செவ்வாய், பிப்ரவரி 28, 2017

வளர்க! வாழ்க!

{என்னப்பனின் கவிதை}

“யாதும்ஊர் யாவரும்நம் கேளீர்” என்னும்
     ஏகாந்த தத்துவத்தின் உண்மை எங்கே?
சேதமின்றி உரிமைநலன் காப்போம்! நாமும்
     சேர்ந்துழைப்போம்! மற்றவர்கள் உயர்வை வேண்டி
பேதங்கள் இங்கேஏன் எழுதல் வேண்டும்?
     பேய்முகங்கள் நமக்கொன்றும் சொந்தம் இல்லை!
வாதங்கள் செய்திங்கே வெற்றி காண்போம்!
     வளர்ச்சியினை நாம்பெறுவோம்! வளர்வோம்! வாழ்வோம்!

சாதிமத பேதமின்றி இந்தி யத்தின்
     சிறப்பொன்றே நம்மிதய வேள்வி என்ற
போதிமர புத்தனைப்போல்! வள்ளுவன் போல்!
     பொதுமைமன முகமதுபோல்! இயேசு வைப்போல்
சோதிமனம் கொண்டிங்கே மக்கள் வாழ்வில்
     சுந்தரனாய்! சுகபோகம் தவிர்க்கும் வண்ணம்
மோதிரமாய் நம்உடம்பைச் சூழ்தல் வேண்டும்!
     முழுமனதும் உலகநலம் கொள்ளல் நன்றாம்!

ஆண்டாண்டு காலமென அரசின் திட்டம்
     அத்தனையும் வீணாச்சு; ஏழ்மை வெள்ளம்!
கண்டபடி பாய்கிறது; படித்தோர் எல்லாம்
     கணக்கின்றி அலைகின்றார்! சமுதா யப்போர்!
மண்டியதால் நக்சலைட்நோய் பரவிப் போச்சு!
     மனம்வளர்த்த பெரியீரே! மக்கள் வாழ்வில்
கொண்டாட்டம் போடுகின்ற வகையில் நாமும்
     கூடிடுவோம்! ஓர்முடிவு காண்போம்! வெல்வோம்!

“பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்”; பின்னர் ஏனோ?
     பெருக்கெடுக்கும் கலவரங்கள்? சட்டம் தன்னால்
சிறக்கின்ற பணமுதலை அழிப்போம்! யார்க்கும்
     சீரான கல்விதனைக் கொடுப்போம்! இங்கே
உறக்கத்தில் சிரிக்கின்ற அதிகா ரத்தின்
     உரிமைதனை மாற்றிடுவோம்! உலகம் வாழ
திறமையுடன் உழைத்திடுவோம்! மேன்மை; செல்வம்
     தினம்பெறுவோம்! வெற்றிப்பண் பாடி வாழ்வோம்!

யார்என்ன ஆனாலும் எங்கள் உள்ளம்
     எப்போதும் கலங்காது; பிறரை வீழ்த்தல்
போர்முறையே தீவிரம்தான்; எண்ணம், மூச்சு
     பொதுவுடைமை என்பதெல்லாம் போயே போச்சு!
வேரறுக்கும் குறுக்குவழி, பொய்மை வெள்ளம்
     விளைநிலத்தில் எலிவளையாய்! வேண்டு மட்டும்
பேர்கெட்டுப் போனதனால் என்ன லாபம்?
     பொன்மனத்தின் பெரியோரே! உண்மை காண்பீர்!

ஆண்டுபல அரசியலார் போட்ட திட்டம்
     அணுவளவும் மக்களிடம் செல்லக் காணோம்!
நீண்டபல நாட்களிலும் முதலைப் பேய்கள்!
     நீள்வசதி பெற்றுயர்ந்தார்! எனினும் இந்நாள்
வேண்டுமட்டும் கல்விகற்ற பெரியீர்! இங்கே
     வேதவழி அறிஞர்பலர் நிறைந்த போதும்!
தீண்டாத உள்ளமுடன் மழையும் இந்த
     திருநாட்டில் பொய்த்ததுஏன்? சொல்வீர்! இன்றே!

வந்தாரை வாழவைக்கும் பெம்மா னாக
     வளர்த்த வகை போகட்டும்! இனியும் நாட்டோர்;
சிந்தனையை ஒன்றாக்கி சிறப்பாய் ஏற்றம்!
     சிலையாக வடித்திடுவோம்! நமைஎ திர்க்கும்
அந்நியரை விரட்டிடுவோம்! நமது மானம்
     அழியாமல் காத்திடுவோம்! உலகில் யார்க்கும்
இந்தியர்கள் இளைத்தவர்கள் இல்லை என்றே
     இமயத்தில் அறைகூவல் விடுப்போம்! வாரீர்!

தேன்மணக்கும் திருவிடத்தீர்! தெளிந்த ஞானம்
     தேர்ந்திட்ட மனவளத்தீர்! உண்மை பேசும்
மான்பார்வை இளைஞர்களே! நமது நாட்டில்
     மானமிகு அப்துல்கலாம் எண்ணம் ஏற்று
ஏன்நாமும் வல்லரசாய் கூடா தா?என்
     ஏக்கத்தை உடன்களைந்து இந்தி யத்தாய்
கூன்மனத்தில் மகிழ்ச்சிதனைப் பெறவே! சிங்க
     “கர்ஜனையாய்” கிளர்ந்தெழுக! வளர்க! வாழ்க!    

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

குறள் எண்: 0576 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0576}

மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர்

விழியப்பன் விளக்கம்: கண்ணின் தன்மையோடு இணைந்த, மனிதமெனும் கருணையோடு இயங்காதோர்; மண்ணோடு இணைந்து வளராத, மரத்திற்கு ஒப்பாவர்.
(அது போல்...)
தலைமுறையின் வளர்ச்சியோடு பிணைந்த, வம்சமெனும் சுற்றத்தோடு வாழாதோர்; இலக்கோடு ஒன்றி பயணிக்காத, விலங்குக்கு ஒப்பாவார்.

திங்கள், பிப்ரவரி 27, 2017

குறள் எண்: 0575 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0575}

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல் 
புண்என்று உணரப் படும்

விழியப்பன் விளக்கம்: கண்களை அலங்கரிக்கும் உண்மையான அணிகலன், மனிதமெனும் கருணையே ஆகும்; அக்கருணை இல்லையெனில், அவை புண்ணென்றே உணரப்படும்.
(அது போல்...)
பிள்ளைகளை சான்றோராக்கும் சிறப்பான காரணிகள், படைத்தவரெனும் பெற்றோரே ஆவர்; அப்பெற்றோர் இல்லையெனில், பிள்ளைகள் அற்றோராக உணர்வர்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2017

குறள் எண்: 0574 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0574}

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால் 
கண்ணோட்டம் இல்லாத கண்

விழியப்பன் விளக்கம்: அடிப்படையான அளவில் கூட, மனிதமெனும் கருணையை வெளிப்படுத்தாத கண்கள்; முகத்தில் இருப்பது போலிருப்பினும், அவை என்ன பயனளிக்க முடியும்?
(அது போல்...)
ஆபத்தான சூழலில் கூட, வாய்மையெனும் நெறியை வலியுறுத்தாத மூளை; தலையில் இருப்பது போலிருப்பினும், அது என்ன பயனளிக்க முடியும்?

சனி, பிப்ரவரி 25, 2017

குறள் எண்: 0573 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0573}

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்

விழியப்பன் விளக்கம்: பாடலின் பொருளோடு பொருந்தவில்லை எனில், இசையால் என்ன பயன்? கருணையின் இயல்போடு வெளிப்படவில்லை எனில், கண்ணால் என்ன பயன்?
(அது போல்...)
ஒழுக்கத்தின் இயல்போடு பயணிக்கவில்லை எனில், சமூகத்தால் என்ன பயன்? அன்பின் அடிப்படையோடு வளர்க்கவில்லை எனில், பெற்றோரால் என்ன பயன்?

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

"டூ-வீலர்" கனவு மகிழ்வு தந்ததா?


     02.03.2014 அன்று "டூ-வீலர்" கனவு... என்றோர் மனதங்கத்தில், கிட்டத்திட்ட 20 ஆண்டு நிறைவேறாக் கனவான; ஒரு "டூ-வீலர்' வாங்கமுடியாத என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அன்றிலிருந்து சரியாய் 32 மாதங்கள் கழித்து; 02.11.2016 அன்று அந்த கனவு நிறைவேறியது (பார்க்க: மேலுள்ள படம்). மேற்குறிப்பிட்ட பதிவில் சொன்னது போல், இதுவரை; வண்டியை நிறுத்த ஓர் நிரந்தர இடமின்றி இருந்தது. அதனால் தான், இந்த வண்டிக்கான முன்பணத்தைக் கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் - வாங்காமல் தவிர்த்து வந்தேன். இப்பொது, ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிட்டதால்; மறுசிந்தனை ஏதுமின்றி உடனே வாங்கிவிட்டேன். என்னுடைய கனவு நிறைவேறியது உண்மை தான்! ஆனால், மகிழ்வை தந்ததா என்றால்?... இல்லையென்றே தோன்றுகிறது! "டூ-வீலர்" வாங்கத் துடித்த, அந்த வயதைத் தாண்டியதால் - மகிழ்வு இல்லையா? அல்லது இந்தியாவிலேயே இருந்து, விரும்பிய வண்ணம்...

     அதிக நேரம்/தூரம் ஓட்டமுடியவில்லை என்பதால் - மகிழ்வு இல்லையா? தெரியவில்லை! ஆனால், பெருத்த மகிழ்வு ஏதுமில்லை! அந்த நிகழ்வை இப்படியோர் பதிவாய் எழுத கூட, 3 மாதங்களுக்கு யோசித்து; இன்றுதான் எழுதி இருக்கிறேன். உடனே எழுதும் அளவில் மகிழ்ச்சி இருக்கவில்லை என்பதாய் தோன்றுகிறது. காரணம் புரியவில்லை; ஆனால், மகிழ்வு இல்லை! நான் அங்கிருந்த 15 நாட்களில், கிட்டத்திட்ட 580 கி.மீ. தூரம் ஓட்டினேன்! முதல் "இலவச பராமரிப்பு வேலைக்கு" வண்டியை விடவேண்டும் என்பதால்; அதற்கான இலக்கு தூரத்தை ஓட்டுவதற்காய் - புதுவையில் இருந்து ஒரு முறை "வெண்ணாங்கப் பட்டினம்" வரை சென்றேன்; பின் திண்டிவனம் வரை சென்று வந்தேன்! இருப்பினும் ஏனோ... அந்த மகிழ்வோ/திருப்தியோ எழவில்லை. நான் அங்கிருந்து வந்த பின்; 2 மாதங்கள் வரை, என் மருதந்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். இப்போது, 3 வாரங்களுக்கு மேல் வண்டி சும்மாதான் நின்று கொண்டிருக்கிறது.

