ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

தமிழ்(தனி)-ஈழமும்; வேற்று-நாட்டு "நாட்டுரிமையும்...



    இரண்டு வாரங்களுக்கு முன், நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தபோது, சமீபத்தில் "சானியா மிர்சா" அமெரிக்க-ஓபன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் வென்ற பேச்சு வந்தது. ஒருவர், சானியாவை நாங்கள் இந்தியராய் ஏற்பதில்லை என்றார். நான், தெலுங்கான விவகாரத்தில் சானியாவைப் பற்றிய சர்ச்சைகள் வந்தபோது, ஃபேஸ்புக்கில் ஒருவர் எழுப்பிய அருமையான கேள்வியை நினைவு கூர்ந்தேன்: "பாகிஸ்தானியரை மணந்த சானியா பாகிஸ்தானி என்றால்; இந்தியரை மணந்த சோனியா யார்?" என்பதே அது. எனக்கு மிகவும் பிடித்த பின்னூட்ட-கேள்வி அது; பின்னர், சிறிது நேரம் சானியா இந்தியரா? இல்லையா? என்பதான விவாதம் இருந்தது. அப்போது தான் எனக்கு ஒரு பொறி தட்டியது: சானியா/சோனியா போன்ற பிரபலங்களைப் பற்றி-மட்டுமே கேள்வி கேட்கும் நாம், பல நாடுகளிலும் "இந்திய பாஸ்போர்டை" சரணடைத்துவிட்டு வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றிருக்கும் இந்தியர்களை ஏன் கேள்வியே கேட்பதில்லை? என்பதே அது.

    சானியா/சோனியா இருவரும் இந்தியாவுக்காக அலுவல்-ரீதியாய் வேலை செய்துகொண்டு இருப்பவர்கள். அவர்களையே கேள்வி கேட்கும் நாம், நம் நாட்டுரிமையை "விருப்புடனே" இழந்த சாமான்யர்களை ஏன் எதுவும் கேட்பதில்லை? அவர்கள் இந்தியாவுக்காக எதையும் செய்வதில்லை; மாறாய், இந்தியாவைப் பற்றி தாழ்வான எண்ணமே அவர்களில் பலருக்கும் இருக்கிறது. இதைப்பற்றி யோசித்து கொண்டிருந்த போது தான், "தமிழ்(தனி) ஈழத்துக்கும்" இம்மாதிரி வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றவர்களுக்கும்; ஒரு ஒற்றுமை இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும், வருங்காலத்தில் இவர்களும் "தமிழ்(தனி) ஈழம்"போல் ஒரு பிரிவினைவாதத்தை எதிர்கொள்ளவேண்டிய ஆபத்தும்; நிர்ப்பந்தமும் வரக்கூடும் என்பதை உணர முடிந்தது. உடனே, இது பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால், அதுபற்றி என்னுள் ஆழ யோசிக்க ஆரம்பித்தேன்; சரியாய் புரிந்து கொள்ளப்படவில்லை எனின், அது நகைப்புள்ளாகி என் கருத்து நிராகரிக்கப்பட்டு விடும் என்ற ஐயம் இருந்தது. 

         பின்னர், இரண்டு வாரங்கள் வரை என்னுள் யோசித்தவாறே இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன், ஃபேஸ்புக்கில் இரு நண்பர்களின் கருத்து விவாதத்தில் "என் முன்னோர் பிறந்த ஊரில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லையா... Person of Indian Origin (PIO) என்று இங்கு கொடுத்தனரே... அது ஏனோ? இங்கு இருப்பவர்கள் 100. 150 ஆண்டு முன்பு கூலி வேலைக்கு அங்கிருந்து தானே வந்தோம்...// நாங்கள் ஒன்றும் ஈழத்தமிழர்கள் போல் சிங்கை மண்ணின் சொந்தக்காரகள் என்ற கூறவில்லையே..." என்று கேட்டிருந்தார். அந்த விவாதங்களை இந்த இணைப்பில் காணலாம். உடனே, என்னை நானே சபாஷ் என்று தட்டிக்கொடுத்துக் கொண்டேன். இப்படி, ஒருவர் கோபமாய் கேள்வி கேட்கிறார் எனில், இது போன்ற சூழலை அவரும்/அவர் போன்ற பலரும் சந்திக்கின்றனர் என்று உறுதியாயிற்று. நானும் ஒரு 100/150 ஆண்டுகள் கழித்து நடக்கக்கூடிய ஒன்றைத்தான் என்னுடைய தொலைநோக்கு பார்வையில் பார்த்தேன்; என்னுடைய பார்வை சரியென்றே தோன்றியது.

