ஞாயிறு, டிசம்பர் 15, 2013

நான் ஏன் எழுதுகிறேன்???




        என் நண்பர் ஒருவர் சமீபத்தில் "அண்ணா! உங்கள் எழுத்து போரடிக்குது!!" என்றார். நாங்கள் பலதும் விவாதித்தோம்; (எனக்கு புரிந்த அளவில்)அவருடைய குற்றச்சாட்டு "என்னுடைய  பதிவில் எந்த முடிவும் இல்லை; அது ஒருதலையாய் இருக்கிறது" என்பனவே! நானும், என்னுடைய எழுத்து முறை பற்றி என்னப்பன் குறிப்பிட்டதை அவருக்கு நினைவூட்டினேன்; அதே "எழுத்துச்-சித்தர் பாலகுமாரன்" தாக்கம்-தான் "இன்னவென்ற முடிவை" நான் சொல்லாமல் இருக்க காரணம். நான் எழுதி இருக்கும் பல தலையங்களுக்கு "இதுதான் முடிவென்பதே, இல்லை!" என்பது எனக்கு தெரியும். நான் எனக்கு தெரிந்த நியாயங்களை (என் பக்கத்து நியாயம் அல்ல; எனக்கு தெரிந்த நியாயம்!) அடிப்படையாய் கொண்டு தான் எல்லாம் எழுதுகிறேன்; எனக்கு அந்த நியாயங்கள் பெரும்பான்மையில் இருக்கின்றன என்று தெரிந்தால் மட்டுமே - அது பற்றி எழுதிகிறேன். மற்றபடி, எனக்கு இது பற்றி தான் எழுதவேண்டும்; இவர் பற்றி தான் எழுதவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. 

        அதனால் தான், பெண்ணியம் பற்றி யோசிக்க/அது பற்றிய செயல்கள் செய்யும்; அது பற்றி எழுதும் - அதே வேளையில், பெண்ணியம் தவறான பாதையில் செல்கிறது என்பதையும் என்னால் எழுத முடிகிறது. என் பெண்ணைப்பற்றி வானளாவ புகழும் அதே வேளையில் (4 வயதே ஆன)என்மகளின் வருங்கால வாழ்க்கை பற்றி யோசித்து "என் வருங்கால மருமகனிடம்" எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்க முடிகிறது. "மரணத்திற்கு பிறகு, என்ன...???" என்ற கேள்வியே என்னுடைய எல்லா தேடல்களுக்கும்/ எல்லாவற்றின் மீதான புரிதல்களுக்கும் காரணம். இங்கே, என் விருப்பும்-வெறுப்பும் எதுவும் இல்லை; நான் உண்மையின்-விளிம்பில் நின்று எல்லாவற்றையும் ஆராய முற்படுகிறேன். அதனால், வழக்கமான சுவராஸ்யங்கள்  இல்லாதிருக்கக்கூடும். என் நண்பரால் என்ன குறைகிறது என்று சரியாய் கூற முடியவில்லை; அப்படி எதுவும் இருப்பின் - அவரோ! இல்லை வேறெவரோ!! எனக்கு சரியாய் விளக்கும் பட்சத்தில் - அதை நிவர்த்தி செய்துகொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

        என் நண்பருடனான விவாதத்திற்கு பின் - எனக்குள் நான் யோசிக்க ஆரம்பித்தேன்! என்னுள் "நான் ஏன் எழுதுகிறேன்?!" என்ற கேள்வி எழுந்தது. அந்த தருணத்தில் "எழுத்துச்-சித்தர்" அவர்களின் பேட்டி ஒன்றை காண நேர்ந்தது. ஆரம்பத்தில், இது போன்ற சூழலை எதிர்கொண்டபோது அவரும் அப்படி யோசித்தாய் கூறினார்; எழுதுவது அவருக்கு பிடித்து இருப்பதாயும், எழுதுவது அவரை தெளிவு-படுத்துவதாயும், நேர்மை-படுத்துவதாயும் குறிப்பிட்டு இருந்தார். உடனே, என் அடிமனதில் அதே போன்ற உணர்விருப்பது தெரிய வந்தது; மேலோட்டமாய் நான் அப்படி யோசித்ததுண்டு எனினும் - அவர்போல் ஆழ சென்று யோசிக்கவில்லை. உண்மை தான்! உண்மை பால் எனக்கு இருந்த நட்பு இன்னமும் நெருக்கமாய் ஆகி இருக்கிறது; எனது "உண்மையின் தரம்" வெகுவாய் உயர்ந்து இருக்கிறது. நான் கோபமாய் பார்த்த பல விசயங்களை/நிகழ்வுகளை நிதானமாய் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்; பொய்யிலிருந்து "இன்னும் வெகு-தூரம்" போக ஆரம்பித்திருக்கிறேன்.