         மூப்பு காரணமாய், என்னப்பனால் அந்த வண்டியை ஓட்ட முடியாது! எனவே, வெறுமனே நின்று கொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கும் மேல், நின்ற இடத்திலிருந்து நகராமல் இருக்கிறது! "முழு பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி; வாங்கியது தவறோ?" என்றுகூட சில நேரங்களில் யோசனை எழும். ஆனால், கடன் வாங்கி ஒரு பொருள் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை! இருப்பினும், ஒரு பெரும் மதிப்புடைய பொருளொன்றை; கடனில் தான் வாங்கி இருக்கிறேன்! கடன் முடிந்த பின்னர்தான், அப்பொருளால் உண்மையான மகிழ்வு என்னுள் எழும்! அன்றுதான், அதைச் சார்ந்த பதிவையும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், அப்படி கடன் ஏதுமின்றி வாங்கியும்; கிட்டத்திட்ட 20 ஆண்டு கால கனவு நிறைவேறியும், மகிழ்ச்சி மட்டும் இல்லை! ஒருவேளை இந்தியாவில் நிரந்தரமாய் தங்கும்போது; மகிழ்வு கிடைக்கக்கூடும்! இப்போதைக்கு, அதை வாங்கியதால் எந்த சலனமும் இல்லாத; என் மனதைப் போலவே...

"Classic 350" மாடலான, அந்த புல்லட்டும் "எந்த சலனமுமின்றி" நின்று கொண்டிருக்கிறது!!!

குறள் எண்: 0572 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0572}

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை

விழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையத் தழுவி, இயங்குகிறது இவ்வுலக வாழ்வியல்; அந்த கருணை இல்லாமல் இருப்போர், பூமிக்கு தேவையற்ற சுமையாவர்.
(அது போல்...)
பரம்பரையெனும் உறவைத் தழுவி, அமைகிறது இக்குமுகாய அடிப்படை; அந்த உறவைத் தகர்த்து வாழ்வோர், தலைமுறைக்கு தேவையற்ற இடைவெளியாவர்.

காண்போம் வாரீர்!


ஐந்தெழுத்தன்; ஆறுமுகன்; பெருமாள்; போற்றி
     ஆறுகால பூசைவிழா எடுத்த போதும்!
வந்ததுவா வான்மழையும்? பலனும் உண்டோ?
     வாயுலர மந்திரங்கள் "செ"பித்த நல்லோர்;
வெந்துமனம் வீழ்கின்றார்; விளைச்சல் நாட்டில்
     வெலவெலத்துப் போயிற்று; மக்கள் கண்ணீர்
சிந்துகின்றார்; காரணம்என்? பக்தி எல்லாம்
     சுயநலமே! பொதுமையில்லை! உண்மை காணீர்!

வாழ்க்கைத் துணைதேடு கின்ற செயலா;
     வரதட்சணை உயர்ந்துள்ளது; அறிவைத் தேடும்
தாழ்வில்லா கல்வியகம் தன்னில் காசு
     தளர்வின்றி தருவார்க்கே இடமாம்! பின்னர்
வீழ்ந்திடுமா வேலையதும்? கையூட் டின்றி;
     விழிபிதுங்க அனைவருமே வெதும்பிச் சாக
பாழ்பட்டுப் போனதுவே! குமுகா யத்தின்
     பற்பலவும் மாய்ந்தொழிந்தால்; வாழ்க்கை எங்கே?

நாடிங்கே உரிமைதனைப் பெற்று இந்நாள்
     நாலைந்து ஆண்டுடனே ஐந்து பத்தும்
ஓடியதும் மறைந்ததுவே! அரசின் திட்டம்
     ஓர்நாளும் மக்களிடம் சேரக் காணோம்!
பாடிவைத்தார் பாரதியும் தாசன் தானும்
     பயன்உண்டோ? சமுதாயப் பார்வை தன்னில்
கூடியதா ஒருமைமனப் பார்வை? எங்கும்
     குலைந்ததுவே பண்பாடு! பயன்தான் என்ன?  

நமக்குள்ளே பிரிவினைகள் இருந்த தாலே
     நாம்அடிமை அன்றானோம்! காந்தி போன்றோர்
தம்முடைய தியாகத்தால் வாழ்வில் மீண்டும்
     தன்னுணர்வு வரப்பெற்றோம்! சுதந்தி ரத்தால்
“தும்”முவதும் “இரு”முவதும் பொதுமை அன்றோ?
     துடிப்பதுவும் கண்ணியற்கை; என்ப தெல்லாம்
நிம்மதியாய் மறந்ததனால்; மீண்டும் தொல்லை
     நிகழாமல் காத்திடவே; எழுவோம்! வாரீர்!

“வான்சிறப்பு” தந்ததிரு வள்ளு வத்தின்
     வார்த்தையினை இன்றுணர்ந்த நாட்டோர்; இங்கே
வீணாகா நிலைதனிலே நிலத்தில் நீரை
     வேண்டுமட்டும் சேகரிப்போம்! நதிகள் தம்மை
தான்இணைத்தால் இந்தியத்தின் நிலங்கள் யாவும்
     தானியங்கள் பலவிளையும் பூமி ஆகும்!
“கான்”வளரும்; “கவின்”மலரும்; கவலை போகும்
     காதலுடன் இந்தியத்தாய் வளர்வாள்! வாழ்வாள்!

அளப்பரிய இலக்கியங்கள்; ஆன்றோர் வேதம்;
     அத்தனையும் சொல்லியசொல் மறந்து; நாட்டோர்
திளைக்கின்றார் மகிழ்ச்சியினில்; பொதுந லந்தான்
     திசைமாறிப் போனதுவோ? இலஞ்சப் பேய்கள்
விளைக்கின்ற தீமையினால்; நாடே பாழாம்!
     விபத்துதனைத் தடுப்பதுவே அறிவின் மாட்சி!
களைத்துவிட்ட இளைஞர்களே! எழுக! உங்கள்
     கருத்துவளம் பெருகட்டும்! வெல்க நாடு!

எங்கெங்கும் கொலைகொள்ளை; வறுமை; காமம்
     எழுப்புகின்ற அவக்கூச்சல்; பெண்மை காக்க
இங்கெழுந்த சட்டங்கள் எல்லாம்; இந்நாள்
     இருக்கிறதா இந்நாட்டில்? என்னும் கேள்வி
தங்குதடை இல்லாமல் எழுதல் காண்பீர்!
     தவப்பெருமை இளைஞர்களே! கார ணத்தை
சங்கெடுத்து முழங்கிடுவீர்! நமக்குள் நாமே
     சத்தியத்தை மனம்கொள்வோம்! வெல்வோம்! வாழ்வோம்!

இந்தியத்தாய் பெற்றமக்கள் எல்லாம், இங்கே
     இனத்தாலும் மொழியாலும் பிரிந்த போதும்!
சொந்தமுடன் நாம்இணைந்து பேத மின்றி
     சுகம்தன்னைப் பெற்றிடுவோம்! எதிலும் எங்கும்
எந்திரமாய் ஒருமையுடன் நாம்உ ழைப்போம்!
     எல்லாமும் எப்படியும் பெறுவோம்! நம்மின்
சிந்தனையை உயர்த்திடுவோம்! வலிமை பெற்ற
     சிறப்பான பாரதத்தை காண்போம்! வாரீர்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

வியாழன், பிப்ரவரி 23, 2017

குறள் எண்: 0571 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0571}

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மத்தியில், வலிமையானப் பேரழகான; மனிதமெனும் கருணை இருப்பதால் தான், இவ்வுலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.
(அது போல்...)
குடும்பத்தில் இருப்போர் மத்தியில், திண்மையான பேரன்பான; உறவெனும் உணர்வு இருப்பதால் தான், இல்லறம் மலர்ச்சியுடன் தொடர்கிறது.

புதன், பிப்ரவரி 22, 2017

"ஆதி பான" கடை...


     வெளி மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு "பொதுநல போர்வையில்" ஒரு கைதேர்ந்த வியாபாரி  வந்தார்! "இங்கே டாஸ்மாக் நிறைய இருக்கிறது; அதனால் பலரும் மது அருந்திவிட்டு ஆனந்தத்தைத் தொலைக்கிறார்கள்!" என்று வேதனைப்பட்டார். உடனே பலரும், அவரை வியந்தனர்! அதைக் கண்ட அவர் "மதுவிலிதுந்து விடுபட உங்களுக்கு கற்று தருகிறேன்! நீங்கள் உண்மையான ஆனந்தத்தை அடையளாம்!" என்று சொல்லி ஒரு குடிசையில் பாடம் எடுக்க ஆரம்பித்தார்! குடியிலேயே மூழ்கித் தவித்த பலரும், அதில் இருந்து "தாமாக மீளவே முடியாது!" என்ற மாயையான நம்பிக்கையால்; அதில் சேர்ந்தார்கள்! பணம் அதிகமாய் கிடைக்க, அந்த வியாபாரி அதைப் பெரிய "கார்ப்பரேட் நிறுவனமாய்" மாற்றினார்! "கார்ப்பரேட் என்றாலே மயங்கும்" பலரும், அதில் சேர்ந்தார்கள். பணம் மென்மேலும் பெருக, தமிழகம் கடந்து; பல மாநிலங்களையும் தாண்டி, வெளிநாடுகளிலும் அந்த நிறுவனம் கிளைகளை உருவாக்கியது! 

     பல்கிப் பெருகிய கிளைகளால், பணத்தோடு படைபலமும் சேர; பல ஆக்கிரமிப்புகளைச் செய்தார், அந்த வியாபாரி. ஒரு கட்டத்தில், அவரின் அடியார்கள் எல்லோரும் அவர் சொல்வதே வேதமென நம்ப; வியாபாரத்தின் உச்சம் தொட எண்ணினார்! "மதுவருந்துவதே கெட்ட பழக்கம்!" என்று சொல்லி மயக்கி வந்தவர்; திடீரென "நான் ஒரு நல்ல பானத்தை அறிமுகம் செய்கிறேன்!"; அதன் பெயர் “சோம பானம்!”; அதைத்தான் “ஆதி ஞானிகள்” பருகினர்! அதை மக்கள் மறந்து விட்டதால்தான், இப்போது எல்லோரும் ஆனந்தமின்றி தவிக்கின்றனர்.  எனவே, குடியின் பிடியில் இருந்து "உண்மையாகவே விடுபட வேண்டுமெனில்"; ஆதி காலத்து மதுவான "சோம பானம்" பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என பிரசங்கம் செய்தார்! அதுதான், உண்மையான ஆனந்தத்திற்கு வழி என்று ஆனந்த கூக்குரலிட்டார். உடனே ஆங்காங்கே "ஆதி பானம்" கிடைக்க சிறிய கடைகளை நிறுவினார்! கூட்டம், பெரிய அளவில் அலைமோதவே... 

