண்ணை!!! 

ஐந்தில் வளையாதது???!!!ஐந்தில் வளையாதது...

வளைய விழைவு இருப்பின்
வளைவின் விளைவு புரியின்
வளையும் கண்டிப்பாய் ஐம்பதிலும்!
வயதல்ல; விழைதலே முக்கியம்!!

வெறுமை...கோபமும் காமமும்
கலைந்த பின்
விளைவது வெறுமையே!!!

எதற்கு உவமானம்?அழகு
நட்பு
நன்றி
சமாதனம்

ஏனைக்கும் உவமானம்
விளங்கும் பறவையும்!
எதற்கு மனிதா
நீ உவமானம்?

சுயநலத்திற்கு???

குறையில் நிறை...இரவில் ஒளிமயம் - முதலிரவு
கொலையில் நியாயம் - போர்க்கொலை
வலியில் விருப்பம் - பிரசவவலி
வீழ்ச்சியில் கவர்ச்சி - நீர்வீழ்ச்சி

காதலில் உயர்ந்தது? - ஒருதலைக்காதல்???!!!

அதிசயம்...


கரணம் தப்பினால்...
மரணம் - ஆனால்!
கரணம் செய்வதே(உணவின்றி)
மரணத்திலிருந்து தப்பவே!!

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

இறைவன் இருக்கிறாரா? இல்லையா??...

(மிகக் கடினமான "விவாதங்களில்" ஒன்று )

      இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? என்பது நீண்ட நெடுங்காலமாய் சர்ச்சைக்குரிய விவாதமாய் தான் இருந்து வருகிறது. இந்த தலையங்கம் இக்கேள்விக்கு விடை சொல்வதற்கு அல்ல; இறைவனை "இல்லை" என்பவர்கள் அதை எப்படி தவறான செய்கையில் மறுக்கிறார்கள், அதில் உள்ள அபத்தங்கள் என்னென்ன என்பதை விளக்கவே!. பெரும்பாலும், இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் தங்களை "பகுத்தறிவுவாதி" என்று பறைசாற்றிக் கொள்கிறார்கள். பெரும்பாலும், இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் பெரிதும் தங்களின் ஆசானாய் கோடிட்டு காண்பிப்பது, "தந்தைப் பெரியார்" அவர்களைத் தான். அவர் தன்னுடைய இறை மறுப்புக் கொள்கையை, இறைவனைப் பற்றி பெரிதாய் கேலி, கிண்டல் எதுவும் செய்யாது - ஆனால் இறை வழிபாட்டில் உள்ள "மூட நம்பிக்கை" பற்றி (அவர் கருத்தை) எடுத்துறைப்பதன் மூலமாய் தான் செய்துள்ளார். தவிரவும், அவர் இறை வழிபாட்டில் உள்ள மூட நம்பிக்கை பற்றி மட்டுமே  பேசவில்லை; மற்ற எல்லா விதமான மூட நம்பிக்கை பற்றியும் பேசியுள்ளார். அவர், கோவிலில் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தபோது அதை மறுக்காது தன் கடமையாய் செய்தார்; கடவுளே இல்லை, அதன் பின் கோவில் எதற்கு, நான் ஏன் நான் அதில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வாதிட்டதாய் தெரியவில்லை. அவர் அடுத்தவர்களின் நம்பிக்கையை மறுக்கவில்லை; மாறாய், அதை மதித்தார். ஆனால், இன்று பகுத்தறிவுவாதி என்று பறை சாற்றிக் கொள்கிறவர்கள் அனைவரும், அந்த தவறைத் தான் செய்கின்றனர். 