        அந்த நிதானம் - உறவு மற்றும் நட்பு சார்ந்த என்னுடைய புரிதலை அதிகமாக்கி இருக்கிறது; செயலில் ஓர்தெளிவு வர ஆரம்பித்து இருக்கிறது; மற்றவர்களின் குற்றச்சாட்டை "எடுத்தவுடன் அலட்சியம் செய்துவிட்டு பின்னர் யோசிப்பது போய்", உடனுக்குடன் குற்றச்சாட்டை ஊடுருவி பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த குறைகளை உடனடியாய் களைய-முற்படுகிறேன். "எழுத்துச்-சித்தர்" சொல்லியது போல் எழுதுவது ஓர் வரம்! பிடித்திருப்பதால் அதை செய்வதாய் சொன்னார்; எனக்கும் அப்படித்தான்! எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது! எதை வேண்டுமானாலும், எழுதலாம்; ஆனால், அதில் உண்மை இருக்க வேண்டும் என்றார். ஆம்! என்னுடைய எழுத்துக்களில் - ஆரம்பம் முதல் உண்மை மட்டுமே இருக்கிறது; என்னுடைய எழுத்துக்கள் என்னை நேர்மையாய், உண்மையாய் இருக்க உதவுவது போல் - "வெகு சிலரையாவது" அப்படி இருக்க வைத்தால் போதுமானது; அதற்காகத் தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

       சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்டவர் நிலை கருதி, சில உண்மைகளை நான் (நேரடியாய்)எழுதாது போனதுண்டு!; ஆனால், பொய்யாய் எதுவும் எழுதியதில்லை/எழுதப்போவதுமில்லை! என்மகளுக்காய் "சற்றும்-பொய் கலக்காமல்" எழுதுகிறேன். இந்த 4 வயதில், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் நான் அவளுடன் இல்லை; என் குடும்பத்தை விட்டு 25 ஆண்டுகள் வெளியே வாழ்ந்து வருகிறேன்; அதில் 10 விழுக்காடு தான் எனினும், என்னை வெகுவாய் பாதித்திருப்பது என்மகளுடனான பிரிவு! "வாழ்க்கை என்னவென்று, அவள் ஆராயும்போது", நான் உயிர்த்திருப்பேனா??!! என்று தெரியவில்லை. என்னுடைய எழுத்துக்கள் இருக்கும்; அவள் என்னுடைய எழுத்துக்களை என்றேனும் ஓர்நாள் படிப்பாள் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. "என்னைவிட, வேறெவர்?! என்னைப் பற்றி" என்மகளிடம் - உண்மையாய் விளக்கிட முடியும்? வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வித்தையை விட, வேறென்ன என்மகளுக்கு "பெரிதாய்" கொடுத்திட முடியும்??? எனவே, வெகு நிச்சயமாய் நான் எழுதுவது...

நான் புரிந்திட்ட வாழ்வியலை; (மற்றவர்/என்ம)களுக்கும் விளக்கிடவே!!!

பின்குறிப்பு: எழுத்தில் - பெரிதாய் "பொய்யை" கலந்து விடமுடியாது; பேசும்போது பொய் சொல்லிவிட்டு, பிறகு இல்லை என்று சாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதுவும், பொய்யென்று பின்னால் நிரூபிக்கப்படலாம்; அல்லது அவரே ஒப்புக்கொள்ளலாம்! ஆனால், அதுவரை அந்த பொய் காக்கப்படும்; அதனால், பலரும் பலதும் அனுபவிக்கக்கூடும். எழுத்தில், அது சாத்தியமன்று; உண்மை இல்லை எனில், "தன் நெஞ்சே தன்னைச்சுடும்!"; நம் சுயத்தை இழப்பது நமக்கே தெரியும்;  "சுயத்தை உண்மையாய் நேசிப்போர் எவர்க்கும்" - மெய்யுணர்ந்தே சுயத்தை இழத்தல் சாத்தியமன்று! குறுகிய-காலத்திற்கு வேண்டுமானால், பொய்யாய் ஏதும் எழுதிக்கொண்டு இருக்கலாம்; ஒர்காலகட்டத்தில் அது தானாய் நின்றுவிடும். என்னுடைய எழுத்துக்கள் - இப்போதில்லை எனினும், என்றேனும் ஓர்நாள் பலரையும் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுந்திருக்கிறது. 

கூடலும், தேடலும்...



கூடலில் உண்டோ?!;
கொடுத்தலும், பெறுதலும்?
...

தேடலில் எதற்கோ??!!;
விருப்பும், வெறுப்பும்??
...

கூடலில், தேடலும்;
தேடலில், "கூடல்"உம்;
கலக்கட்டும்...
"கூடலில்"-பகிர்தல் போலே!!! 

கல்லறையும், ம(னி)தமும்...


கல்லறைகள் கூட
"பல்-அறை"களாய் சிதறியிங்கே!!!
...

பின்னெப்படி?!
...

மதமும், மனிதமும்
"மிதமாய்" சேர்வதிங்கே???

மனிதமும், உறவும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது???




      தான் பெற்ற மகளை இப்படியா?! ஒருவன் செய்வான்? "என்ன மனுசண்டா நீ???"-ன்னு இன்னுமோர் முறை கதறிட தோன்றுகிறது! இந்த  மாதிரியான தகப்பன்களை என்ன செய்வது? "என்ன மனுசண்டா நீ???" தலையங்கத்தில் நான் பரிந்துரை செய்த தண்டனை சற்றும்-தவறில்லை என்று படுகிறது. இப்படியெல்லாம் செய்ய இவர்களுக்கு எப்படி துணிவு வருகிறது? எவர் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது?? பெண்ணை(அல்லது மகனை)பெற்றதால் மட்டும் இப்படி செய்யலாமா???   இரண்டு நாட்கள்முன் நாளிதழில் படித்த செய்தி இதுதான்: வங்க-தேசத்தில் ஓர்கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவனுடன் "சீட்டு விளையாடி" அனைத்தும் தோற்ற ஓர்தகப்பன் தன் 13-வயது மகளை திருமணம் செய்து கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு தோற்றுவிட்டானாம்! அதன்படி திருமணம் செய்து வைக்க இரண்டு-வீட்டாரும் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனராம்! பெண்ணுக்கே மிகக்குறைந்த வயது; அவளை மணக்க இரு(ப்ப/ந்த)வனுக்கு இருமடங்கிற்கும் கூடுதலான வயதாம்!!

