ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

என்போன்றோரின் சுயம்!!!           என்போன்றோரின் சுயத்தை பற்றி பேசுவதற்காய் இத்தலையங்கம்! என்னுடைய சில நட்புகளும்/ உறவுகளும்; திருமணத்திற்கு-முன் நான் சம்பாதித்ததை (எனக்காய்)சேமிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை என்மீது எப்போதும் சுமத்துவதுண்டு! ஆம்! எனக்கென எதையும் சேமிக்காது - எல்லாவற்றையும் என்குடும்பதிற்காய் (முக்கியமாய்; பெற்றோருக்காய்) செலவிட்டவன்; இதுபோல் பலர் இருக்கின்றனர்!!  இம்மாதிரியானவர்களை பலரும் புரிந்து கொள்வதில்லை! முக்கியமாய், வாழ்நாள் முழுதும் இணைந்து பயணிக்க வேண்டிய உறவுகளும்/நட்புகளும். எனவே, இம்மாதிரியானோரின் சுயத்தை பற்றி ஓர்-தலையங்கம் எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த நிமிடம் வரை; நான் என்குடும்பத்திற்காய் செலவிட்டதை எண்ணி ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை! என்மகளை  பிரிந்திருக்க வேண்டிய இந்த சூழலுக்கு அதுவும் ஓர்காரணம் எனினும், என்னுடைய அந்த செயலுக்காய் நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை.

     நான் இன்றிருக்கும் நிலையை எட்ட எனக்கு ஏணியாய் இருந்து ஏற்றிவிட்டு; இன்று கீழே நின்றுகொண்டிருக்கும் அவர்களுக்காய் நான் எதுவும் செய்யவில்லை என்றால், என்னவிதமான மனிதனாய் இருக்கமுடியும்?! இதன் ஒரு-சாராம்சம் தான் சென்ற வாரம் என்மருதமையன் என்று நான் எழுதிட்ட தலையங்கம்! என்னை வளர்த்த/நான் வளர்வதற்கு வித்திட்ட அவர்களை நான் கண்டுகொள்ளாமல் போவது எப்படி சாத்தியம்?! அவர்கள் செய்தது கடமை எனில், நான் நல்ல நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு உதவுவது என் கடமையல்லவா?! திருமண உறவுக்கென சிறிதாவது சேர்த்து வைத்திருக்கலாம் என்று சிலர் சொல்வது ஏற்புடையதே!! சம்பள-உரையை அப்படியே கொடுத்த என்னப்பனின் செயலை அவ்வப்போது குறிப்பிடுகிறேன். அப்படிப்பட்டவரிடம், திடீரென்று ஒரு பிரச்சனை எனும்போது - பணம் வைத்துக்கொண்டே; இல்லையென்று! என்னால் எப்படி சொல்ல முடியும்? அப்படி சொல்வதுதான் முறையா??

        எனக்கு பணம் தேவையானபோது தன்னிடம் இல்லாதிருந்தால், என்தமக்கையின் நகையை (எனக்கு தெரியாமல்)அடமானம் வைத்தும் கொடுத்த என்மருதமையனுக்கு ஏதேனும் செய்யாமல் எப்படி இருக்கமுடியும்? அவர் கேட்கவில்லை எனினும் நான் செய்யவேண்டும் அல்லவா?! சமீபத்தில் கூட தன்பிள்ளைகளுடன் பேருந்தில் செல்லும் என்தமையன்; நான் அப்படி போகக்கூடாது என்று - என்சூழல் உணர்ந்து "வாடகை-மகிழ்வுந்து" ஏற்பாடு செய்த என்தமையனுக்கு ஓர்அத்தியாவசியம் எனில், என்னால் முடிந்ததை செய்யாமல் எப்படி இருக்கமுடியும்?! அப்படி பணம் வைத்துக்கொண்டு என்னால் சந்தோசமாய் இருக்கமுடியுமா?? அதற்காய், திருமணமான பின்னும் அப்படியே இருக்கவேண்டும் என்பதில்லை; அது தவறு! ஆனால், திருமணமே ஆகாத சூழலில் "முகம் கூட தெரியாமல், பின்னால் வரப்போகும்" ஓர்உறவுக்காய் என்று எப்படி பொருள்-சேர்த்து வைக்கமுடியும்?! அப்படி நினைத்து சம-காலத்தில் இருந்துகொண்டிருக்கும் உறவை எப்படி புறந்தள்ள முடியும்?

          ஆனால், திருமணமான பின் அந்த எண்ணம் வரவேண்டும்; வரும்! அதுவும் என்போன்றோருக்கு இயல்பாய்/அதிகமாகவே வரும்; இதைப்பலரும் புரிந்துகொள்ளாமல் போவதுதான் வேதனை! அதிலும், மேற்கூறியபடி வாழ்நாள் முழுதும்-இணைந்து பயணிக்க வேண்டிய உறவு (/நட்பு) அப்படி புரியாமல் போகும்போது ஆறாத-இரணமாய் ஆகும்!! என்மகள் பிறந்த 3-ஆம் மாதம் அவளுக்கென்று ஓர்வங்கி கணக்கு ஆரம்பித்து இன்றுவரை சிறுக-சிறுக (RD மூலம்) சேர்த்து கொண்டு வருகிறேன். இதுவரை எந்த  சூழலிலும், ஒருமாதம் கூட தவறியதில்லை; என்சம்பளம் அதிகமான போது, அவளுக்கான சேமிப்பையும் அதிகப்படுத்தி உள்ளேன். என்னவள்/என்மகள் கேட்டதை - இதுவரை இல்லை என்று சொல்லியதில்லை! உண்மையில், அவர்கள் கேட்காமலேயே செய்வதே என் வழக்கம். என்மகள் பிறந்ததுமுதல் இன்றுவரை - என்மகளுக்காய் எவரும் கொடுத்த 1-உரூபாயை கூட நான் இன்றுவரை செலவிட்டதில்லை! அவள் வங்கிக்கணக்கில் சேர்த்துவிடுவேன்

        சிலசமயங்களில் என்னவள் சேர்ந்த பணத்தை மட்டும் கூறுவாள்; சிறிதும் கடிந்துகொள்ளாமல், அதற்கு நிகரான பணத்தை என்மகளின் வங்கி-கணக்கில் செலுத்திவிடுவேன். சென்றமுறை என்தாய் கொடுத்த 1500-உரூபாயை கூட அப்படியே செலுத்திவிட்டேன். நாணயங்கள் சேமிக்கும் வழக்கத்தில் சேர்ந்ததை; கடந்த 2-முறைகளாய்  என்மகள் கணக்கில்தான் சேர்த்துள்ளேன்; அதிகமாய் பணம் புழங்கும் காலத்தில் - அவள் கணக்கில் மேலும் சில சேமிப்பை செலுத்துவதுண்டு! இன்றைய நிலையில் (எங்களுக்காய் என்ற சேமிப்பை தவிர்த்து) என்வங்கி-கணக்கை விட என்மகளின்-கணக்கு அதிகம். எந்த சூழலிலும், அதிலிருந்து 1-உரூபாய் கூட எடுக்கமாட்டேன்; இது எனக்கு-நானே செய்து கொண்ட சத்தியம் - அது அவள் பணம்! என்னவளிடம் "என்றோ ஓர்காலத்தில்" சொன்னது போல் - இன்னுமோர் குழந்தை எனக்கு வாய்க்குமாயின்; அதன் பெயரில் வங்கி-கணக்கு துவங்கும் போது - அன்றைய தேதியில் என்மகளின் கணக்கில் இருக்கும் அளவிற்கு நிகரான பணத்தை தவறாது-செலுத்துவேன்

         இதுதான் என்போன்றோரின் சுயம்! தன் பெற்றோருக்கும் உடன்பிறந்த உறவுகளுக்கும் எல்லாமும் செய்திட்ட/செய்ய நினைக்கும் ஒருவனால், தனக்கென உருவாகும் ஓர்குடும்பத்திற்காய் எப்படி செய்யாதிருக்க முடியும்?  உண்மையில், அதை விட "பலமடங்கு அதிகமாகவே!" செய்வான். இது புரியவேண்டிய உறவுக்கு புரியாமல் போவது, துரதிஷ்டமே! இத்தலையங்கம் ஒரேயொரு உறவுக்கு இதை புரிய-வைத்தால் போதுமானது. நான் என்னப்பனுக்கு எத்தனை செய்து இருந்தாலும் - இறுதியில் எனக்கென "5-ஏக்கர்" நிலத்தை கொடுத்து அவரே "உயர்ந்து நிற்கிறார்!".  அந்த நிலத்தில் பல-வளங்களை சேர்த்து "நிலத்தின் மதிப்பை"மென்மேலும் உயர்த்தி "பெரிதும் உயர்ந்து நிற்கிறார்!!". அதுபோன்ற ஒருவருக்கு என்னிடம் இருக்கும்போது; இல்லையென்று சொல்லிட எப்படி மனது வரும்??!! உண்மையில், அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் - மீண்டும் அவருக்கு மகனாய் பிறந்து இன்னமும் செய்யவேண்டும் என்றல்லாவா?! மனது துடிக்கும்??...