     அதற்கு முன், அந்த நண்பருக்கு(மற்றும் அவர் போன்றோருக்கும்) PIO என்பதைப் பற்றி தெளிவு வேண்டி இப்படி பின்னூட்டம் இட்டேன்: "PIO-வை இங்கே குறிப்பிடுவது சரியான வாதமாய் தெரியவில்லை. அது "விசா" இல்லாமல், இந்தியாவுக்கு வருவதற்கான வசதி (இன்னும் சில வசதிகளுடன்). மற்றபடி, அதை வைத்துக்கொண்டு எந்த அரசு சார்ந்த அலுவல்களும் (வேலை, படிப்பு போன்றவை) செய்ய இயலாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். மேலும், இன்று ஈழத்தமிழர்கள் போல் அப்படி கேட்கும் நிலையில்லை! ஆனால், எதிர்காலத்தில் அப்படி கேட்பதற்கான நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது" என்றேன். அவர் என்னுடைய கருத்தை சரியாய் புரிந்துகொள்ளவில்லை என்பது புரிந்தது. எங்கள் வாதங்களை, மேலுள்ள இணைப்பில் படிக்கலாம். அவர், நானும் அங்கே சென்று தெருக்களை கூட்டாமல் இருந்தாலே சாலச் சிறந்தது என்று கூறியிருந்தார். என்னைப்பற்றி, என் பார்வையை பற்றி தெரியாமல் அவர் சொன்ன கூற்று அது.

         நானும், வெளிநாட்டில் வேலை செய்பவன் தான் - கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல். ஆனால், என்னுடைய நாட்டுரிமையை "வேறு நாடு கொடுக்கும், எந்த சலுகைக்காகவும்" நான் மாற்ற முயன்றதே இல்லை; அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரவும் நான் அனுமதிக்கவில்லை. பாஸ்போர்ட் என்பது ஒருவர் இந்த நாட்டை சேர்ந்தவர் என்பதற்கான "உச்சபட்ச"சான்று. அது ஒருவரின் "ஆதியும்; அடையாளமும்!" அதை அழிக்க ஒருவரால் எப்படி முடிகிறது? சரி, அப்படி செய்வது உங்களுக்கு சரி என்றே இருக்கட்டும்; அதன் பின்னர், ஏன் உங்கள் பூர்விகம் பற்றிய ஒரு உறவும்/உரிமையும் வருகிறது? அருள்கூர்ந்து, என் கேள்வியை தவறாய் புரிந்து கொள்ளாதீர்கள்! உங்களின் "இரட்டை நிலையை" எடுத்துரைக்கவே இதைக் கேட்கிறேன். உங்கள் குழந்தைக்கு "முடி காணிக்கை" செலுத்த இந்தியாவில் உள்ள உங்கள் குல-கோவிலுக்கு செல்வது முதற்கொண்டு எல்லா செயல்களும் செய்யவும் ஆசைப்படுகிறீர்கள். ஆனால், நீங்கள் வேற்று-நாட்டு நாட்டுரிமை வைத்திருக்கிறீர்.