       நேற்று ஒர்செய்தி: "மது போதவில்லை; வாங்கி வா" என்று சொல்லியதை கேளாத (ஒன்றுவிட்ட)தகப்பனை ஒருவன் கொன்றுவிட்டானாம்! அதாவது, அந்த தாயின் முதல்-கணவனுக்கு பிறந்தவனாம்; கொல்லப்பட்டது இரண்டாம் கணவன். அது கிடக்கட்டும்! பெற்ற தகப்பனா? இல்லை ஒன்றுவிட்ட-தகப்பனா?? என்பதல்ல கேள்வி! இதில், இருவரும் ஒன்றாய் சேர்ந்து வீட்டிலேயே மது அருந்திக்கொண்டு இருந்தனராம். எது எப்படியோ, "மது வாங்கிவரவில்லை" என்பதற்காகவா ஒருவரை கொல்வது? "போதையில்" என்ற வாதமே தவறானது"; அப்படி எனின், ஏன் தலைமறைவாக வேண்டும்?! என்ன கொடுமையடா?? ஏன் இப்படி உறவு(கள்) என்றால் என்னவென்று சற்றும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? இதுபோன்றே, ஏன் கள்ளக்காதல்களும் - அவை சார்ந்த கொலைகளும் தொடர்கின்றன?; பிடிக்கவில்லை என்றால், விவாகரத்து பெற்று (பிடித்தவருடன்)இயல்பாய் வாழலாமே??. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்வது கிடக்கட்டும்; உண்மையில்...

மனிதமும், உறவும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது???

இது எப்படி/ஏன் சாத்திய(ம்/மில்லை)???...




      இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது? எனை சார்ந்த உறவிடமும், நட்பிடமும் இல்லாத அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் மட்டும் எப்படி சாத்தியமாகிறது! எனது நட்பும், உறவும் என்னிடம் காட்டிடாத அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் மட்டும் எப்படி வருகிறது? ஏன் வருகிறது?? வேறு வழியில்லை என்பதாலா? ஒருவேளை எனக்கும், என் உறவுக்கும்/நட்புக்கும் - ஒருவரையொருவர் விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை வந்தால் தான் - இப்படிப்பட்ட நம்பிக்கை பலப்படுமோ?! ஆம்! திசம்பர் 25-ஆம் தேதி இரவு பயணிக்க என்னால் எப்படி "ஓர் பேர்-நம்பிக்கையோடு" திசம்பர் 3-ஆம் தேதியே "விமான பயணச்-சீட்டு" வாங்க முடிகிறது? உண்மையில், இது சாதாரணம் தான்! நான் 3 மாதங்களுக்கு முன்பெல்லாம் சீட்டு வாங்கிய அனுபவம் உண்டு; 6 மாதங்களுக்கு முன்பு சீட்டு வாங்(கியோ/குவோ)ரையும் நான் பார்த்ததுண்டு! இந்த நம்பிக்கை எப்படி வருகிறது?! எவர் கொடுத்த தைரியத்தால் வருகிறது??!! இது ஏன் மற்ற விசயங்களில் வருவதில்லை?

       6 மாதத்திற்கு பின் நான் உயிர்த்திருப்பேன் என்ற நம்பிக்கையை விட அதிகமான-நம்பிக்கை எதுவும் இருக்க முடியுமா? ஏன் "நாம் இல்லை என்றால் என்னாவது?" என்று யோசிப்பதே இல்லை? அடிக்கடி, நான் இது சார்ந்து எழுதுவது "அபத்தமாய்" படக்கூடும்; ஆனால், நான் சொல்லும் இது போன்ற உவமானங்களுக்கும், நம் வாழ்வியலுக்கும் பேர்-ஒற்றுமை உண்டு! என்னைக்கேட்டால், இது போன்ற நம்பிக்கைகள் தான் "நம்பிக்கையின் எல்லையாய் (Height of Belief)" இருக்க முடியும்! இதை தாண்டிய நம்பிக்கை எதுவும் இருக்கமுடியாது என்பதே என் நம்பிக்கை. அப்படி இருக்க, ஏன் நா(ன்/ம்) நம் உறவுடனும், நட்புடனும் - அவநம்பிக்கை கொண்டு முரண்பட்டு நிற்றோம்??! ஏன், நம்மால் ஒருவரை ஒருவர் நம்பிக்கை எனும் "கை" கொண்டு "அரவணைத்து" செல்ல முடிவதில்லை? இப்படியோர் அவநம்பிக்கை கொண்டு நாம் என்ன சாதிக்கப் போகிறோம்?? எல்லோரும், எல்லோரையும் அனுசரித்து போவது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரியும். குறைந்தது...

முதல்-நிலை (உறவு/நட்பு)களிடம் ஒரு "சிறிய-நிலைத்த" நம்பிக்கை கொள்ளலாமே???

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

ஆண்களின் குணம்...