என்போன்ற சுயம் கொண்ட அனைவரின் வளத்திற்காய் இதை சமர்ப்பிக்கிறேன்!!!

வார-இறுதியில் வீட்டிலேயே அடைந்திருப்பது!!!        வார-இறுதியில் நான் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்திருப்பது வழக்கம்! அதிலும், சென்ற 2/3 வாரங்களாய் "ஷாப்பிங்"செய்யக் கூட வெளியில் செல்வதில்லை. வியாழக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தபின், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை-தான் வீட்டை விட்டு வெளியே செல்வேன் (வெள்ளி/சனி தான் எனக்கு வார-இறுதி!); இன்றும் அப்படியே! வாயிற்கதவை கூட திறப்பதில்லை (ஃபிளாட் சிஸ்டம்); என்நண்பன் கூட அடிக்கடி திட்டுவான்! எங்கயாவது போடா!! ஏண்டா, இப்படி வீட்டிலேயே அடைஞ்சி கெடக்கற?! என்று கேட்பான். நல்ல நட்புகள் என்று இப்போது பெரிதாய் இல்லை; உண்மையில், முன்போல் "பரஸ்பரம் புரிந்த" நட்புகள் அமைவதில்லை! என்-வயதும் கூட அதற்கோர் காரணமாய் இருக்கலாம். எப்போதாவது, எவருடனாவது எங்கேனும் வெளியே செல்வதுண்டு; என் தமக்கை-மகன் இங்கிருந்த வரை அவன்-வீட்டுக்காவது அவ்வப்போது செல்வது வழக்கம். இப்போதெல்லாம், எதுவும் இல்லை; ஏதாவது செய்துகொண்டு வீட்டிலேயே இருப்பேன்!

             போர்ச்சுக்கல்லில் இருந்தபோது - எனக்கும்; என் மகளுக்கும் "சனி/ஞாயிறே" வார-இறுதியாய் இருந்தது. எங்களுக்குள் குறைந்தது நான்கரை-மணி நேரம் வித்தியாசம் என்பதால்; அவளுடன் "ஸ்கைப்" செய்வது பொருத்தமாய் இருந்தது. இப்போது, எங்களுக்குள் இருக்கும் ஒரே-பொதுவான வார-இறுதி "சனிக்கிழமை"தான்; அதுவும், ஒன்றரை-மணி நேரம் தான் வித்தியாசம். அதனாலேயே, வெள்ளி/சனி இரண்டு நாட்களிலும் இந்திய-நேரப்படி அவளுடன் 19:00 மணியளவில் "ஸ்கைப்" செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கும் அடுத்த நாள் அவளுக்கு விடுமுறை என்பதால்; எந்த பிரச்சனையும் இல்லை; எனக்கு அப்போது, 17:30 மணியாகும் என்பதால், என்னால் வெளியில் எங்கும் செல்வது (அப்படியே, போயிட்டாலும்!) இயலாது போகிறது! காலையில், வீடு சுத்தம் செய்வது/ துணி துவைப்பது/ சமையல் செய்வது போன்ற ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது செய்வது வழக்கம். மேலும், என்குடும்பத்தார் அனைவருக்கும் தொலை-பேசுவது வழக்கம். இப்படியாய்...

வார-இறுதியில் வீட்டில் அடைந்திருப்பதே என் வாடிக்கை!!!

பின்குறிப்பு: என்னவளும்/என்மகளும் இல்லாதது பெரிய காரணம் எனினும், அவர்கள் என்னுடன் இருந்தபோது கூட; என்மகள் சிறு-குழந்தை என்பதால் பெரும்பாலும் வெளியில் அதிகமாய் செல்வதில்லை! அப்படியே ஏதாவது முயற்சி செய்தாலும்; ஒன்று, நான் உறங்கிவிடுவேன்! அல்லது என்னவள் நேரமாயிடுச்சி; பாப்பாவை வச்சுக்கிட்டு கஷ்டம் என்றிடுவாள்!! மேலும், என்னவளுக்கும்/ என்மகளுக்கும் கூட பெரிதாய்-வெளியே செல்லவேண்டும் என்ற ஆர்வமில்லை. என்னவள் "அப்பாவும்/பொண்ணும் வீட்டிலேயே முட்டை-இட்டுக்கிட்டு இருங்க!" என்று கிண்டலாய் சொல்வாள். ஆம்! எங்கள் மூவருக்கும் "வீட்டிலேயே முட்டை-இடுவதில்" அப்படியோர் பொருத்தம்!!!   

ஆண்கள் அவ்வளவு கீழ்த்தனமானவர்களா???     16.02.2014 தேதியில் வெளியான "நீயா நானா" நிகழ்ச்சியை பலரும் பார்த்திருக்கக்கூடும்! குழந்தை வளர்ப்பில் கணவன்/மனைவியின் பார்வை பற்றிய விவாதம். அதில் ஒரு தாய் (ஒருவரின் மனைவி) கூறியது என்னை மிகவும் காயப்படுத்தி/அதீத-கோபத்துக்கு உள்ளாக்கியது! அவர் சொன்னது இதுதான்: அவரின் மகளுக்கு 11-வயது ஆகிவிட்டதால் இனி-அப்பாவின் பக்கத்தில் படுக்கக்கூடாது என்று சொல்லி - பிரித்து படுக்க வைக்கிறாராம்! இது அந்த தந்தைக்கு மிகுந்த மன-வேதனை அளிப்பதாய் அவரே கூறினார்; அதற்கு அந்த தாய் சொன்ன பதில் "ஓர் தந்தைக்கு அதையெல்லாம் எடுத்து சொல்லி புரியவைக்கும் அளவிற்கு" பக்குவம் இருக்காதாம்?! அதனால் தான், தாய் என்பவள் அதை செய்ய நேரிடுகிறதாம்! இதை பலரும் ஆதரித்தனர்! ஆண்கள் என்ன அவ்வளவு கீழ்த்தனமானவர்களா??!! ஏதேனும் ஓரிரு "தகப்பன் எனும் மிருகங்கள்" தவறு செய்யலாம்; இல்லை எனவில்லை! ஆனால், எந்த அடிப்படையும் இல்லாமல் இப்படி செய்வது எந்த விதத்தில் நியாயம்?

       இங்கே ஒரேயொரு கேள்வியைத்தான் கேட்க நினைக்கிறேன்?! 20-வயது ஆன மகனை "என் மகன் இன்னும் கூட; என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு தான் தூங்குவான்!" என்று மார்தட்டி சொல்லும் எத்தனை தாய்மார்கள் உண்டு?! ஏன், அங்கே அந்த பிரச்சனை எழதா??!! அப்பன் எனும் ஆண்-மட்டும் அத்தனை கீழ்த்தரமானவனா?! மகள் வயதுக்கு வந்த பின், அந்த கணம் முதல் அந்த நிகழ்வு உட்பட - அனைத்திலும்; தந்தையை புறந்தள்ளி வைப்பதை முன்பொரு தலையங்கத்தில் வெளிப்படுத்தி இருந்தேன்! ஏன் இந்த உரிமை-மீறல்களும்/உரிமை-மறுப்புகளும் தொடர்ந்து நடக்கின்றன?! இதை ஏன் பலரும், வெளிப்படையாய் "பலத்த குரலெழுப்பி மறுப்பதில்லை"! ஒவ்வொரு மகனும் (ஆணும்) கூட பருவ-வயதை அடைகிறான்! ஆனால், அவனுக்கு அந்த நிகழ்வின் விளைவு - வீரியமாய் இல்லாததால் பெரிதாய் கவனிக்கப்படாது போவது மட்டுமல்ல; இது சார்ந்த நிகழ்வுகளில் இருந்து தள்ளியும் வைக்கப்படுகிறான். ஆண்களுக்கு இது போன்ற நிகழ்வுகளில் குறைந்தபட்ச உரிமைகளாவது...

கிடைக்கும் வரை; இது சார்ந்த விசயத்தில் பரஸ்பர-புரிதல் வருதல் சாத்தியமன்று!!! 

ஐஃபோன்5-உம்; கவரும்...          எனக்கு தெரிந்த வரையில், ஐஃபோன்5 உபயோகிப்பவர்களுக்கு - ஒரு குழப்பமும்/அசெளகர்யமும் இருக்கிறது! எனக்கு அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆம்! ஐஃபோன்5-ஐ "கவருடன்" உபயோகிப்பதா? வேண்டாமா?? என்பது குழப்பம்; கவருடன் உபயோகிப்பது ஒரு அசெளகர்யம்! ஐஃபோன்5-ஐ எந்த-கவரும் இல்லாமல் தொடுவதில் ஒரு பரவசம் கிடைக்கிறது. அந்த "உலோக"உடல் கொண்ட போனை அப்படியே தொடும்போது "ஒரு ஜில்லிப்பு" வரும் பாருங்கள்; அது பெருத்த-சந்தோசம்! ஆனால், எந்த-கவரும் இல்லாமல் பயன்படுத்தும் போது, சிறிதாய் எங்கேனும் மோதிவிட்டால் - ஒரு "மெல்லிய டொக்கு" விழுந்துவிடும். என்னதான், கீழே போட்டால் உடைவதில்லை; மேலே, ஒரு வாகனம் ஏறினாலும் நசுங்குவதில்லை என்பது உண்மையானாலும், எதிலேனும் மோதும்போது ஏற்படும் - அந்த "மெல்லிய டொக்கு" தவிர்க்கமுடியாதது! எனக்கு, இன்னமும் - கவரை உபயோகிக்கப்படுத்துவதா? வேண்டாமா?? என்ற குழப்பம் நீங்கவில்லை.