       ஏன், அங்கும் கோவில்கள் இருக்கின்றனவே? அங்கேயே செய்யலாமே! உண்மையில், நீங்கள் அந்த நாட்டிற்காவது உண்மையாய் இருக்க முயன்று, அவர்களைப் போல் அனைத்திலும் இருக்க முயலவேண்டும். PIO என்ற ஒன்றை உங்கள் குழந்தைகளுக்காக வாங்கவே கூடாது; இது, நீங்கள் இரண்டும்-கெட்டானாய் இருப்பது மட்டுமல்லாமால், அடுத்த தலைமுறையையும் "இரண்டும்-கெட்டானாய்" ஆக்கும் செயல். அதனால் தான் "Be a Roman, when you are in Rome" என்று சொல்லப்பட்டது. நாட்டுரிமையையே மாற்றத் துணிந்த நீங்கள் அந்தந்த நாட்டு "மத"த்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு/மொழி இரண்டும் அறுபட்டுவிட்டது; பின்னர், ஏன் மதம் மட்டும் வேண்டும்? அதையும், மாற்றி விட்டால் நீங்கள், முடி-காணிக்கை போன்ற விசயங்களில் "ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால்" என்ற நிலைப்பாட்டோடு இருக்க மாட்டீர்கள். உண்மையில், அது உங்களின் அடுத்த தலைமுறைகளை "அந்த(ந்த) நாட்டு"கலாச்சாரத்தோடாவது இருக்க வழிவகுக்கும்.

        அதுதான், நீங்கள் அவர்களுக்கு செய்யும் பேருதவியாய் இருக்கும். இல்லையெனில், தமிழ்(தனி) ஈழம் போல் அந்தந்த நாடுகளில், ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த இந்தியர்களும் போராடக்கூடிய நிலை வரும் அபாயம் இருக்கிறது. அதுதானே, இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது? அங்கே சென்ற தமிழர்கள் அனைவரும் பலதரப்பட்ட வேலைகளுக்காய் சென்றவர்களே! இப்போது, நாமெல்லாம் இங்கே வெளிநாட்டில் இருக்கும் அதே "பணம்" எனும் அடிப்படையில் அங்கு சென்றவர்களே! அந்த சம்பளமும்; அந்த சலுகைகளும் தான் அவர்களை அங்கே நாட்டுரிமை பெறச் செய்தது. அப்படியே, அவர்களின் அடுத்த தலைமுறைகளும் அங்கே வளர ஆரம்பித்தது. விளைவு? அவர்கள் இந்தியர்கள் என்ற உரிமையை முதலில் இழந்தனர். அதனால், பிரச்சனை என்ற போது அவர்களால், இங்கே இந்தியர்களாய் வர இயலவில்லை; "அகதிகள்"என்றே வர முடிகிறது. அப்படி வந்தும், இங்கே எந்த உரிமையும் அனுபவிக்க முடியவில்லை.

    கணவன்/மனைவி/மகன்/மகள்/பெற்றோர் - இப்படி பல உறவுகளின் மேலுள்ள உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் நாம் எப்படி கொந்தளிக்கிறோம்? அதை விட பன்மடங்கு கோபம் கொந்தளிக்கும் ஒருவரின் "ஆதியும்; அடையாளமும்" மறுக்கப்படும்போது! ஒரு ரேஷன்-அட்டை/ஓட்டளிக்கும் அட்டை மறுக்கப்படும்போது நமக்கு எத்தனை கோபம் வருகிறது? அப்படியிருக்க, உச்சபட்ச அடையாளமான நாட்டுரிமையை அழித்துவிட்டு; வேறொரு-நாட்டு நாட்டுரிமை பெற்று தலைமுறைகள் கடந்து வாழ்பவர்களுக்கு, திடீரென்று அவர்கள் பெயர்ந்த-இடத்தில் (அந்த நாட்டில்) நாட்டுரிமை மறுக்கப்பட்டால்???.... என்ன நிகழும்? எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட கோபம் அங்கே கொந்தளிக்கும்? அதுதான் இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சூழலில், அவர்கள் தம் பூர்விகமான தமிழகம்(இந்தியா) வரும்போது, இங்கே என்ன நடந்தது? (நடந்து கொண்டிருக்கிறது?). இனி, தம் பூர்வீகமே என்று எல்லாம் இழந்து வந்த நம் தமிழ்-இனங்கள்....