      "ரொம்ப சந்தோஷம்பா!" என்று சொல்லிவிட்டு அடுத்து "என்ன திடீர்னு?" என்றொரு கேள்வியையும் கேட்டார். "என்ன திடீர்னு?" என்ற கேள்வி என்னுள் "ஓர் தேடலை" விதைத்தது! ஏன் அவர் அப்படி கேட்டார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதே விசயத்தை என் தாயிடம் சொல்லியபோது "வாப்பா! வந்து சந்தோஷமா இருந்துட்டு போப்பா!! நானே கேட்கனும்னு இருந்தேன்" என்றார். என்னப்பன் மட்டும் ஏன் அப்படி கேட்டார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். செய்தி இது தான்: சென்ற வாரம் என்னப்பனிடம் அலைபேசியில் "இன்னைக்கு தான் விமானச்-சீட்டு" வாங்கினேன்; 25-ஆம் தேதி கிளம்பி 26-ஆம் தேதி ஊருக்கு வருகிறேன் என்றபோது தான் என்னப்பன் அப்படி கேட்டார். "என்ன திடீர்னு" என்பது ஓர் சாதாரண கேள்வி தான்! அதற்கு முந்தைய நாள் கூட அவரிடம் பேசினேன்; அப்போது கூட நான் ஊருக்கு போகும் திட்டம் இல்லை; அடுத்த நாள் காலை தான் "திடீர்னு" நானே விமானச்-சீட்டு வாங்கினேன்.

    அதனால், அவரின் கேள்வி மிக நியாயமானது; ஆனால், முந்தைய-நாள் என் தாயிடமும் தான் பேசினேன்; ஆனால், அவர் மட்டும் அப்படி ஏன் கேட்கவில்லை?! என்னப்பனும் அங்ஙனம் கேட்காமல் இருந்திருக்கலாமே?! என்ற கேள்வியும் எழுந்தது. இது தான், ஆண்களின் குணம் என்ற பேருண்மை புரிந்தது; இங்கே தான், பெண்ணிலிருந்து மாறுபட்டு "முரண்பட்டதாய்" ஆணினம் இருக்கிறது. எந்த ஒரு விசயத்தையும் "உயிரோடும்/உணர்வோடும்" மட்டும் பார்த்திட ஓர் பெண்ணால் மட்டுமே முடியும்; அது அவர்களுக்கு கிடைத்த வரம். ஓர் ஆண் மட்டும் "இந்த 2 உ-க்களையும்" தாண்டி உண்மை என்ற 3-ஆவது "உ"-வையும் ஆராய முற்படுகிறான். உண்மையை ஆராய்தல் தான் ஆண்மையின் அடையாளமாய் இருக்கிறது. இதையே ஓர் ஆழ்ந்த விசயத்தை கொண்டு பார்ப்போம்;  ஓர் பெண் தன் காதலன்/கணவன் ஆகிய ஓர் ஆணை "மிக எளிதில்" நான் உங்களை "முழுமையாய் நம்புகிறேன்" என்று கூறிவிடுவாள். அதை சார்ந்த அனைத்தையும் எளிதில் அந்த ஆண்-மகனுக்காய் செய்ய ஆரம்பிப்பாள்.

      ஆனால், ஓர் ஆண் தன் காதலி/மனைவி ஆகிய ஓர் பெண்ணை "அத்தனை எளிதில்" நான் உன்னை "முழுமையாய் நம்புகிறேன்" என்று (வாய்விட்டு)கூறிவிடுவதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள்: அதனால் தான் ஓர் பெண் "என்னங்க என்னை உண்மையாகவே விரும்பறீங்களா?/ என்னை கடைசிவரைக்கும் கைவிட மாட்டீங்களா??/ என்னை யார் என்ன சொன்னாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பீங்களா???" போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அதாவது, ஓர் பெண்ணின் சிந்தனை "உறவும்/உணர்வும்" வரை மட்டும் இருக்கிறது; ஆனால், ஓர் ஆண் இவையிரண்டையும் தாண்டி "உண்மை" என்னவென்பதையும் அறிய முற்படுகிறான். காதல்/திருமண பந்தத்தில் இணைந்த தருணத்தில்; அந்த ஆரம்ப காலத்தில் ஓர் பெண் தான் சார்ந்த ஆணிடம் மட்டுமன்றி ஊரார் அனைவரிடமும் "என் காதலன்/ கணவன் மாதிரி யாரும் இல்லை" என்று கூறுவாள்; அதில் எந்த அளவிற்கு உண்மை என்று  ஓர் பெண் ஆராய்வதோ/ கவலை கொள்வதோ இல்லை.

      அதனால் தான், அவர்களுக்குள் ஓர் பிரச்சனை வந்துவிட்டால், ஓர் பெண் உடனடியாய் அந்த உறவை "அறுத்து விட" துணிகிறாள். திருமணமான பெண் எனில், முதலில் கணவனை பிரிந்து "தந்தை வீட்டிற்கு" சென்றுவிடுவது; அவர்களால், ஓர் காதலியை போல் உடனடியாய் "அறுத்து விட" முடிவதில்லை. அதிலும் குழந்தை இருப்பின் - கண்டிப்பாய் உடனடியாய் "அறுத்து விடுதல்" பற்றி யோசிப்பதேயில்லை; ஆனால், பிரிந்து-இருக்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆண்கள் தவறே செய்யவில்லையா?! என்ற விதண்டா-வாதம் வேண்டாம்! நான், இங்கே பெரும்பான்மை சார்ந்த நிகழ்வுகள் கொண்டு ஓர் புரிதலை நோக்கி பயணப்படுகிறேன். "என் ஆணைப்போல் யாருமில்லை" என்று கூறிய அதே பெண் அதே ஊராரிடம் "ஒரு நாள் அந்த ஆளு கூட இருந்து பாருங்க!, தெரியும்!!" என்கிறாள். இந்த சொற்றொடர் வந்த பின், அங்கே எவராலும் ஏதும் பேச இயலாது போகிறது. ஆக, இந்த 2 நிலையிலும் - ஓர் பெண் "உண்மை" என்னவென்பது பற்றி சிந்திப்பதே இல்லை.