       இந்த பகுத்தறிவாளிகள் பலரும் (குறிப்பாய் அரசியல்வாதிகள்), வேற்று மத கடவுள்களைப் பற்றி எதுவும் சொல்லாது அவர்கள் நடத்தும் விசேடங்களில் பங்கேற்று அந்த நடைமுறைகளை செய்யும் அவலங்களும் - ஏதேனும் ஒரு காரணத்திற்காய் (ஓட்டு வாங்குவது போன்று) - நடக்கின்றன. மற்ற மதம் சார்ந்த வழிபாட்டில் கலந்து கொண்டு செயல்படும்போது மட்டும் உங்களின் பகுத்தறியும்  அறிவு "மங்கிப்போய்" விடுகிறதோ? அல்லது நீங்கள் "இரட்டை-வேடம்" பூணும் நயவஞ்சகர்களா?? அதிலும், இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்துவிட்டால் போதும்; ஒரு குறிப்பிட்ட கடவுளை "தமிழ்க் கடவுள்" என்று வழிபடத் துவங்கி விடுவார்கள். கடவுளே இல்லை! எனில், "தமிழ்க் கடவுள்" எங்கே வருகிறார்? இன்னும் சிலர், குடுமபத்தில் இறந்தவர்களை "வழிபடும்" வழக்கத்தையும் மேற்கொள்கின்றனர். இவையனைத்தும் என்ன விதமான நம்பிக்கை? உங்கள் நம்பிக்கை தவறில்லை எனில், இறை-நம்பிக்கையும் தவறில்லை தானே?? முதலில் நீங்கள், உங்களின் நிலைப்பாட்டை "பகுத்தறியவேண்டும்" என்று சொல்ல தோன்றுகிறது. நீங்கள் கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடும் "மூட நம்பிக்கை" என்றால் எப்படி எதிர்கொள்வீர்கள்? இந்த "பகுத்தறிவுவாதிகள்" சிலர் ஒரு குறிப்பிட்ட நிற உடை ஆடை அல்லது உபகரணம் அணிவர்!!! இது என்ன நம்பிக்கை ஐயா? இறைவன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை; இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாயின் வைத்துக் கொள்ளுங்கள்! ஆனால், என் நம்பிக்கை தவறு என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை; அதுவும், உங்களையே பகுத்தறிய முடியாத போது உங்களுக்கு அந்த தகுதியே இல்லை. 

          இந்த பகுத்தறிவுவாதிகளில் பலர், இறைவன் இல்லை என்று வாதிடும் போது, இறைவழிபாட்டில் அதிக தொடர்புடைய, ஒரு குறிப்பிட்ட "இனம்" சார்ந்த மக்களையும் சேர்ந்து எதிர்ப்பதை பார்க்கும் போது, நான் மிகவும் குழம்பிப்போகிறேன். இவர்கள் யாரை எதிர்க்க வருகிறார்கள்? இவர்களின் உண்மையான கோபம் தான் என்ன? அந்த இனம் சார்ந்த ஒரு பிரபல நடிகர் கூட இறை மறுப்புக் கொள்கை உடையவர் தான்; ஆனால், அவரின் மறுப்புக்கொள்கை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! அவரிடம் "உண்மையான" பகுத்தறியும் குணம் உடையது என்று திடமாய் நம்புகிறேன். அவரைப் போன்ற பலர்,  அதை வேறொரு பரிமாணத்தில் பார்க்கின்றனர்; நம்புகிறவர்களுக்கு "இறைவனே அன்பு" எனில், இறைவனை நம்பாதோர்க்கு "அன்பே இறைவன்" என்று கூறுகிறார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் "பகுத்தறிவுவாதி" என்பவர்கள்; இறைவன் என்பது நீங்கள் நம்புவது (மட்டும்) அல்ல - மாறாய் அன்பு(ம்) தான் இறைவன் என்று கூறுகிறார்கள் அல்லவா, அது தான் சரி. எந்த ஒரு கருத்திற்கும் "உண்டு" அல்லது "இல்லை" என்ற இரண்டு சாத்தியக் கூறுகள் இருப்பதை மாற்ற முடியாது. ஒருவர், "உண்டு" என்பதை அவர்களிடம் உள்ள சான்றுகளைக் கொண்டு வாதிடும் போது - "இல்லை" என்பவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வாதிடுதல் தான் சரியாய் இருக்கக் கூடும். இல்லையேல், அதற்கு மாற்றாய் ஏதேனும் கூறவேண்டும். இவை இரண்டையும் விடுத்து, இறைவன் "உண்டு" என்பவன் அறிவிலி; அவன் மூட நம்பிக்கை உடையவன் என்பது எப்படி சரியான வாதமாகும்? 