       முதலில், வாங்கிய விலை-குறைந்த "கவர்" பொத்தானை அழுத்துவதில் சிரமம் கொடுக்க, "உமிழ்ந்த பகுதியினை" அறுத்தெறிந்துவிட்டு முயற்சித்தபோது - பொத்தானை தொடுவதே சிரமமாய் இருந்தது; அதை - தூக்கி எறிந்துவிட்டேன். பின்னர் கவர்-இல்லாமல் சிறிது நாட்கள் உபயோகித்தபோது; முதல் "டொக்கு" விழுந்தது. சரியென்று, விலை-உயர்ந்த கவர் ஒன்று வாங்கினேன்; அது மிக அருமையாய் இருந்தது! ஆனால், போனின் எடை - ஒன்றரை மடங்கிற்கும் மேல் கூடியதாய் உணர்ந்தேன். அதனால், அடிக்கடி உபயோகிக்காமல் இருந்தபோது இரண்டாம் "டொக்கு" விழுந்தது. 1 மாதத்திற்கு முன் "இடைப்பட்ட விலையில்" ஒரு கவரை வாங்கி 2 நாட்கள் முன்-வரை உபயோகித்தேன். அன்றிரவு மீண்டும் "போனின் எடை கூடியது போல் உணர"; அடுத்த நாள் காலை, அடிப்பகத்தில் இருந்த "ப்லாஸ்டிக்"கை பிரித்துவிட்டு "சைடில்"கவராவது போல் உபயோகிக்கலாம் என்று பார்த்தால்; அது "லூசாக"இருக்கிறது (வலது புகைப்படம்!). இப்போது அதையும் தூக்கிப்போட வேண்டும்; ம்ம்ம்...

பார்ப்போம்! இந்த முறை "டொக்கு" எப்படி ஏற்படுகிறதென்று!!!      

"முந்தைய-காதலை" சொல்லும் தகுதி!!!எவன் ஒருவனுக்கு "மனைவியின் எந்த செய்கையையும்" தன் "வாழ்நாள் முழுவதும்" பொறுத்துக்கொள்ளும் திறன் இருக்கிறதோ; அவனே "தன் முந்தைய-காதலை" மனைவியிடம் (திருமணத்திற்கு முன்/பின்) சொல்லும் தகுதியுள்ளவன் ஆகிறான்!!!

{குறிப்பு: இது "மனைவியின்; முந்தைய-காதலுக்கும்" பொருந்தும்!}

"சொந்த ஊர்" என்ற அரசியல்..."புலிவால்" படத்தில் ஓர்-உரையாடல், கீழ்வருமாறு:

ஒருவர்: உங்க சொந்த ஊர் எது தம்பி?
நாயகன்: அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லைங்க! "ஒரேயொரு"வீடு தான் சொந்தமா இருக்கு!!

இதைக்கேட்டவுடன் வெகுவாய் இரசித்தேன்! பின்னர்தான் அதில் {"சொந்த ஊர்"என்றெல்லாம் எதுவும் இல்லைடா! "வசிக்கும் ஊர்" என்று-தாண்டா இருக்கு; இதுக்கு ஏண்டா? உங்க-ஊரு/எங்க-ஊரு - ன்னு அடிச்சுக்கிறீங்க??} என்ற கேள்வி பொதிந்திருப்பதாய் எனக்கு தோன்றியது!

"நக"அழகு பராமரிப்பு..."மாடலிங்"துறையில் இருக்கும், மற்றும் அனைத்து வேலைகளுக்கும் வேலை-ஆட்கள் வைத்திருக்கும்; பெண்களுக்கு மட்டுமே "நக"அழகு பராமரிப்பு என்பது "அத்தியாவசியமும்/ சாத்தியமும்" ஆகிறது!!!

"சிம்"முல வைக்கறதுன்னா என்ன???சென்றவாரம் "வெஜிடபிள்"பிரியாணி செய்து கொண்டிருக்கும் போது ஒரு கேள்வி எழுந்தது! "ஏங்க/ஏம்மா - ஒரு விசில் வந்தவுடனே கேஸை; சிம்முல வச்சுடரீங்களா/வச்சுடறியா?" என்ற குரலை நாம் ஒவ்வொருவரும் கேட்டிருப்போம்!

நான் நினைப்பது: "சிம்" என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது?? அதன் உண்மையான அர்த்தம் என்ன???

அபு-தாபி மழையில் "கார்" ஓட்டுவது...அபு-தாபியில், கணிசமான மழையினூடே "மகிழ்வுந்து" ஓட்டவேண்டும் என்ற என்னுடைய ஆசை சென்றவாரம் நிறைவேறியது! ஏனென்று தெரியவில்லை; ஆனால், அது ஓர் பெருத்த-சந்தோசம்!!

My desire to drive during reasonable rain in Abu-Dhabi, has been fulfilled last week! I do not know the reason, but it was a Great-Joy!!

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

என்மருதமையன்...         என்மருதமையனின் (தமக்கையின் கணவர்) பொருளுதவி "சரியான நேரத்தில்" கிடைத்திராது போயிருந்தால் என் வாழ்க்கை பெருமளவு (தடு)மாற்றம் கண்டிருக்கும்! என்னப்பனால் மாதாந்திர செலவுக்கு பணம்-கொடுக்க இயலாத சூழலில்; அவர் ஓர்-அப்பனாய், எனக்கு இருந்து செய்திருக்கிறார். "பண-உதவி" மட்டுமல்ல; எனக்கு இன்றுவரை மனதாலும் மிகப்பெரிய பலமாய் இருந்து கொண்டிருக்கிறார். எனக்கு மட்டுமல்ல; என்மகளுக்கும்! மேலே, இடது-புகைப்படம் அதைத்தான் காட்டுகிறது!! அதை மனமார-இரசிக்கும் என்னை படமெடுக்கவும் என்மருதமையனின்-மகன் தவறவில்லை (வலது-புகைப்படம்). "உதவித்தொகை" இல்லாமல் ஆராய்ச்சி படிப்பு (Ph. D.) படிப்பது எத்தனை சிரமம் என்று; என்னை மாதிரி அப்படிப்பை மேற்கொண்டோருக்கு தெரியும். இப்போதாவது பரவாய் இல்லை! சிறு-கல்லூரிகளில் கூட ஆராய்ச்சி-செய்வதற்கான பல வசதிகள் உள்ளன. ஆனால், 2000-இன் ஆரம்பத்தில் "எல்லா இடங்களிலும்" இத்தனை வசதிகள் இல்லை. 

  என்னுடைய ஆராய்ச்சி-மேற்பார்வையாளர் (Research Supervisor) ஆராய்ச்சிக்கு தேவையானவைகளை கொடுத்ததோடு அவ்வப்போது "பண-உதவி"யையும் செய்திருக்கிறார்; அவருக்கு  இன்றுவரை நன்றியுள்ளவனாய் இருந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய தங்கும் செலவு/ உணவுச் செலவு போன்றவற்றிற்காய் என்னப்பனால் - உதவிட சிரமமானபோது - எந்த தயக்கமும் இன்றி தானாய் முன்வந்து அதை தொடர்ந்திட்டவர் என்மருதமையன்! சத்தமாய்/அவசரப்பட்டு பேசுவார்; ஆனால் சாந்தமான/அன்புநிறைந்த தன்மையுடையவர் அவர்! என்னைப்போன்றே அவரைப் புரிந்து அவரிடம் உறவுகொள்ள தெரிந்த பாக்கியசாலிகள் - மிகச்சிலரே! என் மிக-நெருங்கிய நட்பு வட்டம் - இப்போது அவரின் மிக, மிக-நெருங்கிய நட்பு-வட்டம்! மிகப்பெரிய பணப்புழக்கம் இருந்தபோது அதை சரியான-விதத்தில் சேமிக்க தெரியாமல்; எல்லோருக்கும்/ எல்லாமும் செய்துவிட்டு இன்று அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்.