        ஒரேயொரு விசயத்திற்கு எப்படி 2 உண்மைகள் இருக்க முடியும்? ஓர் ஆணுக்கு காதல்/திருமண பந்தத்தில் இணைந்த தருணத்தில் அவனின் பெண் மீது சந்தேகம் (எது குறித்தும்) இருக்கும். ஆனால், ஓர் கட்டத்தில் அவன் உண்மை அறிந்து நம்பிக்கை கொள்கிறான்; அதன் பின், அவனின் சிந்தனையும் செயலும் உறவை விரிவுபடுத்துவதில் (குழந்தை, மற்ற உறவுகள் என) இருக்கும். அவனின் நம்பிக்கை எந்த சூழலிலும் மாறுவதில்லை. என்னப்பனின் அந்த கேள்வி! ஓர் உண்மை/விளக்கம் வேண்டியே! அதே உண்மை/விளக்கம் தேடல்தான் - ஒட்டுமொத்த ஆணின் குணம் பற்றி என்னை அலச வைத்திருக்கிறது. இங்கே இன்னுமொரு சிக்கலும் இருக்கிறது; தன் மகன்/தந்தை - உறவுகளிடம் இருக்கும் குறைகளை/தவறுகளை தாண்டி - அவர்களை ஓர் பெண்ணால் நேசிக்கமுடிவது போன்றே; தன் காதலன்/கணவன் (மற்றும் பிற உறவுகள்) இடத்திலும் இருக்கமுடியும் எனின், பெரும்பான்மையான பிரச்சனைகளின் தடயமே அழிந்திடும். எனவே, என்னுடைய பார்வையில் ஓர் ஆணின் குணம் எப்போதும்...

உண்மையை சார்ந்தே பயணப்பட்டு கொண்டு (இருக்கிறது/இருக்கும்)!!!

இதுவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கிறது!!!...



     "அழுத்திட்டம்பா! இருங்க, 'கட்' ஆயிடும்!!" என்றாள் என் மகள். எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்; ஒன்று! அவள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் வேகம்; மற்றொண்டு அவள் கற்றவைகளை ஒப்பிடும் அறிவு. நேற்று நானும் என்மகளும் கணினி வழியே  வழக்கம்போல் (சனிக்கிழமை) "ஸ்கைப்பில்" உரையாடிக்கொண்டு இருந்தோம்; அவ்வப்போது நடப்பது போல் திடீரென "ஸ்கைப்பில்" காணொளி நின்றுவிட்டது. எப்போதாவது மதியம் உறங்கும் என்னவளை - எழுப்ப சொல்லிட எனக்கு மனமில்லை; ஆயினும், என் மகளை நான் பார்க்கவேண்டும். என் மகளுக்கு ஸ்கைப்பில் என்ன செய்வதென்றே தெரியாது; ஆனால், அவள் சகலத்தையும் கவனிப்பாள் என்பது தெரியும்.  எனவே, என் மகளிடம் "கர்ஸரை கொண்டு வீடியோ போன்று இருப்பதை "க்ளிக் செய்" என்றேன்; அவளுக்கு சரியாய் புரியவில்லை. ஒரு ஸ்கொயர் (அவளுக்கு தெரிந்தது); அதன் பக்கத்தில் ஸ்பீக்கர் (இதுவும் அவளுக்கு தெரிந்தது) போன்று ஒன்று இருக்கும் - அதை க்ளிக் செய் என்றேன்".

       அவள் செய்துவிட்டேன் என்றாள்; என்னால் நம்பமுடியவில்லை! சிறிது நேரம் கழித்து "வீடியோ" வந்தது; எனக்கு பெருத்த மகிழ்ச்சி; "சூப்பர் விழிக்குட்டி! இந்த பாப்பா எல்லாத்தையும் கரெக்டா செய்யுதே!" என்று மகிழ்ந்தேன். ஓர் அரை-மணி நேரம் கழித்து எனக்கு உறக்கம் வருவதை பார்த்து "சரி நீங்கள் போய் படுங்கள்" (நிஜமாகவே, 4 வயதா மகளே உனக்கு??!!) என்றாள். அவளிடம் "டிஸ்கனெக்ட்" செய்வது எப்படி என்று கூறி, செய்ய சொன்னேன்; அவள்  "அழுத்திட்டம்பா! இருங்க, 'கட்' ஆயிடும்!!" என்றாள்; வீடியோ சிறிது தாமதித்து வந்தது போன்றே "சற்று தாமதித்து, கட் ஆகிடும்" என்பது அவளின் புரிதல். மீண்டும், சொன்னேன்; உடனே "கட்" ஆகிவிட்டது. நான், பெருத்த சந்தோசத்துடன் "சூப்பர் விழி!" என்று கத்தினேன்; பின்னர்தான் புரிந்தது - நான் சொன்னதை அவள் கேட்டிருக்க முடியாதென்று. மாலை அலைபேசியில் அழைத்து சொல்லலாம் என்றெண்ணி பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்; இதை என்மகளிடம் சொல்லாது இங்கே இப்படி எழுதுகிறேன்...