      122 வகையான பானங்களுடன், மிகப்பெரிய "ஆதி பான" கடையை நிறுவி அதை வெகு விரைவில், மிகப் பிரம்மாண்டமாய் திறக்கவிருக்கிறார்! அதை ஆரம்பிக்கும்போதே, மிகப்பெரிய அளவில் ஆரம்பிக்க; அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்தார், அந்த நவீன வியாபாரி! ஏற்கனவே, பணமும்/படையும் உள்ள அவர்; தன்னுடன் அரசியல் அதிகாரத்தையும் இணைக்க திட்டமிட்டார்! அதுதான், ஆக்கிரமித்த இடத்தில் எழுந்தருளியுள்ள; தன் மாபெரும் கடைக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்தார்! எனவே "உலக அளவில் தொடர்புடைய" ஒரு அரசியல்வாதியை தேர்ந்தெடுத்தார்!". அவரை அழைத்து வந்து, இந்த பெரிய "ஆதி பான" கடையைத் திறக்கவிருக்கிறார். அதனால், உலகெங்கும் தன் கடைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது அவர் திட்டம். ஆக "மதுபான அடிமையில் இருந்து மீட்கிறேன்!" என்று உறுதியளித்த அவர்; இறுதியில் "மாற்றான ஒரு மது பானத்தை" அறிமுகப் படுத்துகிறார்! என்னவொரு வியாபார யுக்தி? வாருங்கள்... 

“ஆதி பானம்” பருகுவோம்!
“அதி ஆனந்த” கூத்தடிப்போம்!!

அதிகாரம் 057: வெருவந்த செய்யாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை

0561.  தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
           ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

           விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு இருந்து, குற்றங்களை ஆராய்ந்து; மீண்டும்
           அக்குற்றங்கள் நிகழாத வண்ணம், குற்றங்களுக்கு நிகராக தண்டிப்பவரே அரசாள்பவர்.
(அது போல்...)
           தாயன்போடு இருந்து, பிழைகளைத் திருத்தி; மீண்டும் அப்பிழைகள் நிகராத வகையில்,
           பிழைகளுக்கு நிகராய் போதிப்பவரே ஆசிரியர்.
      
0562.  கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
           நீங்காமை வேண்டு பவர்

           விழியப்பன் விளக்கம்: ஆட்சியை இழக்காமல், நெடுங்காலம் தொடர விரும்புவோர்;
           குற்றங்களைக் கண்டிப்பதில் கடுமையாய் இருந்து, தண்டனை அளிப்பதில் நிதானமாய்
           செயல்படவேண்டும்.
(அது போல்...)
           உறவை இழக்காமல், நீடித்து நிலைக்க வேண்டுவோர்; பிழைகளைச் சுட்டுவதில் தீவிரமாய்
           இருந்து, பகையை வளர்ப்பதில் பொறுமையாய் இருக்கவேண்டும்.
           
0563.  வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
           ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை மிரட்டும், செயல்களைச் செய்து பழகும் 
           கொடுங்கோலராய்; ஆட்சியாளர் இருப்பின், அவரின் ஆட்சி உறுதியாய் விரைவில் 
           கெட்டழியும்.
(அது போல்...)
           மாணாக்கர்களை வதைக்கும், தண்டனைகளை அளித்து பழகும் கொடுமனத்தராய்; 
           ஆசிரியர் இருப்பின், அவரின் வேலை நிச்சயமாய் உடனே பறிபோகும்.

0564.  இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
           உறைகடுகி ஒல்லைக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: "தம்மை ஆள்பவர் கொடியர்" என்ற அவச்சொல்லால், பொதுமக்கள்
           விமர்சிக்கும் அரசாள்பவரின் ஆட்சி; ஆட்சிக்காலம் குறைந்து, விரைவில் கெட்டழியும்.
(அது போல்...)
           “குடும்பப் பெரியோர் கொடியர்” என்ற பழிச்சொல்லால், குடும்பத்தார் குற்றம்சாட்டும்
           முதியோரின் வாழ்வு; ஆயுட்காலம் குறைந்து, வேகமாய் முடியும்.

0565.  அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
           பேஎய்கண் டன்னது உடைத்து

           விழியப்பன் விளக்கம்: உரிய நேரத்தில் காண முடியாதவராயும், இனிமையற்ற முகத்துடனும்
           இருப்போரின் அளவுகடந்த செல்வம்; பூதத்தின் மேற்பார்வையில் இருக்கும்
           தன்மையுடையது.
(அது போல்...)
           முக்கிய உறவில் பிணைப்பு இல்லாதவராயும், முறையற்ற இயல்புடனும் இருப்போரின்
           எல்லையற்ற அன்பு; பெருங்கடலின் பேராழத்தில் இருக்கும் பொக்கிஷமாகும்.

0566.  கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
           நீடின்றி ஆங்கே கெடும்

           விழியப்பன் விளக்கம்: கொடிய சொற்களைப் பேசி, கருணை இல்லாதவராய் அரசாள்பவர்
           இருப்பின்; மலையளவு மக்கள் செல்வம், வளர்ச்சியின்றி விரைவாய் அழியும்.
(அது போல்...)
           தீயப் பழக்கங்களைப் பழகி, ஒழுக்கம் இல்லாதவராய் பெற்றோர்கள் இருப்பின்; கடலளவு
           இளைஞர்கள் சக்தி, பயனின்றி வேகமாய் கெடும்.

0567.  கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
           அடுமுரண் தேய்க்கும் அரம்

           விழியப்பன் விளக்கம்: அன்பற்ற சொற்களும், அளவுகடந்த தண்டனைகளும்; அறுக்கும்
           கருவிக்கு இணையாய், அரசாள்பவரின் வெற்றியைத் தகர்க்கும் கருவிகளாகும்.
(அது போல்...)
           அறமற்ற சிந்தனைகளும், வரம்புமீறிய செயல்களும்; கொடிய விஷத்திற்கு ஒப்பாய்,
           மனிதகுலத்தின் அடிப்படையை அழிக்கும் மருந்துகளாகும்.

0568.  இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
           சீறின் சிறுகும் திரு

           விழியப்பன் விளக்கம்: அரசாங்கத்தின் இனத்தினரான, உறுப்பினர்களைத் தழுவாமல்;
           சினத்தைத் தழுவி, அரசாள்பவர் வெகுண்டெழுந்தால் - அரசாங்கத்தின் செல்வம் அழியும்.
(அது போல்...)
           தலைமுறையின் நரம்புகளான, உறவினர்களைப் பேணாமல்; வெறுப்பைப் பேணி,
           குடும்பத்தினர் பகைகொண்டால் - தலைமுறையின் வளர்ச்சி குறையும்.

0569.  செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
           வெருவந்து வெய்து கெடும்

           விழியப்பன் விளக்கம்: போர் போன்ற நெருக்கடியான சூழலுக்கு, முன்பே பாதுகாப்பு
           செய்யாத அரசாள்பவரின் ஆட்சி; பயத்தை ஆட்கொண்டு, விரைவில் அழியும்.
(அது போல்...)
           வேலையிழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, முன்னரே ஏற்பாடு செய்யாத
           தலைமையின் குடும்பம்; வறுமையை எதிர்கொண்டு, வேகமாய் தடம்புரளும்.

0570.  கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
           இல்லை நிலக்குப் பொறை

           விழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப்
           பயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருத்த சுமை
           வேறேதுமில்லை!
(அது போல்...)
           கொள்ளையடிக்கும் நோக்கில் நடக்கும் வணிகம், இரக்கம் இல்லாதோரை இடையில்
           நியமிக்கும். அதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெரிய குறை வேறேதுமில்லை!

குறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0570}

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

விழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப் பயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருத்த சுமை வேறேதுமில்லை!
(அது போல்...)
கொள்ளையடிக்கும் நோக்கில் நடக்கும் வணிகம், இரக்கம் இல்லாதோரை இடையில் நியமிக்கும். அதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெரிய குறை வேறேதுமில்லை!

செவ்வாய், பிப்ரவரி 21, 2017

குறள் எண்: 0569 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0569}

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

விழியப்பன் விளக்கம்: போர் போன்ற நெருக்கடியான சூழலுக்கு, முன்பே பாதுகாப்பு செய்யாத அரசாள்பவரின் ஆட்சி; பயத்தை ஆட்கொண்டு, விரைவில் அழியும்.
(அது போல்...)
வேலையிழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, முன்னரே ஏற்பாடு செய்யாத தலைமையின் குடும்பம்; வறுமையை எதிர்கொண்டு, வேகமாய் தடம்புரளும்.

திங்கள், பிப்ரவரி 20, 2017

குறள் எண்: 0568 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0568}

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு

விழியப்பன் விளக்கம்: அரசாங்கத்தின் இனத்தினரான, உறுப்பினர்களைத் தழுவாமல்; சினத்தைத் தழுவி, அரசாள்பவர் வெகுண்டெழுந்தால் - அரசாங்கத்தின் செல்வம் அழியும்.
(அது போல்...)
தலைமுறையின் நரம்புகளான, உறவினர்களைப் பேணாமல்; வெறுப்பைப் பேணி, குடும்பத்தினர் பகைகொண்டால் - தலைமுறையின் வளர்ச்சி குறையும்.

ஞாயிறு, பிப்ரவரி 19, 2017

நல்லவர்களில் "ஓர் வகை!"

நல்லவர்களில் "ஓர் வகை!"


       நான்  உடன் இருந்ததோடு சரி! கத்தி எடுத்து கொடுத்தேன்! அரிவாள் எடுத்து கொடுத்தேன்!  ஆனால், கொலை செய்யவே இல்லை! என்னைக் கொலை செய்ய சொன்னார்கள்! ஆனால், நான் மறுத்துவிட்டேன்!

நான்(ஏ) நல்லவன்!

நான் எடுத்து கொடுத்த; கத்தி/அரிவாளைக் கொண்டு, வெட்டியோர் தான் குற்றவாளிகள்! நான் வெட்டவே இல்லை; அதனால், நான் குற்றவாளி இல்லை! அதுபோல், தப்பித்துச் செல்லும் திறமை இல்லாமல், கொலைகாரர்களுக்கு உடந்தையாய் இருந்து; கொலை செய்யப்பட்டோரும் குற்றவாளிகளே!

ஆனால், நான் நல்லவன்!
 1. குடும்பத்தில்/உறவில்/சமூகத்தில் - இப்படிப்பட்ட ஓர் வகையினரைப் பார்த்திருப்போம்!
 2. இன்றைய தமிழக "அரசியல் சூழ்நிலை" நாளை மாறும்போது; இவ்வகையான நல்லவர்களை அடையாளம் காண நேரலாம். அரசியல்வாதிகள் மட்டுமல்ல! வாக்காளர்களும், அதில் ஒரு வகையினராய் வாதிடக் கூடும்! 😊
- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு

குறள் எண்: 0567 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0567}

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

விழியப்பன் விளக்கம்: அன்பற்ற சொற்களும், அளவுகடந்த தண்டனைகளும்; அறுக்கும் கருவிக்கு இணையாய், அரசாள்பவரின் வெற்றியைத் தகர்க்கும் கருவிகளாகும்.
(அது போல்...)
அறமற்ற சிந்தனைகளும், வரம்புமீறிய செயல்களும்; கொடிய விஷத்திற்கு ஒப்பாய், மனிதகுலத்தின் அடிப்படையை அழிக்கும் மருந்துகளாகும்.