       விலங்குகள் போல் ஊருக்கு வெளியே அமர்த்தப்(பட்டனர்/படுகின்றனர்). அகதிகளாய் இருக்க விரும்பாத பலரும் இலங்கைக்கே சென்று அதை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டனர். சிலர், இங்கிருந்து வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இங்கே எவரை குறை கூறுவது? ஒரு நாட்டின் குடிமகனுக்கே இந்தந்த சலுகைகள் என்று எல்லா நாடுகளும், சட்ட-திட்டங்கள் வைத்துள்ளன. அதை எப்படி, நம் இனமேயாயினும் திரும்பி வரும்போது ஒரு அரசால் மாற்றியமைக்க முடியும்? இங்கே வரும் நம் இந்தியர் ஒவ்வொருவரையும் வரவேற்க; ஒவ்வொரு தனி மனிதனும் தயாராய் தான் இருக்கிறோம். ஆனால், தனி மனிதன் சமுதாயம் அல்லவே? தனி மனிதன் அரசாங்கம் அல்லவே?! இது போன்று தான் "நம் நாட்டுரிமை" இழந்து பல்வேறு நாடுகளில் இருக்கும் நம் சக-இந்தியனின் வருங்கால தலைமுறைகள் பற்றி என்னால், யோசிக்க முடிகிறது. அப்படி ஒரு நிலை வராத வரை, எவருக்கும் எந்த பாதகமும் இல்லை. வரும் சூழலும் இப்போதைக்கு இருப்பதாய் தெரியாமல் இருக்கலாம்!

         ஒருவேளை, வந்துவிட்டால்? வரக்கூடாது என்பதே நம் இனத்தார் ஒவ்வொருவரின் ஆசையும்/ஆசியும் கூட. வந்துவிட்டால்? உங்கள் அனைவரையும் நம் ஈழத்தமிழ் மக்கள் போன்றே பாவிக்கும் மனத்திடம் இல்லையே ஐயா! இப்போதே, அமெரிக்கா போன்ற நாடுகளில் "சீனக்"காரர்களை வெளியேற்றும் செயல் ஆரம்பித்தாகி விட்டது. நம் நாட்டவர்களை அப்படி செய்யும் நிலை வரும்போது, என்ன நடக்கும்? என்பதை யோசிக்கவே பயமாய் இருக்கிறது. நம் வசதிக்காய், நம் வருங்கால சந்ததிகளை இப்படி "இரண்டும் கெட்டானாய்"விட்டுவிட நமக்கென்ன உரிமை இருக்கிறது? என் ஈழத்தமிழ் நட்புகளுடன் நான் கேட்ட கேள்வி ஒன்று: இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே "கிரிக்கெட்"போட்டி நடந்தால் எவரை ஆதரிப்பீர்? என்பதே அது. எந்த தயக்கம் இன்றி அவர்கள் சொன்னது "இலங்கை"என்று தான். அவர்களுக்கு, இலங்கை தான் தம் நாடு என்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவர்களுக்கே, இன்னமும் தமிழ்/தனி ஈழம் என்ற பிரச்சனையில் தெளிவில்லை.

         இப்போது வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றுள்ள உங்களை அதே கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாய் இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். இது என்ன விதமான நாட்டுப்பற்று? இது இரண்டும்-கெட்டான் நிலை இல்லையா? சரி, அப்படி என்றால்... இந்த கணம் முதலாவது உங்கள் குழந்தைகளை அந்தந்த நாட்டு குடிமக்கள் போல்; மதம், மனிதம், கடவுள், கலாச்சாரம் என்ற எல்லா வற்றிலும் அந்த நாட்டு குடிமக்கள் போன்றே வளருங்கள். அதுதான், பிற்காலத்தில் அவர்களுக்கென்று ஒரு தனித்துவத்தை தரும். அப்படி இருந்தாலும், அது நிற-பேத பிரச்சனைகளை உருவாகக்கூடும். ஆனால், அது மேற்குறிப்பிட்ட அவல-நிலை/இன்னலை விட மேலானதே! இப்போதைக்கு அங்கே கிடைக்கும் சுகங்களை மட்டுமே அனுபவித்து கொண்டு உள்ளதால், என்னுடைய இந்த பார்வை, நகைப்புக்குரியதாய் இருக்கலாம். ஒன்றேயோன்றை மனதில் கொள்ளுங்கள்; இந்த கணம் உங்கள் கணவனோ/மனைவியோ இறந்துவிட்டால், உங்கள் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிடும்.