மறுப்பேதுமின்றி - இதுவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கிறது!!!  

பெண்ணின் "இரு-துருவம்"...



பெண்களுக்கு மட்டுமே...
கண்ணிரண்டு பார்க்கும்
ஓர் உருவமாய்!!..
...
...
...

இருவேறு நியாயங்களை;
இருவேறு தருணங்களில்
ஒரே விசயத்திற்காய்
விவாதித்தல் சாத்தியம்!!!

பெண்ணால் மட்டுமே முடிந்தது...



ஓர் உறவு வேண்டும் என்று விரும்பும்போது - ஒரு பெண்ணால் அவள் சார்ந்த ஆணைப்பற்றி கிட்டத்திட்ட 100 % நல்ல-விதமாய் கூறமுடியும்! 

ஆனால் அதே உறவு வேண்டாம் என்று முடிவெடுக்கும்போது - அதே பெண்ணால் அதே ஆணைப்பற்றி முழுக்க-முழுக்க 100 % தவறான-விதமாய் கூறமுடியும்!

{அதனால் தான் "பெண்ணின் மனதை புரிந்துகொள்ள முடியாது!" என்கிறார்களோ!!!}

காலத்தை வெல்வோரின் காமம்...


காமத்தைக் கடக்காமல்
காதலைக் கடத்தலாகாது!
காலனே பணித்திடினும்...

காமத்திற்காய் காதலரிடம்
காலில் விழுதலும்;
காதலற்றார் ஒருவரிடம்
காமம் அடைதலும்;

காலத்தை வெல்வோர்
"காசு"க்காகவும் செய்யார்!!

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

பெண்கள் "மது"அருந்துவது தவறா???



     முக-நூலில் நண்பர் ஒருவர் 2 பெண்கள் "டாஸ்மாக்" கடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர்கள் ஏதும் மது வாங்கினார்களா? என்பது பற்றி (புகைப்படம் மூலம்)எனக்கு எந்த உறுதியான-சான்றும் இல்லை! அதனால் தான் "நிற்கும்" என்று கூறினேன். உடனே, இது பற்றி (வழக்கம்போல்)பலரும் தங்களுடைய வாதங்களை "காமெண்ட்டு"களாய் கூறி இருந்தனர்; ஓரிருவர் தவிர மற்ற எல்லோரும் - அது தவறு, பண்பாடு கெட்டுவிட்டது, பெண்ணென்றால் அடக்கம் வேண்டும் - இப்படி பலவிதமாய் சாடி இருந்தனர். நானும் அதற்கு "காமெண்ட்டு" எழுதி இருந்தேன்: "ஆணென்ன? பெண்ணென்ன?? நீயென்ன??? நானென்ன???? எல்லாம் ஓர் (குடிகார)இனம் தான்" என்பதே அது. அதன் பின், என்னுள் ஓர் கேள்வி எழுந்தது?! பெண்கள் "மது"அருந்துவது தவறா??? என்று! உடனே, இந்த தலையங்கம் எழுத ஆரம்பித்துவிட்டேன். வெகு-நிச்சயமாய், இது அவர்களின் சுதந்திரம் சார்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

       ஓர் முகம்மதிய சகோதரர் - திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கும் ஓர் செய்தியை கொடுத்து அதன் சான்றையும் கொடுத்து இருந்தார். அதில் - பெண்கள் "முன்-கை மற்றும் முகம்" போன்ற உறுப்புகளை மற்றும் தான் வெளியில் காட்டலாம்; மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று இருப்பதை குறிப்பிட்டு - அதை அந்த பெண்களிடம் தெரிவியுங்கள் என்று கூறியிருந்தார். முகம்மதிய சமூகத்தியர் மேல் எனக்கு அளவு-கடந்த மரியாதையும், அவர்கள் நம்பிக்கை குறித்து பெருத்த ஆச்சரியமும் இருப்பது வேறு விஷயம்; அவர்களின் உருவிலா-வழிபாட்டை பற்றி கூட மிகப்பெருமையாய் எழுதியவன் நான். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு பெரிதும் உடன்பாடு இல்லை; இது, அவர்கள் மதத்தில் "முறையாய்" கடைபிடிப்பதை நானும் அறிவேன்; ஆனால், அதில் ஓர் அடக்குமுறை இருப்பதாய் எனக்கு தெரிகிறது - அவ்வாறு சொல்லியெல்லாம் "மற்ற மதத்தில்" இருக்கும் இக்காலப் பெண்களை இதுபோன்ற விசயத்தில் கட்டுபடுத்த முடியாது என்று தோன்றியது!