சனி, பிப்ரவரி 18, 2017

குறள் எண்: 0566 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0566}

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

விழியப்பன் விளக்கம்: கொடிய சொற்களைப் பேசி, கருணை இல்லாதவராய் அரசாள்பவர் இருப்பின்; மலையளவு மக்கள் செல்வம், வளர்ச்சியின்றி விரைவாய் அழியும்.
(அது போல்...)
தீயப் பழக்கங்களைப் பழகி, ஒழுக்கம் இல்லாதவராய் பெற்றோர்கள் இருப்பின்; கடலளவு இளைஞர்கள் சக்தி, பயனின்றி வேகமாய் கெடும்.

வெள்ளி, பிப்ரவரி 17, 2017

அன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு...

உறுதி ஏற்போம்! கை கோர்ப்போம்!!

{திரு. கமல் ஹாசன் சொன்னதில்...
"களம்புகுந்தோர் களமறியார்!" என்பதற்கு ஆர்ப்பரித்த நாம்; 
"களமறிந்தோர் களமிறங்கார்!" என்றதை ஆழ்ந்து கவனிக்கவில்லையோ?!

*******

அன்புள்ள (கமல் ஹாசனைச் சார்ந்த) நம்மவர்களுக்கு!

          சென்ற வாரம் "அன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு!" என்ற தலைப்பில் திரு. கமல் ஹாசனுக்கு எழுதிய பகிரங்க கடிதத்தைப் படித்திருப்பீர்! அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும்! அதற்கு முன், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை - நம்மவர்களான உங்களுடன் பகிர்வதும் என் கடமை ஆகிறது! "ஒருவேளை, அரசியலில் இறங்கி; அவர் தோற்றுவிட்டால் என்ன ஆவது?!" என்ற கவலை சிலருக்கு இருக்கக் கூடும்! அப்படியோர் கவலை அவருக்கே கூட இருக்கக்கூடும். அந்த கவலையைக் களைந்தெறியும் முனைப்பே இந்த பதிவு. இந்த விடயத்தில், நாம் செய்ய வேண்டியவற்றை கீழே விளக்கி இருக்கிறேன்:
 • வெகுநிச்சயமாய், மேற்குறிப்பிட்ட அழைப்பு "திரு. கமல் ஹாசன் அரசியலில் நுழைந்து, தனியாய் வெல்வார்" என்ற அடிப்படையில் அல்ல; அது சாத்தியமும் அல்ல! நிஜ வாழ்வில், அவரும் நம்மைப் போன்ற "ஒரு சாமான்யனே" என்பது நிதர்சனம். அவரின் படங்களில் கூட "அப்படிப்பட்ட நாயகத்தனத்தை" அவர் செய்வதில்லை; கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கலாம்! ஆனால், காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர் அவர். அதுதான் "A Wednesday" என்ற படத்தின் தழுவலுக்கு "உன்னைப் போல் ஒருவன்" என்ற தலைப்பிட காரணம்! ஆம், அவர் நம்மைப் போன்று; நம்மில் ஒருவர்; A comman man!
 • திரு. கமல் ஹாசனின் முடிவு ஒருபுறம் இருக்கட்டும்.  அதற்கு முன், நம்முடைய "நேரடிப் பங்கீடு" இல்லாமல்; அவர் மட்டுமல்ல! எவராலும் இதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதை நினைவில் நிறுத்துவோம். சாமான்யர்கள் பலருக்கும், திரைப்படங்களில் வருவது போல் "நமக்காக எல்லாவற்றையும் செய்ய, தீப்பிழம்பாய் ஒருவன் வருவான்!" என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை தவறில்லை! ஆனால், அப்படி யோசித்தவுடன் அல்லது வசனம் பேசியவுடன் - "அதிர வைக்கும்" பின்னணி இசையோடு "மிரள வைக்கும்" ஒரு நாயகன் நம்முன் தோன்றிட, இது சினிமா அல்ல! வாழ்க்கை! அந்த நம்பிக்கையை சாத்தியமாக்க "ஒப்பற்ற உழைப்பு" தேவை! அந்த உழைப்பும் "கூட்டு உழைப்பாய்" இருந்தால் மட்டுமே;  எதிர்பார்க்கும் வெற்றி சாத்தியம்!
 • "யாராவது வந்து குரல் கொடுத்தால், தொடர்ந்து களத்தில் இருந்தால்; அவரை ஆதரிப்போம்!" என்ற மனநிலை பலருக்கும் இருக்கிறது. அப்படி யோசிக்கும் நமக்கே "அப்படி எவரும் வரமுடியாத சூழலில் அரசியலும்/சமுதாயமும் சீர்கெட்டு இருக்கிறது!" என்பது திண்ணமாய் தெரியும். இங்கே விவாதிக்கப்படும் விடயம் "வீட்டில் இருக்கும் சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம் அல்ல! சமுத்திரத்திலேயே கலந்துவிட்ட சாக்கடையை சுத்தம் செய்யும் விடயம்!!" "எவரேனும் வந்து குரல் கொடுப்பார்! பின்னர், அவரோடு இணைவோம்!" என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விடயம்! ஆனால், அப்படி ஒரு ஆற்றலும்/ஈர்ப்பும் உள்ள ஒருவரைக் கண்டறிந்து, அணுக முடியும்! அப்படி நாம் கண்டறிந்த ஒருவராகத் தான் திரு. கமல் ஹாசன் அவர்களை பார்க்கிறேன். ஆனால், அவரால் தனியாய் சாதிக்க முடியாது!
 • தமிழகத்தில் ஒரு "நிலையான/முறையான அரசியல் மாற்றம்" உருவாகிட - அமைப்பாளர்கள்/செயலாளர்கள்/மாவட்ட நிர்வாகிகள் துவங்கி சட்டமன்ற & நாடாளுமன்ற உறுப்பினர்கள்/மேயர்கள் வரை - குறைந்த பட்சம் 500 "நேர்மையான நபர்கள்" தேவை! தலைவன் மட்டும் நேர்மையாய் இருப்பின், இங்கே மாற்றங்கள் நிகழ்வது ஒருக்காலும் சாத்தியமில்லை! அந்த நபர்களில் ஒருவராய், என்னை முதல் ஆளாக அறிவிக்க; எனக்கு எந்த தயக்கமும் இல்லை. திரு. கமல் ஹாசனுக்கு பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களில், 500 நபர்களைத் தேர்ந்தெடுப்பது மிக எளிதான விடயம். அதற்கு நாம் தான், முதலடி எடுத்து வைத்து; அவருக்கு தேவையான உறுதியை அளிக்க வேண்டும். நமக்கிருக்கும் எல்லா ஐயங்களையும் ஒதுக்கி வைத்து, அவருக்கு இதைத் தெளிவாய் உணர்த்தி; அவரை அழைப்போம்! எனவே, நம்முடைய உறுதியை அவரின் பார்வைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை! அருள்கூர்ந்து, உங்களின் உறுதியையும் வெளிப்படுத்துங்கள்; இக்கருத்தைப் பகிருங்கள்.
 • அந்த உறுதி கிடைத்தால் மட்டுமே; அவரோ அல்லது அவர் போன்ற ஒருவரோ "தீப்பிழம்பாய் வெகுண்டெழுந்து" பொதுவாழ்க்கைக்கு வருவது சாத்தியம்! பொதுவாழ்வில் தம்மை அர்ப்பணிக்கும் எண்ணம், ஆயிரக் கணக்கானோர்க்கு உண்டு! ஆனால், ஒவ்வொருவருக்கும் இருக்கும் தயக்கம்; தனித்து எப்படி செய்வது என்பதே! இது தனிமனிதனால் சாத்தியமில்லை! இது கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. அதை ஒருங்கிணைக்க தான் திரு. கமல் ஹாசனை அழைக்கிறேன். நீங்களும் தொடர்ந்து அழையுங்கள்! அவரின் மனமும் ஓர் நாள், ஓர் கணம் - மாறும்! அப்படி மாற்றவேண்டியது நம் கடமை!
 • "களம்புகுந்தோர் களமறியார்!" என்று அவர் சொன்னதை மட்டும் ஆரவாரமாய் பார்த்த நாம், அதற்கடுத்து சொன்ன "களமறிந்தோர் களமிறங்கார்!" என்பதை ஆழ்ந்து கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது! "களமறிந்தோர்" என்ற அவரின் பட்டியலில் எவரெவர் இடம்பெற்றனர் என்பது தெரியாது! ஆனால், அவருக்கு தெரியாமலாவது; அந்த பட்டியலில் அவர் இருக்கிறார் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. என் பட்டியலில், அவர் நிச்சயம் முதன்மையில் இருக்கிறார். எனவே, அவருக்கு அரசியல் தெரியாது என்று அவர் கூறுயது; ஒரு நிருபரின் கேள்விக்கு வேண்டுமானால் "சிறந்த பதிலாய் இருக்கலாம்!". ஆனால், அவரின் இயல்பான சமுதாய அக்கறையும், அறிவியல் ஞானமும் அனைவரும் அறிந்ததே.
 • நாமெல்லாம் ஒன்றாய் சேர்ந்து, ஒத்தக் குரலில்; அவரை நோக்கி நாம் அனைவரும் "உம்மைப் போல் ஒருவன்" என்று உறுதியளிப்போம்! சமீபத்தில் "இந்தியா டுடே (India Today)" இதழுக்களித்த பேட்டியில் அவரே சொன்னது போல் "அவருக்குள் இருக்கும் சமுதாயக் கோபம் 40 ஆண்டுகள் முதிர்ந்தது!" என்பது நாமறிந்ததே. அந்தக் கோபத்தை, அவரின் அரசியல் ஞானத்தோடு சேர்த்து அரசியலுக்குள் கொண்டு சேர்ப்பது; நம் அனைவரின் கடமை. எனவே, அவரின் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து; அவரோடு நாமும் இணைந்து நாம் அனைவரும் விரும்பும் "அரசியல் மாற்றத்திற்கு" வழிவகுக்க வித்திடுவோம்! வாருங்கள், அவரைத் தொடர்ந்து அழைப்போம்! நம் உறுதியை தெரிவிப்போம்!! கூட்டாய் வெல்வோம்!!!
 • மேலும், நம் வள்ளுவப் பெருந்தகை  "காலமறிதல்" மற்றும் "இடனறிதல்" போன்ற அதிகாரங்களில் தெளிவாய் சொல்யிருப்பது போல்; முறையான "அரசியல் மாற்றம்" உருவாக, மிகச்சரியான இடமும்/காலமும் இப்போது வாய்த்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல்; செயல்களைத் துவங்குவது மிக முக்கியம்! அதற்கு திரு. கமல் ஹாசன் போன்றோர் தேவை என்பதே; உங்களை அனைவரின் சார்பான என் பார்வையும்/கோரிக்கையும்.
 • "இத்தனை கோடி மக்களில் வேறொரு தலைமையே இல்லையா?!" என்ற கேள்வி சிலரின் மனதில் எழலாம்; தவறில்லை! இது வேறொரு தலைவன் இல்லாததால் விளைந்த முடிவு அல்ல! இங்கே, ஆயிரமாயிரம் தலைவர்கள் இருக்கக்கூடும்!  ஆனால், அவர்களின் பெயர் கூட, நம்மில் பலருக்கும் தெரியாது. எல்லோர்க்கும் தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்; அதிலும் நம்பிக்கையான ஒருவர் தேவை! அதனால் தான், திரு. கமல் ஹாசனை முன்மொழிகிறேன்! மாற்று இருப்போர் சொல்லுங்கள்; அவரைத் தொடரவும் எந்த தயக்கமும் இல்லை! தலைமையைத்  தாண்டி, இப்போது தேவையான பெருத்த முனைப்பு;  மேற்குறிப்பிட்ட 500 பேர்களைக் கண்டறிவதே! நம்மில் இருந்து தான், அவர்களைக் கண்டறிந்து; தேர்ந்தெடுக்க வேண்டும்! அவர்களை வேறெங்கும் தேட முடியாது.
 • முன்பு என் வலைப்பதிவில் "என்னுள் உதித்தது" என்ற பிரிவில் பதிந்த; ஒரு கருத்துப்படத்தை இட்டு, இந்தப் பதிவை முடிக்க எண்ணுகிறேன். ஆம்! "அரசியல் எனும் சமுதாயக் கடமையில்" - விமர்சகர்கள் ஆகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. வாருங்கள், நம் சமுதாயக் கடனை ஒருங்கிணைந்து ஆற்றுவோம்! வெற்றி கொள்வோம்!! 