       அவரிடம் இப்போது பணம்-குறைவாய் இருக்கலாம்; ஆனால் "இன்றும்; அவர் மனதளவில் வள்ளல்!". எத்தனை பேரிடம் அத்தகைய குனம் இருந்திட முடியும்? கண்டிப்பாய், அவரின் உதவியில்லாது போயிருந்தால் வெறும் "M. Phil." பட்டத்தோடு ஏதேனும் ஓர்-தனியார் கல்லூரி/பள்ளியில் வேலையில் சேர்ந்து என்-வாழ்க்கை திசை-மாறி இருந்திருக்கும்! இப்படி நான் செழித்திட எனக்காய் எல்லாமும் செய்த அவருக்கு என்னால் "பெரிதாய்-உதவிட"முடியாது போனது?! என்னுடைய துரதிஷ்டமே! என்னுடைய பல உறவுகளும்/நட்புகளும் - நான்தான் அவருக்கு எல்லாமும் செய்கின்றேன் என்ற தவறான பார்வையை கொண்டுள்ளன. என்னப்பனுக்கு செய்யவேண்டிய கடனை செய்யவே எனக்கு போதும், போதும் என்றாகிவிட்டது.  இந்த நிலையில் - என்மருதமையனுக்கு எப்படி என்னால் எல்லாமும் செய்யமுடியும்? அப்படி நான் செய்திருந்து - அந்த உறவுகளும்/நட்புகளும் பேசுமேயானால்; என்னால் சந்தோசமாய்-பொறுத்துக் கொள்ளமுடியும்!

          எந்த சூழலிலும் இன்றுவரை என்னிடம் (பரிகாரமாய் கூட) அவர் எதுவும் கேட்டதேயில்லை! மிக-முக்கியமாய், என் திருமணத்திற்கு பின் "எந்த சூழலிலும் என்னிடம் கேட்கக்கூடாது!" என்ற பிடிவாதத்துடன் இருப்பவர்! முதன்முதலில் வெளிநாடு சென்ற நாள்-முதல் இன்றுவரை; ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் என்னை விமான நிலையம் வந்து வழியனுப்பவும்/வரவேற்கவும் தவறியதே இல்லை! வயோதிகம் காரணமாய் என் பெற்றோர்களை நானே வர-வேண்டாம் என சொல்லிவிட்டேன். மற்ற உறவெதுவும் எனக்காய் அப்படி வந்து காத்திருப்பதில்லை; 4-வயதே ஆன என்மகள் வருவதும் சாத்தியமில்லை! இம்மாதிரி உறவுகள் கிடைப்பது மிக-அபூர்வம்!! அவரின் பிள்ளைகளுக்காவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும்; ஓரளவிற்கேனும் செய்திருக்கிறேன் எனினும் - இன்னும் பலதும் செய்யவேண்டும். என் மனதிற்கு தெரியும் - என்மருதமையன் செய்தது எத்தனை பேருதவி என்று! அதை எல்லோரும் புரிந்துகொள்வது சிரமம்தான்; எவர் எப்படி/எது சொன்னாலும்...

என்னளவில்; என்மருதமையன் - எனக்கு இன்னுமோர் "அப்பன்"!!!

பின்குறிப்பு: சென்றமுறை இந்தியா-பயணத்தின் போது, என்தமக்கை "அவர் மகனிடம்; அவன் சம்பாரிக்க ஆரம்பிச்சதும், "மாமா(நான்)" எது கேட்டாலும் செய்யணும்" என்று சொல்லியிருப்பதாய் கூறினார். சொல்லவில்லை என்றாலும் செய்யக்கூடிய மகன் அவன்! ஆனால் நான்; "நீ எனக்கு எதுவும் செய்யவேண்டாம்டா! ஒங்க அம்மாவுக்கும்/அப்பாவுக்கும் எல்லாத்தையும் செய்யி; அதுக்கப்புறமா உனக்குன்னு எல்லாத்தையும் செஞ்சுக்க!! என்றேன் (என்னால் செய்யமுடியாதததை/ நான் செய்ய வேண்டியதை; அவனாவது செய்யவேண்டும் என்ற ஓர் சுயமும் அதில் உண்டு!). தொடர்ந்து "ஒருவேளை நான் இல்லாது போய்விட்டால், என்மகளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் - தவறாமல் செய்யடா! என்றேன்). இதுதான் உறவு என்பது; அது, இப்படித்தான் ஓர்-நீண்ட சங்கிலியின் இணைப்பை போல தொடரும்; தொடர வேண்டும்!!!

துன்பம் நேர்கையில்...


துன்பம் நேர்கையில்...
"யாழ் அறுத்து நீ!"
போ(ன/வ)தேனோ???

இது கண்டிப்பாய்..."கண்டனத்துக்கு உரியது!!!"     சமீபத்தில் "பள்ளி மேலாளர்" ஒருவர் தவறான-பார்வையோடு ஓர் மாணவியை கண்டித்தது அல்லாமல், அதன் தொடர்ச்சியாய் மாணவியின் தந்தையை அழைத்து வரச்சொல்லி இருக்கிறார். எங்கே, பள்ளிக்கு வந்தால், தன்-தந்தையை அந்த மேலாளர் அவமானப்படுத்தி விடுவாரோ?!; "தன் தந்தைக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாதே" என்று நினைத்த அந்த இளம்-மகள் தற்கொலை செய்து கொண்டாளாம்! அந்த மகள் எழுதிய கடிதத்தை ஒருவர் "தமிழில் மொழி-பெயர்த்து" முக-நூலில் வெளியிட்டிருந்தார். விசயம் இதுதான்: அந்த மகள் ஓர்-ஆணுடன் எடுத்த புகைப்படம் "முக-நூலில்" வெளிவந்து இருந்ததாம்!! அதைப்பார்த்த மேலாளர் அது தம்-பள்ளிக்கு இழிபெயரை கொடுத்ததாயும், அந்த பெண் தவறானவள் என்பதாய் சித்தரித்ததன் விளைவுதான் மேற்கூறிய நிகழ்வு. எல்லோரும் பரிந்துரை செய்தது போல், அந்த மேலாளர் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; இப்படிப்பட்ட ஓர் அறிவிலியை விதிப்படி கண்டித்திடுதல் அவசியம்.

           அந்த மகளின் மேல் எனக்கு ஆழ்ந்த அனுதாபம் எழுந்தது; அவள் ஆன்மா சாந்தியடையவேண்டும் என்ற கவலை பிறந்தது! அவள் தந்தைக்கு எழுதிய கடிதம் கண்முன் நின்றது; தன் தந்தையை எவ்வளவு நேசித்திருக்கிறாள் என்பது ஒவ்வொரு வரியிலும் தெரிந்தது. தந்தையுடன் இணைந்து எடுத்திருந்த புகைப்படம் கண்முன் வந்தது. இவை எல்லாவற்றையும் மீறி அவளால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடிந்தது?! என்ற தார்மீக-கோபம் எழுந்தது! அவள் இல்லாமல் அவளப்பன் எத்தனை வேதனையடைவார் என்பது தெரிந்திருந்தும், ஏன் அந்த முடிவை எடுத்தாள்?! என்னப்பன் எனக்காய் எதையும் தாங்குவான் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை??!! தயவுசெய்து உன்னை குறை-கூறுவதாய் எண்ணாதே, மகளே! இதுபோன்று இனி "எந்தவொரு மகளும்" எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்ற என்-ஆற்றாமையை உன்னால் உணர-முடியுமா?! என்று தெரியவில்லை! ஆனால், இதுபோல் இனி செய்ய நினைக்கும் ஒவ்வொரு மகளுக்கும்; நீ இல்லாமால், இனி...

தினம்-தினம் செத்துக்கொண்டிருக்கப்போகும் உன்னப்பனுக்கும் கண்டிப்பாய் புரியும்!!!     

700-கிராம் கோழி...
         கடந்த வாரம் "பிரியாணி" செய்ய கோழி வாங்க சென்றிருந்தேன்; இங்கே, அபுதாபியில் கோழியை உரித்து "எடை "அடிப்படையில்" உரையில் போட்டு விற்பது வழக்கம்; 500-கிராம் கோழி கூட கிடைக்கும். 700 கிராம் கோழி ஒன்றை வாங்கி வந்தேன்; அதை பிரியாணி செய்து சாப்பிட்டபோது, அட...அட...அட...! என்ன ஒரு "சுவை?!". இத்தனைக்கும் இந்த முறை, வழக்கம்போல் "பாஸ்மதி-அரிசி" கூட உபயோகிக்கவில்லை; "சோனா-மசூரி"என்ற அரிசியைத்தான் பயன்படுத்தினேன். இருந்தும், வழக்கத்திற்கு மாறாய் - பிரியாணி அப்படி ஓர்-சுவை. கண்டிப்பாய் இது "இளம்-கோழி" என்பதால்தான் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை. வழக்கமாய், கோழியின் மார்பு-பகுதி பிரியாணியில் அத்தனை சுவையாய் இருப்பதில்லை; ஏனெனில், வழக்கமாய் (முக்கியமாய், நம் ஊரில்)கிடைக்கும் கோழி முற்றியது - எனவே, மார்பு பகுதியும் முற்றிதாய் இருக்கும்; அதனால் சுவை குறையும். ஆனால், இந்த முறை கோழியின் எந்த பகுதியும் - சுவையில், குறைவின்றி இருந்தது. 