       மன்னிக்கவும்! எவரும் இறக்கவேண்டும் என்பது என் ஆசையல்ல; அதேபோல், இறப்பில்லாத மனிதர் எவரும் இங்கில்லை;  எவர்க்கும், எப்போதும் நிகழலாம். இல்லை, உங்கள் வேலை போய்விட்டால், உங்கள் வாழ்க்கை ஆட்டம் கண்டுவிடும். அப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், நீங்கள் முதலில் போய்ச்சேர விரும்பும் இடம் உங்கள் "ஆதியும்; ஆதாரமுமான" நீங்கள் பிறந்த நாடே! என்பது நினைவிருக்கட்டும். அப்படி நீங்கள், ஆதரவற்று நிற்கும் போது; உங்களை உங்கள் பூர்விக நாடு விலக்கி வைத்தால் எப்படி இருக்கும்? அது தான் இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன். அப்படியொரு அசம்பாவிதம் நடந்து என் சக-இந்தியன் அவதிப்படவேண்டும் என்பது என் விருப்பமல்ல. ஆனால், அப்படி நடந்துவிட்டால்; என் சக-இந்தியன் என்ன செய்வான் என்ற பயமே இது! அப்படியொறு நிலை வந்தால், இப்போது நான் "கையாலாகாதவன்"ஆய் இருப்பது போல் இன்னுமோர் தலைமுறை இங்கே இருக்குமே என்ற ஆற்றாமை.

         இப்படி நாட்டுரிமையை மாற்றும் தனி-நபர்களை விட அப்படி மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் அந்த நாடுகளின் மீது பெருத்த-கோபம் வருகிறது. கண்டிப்பாய், நம்மை வைத்து அவர்கள் வளர்ந்து கொள்ள செய்யப்படும் சூழ்ச்சி இது. இது தெரியாமல், பலருக்கும் சில நாட்டின் குடியுரிமை வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொ(ல்/ள்)வதில் கர்வம் வேறு! அவர்களின் வளர்ச்சிக்கு நாம் தேவையில்லை எனும்போது, நம்மை தூக்கி எரிய அவர்கள் ஒருகணம் கூட தயங்க மாட்டார்கள். அதிலும், அமெரிக்கா போன்ற நாடுகள் மற்ற நாடுகளுக்குள் நுழைந்து, அவர்களை கொன்று-குவித்து; வெளியேற்றவே தயங்குவதில்லை. என்னைப் பொருத்தவரை, அரேபிய நாடுகள்/மற்றும் வளைகுடா நாடுகளின் மேல் - இந்த விசயத்திலும் ஒரு பெருத்த மரியாதை வருகிறது. வேறெந்த நாட்டவரும், இம்மாதிரி நாடுகளில் நாட்டுரிமை பெறமுடியாது. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானால் இருந்துகொள்; எவ்வளவு சம்பளம் வேண்டுமோ பெற்றுகொள்; என்ன சலுகைகள் வேண்டுமோ கொடுக்கிறோம்.