"சிறு துளி பெருவெள்ளம்" என்று நாம் அறிந்ததை; நடைமுறைப் படுத்துவோம்!!! 

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு

குறள் எண்: 0565 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0565}

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

விழியப்பன் விளக்கம்: உரிய நேரத்தில் காண முடியாதவராயும், இனிமையற்ற முகத்துடனும் இருப்போரின் அளவுகடந்த செல்வம்; பூதத்தின் மேற்பார்வையில் இருக்கும் தன்மையுடையது.
(அது போல்...)
முக்கிய உறவில் பிணைப்பு இல்லாதவராயும், முறையற்ற இயல்புடனும் இருப்போரின் எல்லையற்ற அன்பு; பெருங்கடலின் பேராழத்தில் இருக்கும் பொக்கிஷமாகும்.

ஆன்மீகப் பயணமும் ஆரவாரமும்...

வியாழன், பிப்ரவரி 16, 2017

குறள் எண்: 0564 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0564}

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

விழியப்பன் விளக்கம்: "தம்மை ஆள்பவர் கொடியர்" என்ற அவச்சொல்லால், பொதுமக்கள் விமர்சிக்கும் அரசாள்பவரின் ஆட்சி; ஆட்சிக்காலம் குறைந்து, விரைவில் கெட்டழியும்.
(அது போல்...)
“குடும்பப் பெரியோர் கொடியர்” என்ற பழிச்சொல்லால், குடும்பத்தார் குற்றம்சாட்டும் முதியோரின் வாழ்வு; ஆயுட்காலம் குறைந்து, வேகமாய் முடியும்.

புதன், பிப்ரவரி 15, 2017

குறள் எண்: 0563 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0563}

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை மிரட்டும், செயல்களைச் செய்து பழகும் கொடுங்கோலராய்; ஆட்சியாளர் இருப்பின், அவரின் ஆட்சி உறுதியாய் விரைவில் கெட்டழியும்.
(அது போல்...)
மாணாக்கர்களை வதைக்கும், தண்டனைகளை அளித்து பழகும் கொடுமனத்தராய்; ஆசிரியர் இருப்பின், அவரின் வேலை நிச்சயமாய் உடனே பறிபோகும்.

செவ்வாய், பிப்ரவரி 14, 2017

குறள் எண்: 0562 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0562}

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்

விழியப்பன் விளக்கம்: ஆட்சியை இழக்காமல், நெடுங்காலம் தொடர விரும்புவோர்; குற்றங்களைக் கண்டிப்பதில் கடுமையாய் இருந்து, தண்டனை அளிப்பதில் நிதானமாய் செயல்படவேண்டும்.
(அது போல்...)
உறவை இழக்காமல், நீடித்து நிலைக்க வேண்டுவோர்; பிழைகளைச் சுட்டுவதில் தீவிரமாய் இருந்து, பகையை வளர்ப்பதில் பொறுமையாய் இருக்கவேண்டும்.

திங்கள், பிப்ரவரி 13, 2017

குறள் எண்: 0561 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0561}

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

விழியப்பன் விளக்கம்: நடுநிலையோடு இருந்து, குற்றங்களை ஆராய்ந்து; மீண்டும் அக்குற்றங்கள் நிகழாத வண்ணம், குற்றங்களுக்கு நிகராக தண்டிப்பவரே அரசாள்பவர்.
(அது போல்...)
தாயன்போடு இருந்து, பிழைகளைத் திருத்தி; மீண்டும் அப்பிழைகள் நிகராத வகையில், பிழைகளுக்கு நிகராய் போதிப்பவரே ஆசிரியர்.

நற்சிந்தனையாளர்களும் அதிகாரமும்...

ஞாயிறு, பிப்ரவரி 12, 2017

அதிகாரம் 056: கொடுங்கோன்மை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை

0551.  கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
           அல்லவை செய்தொழுகும் வேந்து

           விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை அலைக்கழித்து, அறமல்லவைச் செய்து பழகும்
           அரசாள்பவர்; கொலைச் செய்வோரை விட, அதீத கொடுமையானவர் ஆவர்.
(அது போல்...)
           உறவுகளை வெறுத்து, வாய்மையல்லவைப் பேசி ஒதுக்கும் உறவினர்; கையூட்டுப்
           பெறுவோரை விட, மிக ஆபத்தானவர் ஆவர்.
      
0552.  வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
           கோலொடு நின்றான் இரவு

           விழியப்பன் விளக்கம்: செங்கோல் ஏந்திய அரசாள்வோர், பொதுமக்களின் பொருளை
           வேண்டுவது; அரிவாள் ஏந்திய கொள்ளையர், வழிப்போக்கரிடம் கொடு என்பதைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           வேலை செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் சொத்தைப் பிடுங்குவது; பல்தொழில் புரியும்
           அதிபர்கள், வாடிக்கையாளரின் பணத்தை ஏய்ப்பதைப் போன்றதாகும்.
           
0553.  நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
           நாள்தொறும் நாடு கெடும்

           விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு நாளும் - ஆராய்ந்தறிந்து முறையான செங்கோலைச்
           செலுத்தாத, அரசாள்பவரின் நாடு - ஒவ்வொரு நாளும், தன் வாழ்வியலை இழக்கும்.
(அது போல்...)
           ஒவ்வொரு நிலத்தையும் - போற்றிக்காத்து இயற்கையான விவசாயத்தை செய்யாத,
           இனத்தின் சந்ததி - ஒவ்வொரு பாரம்பரியத்தையும், தன் வழக்கிலிருந்து இழக்கும்.

0554.  கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
           சூழாது செய்யும் அரசு

           விழியப்பன் விளக்கம்: செங்கோல் தவறி, சிந்தனையின்றிக் கொடுங்கோலைச் செய்யும்
           அரசாங்கம்; உணவையும், குடிமக்களையும்; ஒருசேர ஒரே நேரத்தில் இழக்கும்.
(அது போல்...)
           அடிப்படை மறந்து, உணர்வின்றி உறவுகளை நீக்கும் பரம்பரை; சொத்தையும்,
           சந்ததியையும்; ஒன்றாக ஒரே தலைமுறையில் இழக்கும்.

0555.  அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
           செல்வத்தைத் தேய்க்கும் படை

           விழியப்பன் விளக்கம்: துன்பத்தில் ஆழ்ந்து, தேறமுடியாமல் அழும் பொதுமக்களின்
           கண்ணீர்தானே; கொடுங்கோல் புரியும் அரசாள்பவரின், செல்வத்தை அழிக்கும் ஆயுதம்?
(அது போல்...)
           வாழ்வியல் தொலைந்து, தங்கமுடியாமல் அலையும் விலங்குகளின் சாபம்தானே;
           காடழிக்கும் குணமுடைய இனத்தின், ஆணிவேரை வெட்டும் கோடரி?

0556.  மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
           மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

           விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர்க்கு நிலைத்த புகழைத் தருவது, செங்கோல்
           தவறாமையாகும்; மாறாய் கொடுங்கோல் புரிந்தால், அரசாள்வோரின் புகழ் நிலைக்காது.
(அது போல்...)
           வல்லரசுக்கு நீடித்த பலம் கொடுப்பது, பாதுகாப்பு குறையாததாகும்; மாறாய் பாதுகாப்பு
           குறைந்தால், வல்லரசின் பலம் நீடிக்காது.

0557.  துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
           அளியின்மை வாழும் உயிர்க்கு

           விழியப்பன் விளக்கம்: மன்னனின் அருளொளி கிடைக்காத, நாட்டு மக்களின் வாழ்வியல்;
           மழைத்துளி பொழியாததால், உலகத்துக்கு விளையும் கேட்டைப் போலிருக்கும்.
(அது போல்...)
           பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத, வீட்டுப் பிள்ளைகளின் வளர்ச்சி; சுற்றுவேலி
           இல்லாததால், பயிர்களுக்கு உண்டாகும் அழிவைப் போலிருக்கும்.

0558.  இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
           மன்னவன் கோல்கீழ்ப் படின்

           விழியப்பன் விளக்கம்: முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் ஆட்சியில்;
           வறுமையோடு இருப்பதை விட, உடையவராய் இருப்பதே கொடியதாகும்.
(அது போல்...)
           உண்மையான வாழ்வியலைக் கற்பிக்காத, சமூகத்தின் மத்தியில்; பொய்யராய் இருப்பதை
           விட, நேர்மையாய் வாழ்வதே சிக்கலானதாகும்.

0559.  முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
           ஒல்லாது வானம் பெயல்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், செங்கோல் தவறி ஆட்சி செய்தால்; விண்ணிலிருந்து
           பொழிய வேண்டிய மழை, பொழியாமல் தவறும்.
(அது போல்...)
           சமுதாயம், அறம் தவறி வாழ்வியலை நடத்தினால்; அன்பிலிருந்து இணைய வேண்டிய
           உறவுகள், இணையாமல் பிரியும்.

0560.  ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
           காவலன் காவான் எனின்

           விழியப்பன் விளக்கம்: நாட்டைக் காக்கவேண்டிய அரசாள்வோர், காக்கக் தவறினால்;
           பசுவின் பயனான பால்வளம் குன்றும்! இறைப்பணியைத் தொழிலாய் கொண்டோர்,
           அறநூல்களை மறப்பர்.
(அது போல்...)
           புரிதலைக் கற்பிக்கவேண்டிய ஆசிரியர், கற்பிக்கத் தவறினால்; படிப்பின் பயனான
           சிந்தனை குறையும்! ஆன்மீகத்தைப் போதிக்கும் குருக்கள், நீதிபோதனையை மறப்பர்.