         மேற்கூறிய நடிகர் வேறொரு திரைப்படத்தில், இந்த மறுப்புக் கொள்கையை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் கூறியிருப்பார். சூழ்நிலை இதுதான்; ஓர் பேரழிவின் விளைவாய் எண்ணற்ற பேர் இறந்திருப்பார்கள்  - அந்த சூழலில் கதாநாயகனும், கதாநாயகியும் பேசும் உரையாடலில் தான் அந்த மகத்துவத்தை அந்த நடிகர் (அவரே கதை, திரைக்கதையும் எழுதியவர்) பொதித்திருந்தார். முதலில், "இறை-நம்பிக்கை" மிகுந்த கதாநாயகி அத்தனை பேர் இறந்ததைக் கண்டு அடைந்த வேதனையில், மனித நேயத்துடன்"இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் இருக்கிறாரா? இல்லையையா?? என்ற சந்தேகம் வருகிறது!" என்பார். இதைக் கேட்டு, "இறை-நம்பிக்கையற்ற" கதாநாயகன் ஒரு பார்வை பார்ப்பார்; உடனே, கதாநாயகி நான் உங்களை மாதிரி இல்லை; எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பார். அதற்கு நாயகன் "நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்" என்பார்; அவரின் சோக பார்வை எந்த வசனமும் இல்லாமல், அவரும் அத்தனை மனித உயிர்கள் தந்த இழப்பால் விளைந்த மனித நேயத்துடன் பேசுவதை உணர்த்தும். இங்கே கவனிக்கப் படவேண்டிய ஒன்று, இருவரும் மனித நேயத்துடன் பயணப்பட்டிருப்பது தான்; அது தான் முக்கியம். நம்பிக்கை எதுவாயினும் இருக்கட்டும்; அது மனித நேயத்துடன் இருக்கவேண்டும். இங்கே வேதனையான விசயம் - இந்த தலைசிறந்த நிலைப்பாட்டை நாம் கடைபிடிக்கவேண்டும் என்பதை உணராதது மட்டுமல்லாமல் அந்த நடிகரையும் தவறாய் விமர்சிப்பது தான்.

      இறுதியாய், இந்துக்களின் கோவில்கள் (அல்லது மற்ற மதம் சார்ந்த கோவில்கள்) அனைத்தும் அறிவியலுடன் மிகுந்த தொடர்புடையது என்பது பெரும்பான்மையோனோர்க்கு (குறிப்பாய் இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு) தெரியாதது தான். மிகச் சிறந்த உதாரணம் (சமீபத்தில் மின்னஞ்சல் மூலம் கூட இச்செய்தி பரவலாய் உலா வந்தது), திருநள்ளாறு கோவில் பற்றிய செய்தி. உலகிலேயே அதிக அளவில் புற-ஊதாக் கதிர்கள் (ultraviolet rays) விழும் இடத்தை கண்டறிந்து (திருநள்ளாறு) அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டி, அக்கதிர்களுடன் தொடர்புடைய "சனிப்பெயர்ச்சி" என்ற ஒரு நிகழ்வை, அதிக கதிர்வீச்சு விழும் ஓர் நாளை (அறிவியல் ஆராய்ச்சி  அதிகம் இல்லாத காலத்தில்) பலவருடங்களுக்கு முன்பே கணக்கிட்டு அந்த நாளில் அந்த இடத்திற்கு பக்தர்களை வரச் செய்தது. அவ்விடத்தில், அதிக அளவில் கதிவீச்சு உள்ளது என்பதை உலகின் தலைசிறந்தவைகளில் ஒன்றான ஒரு விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் கூட உறுதி செய்துள்ளது. இறைவழிபாட்டில் உள்ள பல செய்கைகளுக்கு இம்மாதிரி அறிவியல் விளக்கங்கள் உள்ளன; எப்படியோ இந்த விளக்கங்கள் அனைத்தும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு சென்று சேராது மறைக்கப்பட்டுள்ளன. இதை அறியாத மேற்கூறிய "பகுத்தறிவுவாதிகள்" தான், அனைத்தும் மூட நம்பிக்கை என்கின்றனர். எனவே, இறைவழிபாட்டில், பெரும்பான்மையானவை அறிவும், அறிவியலும் சார்ந்தவை என்பதை உணர முற்படுவோம். சுருக்கமாய் சொல்லவேண்டுமெனில், எந்த ஒன்றையும் "பகுத்தறிய" முயல்வோம்.          