      ஆனால், எங்கள் நாடுகளின் நாட்டுரிமை என்பது எவருக்கும் எந்த நிலையிலும் இல்லை என்று உண்மையாய்/நேரடியாய் கூறுகின்றனர். என் நாடு; என் உரிமை! உனக்கு என் நாட்டுரிமை எதற்கு? என்ற நேர்மை. மற்ற எல்லா விசயங்களைப் போலவும், இதிலும் உண்மையும்/நேர்மையும் இருக்கிறது. இம்மாதிரியான நாடுகளுக்கு - எங்கள் நாட்டை எப்படியாயினும் நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம்; அதற்காய் எவருக்கும் நாட்டுரிமை கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மற்ற நாடுகள்? வேற்று-நாட்டு நாட்டுரிமை பெற்றுள்ள என் நண்பர்களிடம் இது பற்றி பல நேரங்களில் மேலோட்டமாய் நான் வாதிட்டதுண்டு. அவர்கள் என்னை தவறாய் புரிந்துகொண்டு; அவர்களை நான் குற்றவாளி போல் பாவிப்பதாய் எண்ணி என்னுடன் கோபத்துடன் விவாதித்து இருக்கிறார்கள். அதைத்தான், மேற்குறிப்பிட்ட என் சக-இந்தியர் ஒருவரும் செய்துள்ளார். அவர்களின் மேலுள்ள அக்கறையால் தான் நான் இங்கே இப்படி விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய இந்த பார்வை எவரின் மனமும் புண்பட அல்ல! மாறாய், பண்படவே!!

பின்குறிப்பு: அமெரிக்காவில் கொடுக்கப்படும் "கிரீன்-கார்டு"என்பதைப் பெற சிபாரிசுக்-கடிதம் வேண்டி இதுவரை என்னை 3 நபர்கள் (2 இந்தியர்கள்; 1 சீனர்) தொடர்பு கொண்டனர். அவர்களில் ஒருவரை பரஸ்பரமும், மற்ற இருவருக்கு என்னையும்; நன்றாக தெரியும் - அதாவது, எங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை ஒருவரை ஒருவர் படிப்பதன் மூலம். கடிதத்தைக் கூட வரைவாய் எழுதி அனுப்பி இருந்தனர். ஆனால், எவருக்கும் இதுவரை அந்த கடிதத்தை நான் கொடுத்ததே இல்லை. எவரும், தன் நாட்டுரிமையை இழக்க நான் எந்த விதத்திலும் உடந்தையாய் இருக்கமாட்டேன்.                  
          

திகைக்கவைத்த "பர்த் டே" கேக்...


 
            01.07.2014 அன்று கடலூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில், கடலூர் மஞ்சகுப்பம் பேருந்து நிறுத்தத்தில் ஏறினேன். பட்டாம்பாக்கத்தில் உள்ள என்தமக்கை வீட்டிற்கு செல்வதற்காய். பேருந்து சிறிது தூரம் சென்ற பின் திடீரென்று என் இருக்கைக்கு பக்க-எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருத்தி ஒரு பெட்டியை நீட்டி "எனக்கு பர்த்டே சார்! கேக் எடுத்துக்கோங்க!" என்றாள். எனக்கு சில நிமிடத்துளிகள் ஒரு அதிர்ச்சி; அந்த நிமிடத்துளிகளுள் என்னுள் "அந்த கேக்கில் ஏதாவது இருந்தால் என்ன ஆவது?"; "அந்த கேக்கை எடுப்பது முறையா?"; "ஏன் முன்-பின் தெரியாதவருக்கு கேக் கொடுக்கிறாள்?" என்று பல கேள்விகள். அந்த பெண் எளிமையாய்/வெகுளியாய் இருந்தாள்; பிறந்த-நாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணில் தெரிந்தது. சரியென்று ஒரு-துண்டை எடுத்துக்கொண்டு "மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் மா!" என்று வாழ்த்தினேன். இப்போது மீண்டும் அந்த கேள்விகளுள் ஒன்று: ஏதேனும் இருந்தால் என்ன ஆவது? 