குறள் எண்: 0560 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0560}

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

விழியப்பன் விளக்கம்: நாட்டைக் காக்கவேண்டிய அரசாள்வோர், காக்கக் தவறினால்; பசுவின் பயனான பால்வளம் குன்றும்! இறைப்பணியைத் தொழிலாய் கொண்டோர், அறநூல்களை மறப்பர்.
(அது போல்...)
புரிதலைக் கற்பிக்கவேண்டிய ஆசிரியர், கற்பிக்கத் தவறினால்; படிப்பின் பயனான சிந்தனை குறையும்! ஆன்மீகத்தைப் போதிக்கும் குருக்கள், நீதிபோதனையை மறப்பர்.

சனி, பிப்ரவரி 11, 2017

குறள் எண்: 0559 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0559}

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், செங்கோல் தவறி ஆட்சி செய்தால்; விண்ணிலிருந்து பொழிய வேண்டிய மழை, பொழியாமல் தவறும்.
(அது போல்...)
சமுதாயம், அறம் தவறி வாழ்வியலை நடத்தினால்; அன்பிலிருந்து இணைய வேண்டிய உறவுகள், இணையாமல் பிரியும்.

அன்புள்ள திரு. கமல் ஹாசனுக்கு!

வருவீர்! வெல்வீர்!!

{உங்கள் அனைவரின் சார்பாகவும் எழுதியிருக்கிறேன்! 
அருள்கூர்ந்து, பலருடனும் பகிருங்கள்; இது, திரு. கமல் ஹாசனை சேரட்டும்!!}

*******
        அன்புள்ள திரு. கமல் ஹாசன்,

      ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஜனநாயத்தின் ஒரு அங்கத்தினனாய்  நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மிகுந்த பாராட்டுக்குரியவை; வாழ்த்துகிறேன்! உங்களைப் பல ஆண்டுகளாய் தொடர்வோர்க்கு; உங்களின் இந்த ஜனநாயகக் கடமையும், உணர்வும் புதிதான செய்தியல்ல! உங்களின் படங்கள் துவங்கி, உங்களின் பேட்டி, கவிதை, கருத்துகள் வரை பலவற்றைத் தொகுத்து ஒரு நீண்ட பட்டியலை இடலாம்! நான் உங்களின் அபிமானிகளில் ஒருவன்! ஸ்ருதியை "என் மகளாய்" பார்க்கும் மனநிலையைக் கூட ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன். அதுதான், உங்கள் மீதான என் போன்றோரின் பார்வை/நம்பிக்கை. சரி, இந்தப் பகிரங்க கடிதத்தின் கருவுக்கு வருகிறேன்.
 • சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என்ற கேள்விக்கு "1. எனக்கு தெரிந்த விடயத்தை மட்டுமே! நடிப்பது எனக்குத் தெரிந்த தொழில், அதனால் செயகிறேன்; அரசியல் எனக்குத் தெரியாது. 2. எனக்கு நன்றாக சாப்பிடத் தெரியும் என்பதற்காக, என்னையே சமைக்க சொன்னால் எப்படி?" - என்ற சாராம்சத்தில் இரண்டு பதில்களைச் சொன்னீர். பலரும் உங்களின் பதிலளிக்கும் திறனைக் கண்டு வியந்தனர்! நானும் வியந்தேன் என்பதை மறுக்கவில்லை! ஆனால், அதோடு மட்டும் நின்றுவிட - நான் உங்கள் இரசிகன்(மட்டும்) அல்ல! நான் உங்கள் அபிமானி! இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்.
 • மேலுள்ள உங்கள் விளக்கங்களை, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒரு விடயத்தின் அடிப்படையில்; கேள்வியாய் வைக்க விரும்புகிறேன். அந்த விடயம் "நான் நடிகனாக வரவிரும்பி திரையுலகுக்கு வரவில்லை! ஆனால், நடிகனாய் ஆக்கப்பட்டேன்!" என்பதே. இதுபோல், பலரும் ஆகி இருக்கலாம்! ஆனால் "உலக நாயகன்" ஆகிட எல்லோராலும் இயலாது. எனவே, தெரியாத ஒரு விடயத்தில் புகுந்து, அதைத் திறம்பட செய்வது உங்களுக்கு புதிதல்ல! நடிகன் எனும் அங்கத்தையும் தாண்டியம், பலவற்றை செய்து சாதித்து காட்டி இருக்கிறீர்.
 • என் அனுமானம் சரியெனில் "நீங்கள் நன்றாக சமைக்கத் தெரிந்தவராகவும் இருப்பீர்!" இது பொய்யெனினும், பரவாயில்லை "தமிழக மக்களுக்காய், சமைக்கப் பழகுங்கள்!" ஆம், நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என் கோரிக்கை. ஏன் வரக்கூடாது? என்று பிறர் கேட்டதுக்கு, நீங்கள் சொன்ன பதில்கள் சாதுர்யமானவை தான்! ஆனால், சரியானவையா? என்ற வினா எழுகிறது! பிறக்கும் போதே, எவரும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை என்பதை இச்சிறியேன் உங்களுக்கு சொல்வது அபத்தம் எனத் தெரிந்தும் - இச்சூழலில் சொல்வது, என் கடமையாகிறது.
 • அடுத்த தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. அதற்குள், உண்மையாகவே உங்களுக்கு தெரியாதவை இருப்பினும் தெரிந்து கொள்ளலாம். முதலில் களத்தில் இறங்குங்கள்! அரசியல் களம், உங்களுக்கு தரும் சவால்கள்; உங்கள் அரசியல்-அறிவை "மென்மேலும்" வளர்க்கும். இன்றைய நிலையில், அரசியலில் உரிய மாற்றம் நிகழ, அரசியல் வரலாறு தெரிந்தவரை விட; "அன்பே சிவம்" என்பதை உணர்ந்த ஒருவரே தேவை! அரசியல் வரலாறை/அறிவை; படிப்பதால் தெரிந்து கொள்ளலாம்! ஆனால், மக்களை நேசிக்கும் ஒழுக்கத்தை - படித்து அறிதலாகாது! அது சிந்தித்து உணர வேண்டியது! படிப்பதை விட, சிந்திப்பது எத்தனை சிரமமானது அனைவரும் அறிந்ததே. எனவே, அரசியலைப் படித்து அறிய வேண்டுமெனில்; அது உங்களுக்கு சாத்தியமானதே!
 • ஒரு நடிகரை அரசியலுக்கு அழைப்பது அல்லது அரசியலில் ஆதரிப்பது; புரியாதோர்க்கு வேண்டுமானால் "சினிமா மோகம்" காரணமாய் நிகழ்வது என்ற பொதுப் புத்தியாய் இருக்கலாம்! ஆனால், அதில் ஒரு உளவியல் உள்ளது. ஆம்! ஒவ்வொரு பெற்றோரும், பார்ப்பவர் அனைவரிடமும் "தெரிந்த பெண்ணோ/பையனோ இருந்தால் சொல்லுங்கள்" என்று வேண்டுவதைப் போன்று, இதுவோர் நம்பிக்கை. அப்படியோர் நம்பிக்கையை நம்பி, தம் பிள்ளைகளின் வாழ்க்கையையே ஒப்படைக்கும் மக்கள்; அரசியலையும்/அரசையும் ஒப்படைப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை! இந்த நம்பிக்கைகளில், ஏமாற்றங்கள் நிகழலாம்! ஆனால், அந்த நம்பிக்கை சத்தியம்! அது போன்றவொரு நம்பிக்கை தான், ஒரு நடிகரை அரசியலில் எதிர்பார்ப்பதில் உள்ள உளவியல்.
 • உங்களைப் போன்றோரரை அழைப்பதின் பின்னணியில் - வெறும் நம்பிக்கை மட்டுமல்ல! ஆழ்ந்த புரிதலும் சேர்ந்தே உள்ளது! அது நிச்சயம் வெற்றியை/பலனை அளிக்கும். ஒருவேளை "தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது?" என்ற ஐயம் இருப்பின் - அதை தகர்த்து எறியுங்கள். உங்களின் பல படங்கள் அளிக்காத ஏமாற்றத்தை/தோல்வியை விட - உங்களுக்குப் பெருத்த பாதிப்பை வேறெதுவும் அளிக்க முடியாது. உதாரணத்திற்கு - "மகாநதி" திரைப்படம் "வணிக ரீதியாய்" பெரிய அளவில் பலனளிக்காதது - என்னுள் இன்றும் பசுமரத்தாணியாய் இருக்கிறது! "அன்பே சிவம்" கூட காலம் கடந்தே - பல பாராட்டுகளைப் பெற்றது. எனவே, அப்படி ஏதும் நிகழும் என்ற அச்சம் ஏதும் இருப்பின், தூக்கி எறியுங்கள்.
 • இப்போதிருக்கும் நிலையில் "உம்மைப் போல் ஒருவர்" அரசியலில் தோற்க சாத்தியமே இல்லை! உங்களுடன் "என்னைப் போல் பலர்" பொதுவாழ்வில் சாதிக்கும் எண்ணத்தோடு இணைந்திடக் காத்திருக்கிறோம்! எங்களுக்கு மற்றவரின் நம்பிக்கையைப் பெறும் "நம்பிக்கை அளிக்கும்" காரணி இல்லை! என்னுடைய படைப்புகள் பலவும், மிகச் சிறப்பாய் இருப்பினும்; ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறது! காரணம், நான் பிரபலமில்லை! ஒருவரின் படைப்புகள் பலரையும் சென்று சேர்ந்திட; அது அவசியம்! என் மிகச் சிறந்த நட்பு வட்டம் கூட; என் படைப்புகளை, பொது நட்பைத் தாண்டி இட்டுச் செல்வதில்லை! இதுதான் நிதர்சனம்!
 • அரசியலில் வெற்றி பெற, முக்கியத் தேவைகளில்; கீழ்வருவதும் சில: 1. பலருக்கும் பரிச்சயமான பிரபலம், 2. அந்த பிரபலம் கொடுக்கும் நம்பிக்கை, 3. பொதுவாழ்வை நேசிக்கும் பொதுவுடைமை, 4. நல்ல சிந்தனைகள், 5. நேர்மை/வாய்மை, 6. அரசியல் அறிவு. இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறது. மேலும், "உண்மையான பிரதிநிதிகளாய்" பிறரிடம் உங்களை இட்டுச்செல்லும் முனைப்புடைய படையும் முக்கியம்! அதற்கு, என்னைப் போன்ற எண்ணற்றோர் இருக்கிறோம். பின் என்ன தயக்கம்? பின் எது தடை?
 • நல்ல சிந்தனைகள், நல்ல செயல்களுக்கு வித்திடும்! உங்களிடம் உள்ள சிந்தனைகள், உங்களின் நற்செயல்களை அடிப்படையாய் உள்ளன! அந்த செயல்கள், நீங்கள் விரும்பும் ஜனநாயக மாற்றத்துக்கு வழி வகுக்க; உங்களின் செயல்பாடுகளைப் பொதுவாழ்வில் இணைப்பது மிக முக்கியம்! அதை நீங்கள் நிச்சயம் செய்யவேண்டும்; அதுதான் என் போன்றோரின் கோரிக்கை!
 • நானறிந்த வகையில், இன்றைய சூழலில்; இங்கே 3 வகையானோர் உண்டு: 1. என்னைப்போல், பொதுவாழ்வில் சாதிக்கும் முனைப்பிருந்தும், பின்தொடர்வோர் இல்லாமல் தோற்போர் - துரதிஷ்ட்டவாதிகள்!, 2. பின்தொடர்வோர் கொண்டு, அரசியலில் நுழைந்து; "சுயநலத்தை மட்டும்" காத்து தோற்போர் - துரோகிகள்!, 3. பின்தொடர்வோர் இருந்தும், அரசியலில் நுழையாமலேயே தோற்போர் - உங்களைப் போன்றோரை என்னவென்பது?! எனக்குத் தெரியவில்லை!
 • நீங்கள் சொல்வது போல், மக்களில் பெரும்பான்மையானோர்; இப்போதைய சூழலுக்கு, நீங்கள் பரிந்துரைத்த அரசியல்வாதிக்கே ஆதரவு அளிக்கிறார்கள்! நானும் அவ்வாறே! ஆனால், அது நிரந்தரமா? என்ற சந்தேகம் "எல்லோருக்கும்" இருப்பது, நீங்களும் அறிந்ததே! எனவே, பல்லாயிரக் கணக்கானோர் சார்பாய், நிரந்தரமான மாற்றத்தை வேண்டி; நான் இந்த அழைப்பை விடுக்கிறேன்! அருள்கூறுத்து உணர்வீர்! நல்ல முடிவெடுப்பீர்!  
சூழலின் அவசியம் உணர்ந்து,
படிப்போர் அனைவரும் இதைப் பகிர்ந்து; 
உங்கள் பார்வைக்கு சேர்ப்பர் என்ற நம்பிக்கையில்...