நம் நம்பிக்கை எதுவாயினும், மற்றவர் நம்பிக்கையை மதிப்போம்!!


பின்குறிப்பு: இறைவழிபாட்டில் அபத்தங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை; எந்த ஓர் நம்பிக்கையும் வரைமுறை தாண்டி அதிகமாகும் போது "மூட நம்பிக்கை" உருவாவதை தடுக்க முடியாது; அது அளவு கடந்த நம்பிக்கையின் பால் விளையும் ஒரு விளைவு. அம்மாதிரியான மூட-நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை. ஒவ்வொரு முறையும் நான் (தான்) வெல்வேன்/ வெல்ல வேண்டும் என்பது கூட எல்லையைத் தாண்டின (மூட)நம்பிக்கை தான்! அதனால், இங்கே இறை நம்பிக்கையில் மட்டும் "மூட-நம்பிக்கை" உள்ளது என்பதை எப்படி நியாயப் படுத்தமுடியும்? உண்டு எனில், அதை "பகுத்தறிபவர்" எப்படி சரி செய்யவேண்டும் என்று தெளிவு படுத்தவேண்டும்!!!

ஏழ்மையும் கல்வியும்...செவிக்குணவில்லாத போழ்து
சிறிது வயிற்றுக்கும்...

வயிற்றுக்கே உணவின்றேல்
வற்புறுத்தி ஈயினும் 
சேர்வது எங்கனம்
செவிக்கான உணவு?

விழியப்பன்...கவிக்கு கம்பன்
நன்மைக்கு நண்பன்
பாலத்திற்கு பாம்பன்
வழக்கிற்கு வம்பன்

(என்)விழிக்கு "விழியப்பன்"!!! 

நிலையற்றது...


ஆய்வியல்
சமையல்
வானியல் 

போல்
முடியும் முன்
நிலையில்லை - நாளை
நிகழும் விடியலும்!!!


காத்திருப்பு...


கொடு வலிகளாம்...
கழுத்தறுப்பு
கற்பழிப்பு
கருக்கலைப்பு

இவைகட்கு சற்றும்
குறைவில்லாதது...
காத்திருப்பு!!!

துணிவின் உச்சம்...அடங்கி போதல்
உண்மை பேசுதல்
தற்கொலை செய்தல்

போன்றவை "ஒருதலைக் காதல்"
போல் புரிந்து கொள்ள
படாத "துணிவின் உச்சம்"

பொய்யங்கீகாரம்...பொய்யை பொய்ப்பிப்பது
பிள்ளைகளின் பொய்யை(முதலில்) 
பொய்யாய் அங்கீகரிக்கும்
பெற்றோர் பொறுப்பே!!!

எதிரி - எதிரியா?


அழகு - அசிங்கம்
ஆண் - பெண்
விருப்பு - வெறுப்பு
இறைவன் - இயற்கை

ஒன்று இல்லையேல்
இன்னுமொன்று இல்லை
எனின் எதிரி
எதிரியா? இல்லை!
நட்பை நினைவூட்டும்
நல்லவன் அவன்!!!