      நம் ஊரில் பொதுவாய், எடை-குறைவாய் உள்ள கோழி கிடைப்பதில்லை! எல்லா-கோழிகளும் குறைந்தது 1-கிலோவுக்கு  அதிகமாய் இருக்கும். நம் ஊரில் கோழி எப்போது வாங்க சென்றாலும் - எடை குறைவாய் உள்ள கோழியை கேட்பது வழக்கம். 2 அல்லது 3 கோழிகள் கூட வாங்க தயங்குவதில்லை; ஆனால், எனக்கு இளம்-கோழி  வேண்டுமென்று கேட்பேன். போர்ச்சுக்கல் நாட்டில் கூட "கிரில்-செய்வதற்கென்று" விற்கும் கோழி எடை-குறைவானதாய் இருக்கும்! நான் அங்கிருந்தபோது, பெரும்பாலும் அதைத்தான் வாங்குவது வழக்கம். இல்லையெனில், கோழியின் இறகு-பகுதி மட்டும் கிடைக்கும்; அதை வாங்குவேன். இறகு-பகுதி மென்மையாய் இருக்கும் - அதில் என்ன செய்தாலும், அப்படி ஓர்-சுவையாய் இருக்கும். ஏன், நம் ஊரில் அப்படி இளம்-கோழி கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுந்தது; ஒருவேளை, கேட்பவர் யாரும் - அதிக எடையுள்ள கோழியை கேட்கிறார்களா?! பெண்களில் கூட, சற்று-பூசலான உடம்புள்ளவர்களை விரும்புவது தானே தமிழரின் இயல்பும்??!! ஏன் அப்படி இளம்-கோழி வேண்டுமென்று "டிமாண்ட்" செய்யக்கூடாது?...

இந்த கணத்திலிருந்து "டிமாண்ட்" செய்ய ஆரம்பித்தால் கூட போதுமே??!!    

மொழியும், முண்டாசுக்கவிஞனும்...எவர் ஒருவருக்கு தன்-தாய்மொழியின் மீது அதீத காதலும்/ஆளுமையும் இருக்கிறதோ, அவர்களால் மற்ற மொழிகளை மிக-எளிதில் (கற்கவும்/நேசிக்கவும்)முடியும்!!!

(மிகச்சிறந்த உதாரணம்: நம் "முண்டாசுக்கவிஞன்")

லைக்குகளின் எண்ணிக்கையா? பிரபலம்??லைக்குகளின் எண்ணிக்கையா? பிரபலம்??


சில நாட்கள் முன்பு ஒருவரின் பதிவு வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன்! அந்த பதிவு "A4" அளவு தாளில் ஒரு "ஒன்றரை" பக்கம் இருக்கும்!! நான் 5 வரிகள் படித்திருந்த போது பதிவிட்டு "1 நிமிடம்" ஆவதாய் "பதிவின்-குறிப்பு" காட்டியது; ஆனால், அதற்குள் 11 "லைக்குகள்" விழுந்திருந்தது!! "ரோபோ ரஜினி" யால் கூட அவ்வளவு-வேகமாய் படித்திருக்க வாய்ப்பில்லை!

சிலநேரங்களில் "20 நிமிடத்துளிகளில் - 5/6 லைக்குகள்" என்றும் பார்ப்பதுண்டு! இவர்களில் யார் ஏமாற்றப்படுகிறார்கள்? பதிவிடுபவரா?? அல்லது "லைக்"குகிறவர்களா???

"லைக்" என்பது ஒருவரின் பதிவை "புகைப்படம் எனின் பார்த்தோ/கட்டுரை எனின் படித்தோ" அதை முழுதும்-உணர்ந்து பாராட்டும் "ஓர் அங்கீகாரம்" என்பதை எவர் உணர்த்துவது?

குறிப்பு: 300/400 "லைக்குகள்" வாங்கவேண்டும் என்ற என்-ஆசை; இப்போது "3/4" பேர்கள் நான் சொல்லவருவதை முழுதுமாய் உணர்ந்து "லைக்"கிட்டால் போதும் என்று தோன்றுகிறது!  

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

உறவுகளின் பலம்...   
         சென்றமுறை இந்தியா சென்றபோது ஓர் நிகழ்வு நடந்தது! என்மகளுக்காய் என் உறவுகளில் ஒன்று செய்த விசயம்! அந்த செயல் திரும்ப-திரும்ப நடைபெற்றதன் விளைவாய்; ஓர் பெரிய-நன்றி என்னுள் ஊற்றெடுத்தது. எப்போதும் உறவுகளின்பால் பெருமதிப்பு கொண்ட என்னுள்; அச்செயல் உறவுகளின்-பலம் பற்றிய எண்ணத்தை பன்மடங்கு உயர்த்தியது. அதை இப்படியொரு தலையங்கமாய் எழுதி என்நன்றியை மீண்டும் ஓர்முறை மிக-திண்மையாய் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது; அது என்கடமையும் கூட! செய்தி இதுதான்: கடந்த விடுமுறையில் என்மகளுடன் என்தமக்கை வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி இருந்தேன். அப்போது என்மகளுக்கு; என்மருதமையனின் தம்பி-மனைவி பல-வேளைகள் சோறு-ஊட்டினார். அவர் வாழ்க்கைப்பட்டிருக்கும் விதத்தில் மட்டுமல்ல; உறவிலும் - அவர் என் சித்தப்பா-மகள்; எனக்கு தங்கை. அந்த சோறு-ஊட்டிய நிகழ்வு தான் என்னை அப்படி நெகிழ வைத்தது! அதற்காய் தான் இந்த நன்றி-தெரிவிக்கும் செயல்.

      இதில் என்ன பெரிய-விசயம் என்று பலரும் வினவலாம்? பல உறவுகளும் இப்படித்தான் செய்யும் என்று எதிர்-வாதம் செய்யலாம். ஒரு தாய் செய்யாததா?! எனலாம்; ஓர்தாய் தன் குழந்தைக்கு செய்வது கடமை ஆகிறது. அது செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் விளைவது! அதற்காய், தாயின் செயலை நான் குறைத்து மதிப்பிடுவதாய் அர்த்தமன்று! தாயும், தந்தையும் செய்வது கடமை; அதில் மற்ற பெற்றோர்களைக் காட்டிலும் அதிகம் செய்கிறோம் என்று சிலருக்கு ஆனந்தம் இருக்கலாம்! ஆனாலும், அது அவர்களின் கடமை; என்தமக்கை அப்படி பலமுறை என்மகளுக்கு செய்திருக்கிறார். அது என்தமக்கையின் கடமை எனப்பொருள் கொள்ளலாம்; என் சிறுவயதில், என்தாயைப் போல் எனக்கு அதிகம்/பலதும் செய்தவர், என்தமக்கை! அதே அன்புதான் அவர் என்மகளிடம் காட்டுவதும்; அந்த செயலும் நன்றி சொல்லுதலுக்கு உரியதே! ஆனாலும், அப்படி சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றியதில்லை! மாறாய், அது அவசியமில்லை என்று தோன்றும்.

      18-மாத குழந்தையாய் என்மகளை நான் தனியாய் 13-மணி நேரம் விமானப்பயணம் செய்து  இந்தியா கொண்டுசென்றேன் என்பதை முன்பே கூறியுள்ளேன். அவள் "லிஸ்பன் விமான நிலையத்தில்" இருந்து நாங்கள் கிளம்பும் முன்-வரை "தாய்ப்பால்" அருந்தியவள் என்பதையும் அங்கே குறிப்பிட்டிருந்தேன். முதல் ஒருவாரம், என்மகள் "மாற்றுப்பாலை" குடிக்க பட்ட-பாடிருக்கிறதே! இன்னும் எனக்கு அந்த நிகழ்வுகள் பசுமையாய் நினைவிருக்கிறது. அந்த நாட்களில் - எனக்கு பலமுறை "எந்த நெருடலும்" இன்றி ஓர்-தாயை போன்ற அன்புடனே எனக்கும் சமைத்து/பல நாட்களில் என்நண்பர்களுக்கும் சமைத்து கொடுத்த என் மருதமக்கை(அண்ணி) - என்மகளுக்காய் செய்த செயல்கள் மேலும்-பசுமையாய் நினைவில் இருக்கிறது. என்மகளுக்கும் ஓர்தாயாய் இருந்து என் மருதமக்கை - அவளை பால்-குடிக்க பழகச்செய்ய செய்திட்ட செயல்களை நான் வாழ்நாளில் என்றும் மறத்தல் சாத்தியம் அன்று.