    இன்னுமொருவர் "மாதராய்ப் பிறந்திடவும் நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா..." என்ற முண்டாசுக் கவிஞன் வரிகளை குறிப்பிட்டு இருந்தார். இதைப்படித்தவுடன் - எனக்குள் ஓர் பொறி தட்டியது; முண்டாசுக் கவிஞன் என்ன சொல்ல வந்திருப்பார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். முண்டாசுக்கவிஞன் - பெண்மையும், அவர்களுக்குள் இருக்கும் தாய்மையும் அவர்களுக்கே உரித்தான முதல் மற்றும் தனிப்பெருமை என்பதால் தான் அப்படி சொல்லி இருக்கவேண்டும். இது புரிந்ததும், மேலே குறிப்பிட்ட முகம்மதிய சகோதரர் குறிப்பிட்டதும் இது சார்ந்தே இருக்கவேண்டும் என்ற உண்மை புரிந்தது; அவர்கள் இதை அணுகும்-முறை வேண்டுமானால் அடக்குமுறை கொண்டதாய் இருக்கலாம்; சொல்ல எத்தனித்திருக்கும் கருத்து ஒன்றே என்று தோன்றியது. எனவே, நம் முன்டாசுக்கவிஞனும், திருக்குரானும் - பெண்மையும், தாய்மையும் போற்றி பாதுகாக்க படவேண்டும் என்ற ஒன்றுபட்ட கருத்தில் தான் இவைகளை சொல்லி இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

        இவ்விரண்டும் புரிந்த பின் - மற்றவர்கள் கருத்தும் இது சார்ந்ததாய் தான் இருக்கவேண்டும் என்பது   புரிய ஆரம்பித்தது. அதை அவர்கள் தவறான விதமாய், தவறான வார்த்தைகள் கொண்டு வேண்டுமானால் சொல்லி இருக்கலாம். ஆனால், அவர்களின் அடி-மனதில் - அவர்களுக்கு தெரிந்தோ/தெரியாமலோ இந்த எண்ணம் தான் இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த புரிதல் வந்த பின், இந்த விசயத்தை எப்படி தெளிவாய் பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். எனக்குள் ஓர் கேள்வி எழுந்தது; தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற இயற்கை/இறைவனின் நிமித்தத்தால் - அவர்கள் இப்படி மது-அருந்துவது போன்ற செய்கையை செய்வது தவறு என்று சொல்வது எப்படி நியாயமாகும்?! என்ற கேள்வி எழுந்தது. 8 ஆண்டுகள் ஐரோப்பிய-கண்டத்தில் வாழ்ந்தபோது "நிறைய மது அருந்தும் - நிறைய புகைப் பிடிக்கும்" பல பெண்கள் தாய்மை அடைந்து, தாய்மையை அனுபவித்து நல்ல தாயாய் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

      அங்கே, பெண்கள் மது-அருந்துவது போன்ற செய்கைகள் செய்வது தவறாய் பார்க்கப்படுவதில்லை. மேலும், ஒவ்வொரு பெண்ணும் - தாய்மை அடைய ஆயத்தமாகும் முன் 2 மாதங்கள் "பல விதமான சோதனைகள் செய்து, பல விதமான மருந்துகள் உட்கொண்டு" (புகைப்பிடித்தல், மது-அருந்துதல் போன்ற பல விசயங்களை அறவே நிறுத்தி) பின்னர் தான் தாய்மை அடைய தேவையான செயலில் ஈடுபடுகின்றனர். இது போன்ற எவ்வித பழக்கமும் இல்லாதவர்களும் கூட - அதே முறையில் தான் தாய்மை அடைகின்றனர். அவர்கள் சார்ந்த ஆண்களும் அதற்கு எல்லாவிதத்திலும் உதவியாய் இருந்து பொறுமை காக்கின்றனர். இங்கே - குறிப்பாய், ஆண்கள் சார்ந்து எந்த நிபந்தனையும் இல்லை; அவன் - எதை வேண்டுமானாலும் செய்யலாம். இது சார்ந்த எந்த புரிதலும் இங்கே இல்லை; ஒரு பெண்ணின் தாய்மையில் ஆணுக்கும் பங்குண்டு என்பதை எவரும் உணர்வதே இல்லை. அதனால் தான் - ஓர் பெண் மதுக்கடையில் நிற்பது-கூட தவறு என்பதாய் பார்க்கப்படுகிறது. எனவே, என்னுடைய பார்வையில்...

ஓர் பெண் "மது-அருந்துவதில்" எந்த தவறும் இல்லை!!!     

பின்குறிப்பு: ஆயினும், பெண்கள் யாரும் - தாய்மை அடையும் அந்த வாய்ப்பு/வரத்தை இயல்பாய் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளும் எனக்கு இருக்கிறது. ஒரு பெண் தாய்மை அடைவதில் வேண்டுமானால் - ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிவர பங்கும்/பொறுப்பும் - இருக்கலாம்; ஆனால், தாய்மையை - அனுபவிப்பது/ காப்பது/ நிறைவு செய்ய வைப்பது - போன்ற எதிலும் "ஆண்களுக்கு எந்த வாய்ப்பும்"இல்லை என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால் தான் முண்டாசுக்கவிஞன் "நல்ல மாதவம், செய்திடல் வேண்டுமம்மா" என்றார். அதற்காய் - சில நேரங்களில், சில விசயங்களில் - அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அவர்கள் அதை மனமுவந்து செய்யவேண்டும்.

தமிழில் பேசினால் அபராதம்???