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
{www.vizhiyappan.blogspot.com}

வெள்ளி, பிப்ரவரி 10, 2017

குறள் எண்: 0558 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0558}

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்

விழியப்பன் விளக்கம்: முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் ஆட்சியில்; வறுமையோடு இருப்பதை விட, உடையவராய் இருப்பதே கொடியதாகும்.
(அது போல்...)
உண்மையான வாழ்வியலைக் கற்பிக்காத, சமூகத்தின் மத்தியில்; பொய்யராய் இருப்பதை விட, நேர்மையாய் வாழ்வதே சிக்கலானதாகும்.

வியாழன், பிப்ரவரி 09, 2017

குறள் எண்: 0557 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0557}

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: மன்னனின் அருளொளி கிடைக்காத, நாட்டு மக்களின் வாழ்வியல்; மழைத்துளி பொழியாததால், உலகத்துக்கு விளையும் கேட்டைப் போலிருக்கும்.
(அது போல்...)
பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத, வீட்டுப் பிள்ளைகளின் வளர்ச்சி; சுற்றுவேலி இல்லாததால், பயிர்களுக்கு உண்டாகும் அழிவைப் போலிருக்கும்.

புதன், பிப்ரவரி 08, 2017

குறள் எண்: 0556 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0556}

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர்க்கு நிலைத்த புகழைத் தருவது, செங்கோல் தவறாமையாகும்; மாறாய் கொடுங்கோல் புரிந்தால், அரசாள்வோரின் புகழ் நிலைக்காது.
(அது போல்...)
வல்லரசுக்கு நீடித்த பலம் கொடுப்பது, பாதுகாப்பு குறையாததாகும்; மாறாய் பாதுகாப்பு குறைந்தால், வல்லரசின் பலம் நீடிக்காது.

ஏன் பெரும்பான்மையில் பலரும் எதிர்க்கிறார்கள்?

{முன்குறிப்பு: திரு. ஓ.பி.எஸ். அவர்களின் நேற்றைய இரவுப் பேட்டிக்கு முன்பே எழுதியது! 
ஓரிரு நாட்கள் கழித்து பதிவதே திட்டம் - சூழல் காரணமாய் இன்றே பதிகிறேன்}
*******

  திருமதி. சசிகலா நடராஜன் முதலமைச்சராகப் பதவியேற்பதைப் பொதுமக்களில் பெரும்பான்மையில் பலரும், எதிர்க்க என்ன காரணம்? அவர் மேல் எவருக்கும் தனிப்பட்ட வெறுப்போ/பகையோ இல்லை! பின் ஏன், ஒரேநேரத்தில் ஒருசேர பலருக்கும் அப்படித் தோன்றவேண்டும்? சில புரிதல்கள் கீழே:
 1. நம்மில் பலரும், ஒரு பதவிக்கு அல்லது உயர்பதவிக்கு - நம் சக பணியாளரை/போட்டியாளரை - பின்னுக்குத் தள்ளிவிட்டு அல்லது ஏமாற்றிவிட்டு வரவேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பே! அதைச் சார்ந்து, அறத்தை மீறிய செயல்களைக் கூட செய்திருப்போம். அத்தைய செயல்களை, அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் விமர்சித்து இருப்பார்கள்; சபித்தும் இருப்பார்கள். இருப்பினும், அது ஒரு பணிப்போராட்டம்; அப்படித்தான் நிகழும் என்ற சமாதானத்துடன் கடந்திருப்போம்.
 2. மேற்குறிப்பிட்ட உதாரணத்தில், நாமும் அடிப்படைத் தகுதியுடன், அதே பணிச்சூழலில் இருப்போர் என்பதை உணரவேண்டும். எந்த அனுபமும், தகுதியும் இல்லாமல் - கட்சியிலோ/ஆட்சியிலோ/பதவியிலோ - ஒருபோதும் அங்கம் வகிக்காதவர் எடுத்தவுடன் அரசாங்கத்தின் உயர்பதவியில் அமர முயல்வதே பெருத்த எதிர்ப்புக்கு காரணமெனத் தோன்றுகிறது. கட்சிக்காரர்கள் பலரும் சொல்வது போல்; நிழலாய் அவர் பல காரியஙகள் செய்திருப்பது உண்மையாய் இருக்கலாம். மறைந்த அந்த தலைவியால் ஏன் “மறைமுகமாய் கூட” அது சுட்டிக்காட்டப் படவில்லை?! என்ற கேள்வியைக் கூட ஒதுக்கி விடலாம். ஆனால், பதவியில் அமரமுடியாத இடைஞ்சல்கள் வந்த போதெல்லாம், திரு. பன்னீர் செல்வத்தைத் தானே பதவியில் அமர்த்தி இருக்கிறார்? என்ற உண்மையும் கேள்வியாய் எழுகிறது.
 3. திரு. ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. வில் பல ஆண்டுகள் உறுப்பினராய்/மேயராய்/பலபதவிகளை வகித்தவர் என்பதை அனைவரும் அறிவர். அவரே கூட “தலைவர்” என்ற பதவிக்கு நிகரான ஒரு பதவியைப் பெறும்போது; குடும்ப அரசியல் என்றே பலரும் விவாதிக்கின்றனர். வயதில் மூத்த அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்களே?! என்ற வாதம் வைக்கின்றனர். அப்படி, களப்பணி செய்த ஸ்டாலின் போன்றோருக்கே மறுப்புகள் இருக்கும்போது; இந்த எதிர்ப்பு நியாமாகத் தானே தோன்றுகிறது?
 4. "அனுபவம் இல்லையென்றால் என்ன? நாமும் படித்தவுடனே எந்த முன் அனுபவமும் இல்லாமல் தானே முதலில் பணியில் அமர்கிறோம்?" என்றோர் கேள்வி எழலாம். உண்மைதான், அதை மறுப்பதற்கில்லை! ஆனால், அப்பதவியைப் பெறுவதற்குரிய கல்வியெனும் அடைப்படைத் தகுதியோடு தானே அப்பணியைப் பெறுகிறோம்? அப்படியான அடிப்படைத் தகுதி கூட இல்லையே! என்பதும் எதிர்ப்புக்கு காரணமாய் இருக்கிறது. 
 5. மேலும், முந்தைய தலைமை இறந்த 2 மாத காலத்தில்; இப்படி அடுத்தடுத்துப் பதவிகளை அடைய நினைப்பதும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது! இந்த ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. குறைந்தது ஓராண்டாவது பொறுமையாய் இருந்து, இம்மாதிரியான ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தால்; இப்போது எதிர்ப்பவரில் பலரும் கூட ஆதரவாய் இருப்பர் என்றே தோன்றுகிறது. அதுவரை, அவர் முன்பே "நிழலாய் இருந்தார்!" என்ற கூற்றுப்படி; இப்போதும் நிழலாய் இருந்து பல விடயங்களைச் செய்து - அவரின் பலத்தை/திறமையை நிரூபிப்பதே முறையான வழியாய் இருக்கும்.
 6. தாம் வாக்களித்து, பதவியில் அமர்த்திய தலைவி இறந்து, இரண்டு மாதமே ஆன நிலையில்; இப்படியோர் முடிவை சர்வாதிகாரம் கொண்டு செய்ய நினைப்பது, மக்களின் மனதில்; எதிர்ப்புடன் சேர்ந்து பெருத்த பயத்தையம் உருவாக்கி இருக்கிறது. அந்த பயம் தான், பெரும்பான்மை எதிர்ப்பாய் மாறி இருக்கிறது. இதில் விந்தை என்னவென்றால், ஜெயலலிதா எனும் ஆளுமையை; அவர் உயிரோடு இருந்தபோது  தவறாய் விமர்சித்தோர் கூட,  இன்று அவரை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதே. அவர்களும், அவர் விட்டுச் சென்ற கட்சி இன்னும் தழைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எதிர்ப்பைக் காட்டுக்கிறார்கள்.
 7. இப்படி பல விதங்களில் எதிர்ப்புகள் இருக்க, ஒரு சர்வாதிகார எண்ணத்துடன்; அவரின் அரசியல் பிரவேசம், பதவியைக் குறிவைத்து இருப்பது சரியாய் தோன்றவில்லை! ஒருவேளை, இப்போது அவர் பதவியைப் பெற்று, ஏதேனும் ஒரு காரணத்திற்காய்; பின்னர் தோல்வியை அடைந்தால் அது அவருக்குத்தான் பெரிய பாதகத்தை விளைவிக்கும்.
 8. எனவே, அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள்; அவருக்கு இருக்கும் செல்வாக்கை வைத்துக்கொண்டு - திரைக்கு பின்னிருந்து இயக்கும் இயக்குனர்கள் போல் - பின்னிருந்து கட்சியையும்/ஆட்சியையும் நடத்துவதே சிறந்தது. அதை சிறப்பாய் செய்துகாட்டினால், அவர் மேல் நம்பிக்கைப் பெருகி அவருக்கு ஆதரவாய் மாறும். இடையில், அவரின் அரசியல் ஞானத்தையும், அனுபவத்தையும் விரிவாக்கிக் கொள்ளலாம். அப்படி பொறுமை காத்து, ஓரிரு ஆண்டுகள் கழித்து பதவியை அணுகுவது சரியாய் இருக்கக்கூடும்.
 9. முதல்வர் போன்ற பதவியை அடைய ஒருவர் ஆசைப்படுவதோ அல்லது சூழ்ச்சி செய்வதோ; அரசியல் களத்துக்கு புதிதல்ல! ஆனால், அது எந்த வகையில் நிகழ்கிறது என்பதையே; மக்கள் முக்கியமாய் பார்க்கிறார்கள். முன்னாள் முதல்வரின் மரணத்தில் இருக்கும்  சந்தேகமே தீர்க்கப்படாத நிலையில்; அதுபற்றி கட்சிக்காரர்கள் சரியான காரணங்களைக் கூறாத நிலையில் - இப்படி பதவியைக் குறிவைத்து செயல்கள் நடைபெறுவது, மக்களுக்கு மேலும் பல சந்தேககங்களை உருவாக்கி இருக்கிறது. அந்த சந்தேகங்கள், பயமாய் மாறி; எதிர்ப்பாய் அலைவீசுகிறது என்பதே நிதர்சனம். 
 10. சட்டமன்ற உறுப்பினர்கள், திருமதி. சசிகலாவுக்குப் பெரும்பான்மையான ஆதரவைக் கொடுக்கலாம்; அரசியல் சாசனப்படி, அது முறையானதாகவும் இருக்கலாம்! ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களையே தேர்ந்தெடுத்தது, ஜனநாயக அடிப்படையிலான பொதுமக்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகக் கடமையாகிறது. எனவே...  
மக்களின் ஆதரவு இருப்பவர் ஒருவரை, முதல்வர் பதவியில் அமர்வதே... 
ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் செயலாகும்!!!

இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியும் - மூத்த தலைமுறையினரின் பின்புலமும்!!!

{"தமிழ் ஹிந்து" நாளிதழுக்கு அனுப்பப்பட்டு, எந்த பதிலும் இல்லாததால் - இங்கே பதிகிறேன்.
முதல் வடிவத்தைப் படித்து, சில மாற்றங்களை பரிந்துரைத்த; 
என் நண்பன் திரு. அ. கதிர்வேலுக்கு நன்றிகள்}
*****

    தன்னெழுச்சியாய் கருவாகி, உருவாகி, நாளைய விடியலுக்கு எருவாகி முடிந்த; இளைய தலைமுறையினரை முதன்மைப்படுத்திய போராட்டம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. முன்வைத்த பிரச்னை “ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு” எனினும்; தவறாமல் மற்ற சமூகப் பிரச்சனைகளை இணைத்து, வலுவான அடித்தளத்தை அமைத்தனர் இளைய தலைமுறையினர். பெரும்பான்மையில் எல்லோரும் இந்த வெற்றியை உணர்ந்து, உள்வாங்கி சிலாகித்துப் போற்றுகின்றனர். இருப்பினும், சிலர் "இந்த போராட்டம் இப்படி முடிந்திருக்கலாம்! அப்படி முடிந்திருக்கலாம்!" என்ற ஆலோசனையைக் வழங்கும் போது; ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் பெருந்தகை சொல்லிய “சொல்லுதல் யார்க்கும் எளிய!” நினைவுக்கு வருகிறது. ஆனால், பெருந்தகை தொடர்ந்த  “அரியவாம்! சொல்லிய வண்ணம் செயல்!” என்பதை மெய்ப்பித்து - அரிதான செயலை செய்திருக்கிறார்கள் இளைய தலைமுறையினர்.

         இந்த போராட்டம் எவ்வொரு கட்சியையும்/இனத்தையும்/தலைவரையும் முதன்மைப் படுத்தாத தன்னெழுச்சி போராட்டம்! இதை ஒருங்கிணைத்தவர் என ஒரு தனிமனிதரோ அல்லது தனி குழுவோ இல்லை! இத்தன்னெழுச்சி - ஓர் சாகசம்! துவங்கிய கணமே, பல ஆயிரக் கணக்கானோரைக் கொண்டெழுந்தது - ஓர் சகாப்தம்! சில மணிகளில், பல இலட்சங்களாய் பெருகியது - ஓர் வரலாறு! மேலோட்ட பார்வைக்கு, இது வெறும் "ஏறு தழுவுதல் எனும் ஜல்லிக்கட்டை” மையப்படுத்தி; உணர்ச்சிவயப்பட்டு உருவான போராட்டமாய் தோன்றும்! ஆனால், ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் ஆழ்மனதிலும் "பல சமுதாய பிரச்சனைகள்" இரணங்களாய் இருந்திருப்பதை இத்தன்னெழுச்சி பறைசாற்றுகிறது! ஒவ்வொரு சாமான்யனும், பிரச்சனைகளைக் கடந்து செல்வது இயல்பாகிய போதும்; தன் அடையாளம்/சுயத்தை எவரேனும் அழிக்கவோ/உடைக்கவோ முற்படும்போது எதிர்ப்பைக் காட்டத் தவறுவதே இல்லை.

      அதுவே, ஓரினத்தின் அடையாளத்தையே அழிக்கவோ/உடைக்கவோ சூழ்ச்சிகள் நடந்தால்; எதிர்ப்பு எப்படி இருக்கும்...? அதைத்தான், இளைய தலைமுறையினர் ஒன்றுகூடி அரங்கேற்றி; உலகுக்கு காணொளி மூலம் காட்டி இருக்கிறார்கள். பொறுமையின் விளிம்பு வரை துரத்தப்படும் ஒருவரின் எதிர்ப்பு இப்படித்தான் இருக்கும் - இதுவே மானுட இயல்பு! இதற்கு இளைஞர்/முதியவர்/தமிழர்/இந்தியர் என்ற எந்த பாகுபாடும் இல்லை! இலையை தலைமுறையினரின் போராட்டம் திசை மாறியது அல்லது நீர்த்துப் போனது என்பதெல்லாம் “வெற்றுப் பிதற்றல்கள்!”.  எல்லாப் பிரச்சனைகளையும் தாண்டி, ஒவ்வொரு இளைய தலைமுறையினரின் ஆழ்மனதிலும்; அவர்களின் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியல், எண்ண வடிவில் இருந்திருப்பது திண்ணம்! நம் “தாத்தா மற்றும் பாட்டி” காலத்தில், இப்படிப்பட்ட தன்னெழுச்சி தேவைப்பட்டதில்லை. அவர்களுக்கு இருந்ததெல்லாம் - ஒற்றை எதிரி! அது ஆங்கிலேயர்கள் எனும் நம் அந்நியர்கள்.

         அவர்களுக்கு தேவைப்பட்டது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை மட்டுமே! காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வ.உ.சி., பாரதியார் போன்ற எண்ணற்ற உண்மையான தேசப்பற்று கொண்ட தலைவர்கள், தலைமையெனும் அதிகார போதை தரும் மாயையிலிருந்து விலகி; மக்களில் ஒருவராய் சேர்ந்து போராடினர். அவர்கள் எந்தப் பிரிவினையுமின்றி ஒன்று சேர்ந்து, அடிமைச் சங்கிலியை உடைத்தெரிந்தனர். அடுத்து வந்த நம் “அப்பா மற்றும் அம்மா” காலத்தில் - அவர்களின் முன்னோர் பெற்று தந்த சுதந்திரமும்/உரிமையும் கொஞ்சம், கொஞ்சமாய் பறிபோக ஆரம்பித்தது. அது, மீண்டுமொரு அடிமைசங்கிலி அரசியல்வாதிகள் எனும் உள்ளூர் எதிரிகளால் பிணையப்பட வழிவகுத்தது! இதை நம் “அப்பா மற்றும் அம்மா” உணராமல் இல்லை! ஆனால், பொருளாதாரம் எனும் கோரப்பிடியில் சிக்கி, வாழ்வியலே போராட்டமானது அவர்களுக்கு. அதனால் தான், நம் “தாத்தா மற்றும் பாட்டி" உண்மையான தலைவர்களுடன் கைகோர்த்து...

     அந்நியர்களை விரட்டியதை நேரடியாய் பார்த்து வளர்ந்தும்; அவர்கள் உள்ளூர் எதிரிகளை எதிர்க்காமல் கடந்தனர். ஆனால், நம்முள் அறத்தை விதைத்து நம்மையே விதைகளாக்கிட; அவர்கள் தவறவில்லை. அதுதான், இளைய தலைமுறையினர் வடிவில் விருட்சமாகி; "அறப் போராட்டமாய்" உருமாறியது. இதில், என்னைப் போன்றோரை; இடைப்பட்ட தலைமுறையாய் பார்க்கிறேன். எம் பெற்றோரால் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பினும், முழுப் பொருளாதாரத் திடத்தன்மைக்காக வாழ்வியலோடு போராடும் எங்களுக்கும்; முந்தைய தலைமுறையினரின் இயலாமை, நீட்சியாய் இருக்கிறது. ஆனால், எங்களின் சகோதரர்/சகோதரி போன்ற உறவில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு; அறம் சார்ந்த புரிதல்களையும், முடிந்த அளவில் பொருளாதார ஆதரவையும் கொடுக்க நாங்கள் தவறவில்லை. இப்போராட்டம், இளைய தலைமுறையினர் உணர்ச்சிவயப்பட்டு; இலக்கில்லாமல் நடத்தியதல்ல!

   சூழலால் இயலாமையில் உழன்ற, மூத்த தலைமுறையினரும் துணை நிற்பர் என்பதை மிகச்சரியாய் கணித்து; தேர்ந்த முதிர்ச்சியுடன், தெளிவான இலக்கோடு நடத்தியப் போராட்டம்! "வயது முதிர்ந்தவர் முதல் இளம்பிள்ளைகள் வரை போராட்டக்களத்தில்; முகமலர்ச்சியோடு கலந்து கொண்டது" அதைத்தான் பறைசாற்றுகிறது! எனவே, இளைஞர்களால் உருவான இப்போராட்டம் நமக்கு சம்பந்தமில்லாத ஒன்று என்பதாய் கருதாமல்/விமர்சிக்காமல்; மூத்த தலைமுறையினராய், நம் ஒவ்வொருவருக்கும் இந்த போராட்டத்தில் தொடர்பும்/பொறுப்பும் இருக்கிறது என்பதை உணர்வோம். அது நம் சமுதாயக் கடமையும் கூட என்பதை மனத்திருத்தி, அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவர்களுக்கு உறுதுணையாய் நிற்கும் மனவுறுதியை ஏற்போம்! நம் அனுபவமும்; இளைய தலைமுறையினரின் அகன்ற அறிவும்/வெளியுலகத் தொடர்பும்  ஒன்றிணையட்டும்! எவர் எப்படி விமர்சித்தாலும்; என்னளவில், நடந்து முடிந்த…

போராட்டத்தை - வெற்றிப்படிகளின் "ஆரம்ப"ப்படியாய் தான் பார்க்கிறேன்!

!!

பின்குறிப்பு: சிலர் வாதிப்பது போல் - இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் “ஓர் தலைமை” இல்லாத கவலை எனக்குள்ளும் உண்டு! நம் பெருந்தகை "அரசியல்" எனும் இயலில், அரசாங்கம் மற்றும் அரசாள்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை, பல்வேறு கோணங்களில் தெளிவாய் விவரித்திருக்கிறார். அவற்றை உள்வாங்கி, தலைமையைப் பற்றிய ஓர் விவாதமும் என்னுள் நடந்து கொண்டிருக்கிறது. அதை, அடுத்த பதிவில் எழுதுகிறேன்.