        என் மருதமக்கைக்கு கூட நான் அப்படி நன்றி சொன்னதில்லை! அது தேவையற்றது என்று எனக்கு தோன்ரம்; அதை அவர் தன் கடமையாய் செய்தார். என்னதான், நான் மேற்கூறிய என்தங்கை அதே-போன்ற அன்புடனும்/அடிப்படையுடனும் செய்திடினும் நான் அங்கிருத்து கிளம்பும்போது "ரொம்ப த்தேங்க்ஸ்"மா! என்று முழுமனதாய் சொன்னேன்; "அட! இதில் என்னண்ணா? இருக்கு??" என்று அன்புடன் கேட்டார். ஆனால், சிறுகண்கலங்களோடு "இல்லைமா! நீ செய்த செயல் அப்படி என்றேன்!" ஆம்! அவர் சோறூட்டும்போது அதில் மிகப்பெரிய நேர்த்தி இருந்தது {இந்த வரியை நெகிழ்வோடு தட்டச்சு செய்யும்போது ஓர்-நண்பர் "விழியமுதினிக்கு எனது ஆசீர்வாதங்கள்" என்று "வாட்ஸ்-ஆப்"பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார் (மேலே, வலது படம்)! ஆம், என்மகள் ஆசிர்வதிக்கப்பட்டவள்!!}; எந்த விரக்தியோ/வெறுப்போ இல்லாமல் செய்தார்! இதை-முழுதும் உணர்ந்தவளாய் என்மகள் "கவிதா அத்தை!" என்று மிக-அன்போடு அழைப்பாள்! "என்மகளின் நன்றியாய்" அதைப் பார்க்கிறேன்.

      இந்த உறவுகள்தான் மிகப்பெரிய பலம் கொண்டு நம் வாழ்க்கையை நகர்த்தி செல்கின்றன! உண்மையில், என் மருதமையனும் அவரின் 4 சகோதரர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்!! அவர்கள் வீட்டிற்கு வாய்த்த 5-மருமகள்களும் அப்படியோர் குணம் படைத்தவர்கள்; அவர்களின் குடும்பத்தை பற்றி முன்பே ஓர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். விசேச-நாட்களில் ஒன்றுகூடி அவர்கள் மகிழும் அந்த வாழ்க்கையை பார்க்கும்போது "அவர்களை விட கொடுத்து வைத்தவர்கள் எவரும் இருக்கமுடியாது!" என்று தோன்றும். அந்த அன்பு-இல்லத்தின் சாராம்சமே மேற்கூறிய நிகழ்வு. இப்படிப்பட்ட உறவுமுறைகள் கிடைப்பதற்கு நானும், என்மகளும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஆனால், என்மகள் தனியாய் வளரும் அந்த சூழல் எனக்கு மிகுந்த பாரத்தை அளிக்கிறது! அவளுக்காவது என்தமையன்/என்தமக்கை மூலம் உறவுகள் கிடைக்கும்; நாளை, அவளுக்கும் ஒரேயொரு குழந்தை பிறந்தால் இந்த உறவுகளின் பலம் எப்படி புரிபடும்? என்னைப்பொருத்த அளவில்...

 உறவுகளின் பலம் இல்லாதோர் எத்தனை இருந்தும் பலகீனமானவர்களே!!!            

இரங்கல் வருத்தம்...         என் முக-நூல் நண்பர் திரு. ராமச்சந்திரன் புதுமனப்பள்ளி அவர்களின் தந்தை சமீபத்தில் இயற்கை எய்தினார். அவ்வப்போது பிரிவின் துயரை பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்; அவர் கடைசியாய் இட்டிருந்த பதிவு என்னை மிகவும் பாத்தித்துவிட்டது; பலரும் அப்படியே கருத்திட்டிருந்தனர். அவரின் பதிவுகளின் மூலம்-மட்டுமே; அவர்களின் குடும்பம் எத்தனை "உறவு-வலிமை" மிகுந்த ஒன்று என்பதை யூகிக்க முடிகிறது. அவருக்கு ஆறுதலாய், சரியான முறையில் என் மன-அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாய் சொல்லவேண்டும் என்று மிகவும் முயன்றேன்; பலதும் எழுதி பின் "டெலிட்"செய்து விட்டேன். பின், வெறுமனே ஒரு "லைக்" மட்டும் இட்டேன். அப்போது தான் ஒரு கேள்வி எழுந்தது என்னுள்! இதுபோல், பலரும் பல சமயங்களில் கண்டிப்பாய் நினைத்திருத்தல் கூடும். என்னுள் எழுந்த அந்த கேள்வி: ஏன் நம்மால் உடனடியாய் (spontaneously) ஒரு "இரங்கல் வருத்தம்" தெரிவிக்க முடிவதில்லை?! என்பதே.

        எத்தனையோ விதமான சந்தோசமான-நிகழ்வுகளின் போது நம்மால் வெகு-இயல்பாய்/பல-விதமாய் 
மற்றவர்களின் "சந்தோசமான உணர்வுகளோடு/நிகழ்வுகளோடு" கலக்க-முடிகிறது! ஆனால், நமக்கு தெரிந்தவரின் உறவின் மரணத்தின்போது - உடனடியாய் ஒரு இரங்கல்-வருத்தம் தருவது (குறிப்பாய், எழுத்து மூலம்) அசாத்தியமான காரியமாய்தான் இருக்கிறது. இறந்தவரோடு நமக்கு ஓரளவிற்காவது பரிச்சயம் இருப்பின், இந்த காரியம் கொஞ்சம் எளிதாகும்! இறந்தவர்-சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளோடு சிறிது பங்குகொள்ள முடியும்! அப்படி எந்த பரிச்சியமும் இல்லை எனில், அந்த காரியம் இன்னமும் சிரமாமாய் போகிறது. மேலும், ஓர் ஒப்பிடுதலின் அடிப்படையில், சோகமான நிகழ்வுகளுக்கு "மரணம்" மட்டுமே பிரதான ஒன்றாய் இருக்கிறது; ஆனால், சந்தோசமான நிகழ்வுக்கு பல காரணிகள் இருக்கின்றன. அதனால், நமக்கு பெருமளவில் வாய்ப்பு கிட்டாதது கூட - இந்த இயலாமைக்கு காரணமாய் இருக்கலாம். இம்மனதங்கத்தை...

நண்பரின் தந்தைக்கு "ஆழ்ந்த இரங்கலோடு" அர்ப்பணிக்கிறேன்!!!

"அவித்த" மணிலாக்கொட்டை...      நேற்று-முன்தினம், சில மாதங்களுக்கு முன் ஊரிலிருந்து; இங்கே அபுதாபிக்கு கொண்டுவந்த "காய்ந்த மணிலாக்கொட்டை" கண்ணில் பட்டது! காய்ந்ததை அதிகம் தின்னவும் முடியாது; தின்பது நல்லதும் அல்ல! (தாய் சொல்வ"தாயும்" காதில் கேட்டது!). காய்ந்ததை ஏன் நாம் மீண்டும் பச்சையாய் ஆக்கக்கூடாது?! என்ற கேள்வி வந்தது (Reverse Process). உடனே, அதை தண்ணீரில் ஊற-வைத்துவிட்டேன்; பின் வழக்கம்போல் என்தமக்கைக்கு அலைபேசி-செய்து "அவிக்கும்" (வேகவைக்கும்) விதத்தை கேட்டேன்! எதிர்பார்த்தது போலவே "என்தமக்கை உடனடியாய் கேட்ட கேள்வி: அங்க பச்சை-மல்லாட்டெல்லாம் கெடைக்குதாடா?" என்பதே. என் யோசனையை சொன்னேன்; சரிடா! நல்லா ஊறட்டும் என்றார். நானும், அடுத்த நாள் மாலை வரை ஊறவைத்து, பின்னர் அவித்தேன். என்-தமக்கையும், என்-தாயும்; திறந்த-பாத்திரத்தில் அவிப்பது போல் அவிக்கவேண்டும் என்றெண்ணி, பின்னர் என்-தமக்கை சொனனது போல் "குக்கரில்" அவித்தேன்.

          அவித்தது அருமையான பதத்தில் இருந்தது; அடுத்த முறை நான் அலைபேசி-செய்யும்போது என்-தமக்கை முதலில் கேட்கும் கேள்வி "மல்லாட்டையை அவிச்சியா? எப்படி இருந்தது??" என்பதாய்தான் இருக்கும். நான் (என்தமக்கையின் வழிகாட்டுதலின் படி) பொங்கல் முதல் - பிரியாணி வரை செய்வேன் என்பதால், மணிலாக்கொட்டையை அவிப்பது பெரிய விசயம் என்றில்லை என்றிருந்தேன்! ஆனால், அது அத்தனை எளிதல்ல; அதில் இருக்கும் மண்ணை-கழுவி களைவதில் இருந்து, அளவான உப்பிடுதல் வரை - பல சிரமங்கள் இருந்தன. உப்பின் அளவு - மாறுபட்டால், மற்ற உணவு-வகைகள் போன்று "பெரிதாய்" எந்த மாற்றமும் செய்யமுடியாது. சென்ற முறை இந்தியா சென்றபோது கூட 3-படி மணிலாக்கொட்டை வாங்கிக்கொடுத்து என்-தமக்கையும்/என்-தாயும் சேர்ந்தே அவித்தது நினைவுக்கு வந்தது. ஒன்று கவனித்து இருக்கிறீர்களா? நம் வீட்டு பெண்கள் எத்தனை படி மணிலாக்கொட்டை அவித்தாலும்; அவிக்கும்போது "ஒன்றிரண்டாய்" சுவை பார்ப்பதை தவிர...