       நண்பர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் தன்னுடைய பேச்சு-ஆங்கிலப்பயிற்சி வகுப்பு அனுபவம் பற்றி கூறிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது, இந்த அனுபவம் பற்றி பலரும் கூறக்கேட்கும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அந்த நண்பர் - ஆங்கில வகுப்பில் "தமிழில் பேசினால்" ஒரு வார்த்தைக்கு 10 உரூபாய் அபராதம் விதிக்கின்றனர் என்றார். முதலில் எனக்கு திகீரென்றது?! இவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றனரா?! என்ற ஐயம் வந்தது. பின்னர், சரி ஆங்கிலம் கற்க விருப்பப்பட்டு தானே?! செல்கின்றனர். தமிழில் பேசாது இருந்தால் ஆங்கிலம் பேசுவது எளிதாய் இருக்கும்; அதனால் தான் அபராதம் விதிக்கின்றனர் என்ற உண்மை விளங்கிற்று. அந்த செயல் சரியென்றே எனக்கு தோன்றியது. ஆயின், அதே போல் அபராதம் விதிக்கும் வேறொரு சூழல் எனக்கு நினைவில் வந்தது! இதை பலரும் கண்டிப்பாய் கேட்டிருப்பீர்; சமீபத்தில் வெளியான "தங்க-மீன்கள்" திரைப்படத்தில் கூட இது சார்ந்த ஓர்-வசனம் வரும். ஆம்! அதே தான்... பள்ளியில் விதிக்கும் அந்த அபராதம் பற்றி தான்!!

     பள்ளியில் ஆங்கிலம் தவிர்த்து பல பாடங்களும் - குறிப்பாய், வாழ்வியல் பற்றியும் கற்பதே ஒவ்வொரு குழந்தையின் முதல் தேவையாய் இருக்கிறது. அப்படி எனும்போது - தமிழ்நாட்டில் "தமிழை தாய்மொழியாய்" கொண்ட ஒரு குழந்தையிடம் "தமிழில் பேசினால், அபராதம்!" என்று பல பள்ளிகளும் செயல்படுவது எப்படி நியாயமாகும்? ஆங்கில் கற்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! குழந்தைப்பருவம் எதையும் கற்கும் வல்லமை கொண்ட அபூர்வபருவம்! அவர்கள் ஒரேநேரத்தில் பலத்தையும் கற்கும் ஆற்றல் கொண்டவர்!! அவர்கள் அனைத்தையும் கற்கும்போதுதான் அவர்களின் "தனித்திறன்" என்னவென்பதை அறிய(வும்)முடியும்! அப்படி இருக்கும் போது, அறிவியல் மற்றும் பிற பாடங்கள் குறித்து (ஆங்கிலத்தில் தான் படிக்கின்றனர் எனினும்)தமிழில் ஓர் ஆசிரியர்/ ஆசிரியையிடம் சந்தேகமோ/விளக்கமோ கேட்பது எப்படி தவறாகும்?! தமிழில் விளக்கம் கூறி பின்னர் ஆங்கிலத்தில் விளக்குவதில் என்ன தவறு இருக்கிறது. அதை விடுத்து தமிழ்ச் சூழலில் வளரும்...

ஓர் குழந்தை தமிழில் பேசுவதற்கு அபராதம் விதிப்பது எப்படி நியாயமாகும்???!!!  

திருமணம்...




(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****


எதிரெதிராம் துருவங்கள் இரண்டை ஒன்றாய்
         இணைப்பதேயாம் திருமணம்!ஆம் தெரிந்தே செய்யும்
விதிவினையாம் இந்நிகழ்வும்! இணைப்போர் சூழ்ச்சி
         செய்தேதான் உண்மைதனை மறைப்பர்; ஆங்கே
துதிபுரிந்தே கைகொடுப்போர் பலரும்! பத்தும்
          இருந்தென்ன பயன்?பத்தில் எதுவும் பந்தம்
புதிதில்சேர் மணமக்கள் குணத்தில் இன்றேல்;
          ஓங்கிடுதல் எங்கனமாம் குடும்பம் ஒன்றும்?

என்பணம் என் இனம்என்ற முதன்மை வந்தால்
          எவர்மனம்தான் ஒக்கும்?யார் உரைப்பர் ஆர்க்கும்?
இன்பங்கள் பலவிருந்தும் புதிதாய் சேர்தல்
          இல்லையாம்ஓர் உறவுமரம் விருத்தம் கூட்ட!
துன்பங்கள் சிலவிருந்தும் கழிதல் மட்டும்
          அதிகரிக்கும் மர்மமும்என்? எவர்தான் சொல்வர்??
இன்னல்கள் துடைக்கும்நம் உறவும் கொன்று
          உவர்ப்பாய்வாழ் தல்எதற்காம்? உணர்தல் நன்றாம்!

குழந்தையும்ஓர் குதூகலமாய் வரும்நாள் எல்லாம்
          மாறிடும்!காத் திருப்போம்அந் தநாளும் ஓர்நாள்
அழகியலாய் வந்திடுமாம்! விருப்பம் சேர்ந்தும்
          வெறுப்பனைத்தும் கலைந்தும்ஓர் தெளிவும் பூக்கும்!
அழுகையையும் அழித்தேநாம் குடும்பம் ஓங்கும்
          ஓர்வழியும் கண்டுணர்ந்து உரைப்போம்! நம்மால்
அழகியல்சேர் திருமணம்நாம் மடிந்தும் என்றும்
          வாழ்ந்திடவே! முயற்சியொன்றும் பயின்றே வீழ்வோம்!!! 

நம்பிக்கையும், அவநம்பிக்கையும்...



"அவ" தான்
ஓர் நம்பிக்கை...
"அவ"நம்பிக்கையாய்
மாறக் காரணம்!!!

("அவள்" என்ற பொருளில் "நான்-கூறவில்லை"!)