          பின்னர், அந்த பெண் அவள் அருகில் இருந்த, ஒரு பெண்-காவலுருக்கு கொடுக்க, அவரும் அதை உண்டுகொண்டு இருந்தார். சிறிய தைரியம் வந்தது! பின்னர் என் மனசாட்சி: "ஒரு சக-மனுஷி கொடுத்த தின்பண்டத்தை தின்பதற்கு ஏன் இவ்வளவு யோசனை? இதற்கு எடுக்காமலேயே இருந்திருக்கலாமே?" என்றது. இந்த கேள்வி வந்தவுடன் எல்லா-சிந்தனைகளையும் ஒதுக்கி விட்டு அதை உண்டேன். பேருந்து சென்றுகொண்டிருந்தது; இன்னமும், ஒரு அவநம்பிக்கை என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. பின்னர், ஒருவாறாய் என் என்ன அலைகள் ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பினேன். நான், இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் முன், அந்த பெண்ணை அழைத்து முழுமனதோடு "அவளிடம் ஒரு தொகையை கொடுத்து, உனக்கு பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள்ளம்மா!" என்றேன். அவள் தயங்கினாள்; மீண்டும் வாங்கிக்கொள்ளம்மா என்றேன். அந்த பெண் வாங்கிக்கொண்டாள்; அதன் பின் நான், ஆத்மதிருப்தியோடு அந்த பெண்ணை வாழ்த்தினேன். இயல்பான விசயத்தில் கூட...

நமக்கு சக-மனிதர்கள் மீதான நம் அவநம்பிக்கை அதிகரித்துவிட்டதா???

ஆணின் கற்பு...


அரசனென்று எவரையும்
அறிவிக்கவில்லை எனினும்;
ஆணுக்கும் உண்டிங்கே...
"அழிந்துபோகும்" கற்பு!

வியாழன், செப்டம்பர் 18, 2014

ஐ-யும், இந்தியனும்...



    ஐ-படத்தின் புகைப்படங்களைப் பார்த்து, விக்ரமைப் பற்றி என்னுள் பிரமிப்பாய் உணர்ந்து கொண்டிருந்த போது; எனக்கு இந்தியன் திரைப்படத்தைப் பற்றிய கீழ்வரும் அனுபவம் நினைவுக்கு வந்தது:

     இந்தியன் திரைப்படத்தை திருச்சி-பாலக்கரையில் ஒரு திரையரங்கில் நான் என்-நெருங்கிய நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அனைவரும் கமலின் அபிமானிகள். திடீரென்று நண்பன் ஒருவன் அருமையான காட்சியின் போது

"மாப்ளே! தாத்தா வேடம் சூப்பருல்ல?; பார்த்தா கமல் மாதிரியே தெரியலல்ல??"

என்றான். நானும் உணர்ச்சி பொங்க "ஆமாம், மாப்ளே" என்றேன். அடுத்து ஒன்னு கேட்டான் பாருங்க; நான் அப்படியே "மெரசல்"ஆயிட்டேன். அவன் கேட்டது:

      அப்புறம் எதுக்கு மாப்ளே கமல் இவ்வளோ கஷ்டப்பட்டு நடிக்கணும்? யாராவது ஒரு தாத்தாவை வச்சு எடுத்திருக்கலாம்ல?!

     என் நண்பனின் அருமையான நகைச்சுவை உணர்வு அது; ஆனால், அந்த நேரத்தில் என்னால் இரசிக்க முடியவில்லை :(. நீங்களா இருந்த எப்படி "ரியாக்ட்" பண்ணி இருப்பீங்க?

மீ... "ஙே" ;)  

திங்கள், செப்டம்பர் 08, 2014

இழந்த நம்பிக்கை...



It is "Very Easy" to gain the trust of a person who loves us. But, it is "Highly Impossible" to regain the "Lost Trust (Even Once)" from the same person.

P.S.: "The height of pain" is when the trust is lost without "Valid Reasons".

*********

நம்மை விரும்பும் ஒருவரின் நம்பிக்கையை பெறுவது "மிகவும் எளிது". ஆனால், "இழந்த நம்பிக்கையை (ஒருமுறையே ஆயினும்)" அதே நபரிடம் இருந்து மீண்டும்-பெறுவது "அதீத இயலாதது".

பின்குறிப்பு: "நியாயமான காரணங்கள்" ஏதும் இல்லாதபோது இழக்கப்படும் நம்பிக்கை "வலியின் உச்சம்"