அவித்த பின் (பெரும்பான்மையில்)அவர்கள்; ஒன்றைக்கூட தின்பதில்லை!!!           

"ஆட்கொல்லி"யை வென்ற ஆட்கொள்ளி!!!(திரு. பத்ரசாமி சின்னசாமி அவர்களுக்கு சமர்ப்பனம்!)
**********

அண்ணாச்சி!

சில-பூச்சிகள் "ஆட்கொல்லி" விலங்கொன்றை கொன்றதற்காய்;
பல-விதங்கள் ஆய்-உன்மீது களங்கமொன்றை சொல்கின்றன!

ஆனால், நானோ?!....உன்னையே "ஆட்கொள்ளி" என்பேன்!

ஆம்!

என்போன்ற பலரின் உள்ளங்களை;
அன்போடு "கொள்ளையடித்து; ஆண்டு"
கொண்டிருப்பதால்; கண்டிப்பாய் நீயொரு
"ஆட்கொள்ளி"

விழுப்புண்ணை கூட "வீரத்தோடு
முழங்காமல்"; அச்சிறார்கள்  "நாவினாற்-சுட்டதோடு"
அழகியலாய் ஒப்பிட்ட; நீயொரு
"ஆட்கொள்ளி"

வனத்தையே காக்கும் உன்போன்றோர்
இனத்தையே; பழிப்போர் அவர்மீது(ம்)!
சினத்தையே  கொள்ளாத; நீயொரு
"ஆட்கொள்ளி"

என்போன்றோர் உன்னை உள்ளத்தாலும்;
உன்போன்றோர் அவர்தம் உழைப்பாலும்;
பன்"ஆட்கொள்ளிகள்" சூழ்ந்திருக்கும்; நீயொரு-(மா)
"ஆட்கொள்ளி"

இந்த(பே/போ)ர் "ஆட்கொள்ளி(கள்)"
சந்தர்ப்பம் மீண்டு(ம்)-வந்தால்;
இன்னும்-சில "ஆட்கொல்லிகளை"
கொன்றுபோட தயங்கார்(கள்)!
என்றே-எச்சரிக்க தயங்கார்;
என்போன்ற "ஆட்கொள்ளிகள்"!

வாழ்க "ஆட்கொள்ளிகள்"; வீழ்க "ஆட்கொல்லிகள்"

காதலும், காமமும்...
காதலும்/காமமும் ஒன்றையொன்று தழுவி; உண்மையோடு, ஒரே நேரத்தில் (ஒருவருடன்) பயணிக்கவேண்டியவை! இதில், ஏதேனும் ஒன்றை; ஒருவர் - தொடர்ந்து மறுக்கும்போது - மற்றொன்றை; இன்னொருவர் "வேரறுத்து விடுவார்"!!!

(குறிப்பு: இங்கே, அன்பையும்(காதல்)/ஆசையையும்(காமம்) விட "உண்மை" மிகமுக்கியமானது!)

ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

திருமண-நாள் வாழ்த்து எவர்களுக்கு பொருந்தும்???     "இவ்வாண்டு திருமண-நாள் வாழ்த்து சொல்லலாமா? வேண்டாமா??" என்று(கவலையுடன்) கேட்டார் என் நண்பர்! கவலை இடம்பெயர்ந்து என்னுள் குடிகொண்டது; ஏனெனில், அந்த-திருமண பந்தத்தின் சமீபத்திய நிலை எனக்கு நன்றாய் தெரியும்! என் நண்பர் என்னைக் கேட்டதின் பின்னணியும், எனக்கு அது பற்றி அதிகம்-தெரியும் என்பதே. நான் தீர்க்கமாய் "இந்த வருஷம் நீ சொல்ல வேண்டாம்டா!" என்றேன். என்னடா?! இப்படி தடால்னு சொல்லிட்ட? என்றார் நண்பர்; "வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற?"என்றேன் நான். "போன வருஷம் கூட; உன் பெண்டாட்டிக்கு புடவை வாங்கி வச்சுக்கிட்டு" சாய்ந்தரம் வரைக்கும் அவள் ஒரு-தடவையாவது(முதலில்) "வாழ்த்து சொல்வாளான்னு" காத்துக்கிட்டு இருந்த! என்ன ஆச்சு?! சாய்ந்தரம் அவள் போன் பண்ணி "ஏன் ஒரு வாழ்த்து கூட சொல்லக்கூடாதா?! அந்த அளவுக்கு என்னை பிடிக்கலையான்னு?!" கேக்கலை?! அப்புறம் என்ன வேற எப்படிடா சொல்ல சொல்ட்ற? என்றேன் மீண்டும்.

      எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம்?! இது சரியான திருமண-பந்தம் தானா??!! என்பது பற்றியெல்லாம் - இங்கே பலருக்கும் "அக்கறையில்லை. குறிப்பாய், வேலைக்கு-செல்லும் "வசதி-படைத்த பெண்களுக்கு"! கணவனை பிரிந்து, குழந்தைகளுடன் தன்னப்பன் வீட்டில் இருந்துகொண்டு கணவன்-வேண்டுமானால் இங்கு வந்து இருக்கட்டும் என்போரும் உண்டு.  எல்லா செலவிற்கும் கணவன் பணம் கொடுக்கவேண்டும்; ஆனால், கணவன் பற்றி எந்த அக்கறையும் இருப்பதில்லை. என் நண்பரின் வாழ்க்கையும் அவ்வாறே! தமிழக தலைநகரில் அவர் தனியாய் வசிக்கிறார்...இல்லை கஷ்டப்படுகிறார்! 2 பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவர்-மனைவி மத்திய-தமிழகத்தில் அவரப்பன் வீட்டில் இருக்கிறார். எத்தனை முயன்றும், கணவனுடன் சென்று-சேர்ந்து இருக்க சம்மதிக்கவில்லை! என்ன விதமான வாழ்க்கை இது?! கணவன்/மனைவி இருவரும் சேர்ந்திருந்தால் தானே பிரச்சனைகளை ஆராய்ந்து/ அல்லது மறந்து உறவை தொடர்ந்திடுதல் சாத்தியம்?!

    எது-எப்படி இருப்பினும், திருமண-நாள் வாழ்த்து(மட்டும்) வேண்டும் என்பது என்ன விதமான நியாயம்?! அதிலும், பெரும்பான்மையில் மனைவி விரும்புவது - வாழ்த்தை முதலில் கணவன் சொல்லவேண்டும் என்பதே! "அந்த-நாளே" நினைவில் இல்லாதவரும் உண்டு! பிறந்த-நாள் என்றால் அடுத்தவர் முதலில் சொல்லவேண்டும் என்பது நியாயம்! திருமண-நாள் இருவருக்கு(ம்) பொதுவானது அல்லவா? சரி, ஓர் ஆண்டு கணவன் (முதலில்)சொல்லவில்லை எனில் ஏன் பிரச்சனை? உடனே, மேற்கூறியது போல் "என்னை பிடிக்கலையா?" என்று சண்டை போடுவது! மற்ற எல்லா நாட்களிலும், கணவன்-மனைவி என்ற பந்தம் "துளியும் இல்லாது" இருந்துவிட்டு அந்த நாளில் மட்டும் "வாழ்த்தையும், பரிசையும்" பெறுவதா வாழ்க்கை??!! அதில் ஓர் அபத்தம் இருப்பதாய் படுகிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் சண்டை எழலாம்! திருமண-நாளில் வாழ்த்து சொல்லவில்லை என்று சண்டையிடுதல் எந்த விதத்தில் நியாயம்; மனைவிக்கும் அது "திருமண-நாள்" தானே??!!

      இப்படி வருடம் முழுவதும், கணவன் என்ற அடிப்படையில் எதுவும் செய்யாது; திருமண-நாளில் வாழ்த்தை மட்டும் எதிர்பார்த்தல் சரியா? நம் முந்தைய-சந்ததியர் பலருக்கு அவர்களின் திருமண-நாள் நியாபகம் இருக்காது! அவர்களுக்குள்ளும் (நம்மை-விடவும்)பெரிய பிரச்சனைகள் இருந்தன; ஆனால், அவர்களுக்கு திருமணம் என்ற பந்தத்தின் அடிப்படை புரிந்திருந்தது!! தன் குடும்பத்திற்காய்/ சமுதாயத்திற்காய் என்று வாழ்க்கையை நடத்தியவர்கள் அவர்கள்! அதுதான் இயல்பு; திருமணமான புதிதில் "கணவன்-மனைவி" இடையே பிரச்சனை ஏற்படுவது இயற்கை; அது நியதியும் கூட! ஆனால், அந்த சில-ஆண்டுகளை கடந்துவிட்டால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்பமே! அதைத்தான் முந்தைய தலைமுறையினர் செய்தனர்; அதனால் தான், நாம் இந்த தலைமுறையாய் தலை-நிமிர்ந்து நடக்கிறோம்! எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்த அப்படிப்பட்ட கணவனும்/மனைவியும்தான் "அப்பாவும்/ அம்மாவுமாய்" - நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றனர்!

     இப்போது, எதற்கெடுத்தாலும் விவாகரத்து பெறுவது சர்வ-சாதாரணமாய் ஆகிவிட்டது; அந்த விரக்தியினால்தான், நண்பரிடம் அப்படி தீர்மானமாய் சொன்னேன்! பின், அவரின் திருமண நாளன்று "மரணத்திற்கு பிறகு என்ன???" எழுதிய நானே அப்படி சொல்லி இருக்கக்கூடாது என்று தோன்றியது! "திருமண-நிகழ்ச்சியின் மகத்துவம் என்ன???"  என்ற மனதங்கம் நினைவுக்கு வந்தது! "விவாகரத்து என்ற ஓர்-நிகழ்வு நடக்கும் வரை, திருமணம் எனும் உறவு" இருப்பதாய் தானே அர்த்தம்??!! என்ற உண்மை விளங்கியது. உடனே, நண்பரை அலைபேசியில் அழைத்து "சொல்லிடுடா"! என்றேன்; "காலைலேயே"வாழ்த்து சொல்லிட்டன்டா! என்றான். எனக்கு பெருத்த-மகிழ்ச்சி! என்ன நடந்தாலும், குடும்பம் எனும் அமைப்பை இயன்றவரை அழியாமல் காப்பது நம் கடமை என்று தோன்றியது. நம் தாயும்/ தந்தையும் எல்லாவற்றையும் மறந்து/மறைத்து நமக்காய் வாழ்ந்திட்ட வாழ்க்கையில் ஒரு குறைந்த சதவிகிதமாவது நாம் - நம் சந்ததியருக்காய் செய்யவேண்டாமா??? அதனால் (அதுவரையாவது)...

திருமண-நாள் வாழ்த்தென்பது அனைவருக்கும் பொருந்தும்!!!

என்மகளின் உறக்கம்...          மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது போல் என்மகள் உறங்குவது எப்போதாவது நடக்கும் விசயம்; அது ஓர் அபூர்வமான/அழகான விசயம்! முதன்முதலில் அவள் அவ்வாறு உறங்கியது அவள் பிறந்து 1-வாரம் ஆனபோது! அந்த நிகழ்வை படம்பிடிக்க இயலாமல் போய்விட்டது; ஆனால், அதேபோல் அவளின் 23-ஆம் நாள்-வயதில் உறங்கியபோது - படம்பிடித்துவிட்டேன் (அதுதான் இடது படத்தில் இருப்பது). சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது அவள் அவ்வாறு உறங்குவதை காண முடிந்தது! உடனே, எடுத்த புகைப்படம்தான் வலது பக்கம் உள்ளது! ஏறக்குறைய, ஒரேவிதமான உறக்கநிலை; ஆனால், சுமார் 4.5 ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. குழந்தைகள் உறங்கும்போது புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்பார்கள்; ஆனால், நான் என்மகள் உறங்கும்போது நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். உண்மையில், அவள் உறங்கும்போதுதான் அதிக-அழகுடன்/ அதிக உடல்-மொழிகளுடன் இருப்பதாய் எனக்கு படுகிறது. 

        இப்படியாய், புகைப்படங்கள் எடுத்து சேகரிப்பது என்பது ஓர் சுவராஸ்யமான அனுபவம் என்பது என் எண்ணம்; குறிப்பாய், வளர்ந்தபின் என் மகளுக்கு. இதுமாதிரி, எவரேனும் எந்த உறவுகளுக்காகவும் செய்யலாம். என்னுடைய மகளின் 4-வயது பிறந்தநாளின் போது அவளின் ஆசிரியையை அழைத்து அதை புகைப்படமாய் ஆக்கியதை முன்பே கூறி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, என் மகள் அந்த நிகழ்வை சென்றமுறை இந்தியா சென்றபோதே மிக-மகிழ்வாய் இப்படி கூறினாள்: அப்பா "என் பர்த்-டே க்கு எங்க மிஸ் வந்திருந்தாங்கப்பா! என்னை "டைட்டா" கட்டிப்பிடிச்சாங்கப்பா!!" என்று என்னிடமே கூறினாள். "நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்; அதை புகைப்படமாகவும் பிடித்து வைத்தேன்" என்று என்மகளிடம் கூறவில்லை; அது அவசியமும் இல்லை! அவளுக்கு தெரிந்திருக்கும்; இல்லையெனில், பின்னாளில் தெரியப்போகிறது. அவளின் சந்தோசம்தான் முக்கியம்; அதற்காகத்தான் அதை செய்தேன் என்பதையும் முன்பே கூறியிருந்தேன். என்னால் இயன்ற அளவிற்கு...

இதுபோன்ற நிகழ்வுகளை ஆதாரங்களாய் என்மகளுக்கு கொடுப்பதே என் எண்ணம்!!!    

இரத்த தானம்...         கடந்த வியாழன் அன்று இங்கே அபுதாபியில் "இரத்த தானம்" செய்ய சென்றிருந்தேன். அன்று இராகவேந்திரர்-விரதம் இருக்கும் வழக்கம்; தானம்-செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் விரதத்தை முறித்துவிட்டு சென்றிருந்தேன். படிவங்கள் பூர்த்தி செய்து, இரத்த-மாதிரி, இரத்த அழுத்தம் எல்லாம் முடிந்தபின் - இரத்தம் எடுக்கவிருந்த நிலையில், என்னுடைய இரத்தத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். காரணம், நான் 1980 முதல் இப்போது வரை உள்ள காலகட்டத்தில் - 5 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பா-கண்டத்தில் வசித்திருந்தால் "இரத்த-தானம்" செய்யமுடியாதாம்! அங்கிருக்கும் ஓர்-நோய் தான் அதற்கு காரணமாம்; அதை சரியாய் இரத்தத்தில்-கண்டறியும் செயல்முறைகள் இன்னமும் நடைமுறையில் வரவில்லையாம்! எனவே, முன்னெச்சரிக்கை-நடவடிக்கையாய் இரத்தம் எடுப்பதில்லையாம். நான், அங்கே 8 ஆண்டுகள் வசித்து ஓராண்டுக்கு முன்னர் தான் அங்கிருந்து இங்கு-வந்தேன்.

      "போர்ச்சுகல்"லில் இருந்தபோது எத்தனையோ முறை இரத்த-தானம் செய்யசென்று எனக்கு   அவர்களின் மொழி தெரியாது என்பதால் எடுக்க மறுத்துவிட்டனர்! காரணம்; மருத்துவர் "போர்ச்சுகீசு" மொழியில் கேட்கும் கேள்விகளை நான் புரிந்துகொண்ட அதற்கு சரியாய் பதில் சொல்லவேண்டுமாம்! ஒவ்வொரு முறையும் மிக-விரக்தியாய் இருக்கும்; ஆத்திரத்தில் இனிமேல் அவர்களே கேட்டாலும், கொடுக்கமாட்டேன் என்பேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் சென்று முயற்சிப்பேன். ஒருவாறாய், அங்கிருந்து கிளம்புவதற்கு ஓராண்டுக்கு முன் "அந்த மொழியில் சரியாய்" பேசி - இரத்ததானம் செய்தேன். அடுத்த முறை (இந்தியா சென்று-திரும்பிய 2 மாதத்திற்குள்), இந்தியாவில் "பன்றி-காய்ச்சல்" அதிகமாய் பரவிய-நேரம் என்பதால் எடுத்துக்கொள்ள முடியாது என்றார்கள்; மீண்டும் கோபம் தலைக்கேறியது. ஆனால், இந்த முறை எனக்கு எந்த கோபமும் வரவில்லை; அவர்கள் தரப்பு நியாயம் புரிந்தது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கலாம் என்று வந்துவிட்டேன்...

ஏனெனில், இரத்ததானம் செய்யவேண்டும் எண்ணம்தான் முக்கியம்!!!

பின்குறிப்பு: 2004-ஆம் ஆண்டு வரை போர்ச்சுக்கல் செல்லும் முன் சில ஆண்டுகள் அவ்வப்போது இரத்ததானம் செய்வது வழக்கம். அந்த எண்ணம் இன்னமும் இருக்கிறது; ஆயினும், பல காரணங்களுக்காய் என்னால் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. பார்ப்போம்! மீண்டும் எப்போது முன்போல் அவ்வப்போது தானம் செய்ய இயலுகிறதென்று! 

தோளும், ஆளும்...


"சாய்ந்து" அழுவதற்கு
ஓர்-தோளில்லை;
என்பதிருக்கட்டும்!

"(செவி)சாய்த்து" கேட்க(வும்)
ஓர்-(ஆளு/உறவு)மில்லை;
என்பதேனோ???